“குக்கூ.. குக்கூ” குருவிகள் இரண்டும்
ஒன்றோடொன்று தலைமுட்டி கிரீச்சிட...
உறக்கம் லேசாய் கலைந்த பிரமை நிலையில் உணர
முடிந்தது மண்டையில் அடித்தால் போல அலறும் அழைப்பு மணியின் ஓசையை. லேசாக
விழித்துப் பார்த்ததில் கண்கள் தீயாய் எரிந்தன.
அழைப்புச் சத்தம் மீண்டும் மீண்டும்
குறைந்த இடைவெளிகளில் ஒலிக்க... ம்ஹும்.. எழ முடியவில்லை அவரால். உடம்பு அசத்தியது.
‘யாரது நேரங்கெட்ட நேரத்துல? மதிய நேரம் அசருவாங்கங்கிற அறிவில்ல?’ முனகிக் கொண்டே
எழுந்த வாசுகி நிதானமாய் வந்து கதவைத் திறந்தார்.
“நீயா....?”
“நல்லா தூங்கிட்டு இருந்தேன், சரி, வா
வா...” பாந்தமாய் வந்த வரவேற்பில் வெளியே நின்ற நபரின் அகம் வாடினாலும் முகத்தில்
காட்டிக் கொள்ளாமல் உள்ளே வந்தார். “போன சனிக்கிழமையே வருவேன்னு ரொம்ப
எதிர்பார்த்தேன், கடைசில ஆளையே காணோம். இன்னிக்கு வந்து
நிக்குற!?”
“வர முடியலக்கா. சுமி வீட்டுல இருந்து ஞாயித்துக்கிழமைதான்
வந்தோம்“ கழுத்தடியில் துளிர்த்திருக்கும் வியர்வையை ஒற்றிக் கொண்ட விமலாவின் ஜாடை
அச்சு அசலாய் வாசுகியை ஒத்ததாய்.
“எங்க உன் வீட்டுக்காரரு ?” சோம்பலாய்
கொட்டாவி விட்ட வாசுகி எதிர் சோஃபாவில் கால் நீட்டிப் படுத்துக் கொள்ள, உட்கார கூடச்
சொல்லாத புறக்கணிப்பை பெரிதுபடுத்தாமல் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்
விமலா.
“அபி குட்டிக்கு இரண்டு நாளா ஜுரம். காலைல
நானும் இவரும் தான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய்ட்டு வந்தோம். இன்னிக்கு ஸ்கூலுக்கு
அனுப்பல. அதுதான் நான் மட்டும் வந்தேன்”
“எப்படி இருக்கக்கா? முட்டி வலி தேவலையா?”
“ம்ம்.. ஏதோ இருக்கேன், உயிரோட...” வெறுப்பைப்
பொதிந்து வந்த சொற்களில் வாஞ்சையாய் அக்காவைத் தழுவ நீண்ட கை அப்படியே சுருண்டு
கொண்டது.
“இங்க ஒருத்தி இருக்கேன்ற நினைப்பு
யாருக்கு இருக்கு, உனக்கு இருக்கிறதுக்கு? ஏதோ பெரிய மனசு பண்ணி இன்னிக்கு
வந்தியே, அதுவரைக்கும் தப்பிச்சேன் போ...” முகத்தை இழுத்து வைத்த போலி சிரிப்புடன்
நக்கல் செய்யும் வாசுகியின் பாவனை நல்ல வெயிலில் கிளம்பி வந்திருந்த விமலாவின்
மனதைத் தைக்கத் தவறில்லை.
‘ஏன் இவ்வளவு ஏளனம் இந்த வயசுல?’ சிவந்த
முகத்துடன் மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கியபடி எதிரிலிருக்கும் தன் சகோதரியை
பார்க்க ஒருவகையில் ஆதங்கம் எனில் ‘என்னையும் தள்ளாமை படுத்துதுன்னு
என்னிக்காச்சும் நீ புரிஞ்சுக்குவியா?’ உள்ளுக்குள் சின்னதாய் எரிச்சல் மண்டவும்
தவறவில்லை.
“எனக்கு மட்டும் வயசு திரும்புதா? உன்னை
விட நாலு வருஷம் தான் சின்னவ நானு” விமலா சமாதானமாய்ச் சிரித்தார்.
“உன் மகன், மகளுக்கு ஊழியம் செய்யுறதுக்கு
மட்டும் வயசாகலையோ? அப்படியே பூனைக்குட்டி மாதிரி பம்முற... உங்க
வீட்டுக்காரருக்கு வர்ற பென்ஷன்ல ராணி மாதிரி தனியா இருக்கிறதை விட்டுட்டு...”
உறவுக்குரிய நாசுக்கின் எல்லை மீறிய விமர்சனத்தில்
விமலா முகத்தில் பரவிய சூடு கோடைக் கால அனலை விசிறி விட போதுமானதாய்...
‘எப்படி நீ இப்ப இருக்கியே, இந்த மாதிரியா...’
நறுக்கென்று முகத்துக்கு நேரே கேட்க எவ்வளவு நேரம் ஆகும்? பல்லைக் கடித்தபடி தன்னை
அடக்கிக் கொண்டார் அவர்.
‘என் பென்ஷன் பணம் எனக்கு இருக்கு, சர்வ சுதந்திரமா
நான் என் வீட்டுல தான் இருப்பேன். நினைச்ச நேரம் தூங்குவேன், எழுந்துப்பேன். உங்க
வீட்டுக்கு வந்தா எனக்கு இந்த வசதிலாம் பத்தாது. இரண்டு நாளைக்கு மேல ஒத்து போகவும்
செய்யாது. முதல் நாள் வாழையிலை, இரண்டாம் நாள் தையல் இலை, மூணாம் நாள் கையிலன்னு...
ச்சே.. ச்சே...அதெல்லாம் நம்மால முடியாது. நான் யார் வீட்டுக்கும் போக மாட்டேன்டி.’
பெற்ற பிள்ளைகளிடம் கூட இப்படிக் கறாராய்
கோடு கிழித்துத் தள்ளி நின்றபடி, நான்கு கதவடைத்த கான்க்ரீட் சுவர்களுக்கு
மத்தியில் புதையல் காக்கும் பூதம் போலத் ஒற்றையாய் இவள் இருக்க, பிள்ளைகளை
அனுசரித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தன்னை எப்போதும் நையாண்டி செய்வது என்ன மாதிரியான
மனநிலை? புரியவில்லை விமலாவுக்கு.
“எத்தனை கோடி கொடுத்தாலும் உன்னை மாதிரி ஓடி
ஓடி அடிமை வேலை பார்க்க என்னால முடியாதுடிம்மா. நல்லா ஓடுறீங்க புருஷனும்
பொண்டாட்டியும் ஸ்கூலுக்கும், ஆஸ்பத்திரிக்கும்” பேச ஆளில்லாமல் நாக்கில் சுருண்டுக்கிடந்த
சர்ப்பம் முழுதாய் விழித்துப் படம் எடுக்கத் தொடங்க....
“நான் அடிமை வேலை பார்க்குறதா நீ
நினைக்குற. குடும்பத்தை அனுசரிச்சுப் போறதா நான் நினைக்கிறேன். நம்மால முடிஞ்ச
சகாயத்தைப் பிள்ளைங்களுக்குச் செஞ்சுட்டு போகணும்னு.. சரி, விடு... தேவையில்லாத
பேச்சு என்னத்துக்கு ? உனக்குப் பிடிச்ச மாதிரி நீ இருக்க, எனக்குப் பிடிச்ச
மாதிரி நான் இருக்கேன்”
‘வந்த இடத்தில் எதுக்கு வீண் வாக்குவாதம்?’
கோபத்தை அடக்கிய குன்றலுடன் வார்த்தைகள் வெளிப்பட்டாலும் விமலாவின் முகம் செத்துப்
போனது உண்மை. ஒவ்வொரு முறையைப் போலவே ‘ஏன் இங்கு வந்தோம்?’ என்றிருந்தது. சூட்டுக்
கங்காய் இவள் வீசும் சொற்களைக் கூடப் பிறந்த தன்னாலேயே பொறுக்க முடிவதில்லையே. நடுத்தர
வயதில் இருக்கும் மகன் மருமகள்கள் எப்படி அனுசரிப்பார்கள்?
முன்கை நீண்டால் தானே முழங்கை நீளும்? வயதில்
பெரியவள் இவளே சிறுசுகளை அனுசரிக்காமல் தேளாய்க் கொட்டினால், வாழ்க்கைப் பாட்டை
நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் எவ்வளவு தூரம் நெருங்கி வருவார்கள்?
‘தனிமையே சுகம்’ என்று அடமாய் இருப்பவளுக்கு ‘இல்லை, இது உன்னை நீயே வைத்து பூட்டிக்
கொண்ட சிறை’ என எப்படிப் புரிய வைப்பது?
“அப்புறம் எப்படி இருக்கா சுமி?” இரண்டும்
ஆண் வாரிசாய் போனதில் தங்கைப்பெண் மேல் வாசுகிக்குத் தனிப்பிரியம் உண்டு.
“நல்லா இருக்கா... ‘பெரியம்மாவை கேட்டதா
சொல்லு, போய் அப்பப்ப பார்த்துக்கோ’ன்னா...”
“அதான் நீ வந்தியாக்கும்... என்ன நல்லா
பொழுது போச்சா பொண்ணு வீட்டுல?” ஒட்டாத குரலில் கேட்டாலும் அதில் ஒளிந்திருக்கும்
ஏக்கம்??
“ம்ம்ம்.. பத்து நாள் ஓடினதே தெரியல.. அக்கா,
நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காதே... நீயும் குமார் கிட்டயும், சுரேஷ்
கிட்டயும் போக வர இருக்கலாம்ல.. இங்க கொஞ்ச நாள், அங்க கொஞ்ச நாள்னு”
“அது சரி.. யாரு கூப்பிட்டா என்னை?
வேணாம்டி அம்மா. வேணாம்.. அவனுங்க கூப்பிடவும் வேண்டாம். நான் போகவும் வேண்டாம்...
எனக்கு அங்கெல்லாம் சுத்தப்பட்டு வராது... என் வீடே எனக்குச் சொர்க்கம்...”
விரக்தியை மறைத்த வாசுகியின் சலிப்புத் தொனியில் விமலாவுக்கு ஆயாசமாக இருந்தது. .
“பசங்க உன்னைக் கூப்பிடலையா என்ன? சும்மா
சொல்லாதே.. மருமகளுங்களும் சொல்லத்தானே செய்யறாங்க... நீ தான் போக மாட்டேங்குற...”
தமக்கையை லேசாக அதட்டினாலும் இதைச் சொல்லும்போது அவர் குரலும் நலிந்து தான் போனது.
ஆரம்ப நாட்களில் பிள்ளைகள் அம்மாவை
அனுசரணையாய் கூப்பிட்டது நிஜம் தான். “தனியா
இருக்க வேணாம்” என்று வற்புறுத்தவும் செய்தார்கள். உடம்பில் ரத்தத்தின் துறுதுறுப்பு
சூடாக இருக்கும்வரை இவள் ‘மாட்டேன்’ என்று நிர்தாட்சண்யமாக மறுக்க, போகப் போக
அவர்களும் இந்த விலகல் நடைமுறைகளுக்குப் பழகிப் போனார்களோ என்னவோ..
இப்போதெல்லாம் ‘இவங்க தான் வர
மாட்டேங்குறாங்க.. நாங்க என்ன பண்றது?’ என்கிற மாதிரி மேலோட்டமான தப்பித்தல் தான் தெரிகிறதே
தவிர உள்ளபடிக்கு அவர்களும் ஆத்மார்த்தமாகத் தாயை அழைப்பதாய் தெரியவில்லை. ஆரம்பத்தில்
இருந்தே ஒட்டாமல் இப்படி தனித்தனியே வாழ்ந்தது தவறா, இல்லை இன்றைய நாகரீக
உலகத்தின் அசுர வேகத்தில் பந்த பாசம் எல்லாம் பின்னால் போனதா, யாரை குறை சொல்ல?
எதை நிந்திக்க?
“அதெல்லாம் சரிப்படாதுடி.. உன்னை மாதிரி
இன்னொரு வீட்டுல உட்கார்ந்தெல்லாம் என்னால ஜீவிக்க முடியாது” வயதானாலும்
சுறுசுறுவென்ற கோபமும், படபடப் பட்டாசு பேச்சும் மாறவேயில்லை வாசுகியிடம்.
“எங்க ராணி.. ஆளைக் காணோம்?”
“நிறுத்திட்டேன்”
“ஏன் என்னாச்சு?” வழக்கம் தான் இது.
ஒவ்வொரு முறை வரும்போதும் வேலை ஆட்கள் மாறிக் கொண்டேயிருப்பது.
“பிடிக்கல, எதிர்த்து எதிர்த்து பேசறா,
‘சரிதான் போடி’ன்னு நேத்து ராத்திரி பையைத் தூக்கி வெளில வீசிட்டேன். திட்டிட்டே
கிளம்பிட்டா... ஏஜென்சில சொல்லியிருக்கேன். வேற ஆளை அனுப்புவான், திருட்டுப் பைய.
காசை சுளையா வாங்கிட்டு அடங்காப் பிடாரிங்களா அனுப்பி வைக்கிறான்”
“ஏன்க்கா, ஏன்க்கா இப்படிப் பண்ணுற? ‘அடேய்
புடேய்’னு நீ அதிகாரமா வேலை பார்த்த காலம் இல்லை இது, அட்ஜஸ்ட் பண்ணிதான் போகணும்.
கொஞ்சம் தழைஞ்சு போனா என்ன கெட்டுப் போயிடும் உனக்கு? இப்ப எப்படித் தனியா இருப்ப?”
“சரிதான் போடி. எனக்குப் புத்தி சொல்ல
வந்துட்டா. எப்படியோ இருந்துப்பேன். உன்னைக் கூப்பிட்டேனா? உன் வேலையைப் பார்த்துட்டு
போ”
‘நிஷ்டூரி’ உயிரோடு இருக்கும் வரை
மூத்தவளின் கோபத்தைச் சொல்லி சொல்லி மாய்ந்து போகும் அம்மாவின் முணுமுணுப்பு இப்போதும்
காதோரம் ஒலிப்பது போல்...
“உன்னை எல்லாம் திருத்தவே முடியாது. உன்னைச்
சொல்லி குத்தமில்ல. போன மனுஷன் தாங்கி தாங்கி உன் திமிரை ஏத்தி விட்டுட்டு
போயிட்டாரு” வீடெல்லாம் குப்பையாக இருப்பதன் அர்த்தம் புரிய, கொண்டு வந்த கூடையை
மேடையில் வைத்த விமலா துடைப்பத்தை எடுத்தார்.
ஆடி மாதக்காற்றில் அடுத்த வீட்டு
புங்கைமரத்தின் இலைகள் சமையலறை முகப்பில் சேர்ந்திருக்க, சத்தைகளைக் கூட்டித் தள்ளிய
விமலாவின் அறுபத்தைந்து வயது உடல் இறங்கு வெயிலில் வியர்வையைப் பெருக்கியது.
“நீ வர்றப்ப நல்ல கனவு. பெல் அடிச்சு
கெடுத்துட்ட” அக்காவின் நொடிப்பில் கசப்பாய் முறுவல் பரவ....
‘காத்தடிச்சு உதிர்ந்து போயிருக்கிற இந்த
இலை மாதிரி தான் மனுஷ வாழ்க்கை. இதுல இவ்வளவு விறைப்பா நின்னு என்ன சாதிக்கப்போற? இந்தக்
கோபத்தைச் சாக்கா வைச்சு உன் பசங்களும் தள்ளி நிக்க.. ப்ச்... என்னவோ போ...’
“நாங்க இரண்டு பேரும் ஏதோ பெரிய ஹோட்டல்ல
உட்கார்ந்திருக்கோம்டி. சுத்திலும் ஏதோ பாட்டு எல்லாம் ஓடுது மெலிசா...” வெகு
அரிதாகக் கல்லுக்குள் சுரக்கும் ஈரம். கனவில் கண்டது நேரில் நடந்ததைப் போலவே இருந்ததோ
என்னவோ, வாசுகியின் முகத்தில் பெரிதாய் ஒரு புன்னகை மலர...
“உன் அத்தான் எனக்குப் பிடிச்ச பாஸந்தியை
எடுத்து ஊட்டி விடுறாரு”
சட்டென்று நெகிழ்ந்து உருகும் குரலில், பாசம்
பெருக நிமிர்ந்த விமலா, “ம்ம்.. அப்புறம்...!?” கிண்டலும் சிரிப்புமாகக் கேட்டார்.
“மேசையைச் சுத்திலும் அத்தனை வகை இருக்குடி.
எல்லாமே எனக்குப் பிடிச்சதா...”
“பாருடா... அப்புறம் அத்தான் வேற என்ன
சொன்னாரு?”
“அவரு என்ன சொல்லுவாரு? விமலா... டி...” ‘அழுகிறாளா
என்ன? அவர் நினைவு வந்துவிட்டதா?’
“அழாதக்கா... அவரு உன் கூடவே தான்
இருக்காரு....”
“அவரு மகராசனா போயிட்டாரு.... நான்
கிடந்து...” இதுவரை கேட்டதேயில்லை இவ்வளவு மெலிந்த குரலை.
”எப்படிச் சொல்லன்னு தெரியல.. குடல் சுத்தி
சுத்தி....”
“??”
“வயிறோடு சேர்த்து நெஞ்செல்லாம் எரியறதுல...”
“உடம்புக்கு ஏதாவது பண்ணுதா? “ பதட்டம் ஏற துடைப்பத்தைத்
தொப்பெனப் போட்டுவிட்டு அக்காவின் தோளைப் பற்றினார் விமலா.
“எனக்கு .....................................”
தமக்கையின் அத்தனை உணர்வுகளையும் மொழி
பெயர்க்கத் தெரிந்த விமலா அவள் அடுத்து சொன்ன ஒற்றை வார்த்தையின் கனம் தாங்க
முடியாமல் சமைந்து தான் போனார்.
“ரொம்பப் பசிக்குதுடி...” மீண்டும் தீனமாய்
அதே சொற்களை உச்சரித்த அந்தப் பழுத்த இலை கண்களில் வழியும் பரிதவிப்புடன் தங்கையருகே
மடிந்து அமர, “பாவி மகளே, உனக்கேன்டி இந்தத் தலையெழுத்து? அடிவயித்துல எரியுற
அக்னியை அணைக்க முடியாமத்தான் இப்படி அனலா கொட்டுறியா?” சேலைத் தலைப்பை வாயில்
சொருகிக் கொண்ட விமலா கண்களில் பெருகும் நீருடன் தன் அக்காவை பாய்ந்து அணைத்துக்
கொண்டார்.
4 comments:
Chance less! excellent story.
Thank you Mini!
Hi Hema
Super story!!
Are you writing any novel at the minute?
Eagerly expecting your next creation!!
Pri
நன்றி பிரி,
அடுத்த நாவலைப் பற்றி யோசித்துள்ளேன். எழுத ஆரம்பிக்கணும். பார்க்கலாம்பா எப்ப எழுதி முடிக்கிறேன்னு. வர வர என் எல்லா வேலைகளும் சகுந்தலா தேவி புதிர் விடைகள் போல God Only Knows ஆக போய்ட்டு இருக்கு :) :)
Post a Comment