"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Wednesday, August 19, 2020

எழுத்து என்ன தரும்?

சில சமயம், 'எதற்காக எழுதுகிறாய்?' என்று என்னைத் தெரிந்த சில நட்புகளும், உறவுகளும் கேட்பதுண்டு. சிலர் அக்கறையுடனும், சிலர் ஆர்வத்துடனும், 'வேலை வெட்டியை கவனிக்காம இது ஏதோ செய்து கொண்டிருக்கிறதே!?' என்கிற என் மேலான உண்மையான அன்பு கொண்டும், 'இவளுக்கு வேற வேலை இல்ல...' என்று கிண்டலாகவும் விதவிதமான தொனிகளில் இந்தக் கேள்வியை எதிர்கொண்டது/ள்வது உண்டு.

அப்போதெல்லாம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முயலுக்கு டார்ச் அடித்த தினுசில், அவுட் ஆப் சிலபஸில் கேள்வி வந்து விட்ட மாதிரி டிசைன் டிசைனாக நான் விழிப்பேன். எழுத வேண்டும் என்கிற தீவிர லட்சியம், சிறு வயதில் இருந்து கனன்று கொண்டிருக்கும் தீராத எழுத்து ஆர்வம் - இப்படியெல்லாம் பதில் சொன்னால் நானே விழுந்து விழுந்து சிரிப்பேன் என்பதால் எதுவும் சொல்லத் தோன்றாமல் 'ஹி ஹி... சும்மா தான்...' என்று அசடு வழியும் சந்தர்ப்பங்களே அநேகம்.

என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொள்ளவும், உற்சாகப்படுத்திக் கொள்ளவும் பல நேரங்களில் எனக்குள் நானே கேட்டுக்கொள்ளும் வினாவும் இதுவே. நிற்க!

என்ன எழுதிவிட்டாய் என்று இந்தக் கேள்வி பதில் செஷன் என இப்பதிவை வாசிக்கும் உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்கவே செய்கிறது☺☺☺☺எனினும், எடுத்த எடுப்பிலேயே யாரும் மேக்மில்லன் அகராதியை வாசிப்பதில்லையே. a,b,c,d என்று தான் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளத் தொடங்குகிறோம். என்னுடைய அ, ஆ, இ, ஈ பயணத்தில் நான் கற்றுக் கொள்வதையும், என்னுடைய  அபிலாசைகளை பதிந்து வைத்துக் கொள்வதுமே இப்பதிவின் விருப்பம் என்பதால் இச்சிறியோளின் அதிகப்பிரசங்கித்தனத்தைச் சற்றே பொறுத்தருளுங்கள் என்று கேட்டுக் கொண்டு மேலே தொடர்கிறேன்.

சரி, திரும்பவும் கேள்விக்கு வருவோம், எதற்காக எழுதுவது? எழுத்து என்ன தரும்? இந்த வினாக்களை எழுதும், எழுதத் தொடங்கும் ஒவ்வொருவரும் நமக்கு நாமே கேட்டுக் கொள்ளவேண்டியது அவசியம் என்பது என் தனிப்பட்ட எண்ணம். நம் நோக்கங்களைப் பற்றி நமக்கே தெளிவாக்கிக் கொள்ள இந்தப் புரிந்துணர்வுகள் நல்லது என்பதால் விருப்பமுள்ள நட்புகளுக்கும் பரிந்துரைக்கிறேன். ஏனெனில் எழுதுவது என்பது நிறைய நேரத்தையும், நம் சக்தியையும் மொத்தமாக உறுஞ்சிக் கொள்கிற பணி. அதை விளையாட்டு போல செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அதுவும் குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் அல்லது எழுதும் பெண்கள்.

எழுத்தில் ஆண் எழுத்து, பெண் எழுத்து என்ற பகுப்பு ஆய்வில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனினும், இந்த இடத்தில் மட்டும் எழுதும் ஆண், எழுதும் பெண் என்று பிரித்துப் பார்க்கவே தோன்றுகிறது. ஒரு ஆண் எழுதுகிறார் என்றால் குடும்பத்தில், சமூகத்தில் அந்த நபருக்கு கொடுக்கப்படும் அங்கீகாரமும், செய்து கொடுக்கப்படும் வசதிகளையும் ஒரு பெண் எந்த நிலையிலும் எதிர்பார்க்கவே முடியாது. எழுத்தாளன் வேலை முடித்து வீடு வந்தால் அவனுக்கான தேநீரும், உணவும், எழுதுவதற்கு வசதியான அறையும், மேசையும், பிள்ளைகள் தொந்தரவு செய்து விடாத அமைதியும் அவனுக்குக் கேட்காமலேயே கிட்டும். இந்த சவுகரியங்களையெல்லாம் பெயர் பெற்ற, எழுத்துலகில் நல்ல புகழ் வாய்ந்த எழுத்தாளினி கூட தன் கற்பனையிலும் நினைத்துப் பார்த்து விட முடியாது என்பது தான் நிதர்சனம்.

எல்லா கடமைகளையும், வேலைகளையும் முடித்து, ஆற அமர நள்ளிரவில் எழுத அமர்ந்தாலும் மகளின் மதிப்பெண்ணில் சிறு சரிவு எனினும், வீட்டுக் குழாய் ஒழுகுகிறது என்றாலும், சட்னியில் உப்பு குறைந்திருந்தாலும் கூட, 'நீ வீட்டையே கவனிக்கிறது இல்ல...' இந்த முணுமுணுப்பு தான் முதலில் எழும்.
அதற்கு மேல் மனரீதியான அழுத்தங்கள், ஹார்மோன் தொந்தரவுகள், வீடு, பிள்ளைகள் குறித்த கவலைகள், வீட்டு பணியிட சிரமங்கள், சில உறவு/நட்புகளின் நூதன கேள்விகள், தெரிந்த தெரியாதவர்களின் சீண்டல்கள், எதிர்பாலின இகழ்ச்சிகள் என இவை எல்லாவற்றையும் கடந்து தான் ஒரு பெண் எழுத முனைவது.

என்னைப் பொறுத்தவரை  எதையும் நிரூபிக்கவோ,  நிறுவவோ தொடங்கிய ஆர்வம் அல்ல இது. நான் அறிந்த பல எழுத்தாளர் தோழிகளும் அவ்விதம் தான். பிறகு, எழுதுவது எதற்காக -

* நமக்கே நமக்கான எல்லைகளற்ற சுதந்திர வெளி அது.

* நம் மனதுக்கு உகந்த லட்சிய மனிதர்களையும், கீழ்மை சாடல்களையும் நம் விருப்பம் போல உருவாக்கலாம், உலவ விடலாம்.

* நம் எண்ணங்களைப் பேச, விவாதிக்க, மறுதலிக்க.... அதற்கான எதிர் எண்ணங்களையும் அறிந்து கொள்ள...

* நாம் படித்த எழுத்துகளின் லாஜிக் மீறல்களை, நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாத கருத்துக்களை, நடைமுறைக்கு ஒத்து வராத முடிவுகளை நம் எழுத்து வழியாக மாற்றி நிறுவி ஆதங்கத்தை தீர்த்துக் கொள்ள...

* சிலநேரம் நாம் கொண்டுள்ள மதிப்பீடுகளே எழுதிப் பார்க்கும்போது வேறு மாதிரி தோன்றும். நம் சிந்தனை ஓட்டங்களை பரிசீலித்துக் கொள்ள &/ சீரமைத்துக் கொள்ள... 

* உள்ளுக்குள் இருந்து உழன்று கொண்டிருப்பதை யாரிடமாவது கொட்ட வேண்டும் என்கிற தீவிரத்தை (urge) எழுத்து வழியாக கொட்டி தணிக்க...

* கிடைக்கும் சொற்ப நேரத்தை தேவையில்லாத சங்கடங்களில் ஆழ்த்தி மனதைப் பழுதாக்கிக்கொள்ளாமல் ஏதோ உபயோகமாக செய்கிறோம் என்கிற உணர்வை வரவழைத்துக் கொள்ள... (உண்மையில் உபயோகமா, பிரயோசனமா என்பதெல்லாம் வேறு விஷயம். அதை வாசிப்பவர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள்)

* It truly excites. சற்றே திரில் கொடுக்கக் கூடியது.  சவாலான அனுபவமும் கூட (எதை யார் வரவேற்பார்கள், எது பிடிக்காமல் போகும் என்பதை  யார் அறிவார்!?) 
 
 * இது ஒரு வாழ்நாள் அனுபவம். மீண்டும் இன்னொரு பிறவி எடுத்து இப்படி படுத்தி வைக்கப்போகிறோமோ என்ன!?  :) 
 
* என் வட்டத்தில் நான் கேலியாக சொல்லும் பதில் - 'நான் பேசினா கேட்க யாராவது ரெடியா இருக்கீங்களா? போனா போகட்டும், போர் அடிக்க வேணாமேன்னு இப்படி ஏதாவது...'

இன்னும் இது போல நிறைய உள்ளன எழுதுவதற்கான காரணங்களைப் பட்டியலிட.

* இவற்றையெல்லாம் விட மிக முக்கியமாக நான் கருதுவது, எழுத்து வழியாக சம்பாதித்துக் கொள்ளும் உறவுகள். எண்ணிக்கை பற்றிய கவலைகள் இன்றி மிக மிக நெருக்கமான நட்புகளைப் பெற்று பேணுவதே எழுதுவதன் மூலம் அமைகிற ஆகப் பெரிய ஆசிர்வாதம் என்று அழுத்தமாக நம்புகிறேன்.
 
இன்னொரு அகநிறைவும் உள்ளது. நான் வியந்து வாசிக்கும் பல எழுத்தாளுமைகளிடம் தனிப்பட பேசியது இல்லை. கடிதங்கள் எழுதியது இல்லை. இன்று முகநூலில் வியந்தோதும் சந்தர்ப்பங்கள் போல அன்று இல்லை. எனினும் அன்றாடம் பல நிகழ்வுகள் அவர்களுடைய எழுத்தை நியாகப்படுத்தும்போது உள்ளுக்குள் ஒரு பூரிப்பு நிகழும். இந்த மனிதர் சிவசங்கரி மேடம் எழுதிய கோழைகள்ல வர்ற அப்பா போல, இது லக்ஷ்மி அம்மாவின் சாதாரண மனிதனில் வருகிற நந்தவனத்து வீடு மாதிரியே, இந்த விதமான ஒரு surrogacy கதையை ஏஆர் எப்பவோ எழுதி இருக்காங்க, மாதாந்திர தொந்தரவு பற்றி பதின்பருவத்தில் வாசித்த சிறுகதை இன்னும் அச்சு போல மனதில் என்று ஏதோ ஒருவிதத்தில் அவர்களை நியாபகம் செய்து கொண்டே இருக்கிறேன், இருப்பேன். அவர்கள் அறியாத ஒருத்தியின் வாழ்வில் மிக நெருங்கிய உறவினர் போல கூடவே அவர்கள் வருகிறார்கள்,  தொடர்கிறார்கள், வாழ்கிறார்கள் தம் எழுத்து மூலமாக!

* இது போல யாரோ ஒருவருடைய நினைவிலாவது, ஒரேயொரு சந்தர்ப்பத்திலாவது நம் எழுத்து குறித்த நினைவு எங்கோ, யாருக்கோ, எப்போதேனும் சிறுதுளி கணமேனும் எழுமானால் - எழுதும் பிராயாசைக்கான மொத்த அர்த்தமும், முழு நிறைவும் அந்த நொடியில் பூர்த்தியானதாக உணரலாம் எனத் தோன்றும்.

இது லட்சியம் எல்லாம் இல்லை. மேலே குறிப்பிட்டது போன்ற சிறு அபிலாஷை, குட்டியூண்டு விருப்பம் அவ்வளவே. நடக்குமா எனத் தெரியாது. நடந்தால் நன்றாக இருக்குமே என்கிற மாதிரி.... அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் மகிழ்ச்சி என்கிற நம்பிக்கையுடன் வழக்கம் போல கிறுக்கிக் கொண்டே இருக்கவேண்டியது தான்! நம்பிக்கை தானே வாழ்க்கை!

சோ, எழுதுவது என்பது இவை எல்லாமே சேர்ந்த ஒரு பயணத்திற்கான ஆயுத்தம் தான். மற்றபடி  நம் மனதுக்கு உகந்தவண்ணம் எழுதுவதும்,  திருத்துவதும், எத்தனை மாய்ந்து மாய்ந்து செதுக்கினாலும் சிலநாட்கள் கழித்து அதில் திருப்தி இல்லாமல் இன்னும் நன்றாக செய்திருக்கலாமே என மிகக் காட்டமாக குறை காணுவதும் ஒரு சுழற்சி போல மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே தான் இருக்கும் என நம்புகிறேன். 

எழுத்தும் ஒரு வளர்சிதை மாற்றம் தான்!

அதனால், இலக்கு என்கிற பிரம்மாண்டங்கள் எதையும் முன்வைத்துக் கொள்ளாமல், என்ன செய்யத் தோன்றுகிறதோ அதைச் செய்தபடி  - அது கோலம் போடுவதோ, தரை துடைப்பதோ, தண்ணீரைத்  திருப்பிவிட்டு அடித்தொண்டையில் அலறுவதோ, தூரத்து வானின் ஒற்றைப் புள்ளியை நிச்சலனமாய்ப் பார்த்தபடி அமர்ந்திருப்பதோ, இல்லை எழுதி கிறுக்கி திருத்திக் கொண்டிருப்பதோ எதுவாகிலும் அப்போதைக்கு அப்போதை மனம் சொல்வதைச் செய்து கொண்டிருக்கவே விருப்பம்! நத்தையின் வேகத்தில் எனினும் நகர்ந்து கொண்டிருப்பதே நல்ல பயணம் தானே!

2 comments:

S.Jovitha said...

அருமை மேடம் அருமை. அத்தனையும் உண்மை.
இதுக்கு மேல் வேறு யாரும் எதுவும் சொல்லிட முடியாது. வளரட்டும் தங்கள் எழுத்து

HemaJay said...

Thank you Jovitha :)