சும்மா இருந்து இருந்தே டயர்ட் ஆகி, மீண்டும் சும்மா இருந்து, இன்னும் டயர்ட் ஆகி என பழகப்பழக பாலும் புளிக்கும் என்கிற மாதிரி கடந்து கொண்டிருக்கின்றன நாட்கள். 'ஹை ஜாலி.. ஸ்கூல் இல்ல...' என்று ஓடி வந்த பிரீ-ஸ்கூல் பிள்ளை கூட 'என்னடா வாழ்க்கை இது? போரடிக்கிறது' என்று கவிழ்ந்து படுத்துக்கொண்டு தத்துவம் பேச ஆரம்பித்திருக்கிறது.
நாள் முழுவதும் வீட்டிலே தானே இருக்கவேண்டும், இருந்து கொள்ளலாம், மிஞ்சினால் ஒரு மாதம் என்று தொடங்கியது - வாரத்துக்கு ஒருநாள் வொர்க் ப்ரம் ஹோம் கொடுக்க மூக்கால் அழும் நிறுவனங்கள் மொத்தமாக சலுகை கொடுத்த மகிழ்ச்சியில் இருந்தவர்கள் தொடர்ந்து இதே சூழலில் பணி செய்து கொண்டிருப்பதை பாரமாக உணர்கிறோம். மனிதன் ஒரு சமூக விலங்கு என்று நிரூபிக்கும் வகையில் நண்பர்களைப் பழைய மாதிரி பார்த்து, பேசி, அளவளாவ மனம் ஏங்குகிறது.முன்னெப்போதும் மனித இனம் சந்தித்து இராத சூழ்நிலையில் ஒருவருக்கு இருக்கிற
பயத்தை பகிர்ந்துகொள்ள, பகிர்ந்துகொள்ள அது ஒரு சமூக பயமாகவே மாறிவிடுகிறது. ஒவ்வொரு நொடிக்கும் ஒவ்வொரு அச்சம் நம்மை ஆக்கிரமிக்க காத்திருக்கும் சூழலில், சுற்றியிருக்கும் எல்லோருடைய
மனமும் அதே அதிர்வெண்ணில் உள்ளபோது என்னதான் அமைதியாக இருக்க நாம் பிரயத்தனம் செய்தாலும், இயல்பாகவே நம் யோசனை திறனும் சமநிலையும் குலைந்து
நாமும் அதே மனநிலையையே பின்பற்றுவோம் என்கிறார்கள்.
கிருமி மட்டுமல்ல. ஒருவகையில் பயமும் பதட்டமும் கூட தொற்றுநோய்களே.
இதைத் தவிர நோய் தோற்றுக்கு உள்ளானவர்கள் குறித்து அதிகரித்து வருகிற வெறுப்பு. டெல்லி, அமெரிக்கா என சுற்றி சென்னை வைரஸ் என வந்தடைந்து இப்போது
தெருவுக்குத் தெரு, எதிர் வீடு, பக்கத்து வீடு என நெருங்கி வர வர, மனித துவேஷம்
அதிகரித்துக்கொண்டே செல்வதைக் காண வருத்தமாக உள்ளது. வெறுப்பும் துவேஷமும் கூட ஒட்டுவாரொட்டிகள் தான்.
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்கிறபோது கவனமாய் இருப்பதுதான் தேவையே தவிர வெறுப்பு கொள்வதற்கு என்ன அவசியம் என புரியவில்லை. நண்பரின் மனைவி மருத்துவர். அக்கம்பக்கத்தில் அவரிடம் நடந்து கொள்கிற விதங்களை அவர் விவரித்தபோது இப்படி கூடவா மக்கள் மாறிவிடுவார்கள் என்று ஏமாற்றமாக இருந்தது. உயிர் பயம் வந்துவிட்டால் எத்தனை பழகி இருந்தாலும் யாரும் யாரையும் மிதித்துவிட்டு செல்லக்கூட தயங்க மாட்டார்கள் போல.
மற்ற எல்லா சிரமங்களை, கவலைகளையும் தாண்டி மனதை பேணிக்கொள்வது தான் நமக்கு இப்போதுள்ள மிகப்பெரிய சவால். அலைபேசி அழைப்புகளில் அச்சங்களைப் பகிர்வதைத் தவிர்த்துக் கொண்டு ஆறுதல்களை, தைரியங்களை, மன திடங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது நல்லது. 'இந்த நிலை உலகளாவியது. யாருமே இங்கு தனி இல்லை. எவரும் இதற்கு விதிவிலக்கல்ல. நாமும் இந்த அலையைக் கடக்க காத்திருக்கும் சிறுபுள்ளி' என்கிற நினைப்பே இந்த நாட்களைக் கடக்க நமக்குத் தேவையான மனவலிவைக் கொடுக்கும்.
கீழே இணைத்துள்ள வரிகளை ரத்தன் டாடா பகிர்ந்ததாக சிலநாட்களுக்கு முன்பு ஒரு பொய் செய்தி பரவியது. யார் சொன்னார்கள் என்கிற முக்கியத்துவங்களை விட்டுவிட்டு இந்த வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தொழில், வேலை,
படிப்பு, எதிர்காலம் என எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு 'வாழ்வது,
ஆரோக்கியமாக வாழ்வது' மட்டுமே தற்போதைய லட்சியமாக, முக்கிய எண்ணமாக
வைத்துக் கொள்ளலாம்
No comments:
Post a Comment