"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, June 22, 2020

மன சோர்வுகள்


ஆரம்ப லாக்டவுன் அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்தில் ஒரு வித பதட்டம் இருந்தாலும் நிறைய நம்பிக்கை இருந்தது. உலகமே சேர்ந்து போராடுகிறது, இரு வாரங்களில் நிலைமை சீராகிவிடும். மிஞ்சினால் ஒரு மாதத்திற்குள் இயல்புநிலை திரும்பும், எப்படியும் மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் என்கிற எண்ணமே பலரிடமும் மிகுந்திருந்தது.

பிள்ளைகளுடன் இருக்க முடிகிறது, குடும்பத்துடன் நேரம் செலவழிக்க ஒரு வழி, ஓடிக் கொண்டே இருந்து விட்டோம், சிறிது இளைப்பாறலாம் என்று நேர்மறையாக நினைத்தபடி ஒருவருக்கொருவர் மாறி மாறி திடம் சொல்லிக் கொண்டு இப்படியே நான்கு மாதங்களை கடந்து வந்து விட்டோம். திரும்பினால் ஜூலை வந்து தலைவாசலில் காத்திருக்கிறது. ஆரம்ப பரபரப்பு வற்றி பெரும்பாலானவர்களைச் சோர்வு ஆக்ரமித்து இருப்பதை உணர முடிகிறது.

நான் செய்திகளைப் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். எண்ணிக்கைகளின் ஸ்கோர் போர்ட்டும், அதையொட்டிய செய்திகளும்.... வேண்டாம், இவை எதுவுமே தெரிய வேண்டாம். ஏதேனும் மாயவிசை வந்து உலகைக் காப்பாற்றிக் கொடுத்தாலே போதும் என்கிற மாதிரியான வறண்ட மனநிலை வாய்த்து விட்டது. இந்த மனச் சோர்விலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஏதாவது ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டியுள்ளது. பல மாதங்களாக நான் எட்டியே பார்த்திராத இந்த வலைபதிவு பக்கங்களை தூசி தட்டி பதிவுகள் இடுவதும் அதன் ஒரு பகுதியே.

வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருக்கும் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் ஒரு கவலை, எதிர்காலம் குறித்த பயம், பதட்டம் என ஒருவரும் இந்த மனச்சோர்வில் இருந்து விடுபட்டு இருக்க முடியவில்லை. இந்த நேரத்தில் எல்லோருக்கும் தேவை ஆறுதல். 'நீ மட்டுமல்ல... நானும் இதே மன நிலையில் தான் இருக்கிறேன், கவலை கொள்ளாதே...' என பரஸ்பரம் சொல்லிக் கொள்கிற அன்பும் பகிர்தலுமே இப்போது நம் அனைவருக்கும் மிகத் தேவையாக இருக்கிறது.

இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன் கவனமாக இருப்பது தான் நமக்கு முன் உள்ள ஒற்றை வழியாகத் தெரிகிறது. காத்திருப்போம், வெளிச்சம் பிறக்காமல் இருக்க முடியாது. வானில் அக்கீற்று ஒளிவிடும்வரை அன்பை பகிர்ந்து அன்பு செய்வோம்!


ஓர் அன்பை
ஒரு புன்னகையை
ஒரு வாழ்த்தை
ஒரு நேசிப்பை
ஒரு பாராட்டை
சின்ன மகிழ்ச்சியை
துளி அங்கீகரிப்பை
பரிவானதொரு
தலை கோதலை
நலமா எனுமோர்
அலைபேசி அழைப்பை
ஒரேயொரு
பிரிய சொல்லை
எதிர்பார்த்துக் கொண்டே
காத்திருக்கிறது
ஓரோர் மனமும்
ஒவ்வொரு கணமும்!


No comments: