முகநூலில் ஏதாவது தலைப்புகள் கொடுத்து நான்கே வரிகள் எழுத சொல்லி கவிதை சவால் விளையாடிக் கொண்டோம். 'சோறு' என்ற பெயர் கொடுத்துவிட்டு எப்படி லிமிடெட் மீல்ஸ் பரிமாறுவது என்றெல்லாம் கெத்தாக சொல்லி சமாளித்து விட்டாலும் நறுக்கென நாலு வரியில் ஒன்றும் தோன்றவில்லை என்பது தான் உண்மை. பின்வருவனவற்றை 'கவிதை' என்றும் சொல்லலாம். வார்த்தைகளை வெட்டிப் போட்ட 'கிறுக்கல்' எனவும் குறிக்கலாம். சோறு சமைத்ததுடன் ஒதுங்கிக் கொண்டாயிற்று. இனி பெயர் வைத்துக் கொள்வது அவரவர் கவலை.
சோறு முக்கியம்
உடையாத பாசுமதியில்
நெய் மணக்கும் பிரியாணி;
உதிரியாய் மலர்ந்த சோற்றை
விள்ளாமல் தொட்டெடுத்து
விழிமூடி ருசிக்க கட்டித்
தயிர்ப்பச்சடி கூடவே
கெட்டிக் கோழி குழம்பு;
மல்லிகைப்பூ சம்பாவில்
மினுமினுக்கும் மீன் குழம்பு;
பொரித்த வஞ்சிரமும்
புளியிட்ட நெத்திலியும்;
பதமாய் சுட்ட இறாட்டுக்கு
பொருத்தமாய் நண்டு பிரட்டல் ;
முட்டை பொடிமாசுடன்
கோப்தாவை உள்தள்ளி
அலுமினியத்தாள் சுற்றிய
ஆறாம் விரலாய் கோழிக்கால்;
இடையே சுருட்டி மெல்ல
ரொட்டியுடன் பாலாடை;
மூச்சிடும் நொடிகளுக்கு
மஞ்சூரியனும் கீமாவும்;
தாகத்திற்கு விக்காமல்
லஸ்ஸியுடன் கீர் அருந்தி ;
கடைசியில் இனிப்பென
கேக்கும் பனிக்குழைவும்;
வேகமாய்ப் புசித்து
உண்டு உண்டு வியர்த்து
ருசித்தே களைத்து
சோம்பிய ஏப்பத்துடன்
சோம்பு அதக்கி
எழுகையில் தான்
சிறு புன்னகை
அரும்பும்;
அந்நாளில்
அளவாய் வாங்கி
ஆசையுடன் பரிமாறி
ஆளுக்கு இவ்வளவென
நறுக்கென பங்கிட்டு
எண்ணெய்சட்டியின்
அடிசலில் அம்மா
பிரட்டிக் கொடுத்த
ஒரு கவள
கறிச்சோற்றுக்கு
இவை எதுவுமே
ஈடாகாதென...!
-------------------
நான் (1)
நான் நானல்ல!
நானும் நீயும் வேறல்ல!
பேசிக் கொண்டன
பசியும் ருசியும்...!
நான் (2)
நான்...!
எங்கும் எதிலும் நான்...!
சுயமே தான் என்றாலும்
‘ன்’ சிலவேளை கனக்கும்.
ஓரினமே ஆனாலும்
‘ம்’ என்றும் சுவைக்கும்....!
(ன், ம் மெல்லினங்கள்)
‘ஏற்றத்தாழ்வுகள்’
(1)
ஒன்றின் ஏற்றம் மற்றதின் இறக்கம்;
மானின் தோல்வி புலியின் வெற்றி;
இயற்கையின் எழுச்சி மனிதனின் வீழ்ச்சி;
மனிதன் நகைக்கிறான்
தொட்டதெல்லாம் வெற்றியென;
இயற்கை சிரிக்கிறது
உன் விசை என்னிடமென!
-----------------
(2)
கொரோனா 'டவுன்' ஆனால்
மனிதன் 'அப்' ஆவான்.
இல்லேன்னா மொத்தமா
'ஆஃப்' ஆவான்.
(சாமி சத்தியமா இது கவிதை இல்லை. கொரானா பீதியில் உளறியது)
No comments:
Post a Comment