வேறு ஏதோ தேடத்துவங்கி எதேச்சையாக யூ-டியுப்பில் கண்டடைந்த திரைப்படம் mitr - My friend.
மாப்பிள்ளை வீட்டினர் முன் அமர்ந்து கீர்த்தனம் பாடி, NRI -ஐ திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா செல்லும் நாயகியுடன் படம் தொடங்குகிறது. அந்நிய மண்ணில் ஆரம்பிக்கும் நிறைவான மணவாழ்க்கை. தாய்மை அடைந்து குழந்தையும் பிறக்க, கணவன், மனைவி, மகள் என்று வாழ்கிற மகிழ்ச்சியான குடும்பம் என ஆர்ப்பாட்டங்கள் இல்லாத அமைதியான சிற்றோடையாக நகர்கிறது திரைக்கதை.
அழகான பாடல் பின்னணியில் பழைய நினைவுகளை அசைபோட்டபடி தனிமையில் அமர்ந்திருக்கும் நடுத்தர வயது பெண்ணாக ஷோபனா படம் முழுவதும் வியாபித்திருக்கிறார். மொத்த கதையும் இவருடைய தோள்களில் தான். கோபம், தவிப்பு, ஆதங்கம், பாசம், தனிமை என நீண்ட கண்கள் பேச ஒவ்வொரு உணர்வையும் நமக்கு அப்படியே கடத்துகிறார். சரியான பிரின்ட் இல்லையே என்கிற அலுப்பையும் மீறி ஆரம்பக் காட்சிகளில் மிளிரும் ஷோபனாவின் கண்களே இப்படத்தைத் தொடர்ந்து பார்க்க வைத்தன.
பதின்பருவத்தில் இருக்கும் மகள் தான் வளரும் கலாச்சாரத்திற்கு தகுந்தவாறு சுதந்திரம் எதிர்பார்த்து முரண்டு பிடிக்க, கணவர் தனது வேலைகளில் மூழ்கி நகரம் விட்டு நகரம் பறந்து கொண்டிருக்கிறார். சிதம்பரத்தில் வளர்ந்தவள் அமெரிக்காவில் பிறந்து வளரும் மகளை தன் கலாச்சார வளையத்துக்குள் இழுக்க முயல்வதும், மகள் பயமறியா இளங்கன்றாக 'உன் கல்ச்சுரல் அழுத்தங்களை என் மேல் திணிக்காதே' என்று வெகுண்டு எழுவதும், கணவர் 'எல்லாமே உன்னால் தான்' என்று மொத்த கோபத்தையும் மனைவி மேல் திருப்புவதுமாக ...
வடிகால் இல்லாத நிலையில் முகமறியா ஆன்லைன் நட்புடன் தன் ஆதங்கங்களைப் பகிர்ந்து கொள்கிறார். "மித்ர" எனும் ஆன்லைன் ஐடியுடன் ஒருவருக்கு ஒருவர் தன் கவலைகளை பகிரும் அளவுக்கு நட்பு வளர்கிறது. நீயும் ஒரு ஆணா, ஏன் ஒரு ஆணைப் போலவே பேசுகிறாய் எனக் கோவிக்கும்போது அந்தப்பக்கம் இருப்பது ஒரு ஆண் தான் எனத் தெரிய வருகிறது. யார் இந்த மித்ர என்பதுடன் இவள் எப்படி குடும்பத்தில் ஒதுங்கி நின்று தனக்கான அபிலாஷைகளை வளர்த்துக் கொள்கிறாள் என்று கதை செல்கிறது.
எந்த நாட்டில் வசித்தாலும், எத்தனை வசதிகள் இருந்தாலும் நடுத்தர வயது பெண்களின் புறக்கணிப்பு மனநிலை மாறுவதில்லை போலும். ஆணின் அலட்சியங்கள் அவனுடைய வேலையின் ஒருபகுதியாகப் பார்க்கப்படும். அதே நேரம் பெண் சற்றே ஒதுங்கி நின்றாலும் எந்த விதத்தில் எல்லாம் சந்தேகம் எழும் என்பதை நுணுக்கமாக சொல்லியிருக்கிறார்கள். மேலும், பக்கத்தில் இருப்பதன் அருமை நமக்கு தெரிவதே இல்லை என்பதையும்.
2002 -இல் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தை நடிகை ரேவதி தயாரித்து இயக்கியுள்ளார். அவருடைய சிந்தனை முதிர்ச்சி விரசமற்ற காட்சிகளில், தெளிவான காட்சியமைப்புகளில் தெரிகிறது. ஷோபனா, ரேவதி, கதாசிரியராக 'கண்ட நாள் முதல்' இயக்குனர் பிரியா, உதவி இயக்குனராக 'இறுதி சுற்று' சுதா கோங்குரா, பவதாரிணியின் இசை, ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் கூட பெண்களே என திறமையான மகளிர் அணி ஆங்கிலத்தில் உருவாக்கியுள்ள படம்.
எனினும், தமிழ் வட்டத்தில் இப்படம் அதிகம் கவனம் பெற்றது போல தெரியவில்லை. எப்போதும் மசாலா படங்களுக்குக் கிடைக்கிற முக்கியத்துவமும், விளம்பரங்களும் நல்ல படங்களுக்குக் கிடைப்பதில்லையே. ஒருவேளை ஆங்கிலத்தில் இயக்கி வெளியிட்டதாலும் இருக்கலாம்.
இந்த ஊரடங்கு நேரத்தில் அமைதியான பேமிலி மூவி பார்க்க வேண்டும் என விரும்பினால் இந்தப் படத்தை தாராளமாகப் பரிந்துரைக்கலாம். ஹிந்தி பதிப்பு யூ டியூபில் உள்ளது. எனக்கு தமிழ் பதிப்பு கிடைக்கவில்லை. சப்டைட்டில் இல்லை என்றாலும் மொழி அவசியமானதாகவும் தோன்றவில்லை.
No comments:
Post a Comment