என் தாத்தாவிற்கு ஒரு பழக்கம் உண்டு. அவருக்குப் பிடித்தமான உணவை யாராவது மறுத்தால் அடம் செய்து ருசிக்க வைக்கிற பிடிவாதமுண்டு அவரிடம். பேரன் பேத்திகள் ஏதாவது உணவு வேண்டாம் என்றால் கெஞ்சி, கொஞ்சி, பக்கத்திலேயே அமர்ந்து ஊட்டி விட்டு தான் ஓய்வார். 'இதை.... இதை மட்டும் சாப்பிட்டு பாரு....' என்று கெஞ்சுபவரின் பாசப்பிடியில் இருந்து வெளிவர முடியாமல் அவர் கொடுப்பதை வாங்கி ருசித்து, அவர் சிலாகிக்கும் அழகிலேயே நமக்கும் அது ருசியான உணவாக மாறிப் போகும். அவர் இல்லாமலாகி இருபது வருடங்கள் கடந்து இருந்தாலும் அந்த அன்பு மட்டுமே இப்போதும் அவரை எல்லா நினைவுகளிலும் இருத்தி வைத்திருக்கிறது.
எனக்கும் இதேவிதத்தில் ஒரு பழக்கம் உண்டு - உணவில் இல்லை, பார்க்கும் சினிமாக்களில். ஏதாவது ஒரு திரைப்படம் பார்த்து, அதை மனதுக்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்தால் என்னைச் சேர்ந்த எல்லோரும் அதைப் பார்க்கவேண்டும் என்று விரும்புவேன், வற்புறுத்துவேன்.
ஒருமுறை அம்மாவிடம் 'மிதுனம்' தெலுங்குப் படத்தை போட்டுவிட்டு 'இது நல்லா இருக்கும், மஸ்ட் வாட்ச்' என்று சொல்லி அமர்த்தி விட்டு என் வேலைகளைப் பார்க்க சென்று விட்டேன். நான் சொன்னேனே என்று மொழி புரியாமல் அந்தப் படத்தில் வரும் இரு கதாபாத்திரங்களை மட்டுமே பார்த்தபடி ஒரு மணி நேரம் போல அமர்ந்திருந்தவரைக் கண்டு எனக்கே பரிதாபமாக போய்விட்டது.
நான் அருகே இருந்து ஒவ்வொரு காட்சியையும் விவரித்து இருந்தால் அவருக்கு ரசிப்புக்குரியதாக இருந்திருக்கலாம். பிறகு காட்சிகளை ஓட்டி ஒன்றாக பார்த்து முடித்தோம். நம் ரசனையை பிறர் மேல் சுமத்துவது சரியில்லை என்றாலும் நல்ல ருசியான உணவை நம்மைச் சேர்ந்தவர்களும் ருசிக்க வேண்டும் என்கிற பேராசை ஜீன் கடத்தலால் எனக்கும் வந்திருக்கிறது போலும்.
அப்படி சமீபத்தில் நான் முதல் முறை பார்த்து அயர்ந்து போய், வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் தனித்தனியாக பிடித்திழுத்து, பிள்ளைகளை கெஞ்சாத குறையாக அமர்த்தி பார்க்க வைத்த படம் 'Ayla'. ஒவ்வொருமுறை பார்த்தபோதும் எனக்கு அழுகை வந்தது. சிரிப்பு வந்தது. பிள்ளைகள் உட்பட எல்லோரும் மிக மிக ரசித்த ஒரு திரைப்படம் இது!
பொதுவாக துருக்கிய படங்கள் இந்தியத் திரைப்படங்கள் போலவே உள்ளன, காதல், குடும்பம், உறவுகள் என அவர்கள் கொடுக்கும் values அப்படியே நம் ஊர் சினிமாக்களைப் போலவே. இதை சமீபத்தில் ஒரு தோழியிடம் பகிர்ந்து கொண்டேன். அவர் சொன்னார், "நீங்க ரொம்ப லேட். இது தெரியாமலா துருக்கிய கதைகளை இங்கே காபி செய்கிறார்கள்!?" என்று. இருவரும் சிரித்துக் கொண்டோம்.
சரி, 'Ayla' வுக்கு வருவோம். துருக்கியப் படை ஒன்று நேசப் படையாக தென் கொரியாவுக்கு அனுப்பப்படுகிறது. அக்குழுவில் செல்லும் தொழில் நுட்ப வல்லுனரான சுலைமான் தான் கதையின் இரண்டாவது நாயகன். முதல் ஹீரோ யார் என்கிறீர்களா? போரினால் தன் தாய் தந்தையரை இழந்து, தான் மட்டும் உயிர்தப்பி, கிட்டத்தட்ட பனியில் உறைந்து போய் அழுது கொண்டிருக்கும் குழந்தை தான் இக்கதையின் நாயகன், நாயகி எல்லாமே.
சுலைமானால் காப்பாற்றப்படும் அந்தக் குழந்தை ஒப்படைக்க யாரும் இல்லாததால், முகாமுக்கு அனுப்ப இவர்களும் விரும்பாததால் போர் நடக்கும் தளத்திலேயே இவர்களுடன் வாழ்கிறது. சுலைமானுக்கும், அந்தக் குழந்தைக்கும் நிகழும் பாசப் பரிமாற்றங்களே கதையின் மையம். அய்லா என்றால் துருக்கிய மொழியில் நிலவின் ஒளி என்ற பொருள். சுலைமானுக்கு மட்டும் இன்றி அங்குள்ள எல்லா போர் வீரர்களுக்குமே அவள் செல்லக் குழந்தையாகிறாள். பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கும் கூட.
ஒருகட்டத்தில் சுலைமான் ஊர் திரும்பவேண்டிய கட்டாயம். திருமணம் முடித்து வந்து அழைத்துச் செல்வதாக சொல்லி, வேறு வழி இன்றி அவன் துருக்கி திரும்புகிறான். அவன் சொன்னபடி தென்கொரியா சென்று அய்லாவை மீட்டுக் கொண்டானா, இல்லை குழந்தையைத் தவறவிட்டு விட்டானா என்பது தான் கதை. நடுவில் காதல், அவனுக்காக காத்திருக்கும் மாமன் மகள், உடையும் நம்பிக்கைகள், திருமணம் என எல்லா இந்திய அம்சங்களும் உள்ளன.
என்ன ஒரு உணர்வு பூர்வமான திரைப்படம்!? வர்ணிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. நிஜமாய் நடந்த சம்பவங்களை முன்னிருத்தி திரைப்படம் சமைத்திருக்கிறார்கள். யூ-டியூபில் சப்டைட்டிலுடன் உள்ளது. https://www.youtube.com/watch?v=8Yxhnbp5uKs
நீங்கள் சென்டிமெண்டான மனிதரா, emotional fool என்று யாராவது உங்களைப் பார்த்து சொல்கிறீர்களா, எளிதில் உணர்ச்சிவசப்படுகிறாய் என்று திட்டு வாங்குகிறீர்களா, நிச்சயம் இது நீங்கள் தவறவிட்டு விடக் கூடாத திரைப்படம்.
--இந்த மூன்று கேள்விகளில் ஏதாவது ஒன்றிற்காவது நீங்கள் 'ஆமாம்' என்று நினைத்திருப்பீர்கள். வேறு வழியில்லை. நீங்கள் இந்தத் திரைப்படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் !! ☺☺
1 comment:
Watched the movie! I just lived it
Post a Comment