அந்திமழை இதழில் வெளிவந்த ‘பூனை மனிதர்கள்’ சிறுகதைக்கு திரு. அ. ராமசாமி அவர்களின் விமர்சனப்பார்வையை இங்கு பகிர்வதில் மகிழ்கிறேன்.
பூனைகள் -யானைகள் -நாய்கள்
இம்மாத அந்திமழையில் "பூனை மனிதர்கள்" என்றொரு சிறுகதை அச்சிடப்பட்டுள்ளது. அதனை எழுதியவர் ஹேமா ஜெய். இந்தப் பெயர் கொண்ட எழுத்தாளரின் எந்தப் பனுவலையும் இதற்கு முன் வாசித்ததில்லை. அவர் எழுதி நான் வாசிக்கும் முதல் கதை இதுதான்.
மனிதர்களின் வளர்ப்பு மிருகங்களில் நாய்களுக்கும் பூனைகளுக்கும் கடும்போட்டி உண்டு. நண்பர்கள் தெரிந்தவர்கள் எனப் பலரது வீடுகளுக்குப் போகும்போது நாய்கள் வளர்ப்பது பற்றிய பேச்சுகள் இருப்பவர்கள், பூனைகள் வளர்ப்பது பற்றிப் பேசுவதில்லை என்பதைக் கவனித்திருக்கிறேன். இதன் மறுதலையாகப் பூனைகள் வளர்ப்பவர்கள், நாய்களின் மீதான பிரியத்தைக் காட்டுவதையும் பார்த்ததில்லை. நாய்ப்பிரியர்களும் பூனைப்பிரியர்களும் எதிரெதிராய் நிற்பவர்களாகவே தோன்றுகிறது. ஆனால் கதைகளுக்குள் இப்படியான எதிரெதிர் நிலைபாடுகளை எழுதிக்காட்டிய பனுவல்கள் வாசிக்கக் கிடைக்கவில்லை. பூனை வளர்ப்பவர்களின் பிரியங்களும், நாய் வளர்ப்பவர்களின் நேசமனநிலைகளிலும் தனித்தனியாகவே தான் வாசிக்கக் கிடைக்கின்றன. நேரனுபவத்திலும் புனைகதைகளுக்குள்ளும் பூனையின் மீது காதல் கொண்டவர்கள் அதிகமும் பெண்களாக இருப்பதையும் நாய்களின் நேசர்களில் ஆண்களாக இருப்பதையும் வாசிக்க முடிகிறது.
ஹேமா ஜெய்யின் கதையில் பூனைமீது காதல் கொண்டவர் ஆண். நாய்களின் மீது பிரியங்கொண்டவர் பெண். காதலுக்கும் பிரியத்துக்கும் வேறுபாடு உண்டுதானே? கதையில் வரும் ஈஸ்வரி (மனைவி)க்கு நாய்கள் மீது விருப்பம் என்றால், சிவம் (கணவன்) பூனையின் பக்கம் நிற்பவன். சிவத்திற்கு ராணி என்ற பூனையின் மீது இருப்பது பிரியமல்ல; காதல். காதலுக்கும் மேலாக ராணியின் அடிமையாக இருப்பவன் என்பதுபோல மனைவியின் பார்வைக்கோணத்தில் கதையைச் சொல்லும் கதாசிரியர் எழுதிக்காட்டுகிறார். அந்த எழுத்து, மனிதர்களின் இயல்புகள் சிலவற்றைப் பூனையின் மீது ஏற்றி, பூனையை மனிதர்களின் உருவகமாக மாற்றிக் கட்டமைக்கிறார்.
கணவன் சிவம், தன் மீது காட்டும் காதலை- பிரியங்களைப் புரிந்துகொண்டு பூனை, அவனது மனைவியான ஈஸ்வரியைப் பொருட்படுத்துவதில்லை என்பதைக் கதையின் ஆரம்ப நிகழ்வில் எழுதிக்காட்டிவிட்டு, கதையைக் குடும்பத்து உறவுகளின் மனநிலைக்குள் நகர்த்தியிருக்கும் இந்த உத்தி கவனிக்கத்தக்க உத்தி.
நிலவுடைமைச்சாதிகளின் குடும்பங்களில் நடக்கும் சொத்துப்பிரிப்புக் கோபதாபங்களை அனுபவங்களைக் கொண்டு எழுதிய வெளிப்பாடாக இருக்கிறது.
இந்தக்கதையைப் படித்தபோதுக் கடந்தமாத உயிர்மையில் (செப்டம்பர், 2024) பெருமாள் முருகன் எழுதிய செம்மி என்ற சிறுகதையும் சரவணன் சந்திரன் எழுதிய ஓங்கல் என்ற சிறுகதையும் நினைவுக்கு வருகின்றன. அந்தக் கதைகளில் இருவருமே விலங்குகளின் குணங்களை ஏற்றுக்கொண்டு அவற்றைக் கதாபாத்திரங்களாக்கியிருக்கிறார்கள். ஓங்கல் என்பது யானை; செம்மி என்பது நாய்.
யானை எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ளும்; தனக்கு நேர்ந்த துன்பத்திற்குப் பழிவாங்கவும், உதவிக்கு மறு உதவி செய்யவும் நேரம் பார்த்துக்கொண்டிருக்கும். அதற்குப் பொருத்தமான நேரம் வரும்போது திருப்பிச் செய்துவிடும் என்பது இங்கே இருக்கும் பொதுப்புத்தி சார்ந்த கருத்து அல்லது நம்பிக்கை. அதேபோல் நாய்களின் பொதுக்குணம் நன்றியுடையது. தனது எஜமானர்களிடம் மிகுந்த நன்றியோடு நடந்துகொள்ளும்; பாதுகாக்கும். எந்தத் தருணத்திலும் அவர்களை விட்டுக்கொடுக்காதவை நாய்கள் என்பதும் நாய்கள் சார்ந்த பொதுப்புத்திக் கருத்து; நம்பிக்கை. இவ்விரு பொதுப்புத்தி சார்ந்த கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொண்டு கதைகளை எழுதியிருக்கிறார்கள்.
தனது கதைகளைப் பெரும்பாலும் சொல்லும் முறையிலேயே எழுதிவரும் சரவணனின் கதை, பின்னோக்கியும் முன்னோக்கியும் நகரும் உத்திகளோடு இருந்தாலும் கதையின் நிகழ்வுகளைப் பரப்பிக்காட்டும் தன்மை இல்லாததால், கதையின் சொல்லியாக இருக்கும் அந்தப் பாத்திரத்தின் நம்பிக்கையாகவே கதை அமைந்துள்ளது. அந்தப் பாத்திரத்தின் நம்பிக்கை என்பது யானைகளைப் பற்றிய பொதுப்புத்தியை ஏற்றுக்கொண்ட வெளிப்பாடாக இருக்கிறது. இது நவீன மனத்தின் இருப்பாக இல்லை.
பெருமாள் முருகனின் கதை, சின்னச்சின்ன நிகழ்வுகளைப் பரப்பி வைத்துள்ள கதையாக வடிவம் கொண்டுள்ளது. கதாபாத்திரங்களுக்குப் பெயரிடுதல் தொடங்கி, அவற்றைப் பற்றிய குணாம்சங்களைப் பற்றிய விவரிப்புகள் வரைத் தொடர்ந்து எழுதிய அனுபவத்தின் வெளிப்பாட்டைக் கதை சொல்லலில் வாசிக்க முடிகிறது.பூனையிடம் அன்பு காட்டிய மஞ்சுவுக்கு நாயின் மீது ஈடுபாடும் தேவையும் ஏற்பட்டதை விவரிப்பதோடு, அற்பனார் என்ற பட்டப்பெயரிட்டு அழைக்கப்படும் பாத்திரத்தின் வக்கிரப் பார்வையை விவரிப்பதில் கதைக்கான முரணை உருவாக்கித் தந்துள்ளார். அந்த வக்கிரப்பார்வையிலிருக்கும் அற்பனாரிடமிருந்து காப்பாற்றும் துணையாக செம்மி என்ற நாய் இருப்பதைக் கதை விவரிக்கிறது. இங்கும் நாய்கள் பற்றிய பொதுப்புத்தி மனநிலை மீது கதாசிரியருக்குக் கேள்விகள் இல்லை.
ஒரு நவீனத்துவ மனநிலை என்பது மனிதர்களின் நடத்தைகள் குறித்தே அவநம்பிக்கைகளைக் கொண்டதாக இருக்கிறது. எல்லாவற்றையும் அப்படியே ஏற்று வெளிப்படுத்துவதைத் தாண்டிக் கேள்விகளையும் ஐயங்களையும் பின்னணிக் காரணங்களையும் தேடுவதாகவும், தேடி விவாதப்படுத்துவதாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அதன் வழியாகவே நவீன கதைகளின் அடுக்குகள் உருவாக்கப்படுகின்றன. அப்படியான அடுக்குகளை உருவாக்காமல் எளிமையான நேர்கோட்டில் கதைகளை எழுதியுள்ளனர்.
இம்மூன்று கதைகளையும் ஒருசேரத் திரும்ப நினைக்கும்போது ஹேமா ஜெய்யின் பூனை மனிதர்கள் நவீன மனநிலையின் அடுக்குகளோடு எழுதப்பெற்ற கதையாக இருக்கிறது. புது எழுத்தாளராக இல்லாமல் எழுதிப்பழகிய கையாக வெளிப்பட்டுள்ளார் எனச் சொல்லத்தோன்றுகிறது.
-----------------------------------