ரொம்ப நாட்களுக்கு முன்னால் எழுதிய சிறுகதை. முடிந்தவரை தூசி தட்டிப் போட்டிருக்கிறேன். 'வலிய சிறகுள்ள பறவைகள்' இணைப்பில்.
காலிங்பெல் ஒலி மீண்டும் ஒரு முறை அலற, எங்கோ இழுத்துக்கொண்டு போன
தூக்கத்தை விரட்டியடித்தபடி சாந்தி எழுந்தாள். இரவெல்லாம் உறங்காமல் காலை நான்கு
மணிக்கு மேல் தலையை சாய்த்ததில் உடம்பெல்லாம் எங்கோ பறப்பது போல இருக்க, தட்டுதடுமாறிப்போய்
கதவை திறந்தால் வெளியே காவேரி தான் நின்றுகொண்டிருந்தாள்.
“எத்தனை தடவ பெல்லடிக்கறது, அனும்மா...? வீட்டுல இருக்கீங்களா
இல்லையான்னு தெரியாம திரும்பி போக பார்த்தேன்...” அவள் அலுத்துக்கொண்டே
வராண்டாவின் ஒதுக்குப்புற மூலையில் சாய்த்திருந்த விளக்குமாறை கையில் எடுத்தாள். “சத்தமே
கேக்கல, காவேரி...” சாந்தியின் பதில் அவளுக்கு கேட்டதோ இல்லையோ, அவள் பாட்டுக்கு
குனிந்தபடி பரக்பரக்கென்று வாசலில் தேங்கியிருந்த தண்ணீரை கூட்டித் தள்ளிக்கொண்டிருந்தாள்.
நேற்று இரவு முழுவதும் அடித்து ஊற்றிய மழையில் மரங்களில் இருந்து
உதிர்ந்த இலைகளும், பூக்களும் தரையெல்லாம் மண்டிக்கிடக்க, களேபரமாக இருந்த
முன்வாசலை மீண்டுமொருமுறை பார்த்துவிட்டு சாந்தி உள்ளே வந்தாள்.
முகத்தை கழுவிவிட்டு வந்து
பாலை அடுப்பில் வைத்தபோது, “அனும்மா... ஸ்ட்ராங்கா
ஒரு காபி போட்டு வைங்க... இந்தா வந்துடுறேன்.” வெளியே கோலம் போட்டுக்கொண்டிருந்த
காவேரி சமையலறை ஜன்னல் வழியாக சாந்தியை பார்த்து சுவாதீனமாக சொன்னாள். அவளது உரிமைத்தொனியை கண்ட சாந்திக்கு எப்போதும் போலவே இப்போதும் புன்னகை
மலர்ந்தது. இது வழக்கம்தான் என்பதால் ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள்.
காவேரி... பேரைப்போலவே பிறந்த
ஊருக்கும் வாழ வந்த ஊருக்கும் இடையில் ஓடிக் கொண்டிருக்கும் நதி போன்றவள். ஆனால் திசை
மட்டும் அப்படியே உல்டா.. தர்மபுரியை
சேர்ந்தவள்.... பெங்களூருவில் உள்ள பெயிண்டரை கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்து இங்கேயே பதினைந்து
ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கிறாள். வேலையில்
படுசுத்தம். இங்குள்ள கன்னட வேலையாட்கள் போல, கட் அண்ட் ரைட்டாக வந்து போகிற ஆள் இல்லை.
நல்ல மூடில் இருந்தால் அவள் வாய் ஓயவே ஓயாது . வந்த கதை, போன கதை
என்று படபடவென்று பேசுவாள். அதனாலேயே இந்த
ஏரியாவில் வசிக்கும் தமிழ் குடும்பங்களெல்லாம் அவளை விடாமல் பற்றிக் கொண்டிருக்கின்றன.
என்னதான் ஓட்டை வாயாக இருந்தாலும் தன்
குடும்பம் புள்ளைக்குட்டி பற்றியெல்லாம் பேசுவாளே தவிர, ஒருத்தரைப் பற்றி
இன்னொருவரிடம் புறணி பேசமாட்டாள். அவளுடைய இந்த சுபாவம் சாந்திக்கு ரொம்பவே பிடிக்கும்.
எங்கே காவேரிக்கு இன்னும் கொஞ்சம் வாய் தூக்கலாகிவிடுமோ என்ற பயத்தில் அவளிடம் அதை
வெளிப்படையாக சொல்லிக் கொண்டதில்லை
சாந்தி அனிச்சையாக நிமிர்ந்து மணியைப் பார்க்க, அது ‘எட்டு’ என்றது. பார்க்க
போனால் காவேரிகூட இன்று தாமதமாகத்தான் வந்திருக்கிறாள். சனிக்கிழமையென்பதால்
காலைநேரத்தில் சேர்ந்துபோகும் பரபரப்பும் பதட்டமும் இல்லை. எனினும் நேற்றிரவு நடந்த
களேபரத்தில் மொத்த சக்தியும் வடிந்தது போலிருக்க, நிற்கமுடியாமல் ஒரு மாதிரி
சோர்வாக இருந்தது. பால் கொதிப்பதற்காக அடுப்பு மேடைக்கு அருகிலேயே சாய்ந்து நின்றுக்கொண்டாள்.
மேலே படுத்திருந்த மூவருமே இப்போதைக்கு எழுந்து வரப்போவதில்லை என்று
தெரிந்ததால் தனக்கும் காவேரிக்கும் மட்டும் காபிப்பொடியையிட்டு வைத்தவள், குதிகாலில்
பட்டிருந்த அடி விண்விண்னென்று தெரிக்க, காலை மாற்றி ஊன்றிக்கொண்டாள்.
சாந்தி மத்திய கலால் துறையில் செக்ஷன் ஆபிசர். அலுவலகத்தில் காலாண்டு
தணிக்கை நடந்து கொண்டிருந்ததால் இரண்டு வாரமாக பயங்கர பிஸி.... வேலை அழுத்தத்தில்
ஹாஸ்டலிலிருந்து லீவுக்கு வந்திருக்கும் மகனையோ, பிளஸ் டூ தேர்வுகளுக்காக
தயாராகும் மகளையோ கவனிக்க நேரமில்லையேயென்ற தவிப்பு வேறு.
நேற்று மாலை தான் எல்லாம் முடிந்து ஆடிட்டர்கள் அறிக்கை கொடுத்திருந்தார்கள்.
பதினோரு மணிவரை அதற்கான பைல்களை திருத்தி, ஆடிட் குறிப்புகளுக்கு பதில்
எழுதிவிட்டு காத்திருந்து காத்திருந்து பார்த்தாலும் அவள் கணவர் சந்துரு வீடு
வந்து சேர்வதாகயில்லை. அவருடைய போனுக்கு அழைத்தாலும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
வெள்ளியிரவு என்பதிலேயே எங்கே போயிருப்பார் என்று தெரிந்தாலும் மழை கொட்டிக்கொண்டிருந்த
இரவில் அவரது தாமதம் அவளை வெகுவாக பயமுறுத்தியது.
இவள் வெளியே, உள்ளே என நடை பயில, பன்னிரண்டரை சுமாருக்கு கார் வந்து நின்றது.
டிரைவர் கைத்தாங்கலாக அழைத்து வர, தலை தொங்கிப்போய் தேய்த்து தேய்த்து வந்தவரை
பார்த்தபோது அடிவயிற்று நரம்பு அப்படியே சுருண்டு இழுத்துவிட்டது. இவளை பார்த்து
வாயை குளறிக்கொண்டு அஷ்டகோணலாக ஒரு சிரிப்பு வேறு...
‘என்ன மனுஷரு இந்தாளு..?’ அவமானத்தில் அழுகை பீறிட்டு வர, அந்த
ஓட்டுனர் வேறு இவளை பரிதாபமாக பார்ப்பது தெரிய, அவளின் எண்ஜான் உடம்பும் அப்படியே குறுகிப்போய்விட்டது.
அந்த பையனுக்கு நன்றியுடன் கொஞ்சம் பணத்தையும் கையில் கொடுத்துவிட்டு கதவை
சார்த்தி உள்ளே வந்தாள்.
தலையொரு பக்கம், காலொரு பக்கமென்று தாறுமாறாக வாய்பிளந்து சோபாவில் கிடந்தவரை
காணக் காண, ‘நல்ல குடும்பத்துல பொறந்து எத்தனை படிச்சு, எவ்வளவு பெரிய உத்தியோகம்
பார்த்து, என்ன புண்ணியம்...?...காலம் போன காலத்துல எங்கயிருந்து வந்து பீடைகணக்கா
ஒட்டிக்கிச்சு இந்த பழக்கம்...?’ கோபமும் ஆதங்கமும் எல்லை கடக்க, காலையில்
பேசிக்கொள்ளலாம் என்று சற்றுமுன் தோன்றிய நிதானம் காற்றில் பறந்தது.
“வயசு வந்த புள்ளைங்க இருக்கும்போது நிலைதெரியாம குடிச்சிட்டு வந்து
ஏன் இப்படி மானத்தை வாங்குறீங்க..? குடிச்சுதான் தொலைக்குறீங்கன்னு நினைச்சா இந்த
வயசுல பப், பார் டான்ஸ்ன்னு வேற போயி கூத்தடிச்சிட்டு வந்து... சே…” கணவனின்
சட்டையை பற்றியபடி அவள் அடிக்குரலில் அழுகையும் ஆத்திரமுமாக அரற்ற, “விடுடி... இது
என் பெர்சனல்... நீ தலையிடாதே... மனுசனுக்கு இருக்கிற டென்சனுக்கு கொஞ்சம் கூட
ரிலாக்சேஷன் வேணாம்..?” சந்துரு அவள் கைகளை பட்டென்று தட்டி விட்டார்.
“ஓ.. அப்ப எனக்கும் தான் டென்சன்.. நானும் குடிக்கவா..? இனிமே நானும்
குடிக்கிறேன்.. நீங்க போற இடமெல்லாம் நானும் வரேன்...”
“குடும்ப பொண்ணு மாதிரி பேசுடி.. பஜாரி மாதிரி கத்தாதே...” சந்துரு தன்னை உலுக்கிய மனைவியை புறங்கையால் தள்ளியதில் நிலைதடுமாறி
அவள் சாய, அருகிலிருந்த டீ-டேபிளில் இடதுகால் நச்சென்று மோதியது. வலி உயிர்போனதில்
தன்னை மறந்தவள் ‘ஆ’வென்று கத்திவிட்டாள்.
“என்ன சத்தம்மா..?” மேலிருந்த அறையில் விளக்கு எரிந்ததுடன் கூடவே மகனின்
குரலும் கேட்க, “ஒ...ண்ணுமில்ல கண்ணா... டேபிள்ல இடிச்சிக்கிட்டேன்...” அவசரமாக சாந்தி
குரல் கொடுத்தாள். எங்கே அவன் இறங்கி வந்து தந்தை இருக்கும் கோலத்தை நேரில் பார்த்துவிடுவானோவென்ற
பயத்தில் அவள் மேலேயே பார்த்துக்கொண்டிருக்க, நல்லவேளை, அவன் வரவில்லை. விளக்கும்
அணைக்கப்பட்டுவிட, சாந்தி நிம்மதி பெருமூச்சுடன் கன்றி சிவந்திருந்த குதிகாலை உயர்த்திப்
பார்த்தாள்.
ஒருவேளை மகன் இறங்கி வந்து அப்பாவை இந்த அழகில் பார்த்தால் தந்தை
மீதான மரியாதை கெட்டுப் போய்விடுமே என்பது ஒரு காரணம்தான் என்றாலும்கூட, அவனுக்கு இன்னும்
கூடுதல் துடுக்கு சேர்ந்து விடுமோ என்ற அச்சமே அதிகமிருந்தது. ஏற்கனவே படிப்பில் ஓட்டை,
காசை கொட்டி படிக்க வைத்தால் கை நிறைய அரியர்ஸ் வைத்துக்கொண்டு திரிகிறான். ஒவ்வொரு
செமெஸ்டரிலும் முக்கி முனகி, ரிவேல்யுவேஷன் போட்டு பாஸாவதற்குள் போதும் போதுமென்று
இருக்கிறது. இதில் தகப்பனின் லீலைகள் பற்றி முழுதாக தெரிந்தால் வேறு வகையிலும்
கெட்டுப்போய்விடுவானோ என்ற கவலையே பிரதானமாக உறுத்தியது.
மகள் அனு அதற்கும் மேல். “இந்த வருஷம் முக்கியமானதுடி, ஒழுங்கா படி”
என்றால், “ஏன்.... உன் பையனுக்கு மட்டும் கேபிடேஷன் கொடுத்து சீட் வாங்குனீல்ல?
மார்க் குறைஞ்சா எனக்கும் அப்படியே வாங்கிக்கொடு” இந்த வயசிலேயே சொத்துக்கணக்கு
போட்டு எகத்தாளமாக பேசுகிறாள்.. கேட்கும்போதெல்லாம் கணக்கு வழக்கே இல்லாமல் பணத்தை
அள்ளி அள்ளிக் கொடுத்து வளர்த்ததின் வெளிப்பாடு.
‘ஒருவேளை அவங்கப்பாவை பத்தி தெரிஞ்சுகிட்டுதான் இரண்டும் ஓவரா வாயாடுதுங்களோ...’
இந்த சந்தேகம் கூட சாந்திக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு. அதனாலேயே கணவனை பிள்ளைகள்
முன்பாக காட்டிக் கொடுப்பதில்லை. முழு பூசணியை சோற்றில் மறைத்து அல்லது அப்படி
மறைப்பதாக நினைத்துக் கொண்டு நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறாள்.
‘என்னடா வாழ்க்கை இது..? எல்லாம் ஒண்ணை பார்த்த மாதிரி குரங்கும்
கோட்டானுமா இருக்குதுங்க’ சமயத்தில் சாந்திக்கு அலுத்துத்தான் போகும். ‘என்ன செய்யறது?
விட்டுட்டு ஓடவா முடியும்...? இப்படியே ஓட்டவேண்டியதுதான்.....’ தன்போக்கான
யோசனையிலேயே அவள் தன் காபியை குடித்துவிட்டு, காய்கறிகளையெடுத்து நறுக்க ஆரம்பிக்க,
அவளின் மொபைல் ஒலித்தது. வசுமதிதான் அழைத்திருந்தாள். இருவருமே ஒரே அலுவலகம்.... ஒரே
க்ரேட்.... இருபது வருடங்களுக்கு மேலான நட்பு.
”ஹலோ... சொல்லு வசு....” அந்த பக்கமிருந்து மெல்லிய விசும்பலும்
மூக்குறுஞ்சும் ஓசையும் ஒலித்தது. “என்னாச்சு வசு.....?. வசு... இருக்கியா?”
“எல்லாமே விட்டுபோச்சு, சாந்தி.. நேத்து நைட்டு இரண்டுல ஒண்ணு தெரிஞ்சே
ஆகணும்னு பிடிச்சு வச்சு கேள்வி கேட்டேன். ஆமா.. அப்படித்தான்... அந்த பொண்ணு கூட
பழகுறது உண்மைதான்னு கூசாம சொல்றான்... இவனை நம்பி ஒண்ணுக்கு இரண்டா பொட்டை
பிள்ளைய பெத்து வச்சிருக்கேனே... நான் என்னடி செய்வேன்..?”
“அடப்பாவி.... ப்ச்.... அழாதடி.... அழாம பேசு.....”
“எங்க சின்னவளும் அவளும் ஒரே வயசு தான். என் கையாலயே எத்தனையோ நாளு
அவளுக்கு வடிச்சு கொட்டி..... அ..ப்படியே என் உடம்பெல்...லாம் பத்திக்கிட்டு
எரியுற மா...திரி... முடியலை...டி..” அவளது தீன ஸ்வரத்தில் இவளது கண்களும் கலங்கின.
“ஏதாவது செய்யலாம் வசு... நீ முதல்ல தண்ணிய குடிச்சுட்டு அப்புறம்
பேசு.....”
“பெரியவளுக்கு இடம் பார்த்துட்டுருக்கப்ப இந்தாளுபாட்டுக்கு அவகூடவே
போயிட்டா என்ன பண்றதுன்னு பயமா இருக்குப்பா... பேசாம எங்க வீட்டுல, அவங்கக்கா வீட்டுலன்னு
எல்லாரையும் கூப்ட்டு வச்சு பேசலாம்னு இருக்கேன்...”
“நல்ல யோசனைதான்... எப்பன்னு சொல்லு... நானும் வரேன்...” வசுமதியை முடிந்த
வரை தேற்றி போனை வைத்த சாந்தி பெருமூச்சுடன் உள்ளே வந்தபோது, சூடு பண்ணிய காபியை காவேரி
ஊதி ஊதி ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தாள்.
“அனும்மா.. எனக்கு ஒரு இரண்டாயிரம் ரூபா தேவைப்படுது.... கொடுத்தீங்கன்னா
மூணு மாசத்துல திருப்பி கொடுத்துடுவேன்...” அவள் கேட்க, எப்போதுமே ‘ஏன்?... எதுக்கு.?...’
இரண்டு வார்த்தையாவது கேட்டுவிட்டு பணம் கொடுக்கும் சாந்தி ஒன்றுமே பேசாமல் உள்ளே
சென்று பணம் எடுத்து வந்து தந்தாள்.
“உங்ககிட்ட சொல்றதுக்கென்ன அனும்மா...? இந்தாளு இத்தனை நாளு
குடிச்சிச்சிட்டு மட்டும்தான் கெடக்கிறான்னு தப்புகணக்கு போட்டுட்டுருந்தேன்.... போனவாரம்
தான் தெரிஞ்சது மூணாவது தெருவில ஒரு வீட்டுக்கு தொடர்ச்சியா போய்ட்டு
வந்துட்டுருக்கான்னு..... இதுக்கு மேல என்ன அசிங்கம் வேண்டிக் கெடக்குது...? அதான்
கழுதையை போய்யான்னுட்டு புள்ளைங்களை கூட்டிகிட்டு முந்தாநேத்தே எங்கண்ணன்
வீட்டுக்கு வந்துட்டேன்.... அது வீட்டு பக்கத்திலேயே ஒரு வீடும் புடிச்சாச்சு.. அதுக்கு
அட்வான்ஸ் கொடுக்கத்தான் பணம் கேட்டேன்..” சாந்தி கேட்காவிட்டாலும் டம்ளரை கழுவிக்
கொண்டே விளக்கமாக காரணம் சொன்னாள் காவேரி.
அவள் எடுத்ததாக சொன்ன முடிவு சாந்தியை திகைக்க வைத்தது. ஒன்றுக்கு
மூன்றாக நண்டும் சிண்டுமாக குழந்தைகள்; ஒண்டுக்குடித்தன வாழ்க்கை; வீட்டு வேலை
செய்து பிழைக்கும் ஏழ்மையிலும் திரும்பி பார்க்க வைக்கும் இளமை; நீண்டு நெடிய கிடக்கும்
எஞ்சிய வாழ்க்கை;
“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு...? அவசரப்படாதே.... பொறுமையா
இரு.. உன் புருஷனை நாளைக்கு இங்க கூட்டிட்டு வா, நான் பேசி புத்தி சொல்றேன்” சாந்தி
படபடவென்று பொரிய, “என்னத்துக்கு அனும்மா..? பஞ்சாயத்து பேசி அவனோட என்னை சேர்த்து
வுடப்போறீங்களா...? வேண்டாம்மா.... வேண்டவே வேண்டாம்... அந்த கேவலத்துக்கு நான்
நாண்டுக்கிட்டு செத்து போவேன்...”
எங்கோ அந்தகாரத்தை வெறித்துக் கொண்டிருந்த அவள் கண்கள் தீயாக உறுத்து
விழிக்க, காவேரி இப்போது காளியாக மாறி நின்றாள். அவள் பேச்சில், பார்வையில் மட்டுமல்ல,
உடல்மொழியிலும் ஒருவித தீர்மானமும் உறுதியும் தெரிந்தன;
“எங்கிட்டே காசு பணம் மட்டும் தான்ம்மா இல்ல... மான ரோஷம் நிறையவே
இருக்கு.. எனக்கு துரோகம் செஞ்சவன் மூஞ்சில இனிமே நான் முழிக்கக்கூட மாட்டேன்.... உழைச்சு
எப்படியும் என் புள்ளைங்களை கரை சேர்த்துடுவேன்... அதுக்கும் மேல நீங்கல்லாம் இருக்கீங்கல்ல...”
அமைதியாக அதே சமயம் தெளிவாக புன்னகைத்தவள், “சரி அனும்மா... நேரமாச்சு... ரேகாக்கா
பார்த்துட்டே இருக்கும்... நான் வரேன்...” சொல்லிக்கொண்டே திரும்பினாள். கன்னம்
அதைத்து கண்கள் சிவந்து ஊதிப்போயிருந்த சாந்தியின் முகத்தை அப்போது தான் நேருக்கு
நேராக கவனித்தாள், போல.... யோசனையாக மீண்டும் ஒருமுறை ஏறிட்டு பார்த்தவள், புரிந்ததான
பாவனையில் ஒன்றுமே கேட்காமல் படி இறங்கி போய்விட்டாள்.
‘அழுதீங்களா அனும்மா..?’ எங்கே தர்மசங்கடமான அந்த கேள்வியை அவள் கேட்டுவிடுவாளோ
என மூச்சை இழுத்துப் பிடித்தபடியிருந்த சாந்திக்கு, அவள் மௌனமாக சென்றது பெரிய
ஆசுவாசமாக இருந்தது. காவேரி பகிர்ந்து கொண்ட விஷயம் இறுகியிருந்த நெஞ்சை மேலும்
பாரமேற்றி இருக்க, நெடுமூச்சுடன் அப்படியே வாசற்படியில் அமர்ந்து விட்டாள்.
‘படிக்காத பாமர பொண்ணு.. ஆனா, என்ன தீர்க்கமா பேசிட்டு போறா....!? எவ்வளவுதான்
வசதி வாய்ப்பு இருந்தாலும், இந்தமாதிரி எல்லாத்தையும் உடைச்சு போட்டுட்டு போற
துணிச்சல் எங்களுக்கெல்லாம் வர்றதில்லையே. நுகத்தடி மாடு கணக்கா உள்ளுக்குள்ளயே
தானே சுத்திட்டு இருக்கோம்.’ பிரமிப்பு, ஆதங்கம், தன்னிரக்கம் என மனதில் கலவையான
உணர்வுகள் அலையடித்தன.
‘எலைட் கிளாஸ்னு பேரு தான் பெத்த பேரு.... படிப்பு, பதவி, பணம்,
வசதின்னு இவ்வளவு எக்ஸ்போஷர் இருந்து என்ன பிரயோஜனம்...? குடும்ப கௌரவம்,
சொசைட்டி, ஸ்டேட்டஸ்னு நூதனமான வலைக்குள்ள காலை விட்டுட்டு பறக்கவே முடியாம
எங்கள்ல சிலர் தவிக்கறோமே... அது ஏன்? காவேரி மாதிரி பொண்ணுங்களுக்கு இருக்கிற
திடமும் துணிச்சலும் எந்த காலத்துலயும் எங்களுக்கெல்லாம் வரவே வராதா?’
மனதிலெழுந்த கேள்விகள் அனைத்தும் விடை தெரியாமல் தொக்கி நிற்க, இன்றே
கணவன் பிள்ளைகளை உட்கார வைத்து தன் மனதில் உள்ள கவலைகள் குறித்து அவர்களிடம் உறுதியாக
பேசிவிட வேண்டும் என்ற தீர்மானம் மட்டும் ஆணியாக அவள் நெஞ்சில் இறங்கியது.
‘உண்மையில சிறகுகள்னு நாங்க பெருமையா நினைச்சுக்கிற விஷயமெல்லாம் எல்லா
நேரமும் எங்களை பறக்க அனுமதிக்குதா, என்ன? இல்லயே... ஒரு கட்டத்துக்கு மேல எல்லாமே
வீணாப் போன சுமைகள்தான். சும்மா அலங்காரத்துக்கு
பெருமையா வேணா பேசிக்கலாம்...’
‘ஆனா, நிமிர்ந்து நின்னு எதையும் ஒரு கை பார்த்திடலாம்னு நேர்மையா,
மனசுக்கு எது சரின்னு படுதோ அதை துணிச்சலா செய்யுறாங்களே, காவேரி மாதிரி... அவங்களுக்கு
இருக்கிறது தான் உறுதியான இறக்கைகள்... எந்த பொண்ணோட மூளையும் மனசும் ஒண்ணா ஒரே
திசையில, ஒரே வீச்சுல பறக்குதோ, அவ தான் வலிய சிறகுள்ள பறவை... எவ்வளவு சுலபமா
இந்த பாடத்தை எனக்கு சொல்லிக் கொடுத்துட்டு போறா இந்த பொண்ணு....!?’
அடிமனதில் என்னென்னவோ சிந்தனைகளும் அதற்கு ஈடான திடமும் துணிவும் தோன்ற,
தூரத்தில் எந்த அனாவசிய சுமைகளையும் சுமந்து கொள்ளாமல் இலகுவாக நடந்து கொண்டிருந்த
காவேரி சாந்தியின் கண்களுக்கு மட்டும் சுதந்திரமான சிட்டுக்குருவிப் போல தெரிந்தாள்.
4 comments:
ஹாய் ஹேமா உண்மையில் நிதர்சனம் இது தான்....மெல் குடி மக்களுக்கோ அல்லது காவேரி போன்றோருக்கோ...இது போன்ற முடிவுகள் எடுப்பது சுலபம்....இதில் இப்படியான விஷயங்களில் பாதிக்கப் படுவது என்னவோ உயர் நடுத்தர மனிதர்கள் தான்....இவர்களால் இப்படியும் இருக்க முடியாமல்...அப்படியும் முடியாமல் மனத்திற்குள்ளேயே வெந்து.... இத்தனைக்கும் படித்து சுய சம்பாத்தியத்தில் இருப்பவர்கள்....இது தான் நிதர்சனமாக உண்மை...நன்றி பதிவிற்கு
Thank you Mathikka!
Nice story hema..
Thank you Surya :)
Post a Comment