"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Wednesday, August 26, 2020

சூரிய வம்சம்

இந்த நூல் வெளியான நாளில் இருந்தே மிக ஆவலாக காத்துக் கொண்டிருந்தது, இப்போது மின்னூலாக வாசிக்க இயன்றது எனக்கு அமைந்த பாக்கியம் என்றே கருதுகிறேன். எழுத்தாளர் திருமதி. சிவசங்கரி தன்னுடைய நினைவலைகளை "சூரிய வம்சம்" என்கிற இரு தொகுதிகளாக பதிவு செய்திருக்கிறார்.

சூரிய வம்சம் என்ற பெயர் எதனால் என்கிற முடிச்சுடன் தொடங்குவதிலேயே தன் வழக்கமான முத்திரையைப் பதிப்பவர், வெகு சுவாரஸ்யமாகவும், சுவையாகவும் மிகைப்படுத்தல்கள் இன்றி தன் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்கிறார். சுயசரிதம் என்றால் உள்ளதை உள்ளபடி சொல்லவேண்டும், பிறரது குறைகளைச் சுட்டுகிற மாதிரி அமைந்து விடலாம், யாருடைய கால்களையும் மிதித்து விட்டுச் செல்ல என்றுமே தான் விரும்பியதில்லை, அதனால் தேவையான சங்கதிகளை மட்டும் நினைவலைகளாக சொல்ல விழைகிறேன் என்று அவர் தன் முன்னுரையில் குறிப்பிட்டு இருந்தாலும் இதை விட உள்ளதை உள்ளபடி நேர்மையாகவும், உண்மையாகவும் தன் வாழ்நாள் அனுபவங்களை ஒருவரால் பகிர்ந்து கொள்ள முடியுமா என்கிற வியப்பு தோன்றுகிறது இப்புத்தகங்களை வாசித்து முடித்த பின்னால். 

அந்தளவுக்கு சிறு வயதில் தான் இரண்டாங்கெட்டானாய் செய்த குறும்புகள் முதல் தோழி வீட்டில் மாங்காய் திருடியது, தன் கல்லூரி பேராசிரியர் ஒருவர் proud peacock என்று அழைத்து விட்டதில் துவண்டு போனது, தன் வங்கி பிஆர் ஓ வேலை அனுபவங்களை ஒட்டி ஒருகட்டத்தில் கப்பல் பறவையாக உணர்ந்தது, விழுப்புரம் சென்றபின்பு அவருக்கு ஏற்பட்ட மனத் திறப்புகள், ஜி கே எம் உடனான ஆத்மார்த்தமான நட்பு உட்பட பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். எழுத்து உலகின் மிக உயர்ந்த சிம்மாசனத்தில் இருப்பவர், பல விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றவர், கடந்த ஐம்பது வருடங்களாக வாசகர்களுக்கும், சக எழுத்தாளர்களுக்கும், அடுத்த பல தலைமுறை எழுத்தாளர்களுக்கும் உத்வேகமாக இருப்பவர் சில சிறு விஷயங்களைக் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. அதையும் அவரே ஓரிடத்தில் சொல்கிறார், தான்  தள்ளி நின்று தன்னைத் தானே பார்ப்பதாகவும் அந்தச் சிறு வயது சிவசங்கரியைப் பற்றி சொல்வதும் தானே நியாயம் என்றும், இப்படி சொல்வதற்கு எத்தனை பெரிய மனம் வேண்டும்!?

அவரது சிறுகதைகள் நாவல்களை வாசித்த அனுபவத்தோடு எந்தச் சூழ்நிலையில் அவற்றை எழுதினார் என்று அறிந்து கொள்வது ஒரு சுகானுபாவம்! ராட்சசர்கள், ஏன், எதற்காக?, 47 நாட்கள் எனப் பல படைப்புகளுக்குப் பின்னால் அவற்றை எழுதத் தூண்டிய சூழ்நிலைகளை விவரித்திருக்கிறார். மனிதனின் கதை, அவன், அக்னி என இவருடைய ஆழமான தீவிர களப்பணிகள் பிரமிப்பளிக்கின்றன. புனைகதைகள் எழுதி புகழின் உச்சியில் இருக்கும் போதே, 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்கிற மாபெரும் பணியைத் தொடங்குகிறார். ஒரு வருடம், இரு வருடம் அல்ல, ராமரின் வனவாசம் கூட பதினான்கு வருடங்கள் தான், இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பயணித்து  கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என பல எழுத்தாளர்களைச் சந்தித்து, அவர்களுடைய இலக்கிய அனுபவங்கள், சமூக பார்வைகள் என பேட்டிகளை செம்மையாகக் கட்டமைத்து, அவற்றை  மிகப் பெரிய தொகுதிகளாக ஆவணப்படுத்தி, இடையில் புனைகதைகள் எழுதினால் கவனம் சிதறும் என அவற்றை ஒதுக்கி இந்தப்பணியை ஒரு வேள்வி போல செய்து முடித்துள்ள இவர் இந்த நான்கு தொகுதிகளை உருவாக்கி வெளியிடுவதற்காக பதினாறு ஆண்டுகள், ஆம் நீண்ட நெடிய பதினாறு ஆண்டுகள் எந்த பிரதிபலனும் பாராது மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்.  இந்த அர்ப்பணிப்பு உணர்வும், தன்னலமற்ற உழைப்பும், சமூக நோக்கும் இன்று எழுதும் ஆர்வம் கொண்டவர்கள் அவசியம் உணர்ந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்!

ஒரு மகளாக, மனைவியாக, தோழியாக இவரது ஒவ்வொரு முகமும் நமக்கான உற்சாக டானிக். அப்பா அம்மாவின் மீதான அன்பும், கணவர் மீதான காதலும், தோழமைகளிடம் பேணும் நட்பும், சியாமாக்களின் மீதான பிரியமும் - என்ன சொல்ல, விவரிக்க வார்த்தைகள் தட்டுப்படவில்லை. முதுமையிலும் நளினமாக தான் வாழ்வதை கடைசி சில அத்தியாயங்களில் பகிர்ந்து கொள்கையில் வாழ்க்கையை அடி முதல் நுனி வரை சுவைத்து நிறைவாக வாழும் அவருடைய கம்பீரத்தைக் கண்டு நம் மனம் கசிகிறது.

இவ்விரு தொகுப்புகளின் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வரியும், இவர் பகிர்ந்து கொள்ளும் அனுபவச் செறிவுகளும் வாசிக்கும் நமக்கான பாடம். ஒரு இடத்திலும் ஒருவரைப் பற்றியும் குறையில்லை, காழ்ப்பு இல்லை, வெறுமை இல்லை, விரக்தி இல்லை, சில நம்பிக்கை துரோகங்களைச் சந்தித்த அனுபவங்களைப் பகிரும்போதும் அவர்களுடைய நிறைகளைச் சொல்கிற பெரிய மனதும், எல்லாமே அனுபவங்கள் தானே என்று ஏற்றுக் கொள்கிற பரந்த உள்ளமும் எத்தனை பேருக்கு வாய்க்கும் என்று தெரியவில்லை. 'போகட்டும் விடு, அவர்களுக்குத் தெரிந்தது, அவ்வளவு தான்' என்று தன் அம்மா எப்போதும் சொல்வார், 'அந்தக் குணம் கொஞ்சமாவது என்னிடம் வந்திருக்கிறது என்றால் அது உன்னால் தான்மா' என்கிறார் தன் அன்னையிடம் ஓரிடத்தில். சிறு சிறு பூசல்களையும் சிக்கல்களையும் மனதில் தேக்கி அவஸ்தைப்படும் எந்த மனதும் இந்த வார்த்தைகளில் கொஞ்சமேனும் திறந்துகொள்ளவே முற்படும். 

இந்நினைவலைகளை வாசித்த பின்னால் எங்கோ தொலைவில் சிம்மாசனத்தில் இருத்தி வைத்திருக்கும் "எழுத்தாளர் சிவசங்கரி' என்கிற ஆளுமையாகத் தோன்றாமல் பிரியத்துடன் 'ஜிபும்மா' என்றே அழைக்கத் தோன்றுகிறது. பண்பட்டவர்களின் வாழ்க்கையும், அவர்களது எண்ணங்களும், சிந்தனைகளும், செயல்களும் எந்நிலையிலும் பண்பட்டதாகவே இருக்கும் என்பதற்கு வாழும் உதாரணமாகத் திகழ்பவரின் ஆயிரக்கணக்கான வாசகிகளில் நானும் ஒருத்தி என்பதில் பெருமை கொள்கிறேன். அவரது நினைவலைகளில் நீந்தி, லயித்து, துய்த்து, அவரது பன்முக தன்மைகளைப் பாராட்டி, ஆளுமைகளை வியந்து, செம்மையான சிந்தனைகளை உள்வாங்கி பிரமித்து நிற்கும் இவ்வேளையில் அவரை ஆத்மார்த்தமாய் இருகரம் குவித்து வணங்குகிறேன். சூரிய புத்ரியே, நீவிர் வாழிய பல்லாண்டு!

2 comments:

mini said...

Very nicely analyzed Hema

HemaJay said...

Thank you Mini :)