பால்யம் என்பதே தீரா சுவை கொண்ட பருவம்
அல்லவா!? வாயில் அடக்கிக் கொண்ட தின்பண்டம் மெல்ல மெல்ல கரைந்து ருசி கொடுப்பது போல, அந்த
பிராயத்தின் நினைவுகளை அசை போடும்போதெல்லாம் நம் அகமும் முகமும் சொல்லாமலேயே
மலர்ந்து போகும்.
பள்ளி கல்லூரி காலங்களில் நம் ஒவ்வொருவருக்கும்
எத்தனை வித விதமான சந்தோசங்கள், இன்ப நினைவுகள், அனுபவங்கள், படிப்பினைகள்...? ஒவ்வொருவர்
வாழ்க்கையிலும் நிச்சயம் வண்ணம் சேர்த்த பருவம் இந்த பருவம். படிப்பு ஒன்றே
கடமையாய், பரீட்சைகளே சுமையாய் இருந்த காலம் அது. இப்போது தூசி போல தோன்றும்
விஷயம் எல்லாம் அப்போது பெருமலையாக அச்சுறுத்தின. அன்று அல்பத்தனமாக செய்தது எல்லாம் இப்போது திரும்பிப் பார்க்கும்போது அழகியலாக காட்சியளிக்கிறது. இது தான் வாழ்க்கையினுடைய நகைமுரணும்
அல்லவா...!?