"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Wednesday, October 12, 2016

ஏணிப்படிகள்

பால்யம் என்பதே தீரா சுவை கொண்ட பருவம் அல்லவா!? வாயில் அடக்கிக் கொண்ட தின்பண்டம் மெல்ல மெல்ல கரைந்து ருசி கொடுப்பது போல, அந்த பிராயத்தின் நினைவுகளை அசை போடும்போதெல்லாம் நம் அகமும் முகமும் சொல்லாமலேயே மலர்ந்து போகும். 

பள்ளி கல்லூரி காலங்களில் நம் ஒவ்வொருவருக்கும் எத்தனை வித விதமான சந்தோசங்கள், இன்ப நினைவுகள், அனுபவங்கள், படிப்பினைகள்...? ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிச்சயம் வண்ணம் சேர்த்த பருவம் இந்த பருவம். படிப்பு ஒன்றே கடமையாய், பரீட்சைகளே சுமையாய் இருந்த காலம் அது. இப்போது தூசி போல தோன்றும் விஷயம் எல்லாம் அப்போது பெருமலையாக அச்சுறுத்தின. அன்று அல்பத்தனமாக செய்தது எல்லாம் இப்போது திரும்பிப் பார்க்கும்போது அழகியலாக காட்சியளிக்கிறது.  இது தான் வாழ்க்கையினுடைய நகைமுரணும் அல்லவா...!?

புத்தியும் அறிவும் மேம்பட்டு எதையும் தர்க்கமாக (!?குதர்க்கமாக) யோசிக்கும் வளர்ந்த பருவத்தை விட எனக்கு எப்போதும் சம்திங் ஸ்பெஷலாக தோன்றுவது என்னுடைய எலிமெண்டரி ஸ்கூல் பருவம் தான்.

“ஒரு வாரமா அடைக்காத்துக்கிட்டு இருக்கிற மயில்தோகை இந்த தடவையாச்சும் குட்டி போடுமா? மீனு வச்சிருக்கிற மாதிரி ரப்பர் வச்ச பென்சில் என்ன விலை இருக்கும்? ரேணு முடி மட்டும் எப்படி இவ்வளவு நீளமா இருக்கு...?” இந்த மாதிரி பெருங்கவலைகள் மட்டுமே மனதை நிறைத்து மண்டையை குடாயும். அவ்வப்போது இதற்கென்று வட்ட மேஜை மாநாடுகள் நடத்தப்பட்டு தீர்வுகள் தீவிரமாக ஆராயப்படும். ‘போ புள்ள ..... நீ பொய் சொல்லுற... நீ இந்த போயம் படிச்சிட்டு தான் வந்திருக்க...’ தடாலென்று நம் மேல் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டணி உடைந்து கட்சிகள் ஊசலாடும்.

மனதில் எந்த கல்மிஷமும் இல்லாமல் கதம்ப மலர்கள் போல தன்னாலேயே சேர்ந்து விடுகிற அருமையான நட்புகள்... டூ பழம் விட்டு அடித்துக் கொண்டு, அடுத்த நிமிடமே காக்காய் கடிக்கு பிரண்ட்டாகி.. ‘நீ ஏண்டி அவ கூட பேசின...? நேத்து அவ எனக்கு சயின்ஸ் ஹோம்வொர்க் காமிக்க மாட்டேன்னு சொன்னாள்ல....’ மூக்கை விடைத்துக் கொண்டு போடும் அர்த்தமற்ற சண்டைகளும், ‘இல்லப்பா... அவ தான் பேசினா... இங்க் கடன் வாங்கினதை கொடுக்க வந்தா....’ என்ற லுலுலாய் சமாதானங்களும் நிறைந்திருந்த அந்த நாட்கள் தான் எத்தனை அழகு!?

ஏற்றி விடும் ஏணிப்படிகளாய் நம்மை உயர்த்தி மேலேற்றி விட்டு அதைப் பார்த்து பார்த்து பூரிக்கும் தன்னலமில்லா ஆசிரியர்களை உணர்ந்து கொண்டதும், அவர்களது மதிப்பு மிக்க பிம்பத்தில் ஈர்க்கப்பட்டு மதிப்பும் மரியாதையுமாக ஒரு கடவுள் தோற்றத்தில் அவர்களை பார்த்ததும் மதித்ததும் வணங்கியதும் இந்த இளம் பருவத்தில் தான். (ஹை ஸ்கூல் போன பின்னாடி சிறுக சிறுக எல்லா கள்ளத்தனங்களும் கைக்கோர்த்துக் கொண்டன. டீச்சர்களுக்கு பெயர் வைப்பது, பின்னால் புறணி  பேசுவது என்ற திருட்டுத்தனங்கள் எல்லாம் ஆறாவது வகுப்பிற்கு பிறகு தான்....:))

என்னுடைய எல்லா ஆசிரியர்களையும் இந்த தருணத்தில் நன்றியோடு நெகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன். அதில் சிலர் என் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள்.

மிடுக்கும் கம்பீரமுமாக நடக்கும் நடையில் இருந்து உடுத்தும் உடை வரைக்கும் ஒரு அரசியின் தோரணையோடு ஒற்றை ஒற்றை விழி அசைவுகளில் அவ்வளவு பெரிய பெண்கள் பள்ளியை கட்டுக்கோப்பாய் கட்டி ஆண்ட மங்களம் டீச்சர் -- பெண் குழந்தைகளுக்கு ஸ்டெமினா எவ்வளவு முக்கியம், மன தைரியம் எவ்வளவு தேவை, சுயக்கட்டுப்பாடு எவ்வளவு அவசியம் என்று ஓயாமல் பிரேயர் மீட்டிங்குகளில் இவர் முழங்குவார். இவர் வலியுறுத்திய நீதி போதனை வகுப்புகளும் மாதா மாதம் நடத்தும் ‘மாரல் & ஜெனரல் க்நாலெட்ஜ்’ தேர்வுகளும் எங்களுக்கு அப்போதெல்லாம் சுமையாக, வெட்டி வேலையாக தெரிந்தது;  இப்போது அவற்றை நெஞ்சம் நிறைந்த நன்றியுடன் புரட்டிப் பார்க்கிறேன்

கணிதத்தில் ரிவிஷனுக்கு மேல் ரிவிஷன் கொடுத்து ரிவிட் அடித்தாலும் பள்ளி இறுதியில் நாங்கள் வாங்கிய சென்டம்களை தன் வெற்றியாக பாவித்து அத்தனை  சிரிப்பும் சந்தோசமுமாக எங்களுக்கு எல்லாம் ஸ்வீட் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்த மைதிலி டீச்சர் – எங்கள் மேற்படிப்பும், அந்த படிப்பு கொடுத்த வாழ்க்கையும் இவர் இல்லாமல் எங்களுக்கு சாத்தியமே இல்லை.

சின்ன வயது, வடிவான இளமையான தோற்றம், அழகு ததும்பும் முகம்; ஆனால் அதை முற்றிலும் மறைத்துக் கொண்ட சாம்பல் நிறத்து கன்னியாஸ்திரி புடவை, முழு கை ஜாக்கெட். தமிழை உயிர்ப்புடன் லயிப்புடன் பாடம் நடத்திய ரெஜினா டீச்சர் , இல்லை இல்லை தமிழ் அம்மா –

அவர் வந்தாலே அவர் பேசும் தூய தமிழை கிண்டலாக பேசி சிரிப்போம். நாங்கள் ப்ளஸ் டூ, அவர் அப்போது தான் ஆசிரியர் பயிற்சியை முடித்து வெளியே வந்த பயிற்சி ஆசிரியர். அவருடைய வயதை நினைத்து ‘அம்மா’ என்று கூப்பிடத் தயங்கினால், ‘தமிழம்மா’ என்று தான் தன்னை அழைக்க வேண்டுமென அவர் வலியுறுத்துவார். மற்ற சீனியர் ஆசிரியர்கள் கோபப்பட்டாலும் கூட தன் வகுப்பை சப்ஜெக்ட் டீச்சர்களுக்கு ஒருமுறைக் கூட அவர் விட்டுக் கொடுத்ததில்லை. எங்களுக்கும் சப்ஜெக்ட்டுகளில் வாங்கும் மதிப்பெண்கள் தான் பெரிதாக தோன்றியதால் எரிச்சலுடன் முணுமுணுப்புடன் தமிழ்ப் புத்தகத்தை புரட்டுவோம். அவர் அதை கண்டு கொள்ளாமல் தமிழிலும் மதிப்பெண் வாங்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்று சொல்லிவிட்டு தன் பாடத்தை தொடர்வார்.  அந்த வயதில் அவருக்கு இருந்த உறுதியும் தீர்மானமும் அன்று புரியவில்லை; இன்று நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

அதற்காக சில விதிவிலக்குகளும் இல்லாமல் இல்லை;

தான் நடத்திய கெமிஸ்ட்ரி பாடத்தை விட தன் ஆடை அணிகலன்களுக்கும் அதி நாகரீமான அலங்காரங்களுக்கும் இடையே ஓடிய கெமிஸ்ட்ரி பற்றி யோசிக்க வைத்து எங்களை எல்லாம் ஏக்க பெருமூச்சு விட வைத்த வேதியியல் ஆசிரியை;

மதிய உணவு இடைவெளி முடிந்ததும் வரும் தன் வகுப்பில் எல்லோரையும் எழுந்து நிற்க சொல்லி சத்தமாக பாடத்தை கத்த விட்டுவிட்டு மேசையில் தலை சாய்த்து குறட்டை விட்டு தூங்கும் எங்கள் எட்டாம் வகுப்பு அறிவியல் ஆசிரியை;

தன் குழந்தைகள் போல பாவிக்க வேண்டிய மாணவிகளை ஏதோ புழுவையும் பூச்சியையும் பார்ப்பது போல லுக் விட்டு, குடும்ப சூழ்நிலையால் படிக்காமல் வரும் சில சிறுமிகளின் ஏழ்மை நிலையை பரிகசித்து,  ஏதோ உலகமகா ஜோக் சொன்னது போல தானே இரைச்சலாக சிரித்து அந்த கொடூர சத்தத்தில் எங்களையெல்லாம் நடுநடுங்க வைத்த ஒரு ஆங்கில ஆசிரியை - இப்படியும் சிலர் உண்டு;

இவர்களில் நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பது இருவரை – பெரிய கமலா டீச்சர் மற்றும் சின்ன கமலா டீச்சர்; இரண்டு பேருமே எலிமெண்டரி டீச்சர்கள் தான். இருவரும் ஒவ்வொரு வகையில் என்னால் மறக்க முடியாதவர்கள்.

பெரிய கமலா டீச்சர் எப்போதுமே டெர்ரர் லுக்கிலேயே இருப்பார். உயரமான ஓங்குதாங்கான தோற்றம், கடுமையான முகபாவம், போட்டிருக்கும் கண்ணாடி வழியே எதிரில் இருப்பவரை துளைக்கும் பார்வை, பின்பக்கம் கட்டிய கைகளுக்கு இடையே உருளும் பிரம்பு என்று அவரை பார்த்தாலே வயிற்றைக் கலக்கும்.  அப்போது அவர் அந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர். அப்போது இருந்த ஹெட்மிஸ்ட்ரஸ் ரொம்பவே சாந்தசொரூபி. அதிர்ந்து கூட பேச மாட்டார். வெகு விரைவில் ரிடையர்ட் ஆக இருந்தார். அதனால் கமலா டீச்சர் தான் ‘ஆக்டிங் ஹெச் எம்’ போல கெத்தாக சுற்றி வருவார். அவர் உருவம் தூரத்தில் தெரிந்தாலே படிக்கும் பிள்ளைகள் மட்டும் அல்ல, மற்ற ஆசிரியர்கள் கூட ‘கப்சிப்’ என்று ஆகி விடுவார்கள்.

அவரை தொலைவில் பார்த்தாலே வியர்வையில் நனைந்து பிசுபிசுத்துப் போகும் எனக்கு ஐந்தாம் வகுப்பில் அவரே வகுப்பு ஆசிரியராக வந்தது தான் விதிப்பயன்! எங்கள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை சப்ஜெக்ட் டீச்சரெல்லாம் கிடையாது. வகுப்பு ஆசிரியர் தான் எல்லா பாடங்களையும் எடுப்பார். அந்த டீச்சருக்கு ஆபீஸ் வொர்க் வந்து விட்டால் மட்டும் வேறு யாராவது வந்து அந்த நேரத்தில் வகுப்பு எடுப்பார்கள்.

‘எப்படியாவது இவங்க கிளாசில் இடம் பிடிக்காம ஹை ஸ்சூலுக்கு போயிடணும்...’ என்று லீவ் முழுவதும் உருப்போட்டுக் கொண்டு வந்த எனக்கு ஐந்தாம் வகுப்பின் முதல் நாளே திகிலூட்டுவதாக இருந்தது. ஏனெனில் அவர் அடியில் பின்னி பெடல் எடுத்து விடுவார் என்ற தகவல் வெகு பிரசித்தம். சின்ன தப்பு என்றால் ஓங்கிய பிரம்படி, பெரிய தப்பு என்றால் இரண்டு கைகளிலும் மாறி மாறி சரமாரியான அடிகள், ரொம்ப கோபம் வந்து விட்டால் முஷ்டியை மடக்க சொல்லி விரல் முழிகளிலேயே அடித்து கையை பிளந்து விடுவார் என்று பெரிய டிக்ஷனரியையே போட்டுக் கொடுத்து விட்டு எங்கள் சீனியர்கள் (!?) அந்த பள்ளியை விட்டு சென்று இருந்தார்கள்.  

‘முழு நாளும் இவங்க கிளாஸ்லயேவா....?’  படுபயங்கர பீதியில் இருந்தவளை, ‘ரொம்ப ஒண்ணும் பயந்துக்க வேணாம்டி... இவங்க சீக்கிரமே ஹெச் எம் ஆகிடுவாங்களாம்.. அப்புறம் நமக்கு வேற யாராவது கிளாஸ் டீச்சரா வருவாங்க, பாரேன்..’ என்னுடைய நெருங்கிய சினேகிதி பரிமளா சொன்னதை நம்பிக் கொண்டு கலங்கிய கண்களுடன் வகுப்பில் சென்று அமர்ந்தேன். என்னுடைய ஆழ்ந்த அச்சத்துக்கு பின்னால் வலுவான காரணம் ஒன்றும் இருந்தது. (இப்ப ஒரு குட்டி பிளாஷ்பேக்...)

சில மாதங்களுக்கு முன்பு என்னையும் என் தோழியையும் மதிய உணவு நேரத்தில் கை காட்டி அழைத்தவர், இன்னொரு பெண்ணின் பெயரை சொல்லி “அவளை கூட்டிக்கிட்டு மேனகா டீச்சர் வீட்டுக்கு போய் தண்ணி வாங்கிட்டு வாங்க...” என்று அனுப்பி வைத்தார்.

அந்த சமயத்தில் பிரிட்ஜ் என்பது எல்லார் வீடுகளிலும் இருக்கும் சாதனமல்ல. அப்போது தான் மெல்ல அறிமுகம் ஆகிக் கொண்டிருந்தது. ஸ்கூலின் அருகில் (பத்து நிமிட நடை) வசித்த டீச்சர் ஒருவரின் வீட்டில் இருந்து பத்து பதினைந்து குளிர்ந்த தண்ணீர் பாட்டில்களை ஒயர் கூடையில் எடுத்து வந்து இந்த மாதிரி ‘தாதா’ டீச்சர்களுக்கு கொடுக்க வேண்டும். அது தான் எங்களுக்கு இடப்பட்ட பணி. 

இந்த மாதிரி வேலைகள் எல்லாம் ஆசிரியர்களுக்கு செய்யும் சேவை என்று சொல்லி தங்கள் சுயநலத்திற்காக படிக்கும் பிள்ளைகளை பயன்படுத்திக் கொண்ட டீச்சர்கள் சிலர் இருந்தார்கள்.  மாணவிகளை வேலையாட்களாக நினைத்து தங்கள் டிபன் பாக்ஸை கழுவி வைக்க சொன்ன சில ஆசிரியர்களும் உண்டு. இப்படி ஓடி ஓடி வேலை செய்து டீச்சரை காக்கா பிடிக்க நினைக்கும் வகுப்புத் தோழிகளும் இருக்கவே செய்தார்கள். அருகாமையில் வசிக்கும் பெண்கள் ஷிப்ட் போட்டுக் கொண்டு காலையிலும் மாலையிலும் திருத்த வேண்டிய நோட்டுக்களை மூட்டை மூட்டையாக சுமந்து ஆசிரியர் வீடுகளுக்கு எடுத்து செல்வதும் நடக்கும். நான் பஸ்ஸில் வந்து போவதால் இந்த மாதிரி எந்த சேவை(!)யிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை.

சரி, விட்ட கதைக்கு வருவோம். கமலா டீச்சர் வேலை ஏவியதும் வேறு வழியின்றி ‘தலையெழுத்தே’ என்று நானும் மற்ற பெண்களும் அவர் சொன்ன வீட்டுக்கு போனோம். உச்சி வெயில் வேறு. பசியும் சோர்வும் அசூயையான உணர்வுமாக எனக்கு முகமே சுண்டிப் போய் விட்டது. சுயமரியாதை, தன்னல மதிப்பு என்ற வார்த்தைகளுக்கு பதம் தெரியாத வயது தான் எனினும், இந்த மாதிரியான ஓடு பிள்ளை வேலை செய்ய எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 

அந்த வீட்டில் இருந்த மனிதர்கள் பார்த்த பார்வையும், அவர்கள் எங்களை கேட்டுக்கு அருகிலேயே நிறுத்தி வைத்த விதமும் கூட மனதை வெகுவாக அறுத்தன. ‘இத்தனை பாட்டில் தண்ணிக்கும் கரண்ட்டுக்கு யாரு கொடுக்கிறது...? நிதைக்கும் கூடையை தூக்கிட்டு வந்துடறாளுங்க....’ அந்த வீட்டு பாட்டி வேறு எங்களை மொணமொணவென்று திட்டித் தீர்த்தது, என்னமோ நாங்கள் எங்கள் தேவைக்காக வந்த மாதிரி!?

ஒருத்திக்கு ஒருத்தி புலம்பியபடி தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஸ்டாப் ரூம் சென்று தண்ணீர் பாட்டில்களை சேர்ப்பித்ததும் ‘விட்டால் போதும் என்ற மனநிலையில் அங்கிருந்து நகரப் பார்த்தோம்.

‘இதுக்குப்போய் இவ்வளவு நேரமா பிள்ளைங்களா....?’ சலித்தபடி வாயில் தண்ணீரை சரித்துக் கொண்டவர், ‘நீங்க மூணு பேருமே தினமும் போய்ட்டு வந்துடுங்க... சாப்பிட போறதுக்கு முன்னாடி ஒரு ஓட்டம்... என்ன புரியுதா...?’ உத்தரவாக வந்த கமலா டீச்சரின் வார்த்தைகளில் நான் கலங்கிப் போய் நின்றேன். முதலில் இந்த ஏவல் வேலைகள் எனக்கு அறவே பிடிக்கவில்லை. இரண்டாவது நான் ரொம்ப மெதுவாக சாப்பிடுவேன். எப்போது திரும்ப வந்து, எப்போது சாப்பிடுவது....? பசி சேர்ந்து விட்டால்  தலைவலி, கண்வலி எல்லாம் வந்து விடும். அதை விட, காலியாகாத டிபன் பாக்ஸை எடுத்து சென்று என் அம்மாவின் திட்டு பிளஸ் அட்வைஸ் மழையில் யார் நனைவது...?

மூன்றாவது,  வீட்டில் ஆயிரம் முறை சொல்லி அனுப்புவார்கள், ஸ்கூல் நேரத்தில் காம்பவுண்ட் கேட்டை தாண்டக்கூடாது என்று. ஒரு நாள் என்றால் சரி, தினமும் என்றால்.... இதை நேரே டீச்சரிடம் சொல்லும் அளவுக்கு எனக்கு தைரியமும் இல்லை. இந்த நடைமுறையே இரண்டு நாட்கள் தொடர்ந்தன. மூன்றாம் நாள் மற்ற இருவரும் என்னை அழைத்தபோது ‘ஸ்கூல் நேரத்துல வெளில போகவேண்டாம்னு எங்க வீட்டுல ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்கப்பா... நான் வரலை.... சாரிடி...’ என்று சொல்லிவிட்டேன். அது உண்மையும் கூட.

“தேவைப்பட்டா நாங்க வந்து உங்க ஹெச் எம்மை பார்க்கிறோம்... படிக்கறதுக்கு மட்டும் தான் ஸ்சூலுக்கு அனுப்புறோம்... ஸ்டுடண்ட்ஸ் இந்த மாதிரி வேலையை எல்லாம் செய்யணும்னு அவசியம் இல்லை...” இந்த விஷயத்தை கேள்விப்பட்டு எரிச்சல் அடைந்த என் பெற்றோர் எனக்கு தைரியம் சொல்லியிருந்தார்கள். அதனால் நானும் ஒரு குருட்டுத் தைரியத்தில் ‘வரவில்லை’ என்று சொல்லிவிட்டேன். ஆனால் உள்ளுக்குள் பயம் தான், எங்கே கூப்பிட்டு திட்டுவாரோ என்று.

‘அவ எங்க..?’ என்று கேட்ட டீச்சரிடம் என் தோழிகள் அப்படியே நான் சொன்னதை சொல்ல, கோபத்துடன் பார்த்தவர், “சரி.. சரி.. நீங்க இரண்டு பேரு மட்டும் போய்ட்டு வாங்க...” என்று அனுப்பி வைத்து விட்டாராம். ஆனால் அதற்கு பிறகு அவர் என்னை எங்கே நேருக்கு நேர் பார்த்தாலும் முறைக்கிற மாதிரியே எனக்குள் ஒரு உணர்வு.

(இத்துடன் பிளாஷ்பேக் முடிந்து விட்டது. கொளுத்தி வைத்த கொசுவர்த்தி சுருளை அணைத்து விடுங்கள்...:))  இப்போது அவரே எனக்கு வகுப்பு ஆசிரியராக இருக்கும்போது, எங்கே பழசை எல்லாம் நியாபகம் வைத்து என்னை பழி வாங்குவாரோ என்ற பயத்தில் தான் நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். முதல் நாளே ரப் (rough) நோட்டு கொண்டு வராதவர்களை எழும்பி நிற்க வைத்து தன் அடித்தல் படலத்தை அருமையாக அவர் துவக்கி வைக்க எனக்கு அல்லு இல்லை. நான் மட்டும் நடுங்கவில்லை. காய்ச்சல் வந்தது போல எல்லோருமே நடுங்கிக் கொண்டு தான் உட்கார்ந்திருந்தோம்.

எப்படியோ மூன்று மாதங்கள் ஓடி விட்டன. அன்று டீச்சர் காலாண்டு தேர்வின் திருத்திய பேப்பர்களை வரிசையாக கொடுத்தபடி இருந்தார். அவசர அவசரமாக நாங்கள் டோட்டல் போட்டுக் கொண்டிருந்தோம், யார் பர்ஸ்ட் ரேங்க் என்று பார்ப்பதற்காக.... இன்று லட்சங்களை நேரில் பார்த்தாலும் வராத சந்தோஷம், அன்று அந்த ரேங்க் போட்டியில் வெற்றி பெறுவதில் இருந்ததை நினைத்தால் ‘எவ்வளவு அறியாமை...?’ என்று சிரிப்புத்தான் வருகிறது. என்ன செய்ய, அந்த வயதில் அது தானே நம்மிடையே இருந்த ஒற்றை போட்டா போட்டி...

அந்த முறை நானே எதிர்பார்க்காத வகையில் நான் தான் முதல் மார்க். கமலா டீச்சர் என்னை எழுந்து நிற்க சொல்லி எல்லோரையும் கை தட்ட சொன்னார். ‘நீல நிற பெல்ட்டை குறுக்காக அணிய வைத்து, (முதல் மார்க் வாங்குபவர்கள் அந்த பெல்ட்டை பெருமையாக அணிந்து கொள்ளலாம். அதை தக்க வைத்துக் கொள்ளத்தான் அவ்வளவு போட்டி...) ‘இதே மாதிரி கன்டினியூ பண்ணனும்’ என்று  சொன்னபோது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ரொம்ப ரொம்ப பெருமையாக இருந்தது. கமலா டீச்சர் மேல் இருந்த பயம் எல்லாம் நீங்கி அவர் மேல் அன்பு துளிர்த்துக் கொண்டு வந்தது. ‘இவ்வளவு நல்ல டீச்சரை இவ்வளவு நாள் தப்பா நினைச்சுட்டியே, மட்டி...’ என்னை நானே திட்டிக் கொண்டேன். 

ஆனால், என்னுடைய சந்தோசமும் பூரிப்பும் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. அடுத்த பீரியடில் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். எந்த சப்ஜெக்ட் என்ற நினைவில்லை. திடீரென்று எல்லாரையும் எழுந்து நிற்க சொல்லி ஆளுக்கு ஒரு பத்தியாக படிக்க சொன்னார். என் மடியில் நான் பென்சிலை ஷார்ப் பண்ணி பண்ணி போட்ட மரக்குப்பைகள் இருந்ததால், அதை ஒரு கையால் குவித்து எடுத்துக் கொண்டே அவர் சொன்ன பக்கத்தை பிரித்தபடி நானும் எழுந்து நின்றேன்.

சட்டென்று வகுப்பே அமைதியாக, சுற்றிலும் பார்த்தால், எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழப்பத்துடன் எதிரே நிமிர்ந்தால் டீச்சர் என் முன்னால்... அவர் என்னை கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

‘என்னடி திமிரா...? முதல் ரேங்க் வாங்கிட்டோம்னு கொழுப்பு சேர்ந்து போச்சா...? ஆடி அசைஞ்சு எழுந்து நிக்கிற.... அடங்காத குதிரை.... உன் திமிரையெல்லாம் இப்ப அடக்கிக் காட்டுறேன், பாரு...’ என்றவர் என் கையை வெடுக்கென்று பிடித்திழுத்து உள்ளங்கையை விரித்து பளிச் பளிச்சென்று விளாசித் தள்ளி விட்டார்..

என்னை விட தாமதித்து எழுந்த பெண்களும் என் அருகிலேயே இருந்தார்கள். எனினும் என்ன செய்ய...? ‘இல்ல டீச்சர்... பென்சில் ஷார்ப் பண்ணினது.. என் மடியில...’ கதறலுடன் நான் சொன்ன எந்த விளக்கமும் எடுபடவில்லை. சில நொடிகளில் என்னுடைய வலது கை கன்னி சிவந்து போய் தூக்கவே முடியாமல் வலித்தது.

ஓரளவு படிப்பேன் என்பதாலும், படிப்பு வேலைகளை உடனுக்குடன் செய்து முடித்து விடுவேன் என்பதாலும் அத்தனை நாட்கள் நான் எதற்கும் எந்த டீச்சரிடமும் இப்படி  திட்டு வாங்கியதில்லை, அதுவும் இவ்வளவு கடுமையாக..... அடி வாங்கும் அளவுக்கு எல்லாம் சென்றதே இல்லை. ஆனால், எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து அன்று நான் வாங்கிய கடுஞ்சொற்களை, உள்ளங்கை அடிகளை என்னால் மறக்கவே முடியாது.

தவறு செய்யும் பிள்ளைகளை ஆசிரியர்கள் அடித்து திருத்துவது தவறில்லை என்ற எண்ணம் எனக்கு இப்போதும் உண்டு. ஆனால் எது தவறு என்று வரையறுப்பதில் தானே தெளிவு தேவை...? அவருடைய பிரம்பு கொடுத்த நோவை விட, செய்யாத தவறுக்கு தண்டனை பெற்ற அவமானமும் மன ரணமும் எனக்கு அதிகம் வலித்தன. முதல் ரேங்க் வாங்கிய சந்தோஷம் எல்லாம் போன இடம் தெரியவில்லை.

இன்று இந்த கதையை ஒன்றாம் வகுப்பு பிள்ளையிடம் சொன்னால் கூட, ‘லூசாம்மா நீ...? ஏன் சும்மா இருந்த...? அவங்க மேல ஏன் கம்ப்ளயன்ட்  பண்ணல....?‘ என்று கோபத்தில் கொந்தளிப்பார்கள். அன்று அந்தளவுக்கு எல்லாம் யோசிக்கக் கூட தெரியாது. ‘அடிப்பது ஆசிரியர்களின் உரிமை, அதை வாங்குவது நம் கடமை’ இது தான் பொதுவான மாணவ மனவோட்டம்.

‘ஆசிரியர்கள் அடிப்பது நமது நன்மைக்கு தான்’ என்ற கண்ணோட்டத்தில் என் வீட்டில் கூட இந்த சம்பவத்தை பகிர்ந்துக் கொண்ட நியாபகம் எனக்கு இல்லை. அன்று மதியம் என் பிரண்ட்ஸிடம் மட்டும் சொல்லி அழுதேன். ‘இந்த டீச்சர் எப்பயும் இப்படிதான்டி.... நீ அழாத...’ அவர்கள் என்னை சமாதானம் செய்தார்கள். அவ்வளவு தான். அதோடு முடிந்து விட்டது. அந்த மார்ச் மாதம் அவருக்கு ‘ஹெச் எம்’ ப்ரோமோஷன் வந்தது. ‘ஹ்க்கும்... இது போன வருஷமே வந்து தொலைக்க கூடாது.... நாமெல்லாம் தப்பிச்சு இருக்கலாம்ல...’ என்ற பொருமலுடன் நாங்கள் ஹை ஸ்கூலுக்கு சென்றோம். அதற்கு பிறகு நான் பெரிய கமலா டீச்சரை பார்க்கவேயில்லை.

அடுத்தது சின்ன கமலா டீச்சர்... இவர் எனது மூன்றாவது வகுப்பு ஆசிரியர். ஒரே பெயரில் இரு ஆசிரியர்கள் இருந்ததால் ‘சின்ன’, ‘பெரிய’ குறிப்புகள் சேர்த்து அழைக்கப்பட்டார்கள். இவரும் வயது முதிர்ந்தவர் தான். நிச்சயம் ஐம்பது வயது இருக்கும். சராசரி உயரம், ஒல்லியான உடல்வாகு, சின்ன கொண்டை, கருத்த முகத்தில் காருண்யம் வழியும் கண்கள், மென்மையாக பேசும் குரல் – இவை தான் அவரின் அடையாளங்கள்.

அவரது மேசையிலும் பிரம்பு இருக்கும். அது அலங்கார பொருள் போல இருக்குமே தவிர, அவர் யாரையும் அடித்து ஒரு நாளும் நாங்கள் பார்த்ததில்லை. சின்ன கமலா டீச்சர் கிளாஸ் என்றாலே மற்ற வகுப்பு பிள்ளைகள் எல்லாரும் பொறாமையாக பார்ப்பார்கள். எல்லா மாணவிகளுக்கும் சக ஆசிரியர்களுக்குமே பிடித்த டீச்சர் அவர். 

எனக்கு அப்போதெல்லாம் அடிக்கடி தலைவலி வரும். கொஞ்சம் நோஞ்சான் உடம்பு... வகுப்பு நேரங்களில் தலை வலிக்கிறது, உடம்பு சரியில்லை என்று டீச்சரிடம் சொல்ல வெட்கமாக இருக்கும். பாடத்தில் இருந்து தப்பிக்க நினைப்பதாக அவர் எண்ணி விட்டால்....? ஆனால், சோர்ந்திருக்கும் முகத்தை வைத்தே என்னவென்று அவர் விசாரித்து விடுவார். ‘பின்னால போய் படுத்துக்க...’ என்று கடைசியில் இருக்கும் பெஞ்சுகளில் படுத்துக் கொள்ள சொல்வார்.

நான் அடிக்கடி இப்படி இருப்பதை கவனித்து விட்டு என் வீட்டிற்கு நோட் அனுப்பி வைத்தார். வந்து பார்த்த என் அப்பாவிடம் ‘டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் பாருங்க.... அடிக்கடி இப்படி வர்றது சரியில்லை... கண்ணை வேணும்னா டெஸ்ட் பண்ணி பாருங்க...’ என்று சொல்லி வழிநடத்தியதும் அவரே. 

அதற்கு பிறகு தான் விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து என்னை கண் டாக்டரிடம் அழைத்து சென்றதும், டாக்டர் பார்த்து விட்டு ‘பவர் எல்லாம் ஒண்ணும் இல்ல.... அனிமீக்...’ என்று டானிக் எழுதி கொடுத்ததும், அப்போதும் முழுதாக சரியாகாமல், வளர வளர தலைவலி பிரச்சனை அதுவாக குறைந்து சரியானதும் தனிக் கதை. 

என்மேல் தனிப்பட்ட அக்கறை காட்டியதாலும் கூட எனக்கு சின்ன கமலா டீச்சர் மேல் அவ்வளவு இஷ்டம். ஹை ஸ்கூலுக்கு போன பின்னால் கூட முதல் சில வருடங்கள் ‘டீச்சர்ஸ் டே’ அன்று அவரைப் போய் பார்த்து சாக்லேட் கொடுத்து விடுவேன். பிறகு அந்த வழக்கம் மெல்ல நின்று போனது. பஸ்ஸுக்கு நடக்கும் வழியில் சில நேரங்களில் அவரைப் பார்ப்பேன். மரியாதையான இடைவெளியில் அவருக்கு விஷ் செய்து விட்டு பேருந்தை பிடிக்கும் அவசரத்தில் வேகமாக நடந்து விடுவேன்.

நான் அப்போது பதினொன்றாம் வகுப்பு என்று நினைக்கிறேன். எங்கள் பள்ளி பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி என்பதால் வாசலில் தயாராக சில ரோட் சைட் ரோமியோக்கள் நிற்பார்கள். நித்திய கடமை போல எங்கள் பின்னாலேயே தொடர்ந்து வருவார்கள். எங்களில் ஒருவரும் திரும்பி பார்க்கவேயில்லை என்றால் அலுத்து போய் அடுத்த பேட்ச் பையன்களிடம் இந்த வேலையை ஒப்படைத்துவிட்டு வேறு ஏரியாவில் தங்கள் பணியைத் தொடர்வார்கள். சில நேரங்களில் எந்த பெண்ணை தொடர்ந்து வருகிறார்கள் என்று கூட எங்களுக்கு சரியாகத் தெரியாது.

நல்ல காலம்! மற்ற எந்த வகையிலும் அவர்கள் எங்களை தொந்தரவு செய்யவில்லை. இன்று நடப்பது போல காதல் என்ற பெயரில் வன்முறை காட்டுவதோ, வழிமறித்து தகாத வார்த்தைகளில் பேசுவதோ, ஆசிட் அடிப்பதோ அன்று இல்லை. அதற்காக அந்த இளைஞர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

அன்று பஸ்ஸில் என்னோடு சேர்ந்து பயணிக்கும் தோழி பள்ளிக்கு வரவில்லை. மற்றவர்கள் முன்னாலேயே போய் விட்டார்கள். அதனால் நான் மட்டும் தான் தனியே நடந்து கொண்டிருந்தேன். ‘கொக்கு... சைவக் கொக்கு.....’ கர்ண கொடூரமான குரலில் பாடிக் கொண்டும் விசிலடித்துக் கொண்டும் அந்த பையன் என் பின்னாலேயே வந்தான். பத்து நாட்களுக்கும் மேலாக அவன் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். கும்பலாக இருக்கும்போது தெரியாத பயம் எல்லாம் தனியாக நடக்கையில் வியர்க்க வைத்தது. என்ன தான் அதிவேகத்தில் நடந்தாலும், அவன் என்னை கிண்டலாக கூப்பிட்டுக் கொண்டே என் அருகில் வந்து கொண்டிருந்தான். எங்களிடையே இருந்த இடைவெளி குறைந்துக் கொண்டே இருந்தது. அந்த தெருவில் அன்று பார்த்து ஆள் நடமாட்டமே இல்லை.

நான் அழைத்த எந்த கடவுளின் கருணையோ, அடுத்த திருப்பத்தில் சின்ன கமலா டீச்சர் குடையுடன் நடந்து கொண்டிருந்தார். ‘டீச்சர்... டீச்சர்..’ என்று அழைத்தபடியே ஓட்டமும் நடையுமாக நான் அவரை எட்டிப் பிடித்து விட்டேன். என் குரல் அவருக்கு கேட்கவில்லை போலும், நான் அருகில் சென்ற போது தான் என்னை கவனித்தார். நான் விஷ் செய்யவும் புன்னகையுடன் தலையசைத்தவர், என் மேல்மூச்சு, கீழ்மூச்சை கவனித்து பின்னால் திரும்பிப் பார்த்தார். புரிந்துக் கொண்டதை போல மீண்டும் என்னிடம் ஒரு புன்முறுவல்.

அவரிருக்கும் துணிச்சலில் நானும் ஆசுவாசமாக நடக்க ஆரம்பித்தேன். அந்த பையன் தொடர்ந்து வந்தானா, போனானா என்று கூட நான் திரும்பிப் பார்க்கவில்லை. டீச்சருடன் சேர்ந்து நடக்கையில் பேசாமலேயே அமைதியாக இருப்பது எனக்கு மரியாதைக்குறைவான செயலாக தெரிந்தது. ஆனால், என்ன பேச என்றும் தெரியவில்லை.

டீச்சருக்கு என்னை ஞாபகம் இருப்பதுபோல தெரியவில்லை. என் தலைவலி பற்றி ஏதாவது கேட்பாரா என்று நினைத்தேன். அவருக்கு பாவம், நினைவில்லை. ஒவ்வொரு வருடமும் எத்தனை எத்தனை மாணவிகளை அவர்கள் பார்க்கிறார்கள். பிறகு நானே என் பெயர், அவரிடம் படித்த வருடம் எல்லாம் சொன்னேன். உண்மையில் நியாபகம் வந்ததோ இல்லையோ, ‘ம்ம்ம்.. லேசா நினைப்பிருக்கு...’ என்றார்.

பிறகு அவரே ‘எங்க வீடு ? எப்படி போவ...?’ என்று கேட்டார்.  நான் சொன்னதும் ‘பேசாம சைக்கிள்ல வரலாம்ல...?’ என்றார். ‘இல்ல டீச்சர்... ரொம்ப தூரம்... ஒரு மணி நேரத்துக்கிட்ட ஆகிடும்.... அதனால தான் பஸ்ல...’ என்றேன். ‘ம்ம்...’ என்று எதையோ யோசித்தவர், அதற்குப் பிறகு சொன்னவை தான் வைர வார்த்தைகள்.

‘இங்க பாருப்பா.... வசதி இருக்கிற பிள்ளைங்க கார்லயும் வருதுங்க... ஸ்கூட்டர்லயும் வருதுங்க... சைக்கிள்லயே உலகம் முழுக்க சுத்தி வர்றவங்களும் இருக்காங்க... உன்னை மாதிரி பஸ்லயும் ஏறி இறங்கலாம். அதுவும் முடியலையா, நமக்கு காலு இரண்டு இருக்குது... நடந்து நடந்து கூட போக வேண்டிய இடத்துக்கு போயிடணும்.... இழுத்து இழுத்து மெதுவா கூட நடக்கலாம்.... ஆனா எங்கயும் சோர்ந்து போய் நின்னுட மட்டும் கூடாது.... ஓடுற வரைக்கும் தான் அதுக்கு பேரு ஆறு... இல்லேன்னா வெறும் குட்டை தான்.... ம்ம்... சரியா...?’  

அமைதியான குரலில் ஆற்றொழுக்கான நடையில் ஆழமான பொருள் கொண்ட இந்த சொற்களை அவர் உச்சரித்தபோது, சத்தியமாய் இவற்றின் அர்த்தம் எனக்கு புரியவில்லை. ஆனாலும், புரிந்தமாதிரி ‘உம்... உம்...’ என்று தலையாட்டிக் கொண்டேன். கொஞ்ச நேரத்தில் அவரிடம் இருந்து விடைப்பெற்றுக் கொண்டு என் பஸ்ஸில் ஏறி விட்டேன். பின்னர் அவரை ப்ளஸ்டூ டிசி வாங்கும்போது ஒருமுறை பார்த்தேன். அதற்கு பிறகு அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை.

அவர் எதை நினைத்து என்னிடம் இந்த வார்த்தைகளை சொன்னார் என்று எனக்கு இன்று வரை கூட புரிபடவில்லை. ஒருவேளை நிதானமாக நடந்தபடி தன் மனதில் யோசித்துக் கொண்டிருந்ததை என்னை அருகில் பார்த்ததும் அவர் வாய் விட்டு சொல்லியிருப்பார் என்று நினைத்துக் கொள்வேன். எது எப்படி இருப்பினும்  நங்கூரம் பாய்ச்சியது போல அந்த வார்த்தைகள் மட்டும் என் மனதின் அடியாழத்தில் இறங்கி விட்டன.

இந்த இரண்டு நிகழ்வுகளுமே என்னை எதிர்மறையாகவோ நேர்மறையாகவோ ஆழமாக பாதித்து விட்டன போலும்.

சின்ன சின்ன வெற்றிகளில் கூட மகிழ்ச்சியின் எல்லை கடந்து மனதில் கர்வம் முளைக்கையில், சமயங்களில் ‘நமக்கு நிகர் யாரு...?’ என்ற பூரிப்பு கரை மோதுகையில், அவசியமில்லா தற்பெருமையில் உள்ளம் ததும்புகையில், ‘என்னடி திமிரா....? உன் கொழுப்பை அடக்கிடுவேன், தெரிஞ்சுக்க... ’ இந்த வார்த்தைகள் அமானுஷ்யமாக என் காதுகளில் ஒலிக்கும்.

ஆணவம் என்ற யானையை அங்குசமே இல்லாமல் அடக்கிவிடும் வலிமை கொண்டவை பெரிய கமலா டீச்சரின் வார்த்தைகள். அன்று என் உள்ளங்கையில் விழுந்த அடியின் வலி இப்போது கூட மறக்கவில்லை. அந்த நிகழ்வு என்னையும் அறியாமல் பச்சை ரணமாக உள்ளத்தின் அடியில் உறைந்து போயிருக்கிறது என்று நினைக்கிறேன்.

அவர் நினைவு வந்தாலே, ‘அடக்கம் அமரருள் உய்க்கும்...., கதங்காத்துக் கற்றடங்கல்....’ என்று எப்போதோ படித்த திருக்குறள்கள் எல்லாம் வரிசையாக  நியாபகத்தில் வந்து, ‘மண்டையில் ஏறலாமா? வேண்டாமா?’ என்று யோசிக்கும் அகந்தை அனைத்தும் நிமிடத்தில் கரைந்து காணாமல் போய் விடும். அந்த வகையில் அக்கசப்பான அனுபவம் கூட ஒருவகையில் எனக்கு நன்மை தான் செய்திருக்கிறது என்று புன்னகையுடன் எண்ணிக் கொள்கிறேன்.

அதற்கு அப்படியே நேர்மாறானது வேறு வார்த்தைகள் தந்த பயன். நீண்ட நெடிய எதிர்பார்ப்புகளில் காத்திருந்து, ஆசைகளிலும் கனவுகளிலும் மலர்ந்து, ஆர்வமாக கண் மலர்த்தி புலரும் சில விடியல்கள் ஆழ்ந்த ஏமாற்றத்தில் முடிந்து போகையில் மனசு அப்படியே மரவட்டைக் கணக்காக சுருண்டு, கந்தல் துணியாக துவண்டு விழுந்து விடும்.

அப்போதெல்லாம் நினைவில் வருவது இந்த வார்த்தைகள் தான்... ‘வேகமா ஓட முடியலேன்னா போகட்டும்... மெல்ல தடவி தடவி நடந்தாவது போயிடலாம்... தொடர்ந்து நடக்கணும்... அது தான் முக்கியம்’ ஆட்டோ சஜெஷன் போல உச்சரித்துக் கொள்ளும் சின்ன கமலா டீச்சரின் இந்த சொற்கள் நம்பிக்கையை, ஒரு விதமான நேர்மறை உறுதியை அளித்து மனசோர்விலிருந்து மீட்கின்ற வல்லமை பெற்றவை.

இருவரது வார்த்தைகளையும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அவர்களது சொற்கள் பல நேரங்களில் பல விதங்களில் என்னை செதுக்கி வழி நடத்தி இருக்கின்றன. அவர்கள் இருவரும் இப்போது எங்கிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்ற எந்த தகவலும் எனக்குத் தெரியாது. ஆனால் எங்கிருந்தாலும் அவர்கள் அனைத்து நலன்களுடன் நிம்மதியான முதிய பருவத்தை அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று முழு மனதுடன் விரும்புகிறேன். அதற்காக பிரார்த்திக்கிறேன்.

இந்த விருப்பமும் பிரார்த்தனையும் சின்ன கமலா , பெரிய கமலா டீச்சர்களுக்கு மட்டுமானது அல்ல. வாழ்க்கையெனும் நெடும்பயணத்தில் எனக்கு வழிகாட்டிய, காட்டுகின்ற, துணை நின்ற, தோள் கொடுத்த, படிப்பித்த, படிப்பிக்கின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்குமே...!  

பின்குறிப்பு : போன செப் 5 க்கு எழுத வேண்டும் என நினைத்து இந்த வருட செப்டம்பரிலும் முழுதாக முடிக்காமல் மிக தாமதமாக பதிவு செய்யப்பட்ட இந்தக் கட்டுரை - என் ஆசிரியர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்.