“அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்”நா. முத்துக்குமாரின் இவ்வைர வரிகளை உணர்ந்து, அனுபவித்து, நெக்குருகி, மனம் நிறைந்து போகாத மனிதர்கள் யாரும் இருக்கமுடியாது.
என்ன தான், அடுத்த வீட்டு குழந்தைகளை தூக்கி, கொஞ்சி, விளையாடி மகிழ்ந்தாலும் அனைவருக்குமே தத்தம்
குழந்தை என்பது சம்திங் ஸ்பெஷல் தான். திருமணமான தம்பதிகள் பொதுவாக, கல்யாணம் முடிந்த சில மாதங்களிலோ, அல்லது முதல் வருட
நிறைவிலோ அவரவர்
மழலையின் வரவை ஆர்வமுடன் எதிர்பார்ப்பதும், கனவுகள் காண்பதும், கற்பனைகள் செய்வதும் இயல்பான விஷயம், மிக அழகான
ஆவலும் கூட.
வெகு சிலர் இந்த காலக்கணக்கில் இருந்து மாறுபடக்கூடும்.
வேலை, பதவி உயர்வு , குடும்பக்
கடமைகள், பொருளாதார நிர்பந்தங்கள் அல்லது தனிப்பட்ட தேடல்கள்
காரணமாக குழந்தை தொடர்பான முடிவுகளை தள்ளி வைத்து, அவர்கள் விரும்பியே குழந்தைப் பிறப்பை தள்ளிப்
போடலாம். சமூக எதிர்பார்ப்புகள் வேறாக
இருந்தாலும் இவர்களுடைய தனிநபர் உணர்வுகளையும் எண்ணங்களையும் மதிக்க வேண்டியதும்
அவசியமாகிறது.
மற்றபடி, முதல் ஒரு வருடத்திற்குள்ளேயே ‘ஏதாவது விசேஷம்
இருக்கா..?’ என்ற ஆவல் நிறைந்த கேள்வியை எதிர்கொள்ளாதவர்கள் பெரும்பாலும் இருக்க
முடியாது. எனினும், குழந்தைக்காக ஆசைப்படுவர்கள் அனைவருக்கும் அந்த வரம் உடனேயே
கிடைத்து விடுகிறதா?
‘மழைப்பேறும் மகப்பேறும் மகேசன் கையிலே’ என்பதற்கிணங்க
குழந்தை செல்வம் என்பது நம்முடைய கையில் இல்லையே… மழைமேகம்
எப்போது, எங்கே சூல் கொள்ளும் என்பதை வேண்டுமானால் இன்றைய
விஞ்ஞானம் ஓரளவுக்கு அனுமானிக்கலாம். ஆனால், அதே அறிவியல்
கருவில் உருக்கொள்ளும் அணுவைப் பற்றி எப்போது, எச்சமயம்
என்று யூகிக்க இயலாது, அல்லவா!?
சிலருக்கு உடனே அமைந்து விடுகிறது. சிலருக்கு சில
வருடங்களில்.. கொஞ்சம்
பேருக்கு நான்கைந்து ஆண்டுகளில்… இன்னும் சிலருக்கோ…. காலம்
கண்ணாமூச்சி விளையாட்டு காட்டி… சமயங்களில் சட்டென்று
பூப்பந்தை தூக்கி எறிகிறது.. இல்லையேல் தொடர்ந்து சுற்ற வைத்துக் கொண்டே
இருக்கிறது.
ஒருவேளை, மடி நிறைக்கும் மழலைக்காக காத்திருக்கும்
காலக்கெடு நீடித்துக் கொண்டே போனால்…?
இன்றைய காலகட்டத்தில், முதல் குழந்தைப்பேறு என்பது
புது வரவு, சந்தோஷம், மகிழ்ச்சி என்ற
மென் உணர்வுகளையெல்லாம் தாண்டி, ‘குழந்தையின்மை’ என்கிற அச்சத்தை அகற்றும் நிவாரணி என்ற நிலைக்கு வந்து விட்டது.
இப்போதெல்லாம் மாதங்கள் தள்ள தள்ள, தம்பதியினர் மட்டுமின்றி இரண்டு பக்க
பெற்றோர்களுமே ரொம்பவே பதட்டம் ஆகி விடுகிறார்கள். “பொண்ணு மாசமா இருக்கு” ; “கன்பார்ம்
ஆகிடுச்சு…” என்ற வார்த்தைகளை கேட்டபிறகு தான் அனைவருக்கும்
நிம்மதி ஏற்படுகிறது.
முன்பு பத்தில் ஒரு
தம்பதிக்கு இருந்த குழந்தையின்மை பிரச்னை, தற்போது பத்தில் நான்கு பேருக்கு உள்ளதாக புள்ளியியல்
தகவல்கள் சொல்லுகின்றனவாம். மாதவிடாயின் சரியான சுழற்சியின்மை, ஹார்மோன் கோளாறுகள் , பிசிஓடி, பிசிஓஎஸ், பெலோபியன் குழாய் குறைபாடுகள், கருமுட்டையின் வளர்ச்சி அல்லது வெளிவருவது தொடர்பான சிக்கல்கள் என்று
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் போலவே, ஆண்களுக்கும்
அவர்களின் உடற்கூறு அணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, நகர்வுத்
தன்மையில் சிக்கல் என்ற பல பிரச்சனைகள் எழுகின்றன.
இவற்றைத் தவிர மாறி வருகிற
உணவுப் பழக்கங்கள், இறுக்கும் பணி சூழல், வேலை அழுத்தம், மன அழுத்தம், உறவு சிக்கல்கள் என்ற
புறக்காரணிகளும் ஒரு காரணமாக மாறிப் போகின்றன. மூலைக்கு மூலை எழுந்து நிற்கும் பெர்டிலிட்டி
சென்டர்களும், எண்ணிக்கையில் பெருகியிருக்கும் சிறப்பு
சிகிச்சை மருத்துவர்களுமே இச்சிக்கலின் தீவிரத்தை நமக்கு உணர்த்தும் கண்கூடான சான்றுகள்.
நிற்க, இங்கு
சொல்ல வருவது குழந்தையின்மைக்கான
புள்ளி விவரங்களைப் பற்றி அல்ல. அவற்றின் மூல காரணங்களை நாம் அலசி ஆராயப் போவதும்
கிடையாது. காரணங்கள் என்ன வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். ஆனால்
விளைவுகள்…?
‘பிள்ளை இல்லை’ என்ற குறையை பேசித் தீர்க்கவே இயலாது.
குழந்தை இல்லாமல் துயரப்படும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மட்டுமே உணர்கின்ற கொடுமை
அது. எந்த மருத்துவ சிக்கலும் இல்லாமல் இருப்பவர்களுக்கே அது பெரிய வேதனை என்றால், தத்தமது குறைப்பாடுகளுக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நபர்கள்
அனுபவிக்கும் உடல் ரணத்தை, அவர்கள் அடையும் மன அழுத்தத்தை
வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
‘எந்த துக்கமும் பகிர்ந்து கொண்டால் பாதிக் குறையும்’ என்பார்கள். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட வாக்கியம் கூட
அதிக பலன் கொடுப்பதில்லை. ஆறுதல் என்ற பெயரில் புண்களை கீறி விடுகிற, அறிவுரை என்ற பெயரில் உள்ளத்தில் கத்தி பாய்ச்சுகிற சுற்றமும் நட்புமே
நம்மிடையே அதிகம். வெகு அரிதாகவே சிலருக்கு உண்மை உணர்வுடன் தோள் கொடுக்கின்ற,
தார்மீக ஆதரவு தருகிற உறவுகள் அமைகிறது.
அந்த விதத்தில் பார்த்தால், பெண்கள் ஓரளவு தங்கள் பிரச்சனைகளைப் பற்றி
உறவில், நட்பில் பேசி தீர்த்துக் கொள்கிறார்கள்.
சமூகத்திலும் அவர்களுக்கான செவிகள் காத்திருக்கின்றன. இப்போது பெருமளவு
இப்பிரச்சனைகளைப் பற்றிய விழிப்புணர்வு இருப்பதால் “அந்த
பொண்ணுக்கு கூட அப்படி தான் இருந்துச்சாம். ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டு இப்ப
இரட்டை குழந்தை பொறந்திருக்கு" என்ற நல்ல வார்த்தைகளும்,
“அந்த டாக்டர் நல்லா பார்க்கிறாங்க.. அங்க வேணா போய் பாரேன்"
என்கிற நம்பிக்கை மொழிகளும் ஆங்காங்கே காணக்
கிடைக்கின்றன. அப்படி பார்த்தால் பெண்களின் இந்த பகிர்வு நிலை ஓரளவு
பரவாயில்லை. குறைந்தபட்சம் அவர்கள் தம் மன புழுக்கத்தில் இருந்து வெளியே வந்து
கொஞ்ச நேரம் ஆசுவாசிக்கும் வெளி இருக்கவே செய்கிறது.
அதே நேரம், இந்த விஷயத்தில் சம அளவு பாதிக்கப்படும், வேதனைப்படும் அடுத்த பாலினத்தை எடுத்துக் கொண்டால், அவர்களின்
நிலைதான் மிகவும்
பரிதாபமானது. பெண்களைப்
போல, பெருமளவு ஆண்களால் இவ்வகை சிக்கல்கள் குறித்து வெளியே விவாதிக்க
முடிவதில்லை. தம்பதியர் இருவரில் ஒருவேளை பிரச்சனை அந்த ஆணிடம் என்றால், அவ்வளவு தான். அந்த ஆண் தனக்குள்ளேயே வெகுவாக குமைந்து போகிறான்.
அவனுக்கான ஆறுதல் தரும் போக்கிடம் அவனுடைய மனைவியைத் தவிர பெரும்பாலும் வேறு
யாரும் இருப்பதில்லை. ‘ஆண்மைக்கு ஏற்பட்ட இழுக்கு’ என்ற அடிப்படை எண்ணத்தில் தன் மனைவியிடம் கூட மனக்குறைகளை பங்கு போட்டுக்
கொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே வெந்து போகிற ஆண்களும் உண்டு.
கணவரிடம் பிரச்சனை எனும்போது அந்த பெண்ணுமே பகிர்ந்து கொள்ள
முடியாத மன புழுக்கத்தில் சிக்கிண்டு தவிக்கிறாள். கேட்பவர்களுக்கு புருஷனை
விட்டுக் கொடுக்காமல் வேறு காரணங்கள் சொல்லி, இல்லை தன்னையே காரணமாக்கிக்
கொண்டு மழுப்பி, சமாளித்து, உள்ளுக்குள் வெகுவாக நொந்து போகிறாள். உள்ள வருத்தத்தில் சுற்றிலும் இருப்பவர்கள் தொடுக்கும்
கேள்விக் கணைகளோ கொஞ்சமும் லஜ்ஜை இல்லாதவையாகவே அமைகின்றன.. ‘பிரச்சனை யாரிடம்…?' என்று நோண்டி நொங்கெடுத்து
அடுத்தவரின் வருத்தத்தில் அற்ப சுகம் காணும் மனிதர்கள் நம்மிடையே பெருகிப் போய்
விட்டார்கள்.
இவ்வகை சிக்கல்களையும் மருத்துவ உதவியால் குணமாக்கிக் கொள்ள
முடியும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல், ‘அவ வீட்டுக்காரருக்கு தான் பிரச்சனையாம்.
…’ என்று கிசுகிசுப்பதும், ‘அந்த பையன் கிட்ட தான் குறை போல… யாருக்கு தெரியும்..? நிலம் சரியில்லையோ, விதை சரியில்லையோ... ‘ என்றெல்லாம் அறிவுஜீவித்தனமாக
பேசுவதாக நினைத்துக்கொண்டு அபத்தமாக உளறுவதும் அநாகரீகம் மட்டுமல்ல… அறிவீனமும் கூட…
‘மனைவி மாதமாக இருக்கிறாள்’ என்றவுடனேயே மீசையை முறுக்கிக் காட்டுகிற,
“நான் ஆம்பிளை டா.. இன்னும் பத்து பிள்ளை கூட பெத்துக்குவேன்..’
என்று தம் கட்டுகிற சினிமா
ஹீரோக்களையே தொடர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கிற சமூகத்தின் நீட்சிப் பார்வை இது.
இந்த வகை தேவையில்லாத செய்தி பரப்புதலில், கிசுகிசுப்புகளில் சுற்றியிருக்கும் ஆண்களைக் காட்டிலும் சக
பெண்களே ஆர்வமாக வேலை செய்கிறார்கள் என்பதையோ, வெறும் வாய்க்கு அவலாக நினைத்து அடுத்தவர்
பிரச்சனையை தீனியாய் மெல்லுகிறார்கள் என்பதையோ வெளிப்படையாக சொல்லித் தெரிய
வேண்டியதில்லை. இதில் வயது முதிர்ச்சி எல்லாம் வேலை செய்வதில்லை. அந்தரங்கத்தை
அலசிப் பார்ப்பதில் வயது முதிர்ந்த அத்தையும் ஒன்று தான். நேற்று தான் பிள்ளை
பெற்ற அக்காவும் ஒன்று தான்.
நம்முடைய சிறுநீரையும் ரத்தத்தையும் பரிசோதித்து பார்த்தால்
தான் நம் சொந்த உடலில் உள்ள குறைபாடுகளே நமக்கு தெரிய வரும். இதில் அடுத்தவரைப்
பற்றிய ஆராய்ச்சி நமக்கெதற்கு? நம்மால் ஆறுதலாக இருக்க முடியாவிட்டாலும்
கூட, அழுத்தத்தில் இருப்பவர்களை குடைந்து அதில் குளிர்
காயாமல் இருப்பது நல்லது, இல்லையா…? அவ்வகை
பண்பும்
நாசுக்கும் இன்றைய நாகரீக உலகில் கூட தொடர்ந்து கலாவதியாகிக் கொண்டே தான்
இருக்கின்றன.
தாம்பத்தியம் மட்டும் அந்தரங்கமானது அல்ல. பிள்ளைப்பேறும்
இரு தனி மனிதர்களின் தனிப்பட்ட அந்தரங்கமே. அதை நாம் பொதுவில் வைத்து விவாதிக்க, விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. முக்கியமாக, பெண்மையின் பெருமையைப் பற்றியோ ஆண்மையின்
தீரத்தை பற்றியோ பிறக்கப் போகும் குழந்தையுடன் ஏன் முடிச்சு போட வேண்டும்?
பெண்மை என்பது சகலத்திலும் தாய்மையுடன், அன்புடன், கருணையுடன், கம்பீரத்துடன்
இருப்பது எனில், ஆண்மையும் அப்படியே... ஆண்மை என்பது வெறும் ஆண்தனம் அல்ல. மனைவியை அன்புடன் ஸ்நேகிப்பதில், காதலுடன் நேசிப்பதில், முக்கியமாக அவளை பரஸ்பர
மரியாதையுடன் நடத்துவதில் தானே ஆண்மை உயிர் கொள்கிறது!? சக
பெண்களை மூன்றாம் கண் கொண்டு பார்க்காமல் மதிப்புடன், தோழமையுடன்
நடத்துவதில் தானே ஆணின் பெருமை இருக்கிறது !?
எவ்வளவு குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதிலோ, எவ்வளவு சீக்கிரம் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதிலோ ஆண்மையின் பெருமிதம் நிச்சயம் இல்லை. இந்த மாதிரி சின்ன சின்ன மன பேதமைகளை கழுவி நம் மனதை கொஞ்சம் திறந்து வைத்துக் கொண்டால் நமக்கும் நலம்; நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நலமே;
பின்குறிப்பு: ரொம்ப
நாட்களாக என் மடிக்கணினியிலேயே தூங்கிக் கொண்டிருந்த கட்டுரை இது. தூரத்து தூரத்து
நண்பர் ஒருவரின் குடும்பத்தில் நிகழும் மன வருத்தங்களைப் பற்றி அறிய நேர்ந்தபோது
எழுதியது.
2 comments:
ஆழமான மன உணர்களை, துல்லியமாக உங்களுடைய எழுத்தில் படைத்திருக்கிறீர்கள். அருமை...
மிக்க நன்றி...
Post a Comment