குளியலறையின் கதவை திறந்து நான் வெளியே வந்த
நொடி, நானாவித நறுமணங்களும் என் நாசியை சூழ்ந்துக்கொண்டன. நெய்யில் முந்திரி திராட்சை
வறுபடும் மணமும், முருங்கைக்காய் சாம்பாரின் வாசமும், ஏதோ ஒரு காய்
எண்ணைய்சட்டியில் ரோஸ்டாகும் காந்தல்மணமும்....
மூக்கை இழுத்து அவற்றை அனுபவித்துக்கொண்டே “மீனு எல்லாம் ரெடி ஆயிடுச்சா...? நேரம் ஆகிட்டே இருக்கு...பாரு” கேசத்திலிருந்து
நீர் சொட்டிக்கொண்டிருக்க, தலையையும் முகத்தையும் துடைத்தபடி சமையலறை வாசலில்
வந்து நின்று குரல் கொடுத்தேன்.
“இதோ ஆச்சுங்க... பாயசத்தை இறக்கிட்டு
அப்பளத்தை பொரிச்சு எடுத்தா தீர்ந்துச்சு... நீங்க ஒரு உதவி பண்ணுங்களேன்... பாதி
பூவை துண்டு துண்டா நறுக்கி வச்சிருக்கேன். மேல இருக்கிற சாமி படத்துக்கெல்லாம்
வச்சிட்டு மீதியை அத்தை படத்துக்கு போட்டு விட்டுடுங்க.. எனக்கு எட்டாது...” என்
மனைவி மீனா, அடுப்பு காரியத்தில் பரபரத்துக்கொண்டே எனக்கும் வேலை சொன்னாள்.
“இரு.. பனியனை போட்டுட்டு வந்துடறேன்...”
உள்ளே சென்று உடை உடுத்திக்கொண்டு சின்ன ஸ்டூலை கையோடு எடுத்து வந்தவன், அதன் மேலேறி
மீனா வைத்திருந்த பூத்துணுக்குகளை மேலே இருந்த பெரிய படங்களுக்கு வைத்தேன்.
மீதிப்பூவை இருகைகளாலும் பிடித்து மாலைப்போல
சுற்றி அம்மாவின் படத்துக்கு போட்டு விடும்போது, மனசு அப்படியே கனத்துப்போனது. அம்மாவின்
முகத்தையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏற்கனவே மீனு வைத்திருந்த
குங்குமம் கொஞ்சம் அலுங்கியிருந்தது போல தெரிய, அதை துடைத்து விட்டு மீண்டும்
மஞ்சளை குழைத்து அழகான வட்டமாக அம்மாவின் நெற்றியில் பொட்டு வைத்து விட்டேன். எட்டி
தலைசாய்த்து பார்த்தேன். இப்போது திருப்தியாக இருந்தது.
அம்மா நேரில் பார்ப்பது போலேயே படத்திலும்
வெகு அழகாக இருந்தாள். “என்னடா அரவிந்தா...? அப்படி பார்க்குற...?” சின்னவயதில் என்
தாடையை ஆசையாக பிடித்து கன்னங்குழிய சிரிப்பாளே, அது போலவே கண்ணாடி சட்டத்தின்
வழியேயும் அவள் கள்ளமில்லாமல் புன்னகைத்துக்கொண்டிருந்தாள். அந்த தெள்ளிய முறுவலை,
கண்கள் மலர்ந்து முகம் விகசித்து மொத்த மனசும் சேர்ந்து புன்னகைப்பது போல அந்த
சிரிப்பை பார்க்க, பார்க்க, என் மனதில் இனம்புரியாத பாரம் ஏறியது. நெஞ்சம் நெகிழ்ந்து
கண்கள் தன்னாலேயே பொங்கிக்கொண்டு வந்தது.
“அம்மா....ஐ மிஸ் யு...” அந்த கன்னத்தை
தடவியபடியே நான் மெல்ல முணுமுணுக்க,
“என்னங்க... போட்டுட்டீங்களா...? ம்ம்...நல்லா
இருக்கு... மல்லிகைப்பூ மாலையே ஒரு அழகு தான்….இல்லீங்க...” தள்ளி
நின்று தன் மாமியார் படத்தை ரசித்த மீனு, “சரி... வேலையை முடிச்சிட்டீங்கன்னா நகருங்க...
இலை போட்டுடலாம்....” அங்கிருந்த பொருட்களை ஒதுங்க வைத்தபடி சின்னதாய் ஒரு கோலம்
இழுக்க ஆரம்பித்தாள்.
இன்று அம்மாவின் பத்தாவது திவசம். முதல்
திதியை தவிர்த்து, வருடாவருடம் ஐயர் வைத்து தெவசம் கொடுக்கும் பழக்கம் இல்லாததால்,
வருடாந்திர திதியின் போது அம்மாவுக்கு பிடித்த பதார்த்தங்களை செய்து படையல் போட்டு
வீட்டுடன் கும்பிட்டுக் கொள்வோம்.
“சரி.. எல்லோரும் வாங்க.... அபியையும்
வினுவையும் கூப்பிடுங்க... மாமா எங்க...? வெளில உட்கார்ந்திருக்காரா..?. அவரையும்
சீக்கிரம் வர சொல்லுங்க.... நேரமாச்சு....” எங்கோ இலக்கற்று வெறித்தபடி நின்று
இருந்த என்னை மீனுவின் குரல் அழைத்தது.
“என்ன...எந்த உலகத்தில இருக்கீங்க...?
மாமாக்கு ஒரு குரல் கொடுங்க.... அவரு வந்து தானே ஊதுபத்தி பொருத்தி வைக்கணும்....”
இலையில் உணவுவகைகளை பரிமாறியபடியே மீனு மீண்டும் என்னை அதட்ட,
“நீயே போய் உன் மாமாவை கூப்பிடு....என்னை
விரட்டாத...” என்னையுமறியாமல் குரல் உயர்த்திவிட்டேன்.
திடீரென்று நான் இரைய, ஒரு நிமிடம் ஒன்றும்
புரியாமல் என்னை பார்த்த மீனு, “ஏன் இவ்வளவு நேரம் நல்லாதானே இருந்தீங்க...
இருந்திருந்தாப்பல மூடு அவுட்டாயிடுமே....நல்ல ஆளு..?” கேள்வியும் முணுமுணுப்புமாக
அவளே எழுந்து சென்று என் அப்பாவையும் குழந்தைகளையும் அழைத்து வந்தாள்.
அணிந்திருந்த வேட்டியின் மேல் துண்டை
குறுக்காக கட்டியபடி உள்ளே வந்த அப்பா, “என்னப்பா... பூஜையை ஆரம்பிச்சிடலாமா....?”
என்னை பார்த்துக்கேட்க, “ம்ம்....” என்று முனகியபடி சாமி கும்பிடும் சாக்கில்
கண்களை இறுக மூடிக்கொண்டேன். சட்டென்று பொங்கிய வெறுப்பில் அவரை திரும்பி கண்ணால்
பார்க்கவும் எனக்கு பிடிக்கவில்லை.
தேங்காய் உடைத்து, சாம்பிராணி போட்டு,
கற்பூரம் காட்டி, வாயில் முனகிய திருவாசக பாடல்களுடன் படையலை வணங்கி என்று, அப்பா வழக்கம்
போல பூஜையை மிக அருமையாக செய்தார். எங்கள் எல்லோருக்கும் விபூதி வைத்து விட்டவர்,
மீனு எடுத்துக் கொடுத்த சிறிய இலைத்துண்டில் படையலில் இருந்து கொஞ்சம் கொஞ்சம்
எடுத்து வைத்தார்.
“பசங்களா... பாட்டிக்கு வச்சிட்டு வந்து நாம
சாப்பிடலாம்... அஞ்சு நிமிஷம் பொறுங்க....” அங்கிருந்த அதிரசத்திலும் வடையிலும்
கண்ணாகயிருந்த பேரப்பிள்ளைகளிடம் சிரித்தவர், “இந்தாம்மா மீனா... உன் அத்தைக்கு
ரசவடைன்னா உயிரு.... ஒரு வடையை முழுசா வைக்கிறேன்...மேல மாடிக்கு கொண்டு போய் காக்காவுக்கு
வை....அங்க தான் நிறைய வரும்....” மருமகளிடம் நீரேறிய கண்களுடன் புன்னகைத்து இலையை
எடுத்துக்கொடுத்தார்.
அவரது கண்ணீரைப் பார்த்து எனக்கு கொஞ்சம்
கூட வருத்தமாக இல்லை. “ஓ.... அப்படியா...என் அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு கூட உங்களுக்கு
தெரியுமா...? சூப்பர்...போங்க..” மாறாக நக்கல் சிரிப்பு தான் வந்தது.
கொஞ்ச நேரத்தில் கீழே இறங்கி வந்த மீனுவிடம்
அம்மா படத்தின் முன்பு வைத்து படைத்திருந்த புடவையை எடுத்துக்கொடுத்தவர்,
“இந்தாம்மா... உன் அத்தை மாதிரியே நீயும் எப்பயும் சந்தோசமா இருக்கணும்...”
அவளுக்கு குங்குமம் வைத்துவிட்டு அப்பா வாழ்த்தியபோது, அவரது சிரிப்பை பார்க்க
சகிக்காமல் ஹாலுக்கு வந்து விட்டேன்.
தாங்கமுடியாத மன அழுத்தத்தில் எனக்கு தலையெல்லாம்
வலிப்பது போலிருந்தது. காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. இரண்டு முறை காபி
குடித்ததுடன் சரி. நேரம் அதற்குள் ஒரு மணியை தாண்டி விட, பசியும் சேர்ந்துகொண்டது.
ஆனாலும், “எல்லோரும் உக்காருங்க...” என்று
மீனா கூப்பிட்டபோது “நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்ட்டுக்கிறேன்....இப்ப வேண்டாம்...”
என்று உள்ளே சென்று சும்மா படுத்துக்கொண்டேன்.
வெளியில்
அபி வினுவிடமும், மீனுவிடமும் அப்பா சாப்பிட்டபடியே தன் மனைவியை நினைவு கூர்வதும்,
அம்மாவின் பெருமைகளை பற்றி அவர் பேசிக்கொண்டிருந்ததும் காதில் விழ, படுக்கையிலிருந்து
எழுந்தவன் காலாலேயே உந்தி, அறைக்கதவை அடித்து சாத்தினேன்.
“காத்துல கதவு அடிச்சிகிச்சு போல இருக்கு...சாப்பிடாமயே
தூங்குறானே.... சரி...ஒரு நாளு ரெஸ்ட் கிடைக்குது...நல்லா தூங்கட்டும்....நீ
எழுப்பாதம்மா....அவனா எழுந்து வரட்டும்.. ” சாத்திய கதவின் பின்னாலிருந்தும்
அப்பாவின் ஆதுரமான குரல் கேட்க, ஒரு நொடி அவரது பாசத்தில் நெகிழ்ந்து போன
என்னுள்ளம் மறுவினாடியே கூம்பிப் போனது.
ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் படும்
அவஸ்தையை போலவே என் மனசு எங்கெங்கோ சுற்றி சுழன்றது.
அப்பா.... வெகு பாசமான எனது அப்பா...
சின்ன வயதில் நான் மெத்தையில் தூங்கிய
நாட்களை விட அவரது நெஞ்சில் தூங்கிய நாட்கள் தான் அதிகம். ரொம்பநாட்கள் வரை சாப்பிடும்போது
முதல்வாயை எனக்கு கொடுக்காமல் அவர் அடுத்த கவளத்தை உண்டதில்லை. எனக்கு பத்து வயதான
பிறகு தான், அம்மா சொல்லி சொல்லி மெல்ல மெல்ல அந்த பழக்கத்தை மாற்றிக்கொண்டார்.
ஐந்தாவது படிக்கும்போது, கூட படிக்கிற
நண்பர்கள் எல்லாம் போகிறார்கள் என்று நானும் கிரிக்கெட் பயிற்சி எடுத்துக்கொள்ள
ஆசைப்பட்டேன். ஒரு வார்த்தை கேட்டுவிட்டேன்
என்பதற்காக வில்லிவாக்கத்திலிருந்து டிஐ சைக்கிள்ஸ் கிரௌன்டுக்கு சைக்கிளை
‘மாங்குமாங்கென்று’ மிதித்துக்கொண்டு அழைத்து செல்வார். அம்பத்தூர் பாலத்தை
தாண்டும்போது அவருக்கு இருந்த ஆஸ்த்மா தொந்தரவினால் கடுமையாக மூச்சிரைக்கும்.
நான்கு மாதம் விடாமல் போயும் ஒரு கேட்சை கூட
ஒழுங்காக பிடிக்காமல் நான் தடுமாற, ‘இதுக்கெதுக்குடா இவ்வளவு தூரம் வரணும்...?’
என்று சலிப்பாய் ஒரு தடவை கூட அவர் கேட்டதில்லை. பிறகு நானே, ‘சரி.. நாம கேப்டன்
ஆகுறதுக்கு இந்த நாடு கொடுத்து வைக்கலை....” என்று தேற்றிக்கொண்டு என் பயற்சியை
நிறுத்தியது தனிக்கதை.
நான் ஒற்றை பிள்ளையாக போய் விட, மொத்த
கவனிப்பும் எனக்கே எனக்கு தான். உயிரை விடும் அப்பா.. அன்பாய் அரவணைக்கும்
அம்மா... இதற்கு மேல் என்ன வேண்டும்...? என் சிறு வயதில் நான் படித்த செல்லுலாயிட்
கதைகளைப் போலவே, வாழ்க்கை மிக இனிமையாக, மிக அழகானதாக தோன்றியது.
வளர வளரத்தான், என்னை சுற்றி நடக்கும்
நெருடல்களை உணர ஆரம்பித்தேன். காலையில் தூங்கி எழும்போது முகமெல்லாம் புசுபுசுத்து
அழுத சுவட்டுடன் இருக்கும் அம்மா, சில சமயங்களில் கன்னங்கள் வீங்கி, சில
நேரங்களில் சமையலறையின் மேடையில் சாய்ந்தபடி விசும்பிக்கொண்டு, அரிதான சில
சந்தர்ப்பங்களில் பக்கத்து வீட்டு அத்தையிடம் எதையோ சொல்லி அழுதபடி...
“என்னம்மா... என்னம்மா ஆச்சு...?”
அம்மாவுக்கு என்னவோ என்று நான் பதறிக்கொண்டு அவள் இடுப்பைக் கட்டிக்கொண்டால்,
மந்திரம் போட்டது போல அத்தனை நேரம் இருந்த இருட்டையும் துடைத்துவிட்டு அந்த முகம்
புன்னகைக்கும். என் தோளை அணைத்துக்கொண்டு “ஒண்ணும் இல்லடா கண்ணா...” பற்கள் தெரிய
சிரிக்கும்.
“ஏம்மா....மூஞ்சியெல்லாம் என்னமோ மாதிரி
இருக்கு..?” நான் அழ ஆயுத்தமாகும்போது, “ஒண்ணுமில்ல அரவிந்தா...நைட்டு ஏதோ பூச்சி கடிச்சிடுச்சு
போல...” என்றோ, “அம்மாக்கு சளிம்மா....அதுதான் முகமெல்லாம் ஊதிபோயிருக்கு...”
என்றோ, “கண்ணுல எறும்பு கடிச்சிடுச்சு...” என்றோ நேரத்துக்கு ஏற்றபடி எதையாவது
சொல்வாள். நானும் அதையெல்லாம் நம்பிக்கொண்டு எத்தனையோ நாட்கள்
இருந்திருக்கிறேன்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல, வயதிற்குரிய
விவரம் தெரிய ஆரம்பிக்க, என்ன ஏது என்று புரிந்துக்கொள்ள தொடங்கிவிட்டேன். அம்மாவின்
கண்ணீர் கறைகளுக்கு அர்த்தம் விளங்கத் துவங்க, அப்பாவின் மேல் நான் வைத்திருந்த
ஆதர்சம் எல்லாம் காற்றின் வேகத்தில் உருகும் பனித்துளிப்போல வேகமாக கரைய ஆரம்பித்தது.
அப்பாவின் நல்ல குணங்களுக்கு எல்லாம் சத்ரு
அவருடைய முன்கோபம் தான். கோபம் என்றால்
அப்படி ஒரு கோபம். சாதாரண மனிதப்பிறவிகளுக்கு வரும் சினமல்ல அது. அவருக்கு ஒன்று
பிடிக்கவில்லை என்றால் ஊழித்தாண்டவமே ஆடிவிடுவார்.
ஆத்திரத்தில் என்ன வார்த்தை பேசுகிறோம்
என்றே அவருக்கு தெரியாது. அல்ப விஷயங்களுக்கு கூட, எதிரில் நிற்பவரை ஒரு புழு போல
உணரச்செய்யும் கொடூரத்தனம் வெளியில் வரும். மனதில் ஒளிந்திருக்கும் வக்கிரமெல்லாம்
வாய் திறந்து கொள்ளும். மற்ற நேரங்களில் மிக நாகரீகமாக பேசுபவர் கேட்பதற்கே காது கூசும்
வார்த்தைகளை வண்டைவண்டையாக வாரிவிடுவார்.
அவரது கோபத்திற்கு ஆளாகும் ஒற்றை இலக்கு
எப்போதுமே அம்மா தான். என்மேல் அவ்வளவு பாசமா, இல்லை என்ன கருமமோ தெரியாது,
என்னிடம் ஒரு நாளும் அவர் அப்படியெல்லாம் கத்தியதில்லை, இந்த நிமிடம் வரைக்கும்...
எந்த நொடியில் அணு ஒன்று கருவாக உயிர்
கொள்கிறது என்பதையோ, எந்த கணம் சூழ் கொண்ட மேகம் மழைத்துளியை பிரசவிக்கிறது
என்பதையோ எப்படி யாராலும் கணிக்க முடியாதோ, அது போலவே என் அப்பாவிற்கும் எந்த ஷணம்
மூக்கின் மேல் கோபம் வரும் என்றோ, எந்த விநாடி ஆத்திரம் உச்சியை பிடிக்கும் என்றோ
யாராலும் ஊகிக்க முடியாது.
அவரது துர்வாச கோபத்திற்கு இதுதான் காரணம்,
அது தான் காரணம் என்றெல்லாம் வகைபிரிக்கவும் முடியாது. அடி ஆழம் வரைக்கும் நோண்டிப்பார்த்தால்
கடைசியில் அற்பசொற்ப விஷயமாக தான் இருக்கும்.
அது, அம்மம்மாவுடன் அம்மா பத்து நிமிடங்களுக்கு
மேல் பேசிய எஸ்டிடி காலாக இருக்கலாம், இல்லை, அலுவலகத்தில் இருந்து அப்பா
வீட்டுக்கு வரும்நேரம் திண்ணையில் எதிர்வீட்டு அக்காவுடன் பூக்கட்டிக் கொண்டிருக்கிற
அம்மா, “வந்துட்டீங்களா....இரண்டு நிமிஷம்...இந்த சரத்தை முடிச்சிட்டு வரேன்...”
என்று தாமதித்ததாக இருக்கலாம், சமயங்களில் சாம்பார் புளிப்பு, ரசம் காரம், வத்தல் சரியா
பொரியல என்று பிசாத்து விஷயங்களாகக் கூட இருக்கலாம்.
அப்போதெல்லாம் அப்பாவின் கம்பீரமான முகம்
விகாரமாக மாறிவிடும். நெற்றி துடிக்க, முகமெல்லாம் காய்ந்து, சிவந்து பார்க்கவே
பயங்கரமாக இருப்பார். எப்படி நடந்து கொள்வார் என்றே சொல்ல முடியாது. அந்த
சமயத்தில் அவர் எதுவும் செய்யலாம்.
தன்னை நோக்கி முறுவலுடன் வரும் மனைவியை
ஓங்கிய கையுடன் அறையலாம். சாப்பிடும் தட்டு சோற்று பருக்கைகளுடன் பறக்கலாம். பெண்ணின்
நடத்தையை கேவலப்படுத்தும் மிகக் கேவலமான வார்த்தைகளை கொஞ்சமும் தயங்காமல் கட்டின
பொண்டாட்டியை பார்த்து உச்சரிக்கலாம்..
எனக்கு இப்போதும் நன்றாக நினைவிலுள்ளது.
அப்போது நான் ஒன்பதாவது வகுப்பு... உள்ளறையிலிருந்த அப்பா ‘தே....... நாயே...”
என்று ஆரம்பித்து அசிங்க அசிங்கமாக அம்மாவை திட்டிக்கொண்டிருக்க, நான் முதன்முதலாக
அந்த சொற்களை, அதுவும் என் ஆசை அப்பாவின் வாயிலிருந்து வந்ததை நம்பமுடியாமல் ஸ்தம்பித்து
நின்றுவிட்டேன். அப்பாவின் மேல் நான் வைத்திருந்த பிம்பம் எல்லாம் முழுதாக
நொறுங்கிப்போன விநாடி அது.
அம்மா திரும்பி பார்த்தால் நான் நிற்பது
தெரிந்து விடும் என்று அவசர அவசரமாக அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன். அதில் சில
சொற்களுக்கு அந்த வயதில் எனக்கு அர்த்தம் தெரியவில்லை. ரொம்ப நாட்கள் எனக்கு
புரியாமல் இருந்த அவற்றின் அர்த்தமெல்லாம் காலப்போக்கில் புரிந்தபோது, அப்பாவின்
மேல் ஆழ்ந்த ஒரு வெறுப்பு உருவாகிவிட்டது.
காதில் விழும் சொற்களின் கனத்தை தாங்க
முடியாமல் எத்தனையோ நாட்கள் அம்மாவுக்குக் கூட தெரியாமல் போர்வையை மூடிக்கொண்டு
அழுதிருக்கிறேன். காலையில் எழும்போதும், அப்பா வீடு திரும்பிய பிறகும் அம்மாவின்
முகம் கலங்கியிருக்கிறதா என்று உற்று உற்று பார்த்துக்கொண்டிருப்பேன்.
‘கடவுளே.. இன்னிக்கு முழுக்க எங்க அப்பாக்கு
கோபம் வரக்கூடாது, எங்க அம்மாவ கண்டபடி திட்டக்கூடாது...’ குளித்து திருநீறு
வைத்துக்கொள்ளும்போது எனது காலை பிரார்த்தனையின் முதல்வேண்டுதல் இப்படித்தான்
அனிச்சையாக மாறிப்போனது.
சுண்டிப்போகும் என் முகத்தை பார்த்தே அம்மா என்னை
அணைத்து அவ்வப்போது ஆறுதல் சொல்வாள். “அம்மா அப்பான்னா அப்படி தான்...சண்டை
போட்டுக்குவோம். அப்புறம் சமாதானம் ஆகிக்குவோம்....இதையெல்லாம் நினைச்சிக்கிட்டு
நீ படிப்பில கோட்டை விட்டுடாதே, அரவிந்தா... என் ஆசை, கனவு எல்லாமே நீ தான்...”
அவளது வாய் தைரியம் சொன்னாலும் ‘உனக்காக மட்டும் தான் இதையெல்லாம் நான்
தாங்கிக்கிறேன்...’ அவளுடைய கண்கள் என்னிடம்
சொல்லாமல் சொல்லும்.
“நான் பெரியவனாகி நல்ல வேலைக்கு போயி எங்க
அம்மாவை தனியா கூட்டிட்டு போய் வச்சுக்குவேன்...” அப்பா என்னும் ராட்சசனிடம்
இருந்து அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்பதே குறியாக படிப்பில் கவனம் செலுத்தினேன்.
நான் ஆசைப்பட்ட மேனேஜ்மெண்ட் படிப்பையே மேற்படிப்பாக எடுத்துப்படிக்க, நல்ல வேலை
கிடைத்து செட்டில் ஆகும் சமயம் அம்மாவின் நிரந்தர பிரிவு.
அப்போது
எனக்கு மீனுவுடன் திருமணம் நிச்சயம் மட்டும்தான் ஆகியிருந்தது. அம்மா பார்த்த பெண்
தான். நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் இடைப்பட்ட ஒரு நாளில் ‘என் கடமை முடிஞ்சு
போச்சு..’ என்ற தினுசில் தூங்க தூங்க, நித்திரையிலேயே அம்மாவின் மரணம்.... கணவரது
குணத்தை ஊருக்கும் உலகுக்கும் காட்டிக்கொடுக்காமலேயே அம்மா அழகாக போய் சேர்ந்து
விட்டாள்.
பிறகு, எங்கள் திருமணம் முடிந்து மீனு இந்த
வீட்டுக்கு வந்ததும், மனைவியின் பிரிவில் மூழ்கி இருந்த அப்பாவை மீனு பாசத்துடன்
கவனித்ததும், மருமகள் தன்னிடம் காட்டிய அன்பில் குளிர்ந்து போனவராக அவளை தான்
பெறாத மகளாய் அப்பா பாவித்ததும்... அதிலெல்லாம் அவரை குறையே சொல்ல முடியாது.
பால்,காய்கறி
வாங்கி வருவது முதல் பிள்ளைகளை கிளப்புவது வரை வேலைக்கு செல்லும் மருமகளுக்கு
எல்லா விதத்திலும் கைகொடுப்பார். சமயங்களில் மீனு ‘தலை வலிக்கிறது’ என்று
படுத்திருந்தால், காபி போட்டு எடுத்து வரக்கூட தயங்கமாட்டார். என்னையும் தள்ளி
நிறுத்தும் அப்படி ஒரு பாசப்பிணைப்பு மருமகள், மாமனாருக்கு இடையே.... இதிலெல்லாம்
எனக்கு உள்ளபடியே சந்தோஷம் தான். என்ன, அம்மாவிடமும் இந்த மாதிரி...இதில் நூற்றில்
ஒரு பங்கு அவர் அன்பாக.....
“என்னங்க...வர்றீங்களா...? நாம இரண்டு பேரும் சாப்பிடலாம்....” கதவை திறந்துகொண்டு உள்ளே வந்த மீனுவின் அழைப்பு என் சிந்தனையோட்டத்தை கலைக்க, எழுந்து சோம்பல் முறித்தவன்,“வரேன்...அவங்க மூணு பேரும் சாப்ட்டாங்களா...?” வினவியபடியே உணவு மேசையில் சென்று அமர்ந்தேன்.
“என்னங்க...வர்றீங்களா...? நாம இரண்டு பேரும் சாப்பிடலாம்....” கதவை திறந்துகொண்டு உள்ளே வந்த மீனுவின் அழைப்பு என் சிந்தனையோட்டத்தை கலைக்க, எழுந்து சோம்பல் முறித்தவன்,“வரேன்...அவங்க மூணு பேரும் சாப்ட்டாங்களா...?” வினவியபடியே உணவு மேசையில் சென்று அமர்ந்தேன்.
“ம்ம்...ஆச்சு...மாமாவுக்கு அத்தை மேல
எவ்வளவு பிரியம் பார்த்தீங்களா...? காலைல இருந்து பச்சை தண்ணி கூட பல்லில படாம
விரதம் இருந்து இப்பதான் சாப்பிடுறாரு...” என் இலையில் பரிமாறியபடியே மீனு
சொன்னபோது,“ஹையோ...இல்ல...நீ நினைக்கிறமாதிரி அவரு அவ்வளவு நல்லவரு இல்ல...” என்
மனம் அடங்காமல் கூச்சலிட்டது.
பிறகு, நானே “சரி... உனக்காவது அவரு நல்ல
மாமனாரா இருந்துட்டு போகட்டும்....” என்று நினைத்தபடி அமைதியாக சாப்பிட்டு
முடித்தேன். உண்ட களைப்பு ஆளை அசத்த, படுக்கையில் படுத்தபடி குழந்தைகளுடன் கதை
பேசிக்கொண்டிருந்தேன். பேச்சும் விளையாட்டுமாக இருந்த மூன்று பேரும் அப்படியே
தூங்கிப் போய் விட்டோம்.
உறக்கம் கலைந்து நான் எழுந்துவந்தபோது மாலை
நான்கு மணியாகியிருந்தது. சின்க்கில் பாத்திரங்களோடு போராடிக்கொண்டிருந்த மீனு
என்னை பார்த்ததும் டீ போட்டு எடுத்து வந்தாள்.
“முதுகெல்லாம் வலிக்குது...காலையில் இருந்து
ஒரே வேலை....” என்றபடி தன் டம்ளருடன் என்னருகில் வந்தமர்ந்த மீனு தன் பாதங்களை பிடித்துக்கொண்டு
அமர, “நைட் ஒரு பெயின்கில்லர் போட்டுக்கோ..ஞாபகப்படுத்து.....நான் எடுத்து
தரேன்....” நான் ஆறுதலாக சொன்னேன்.
தேநீரை
குடித்தபடி “அப்பா எங்க....?” நான் கேட்க, “வாக்கிங் போயிருக்காரு.... இவ்வளவு
நேரம் காரை துடைச்சாரு...கொஞ்ச நேரம் படுங்கன்னா கேட்கவே இல்ல....” பதிலளித்தபடியே அவள் தொலைக்காட்சியை போட்டு
தனக்கு பிடித்த சேனல்களை தேடிக்கொண்டிருந்தாள்.
நன்றாக உறங்கி எழுந்திருந்ததால் மனசு இப்போது
தெளிவாக இருக்க, காலையிலிருந்து அப்பா மேல் புருபுருத்துக் கொண்டிருந்த கோபம்
எல்லாம் காணாமல் போயிருந்தது.
அது என்ன காரணமோ, எப்போதுமே அப்பாவிடம்
என்னால் நேருக்கு நேர் கோபத்தை காட்ட முடிந்ததில்லை. அவர்மேல் ஆதிநாள் முதல் நான்
கொண்ட பாசமோ, பயமோ, அவர் காட்டும் பிரியத்தின் பிரதிபலிப்போ, இல்லை எல்லோரும்
சொல்வது போல ரத்தபாசமோ, அது என்ன உணர்வோ, அதன் பெயர் எனக்கு தெரியாது..
அம்மா இருக்கும்போது கூட என் மறைமுககோபத்தை
காட்டுகிற மாதிரி உம்மென்று தான் திரிவேன். அம்மாவும் போனபிறகு நிர்கதியாக மாறிப்
போயிருந்த அவரின் தோற்றம் என்னை நானறியாமலேயே நெகிழ்த்தியிருக்கவேண்டும்
“எனக்கும் ஒரு காலம் வரும்.. அப்ப அவருக்கு நான்
யாருன்னு காட்டுறேன்..” நான் மனதுக்குள் சூளுரைத்துக்கொள்வது தெரிந்த மாதிரி அம்மா
திடீரென்று மறைந்து விட, அதற்கு பிறகு அப்பா மேல் நான் எந்த வன்மத்தையும் வைத்துக்
கொள்ளவில்லை.
என் சினத்தையெல்லாம் மூடி மூட்டை கட்டி
வைத்துவிட்டு முன்பை விட பாசமாக அவரிடம் பேசுகிறேன். வீட்டுப்பெரியவர் என்று
மரியாதை கொடுக்கிறேன். என்ன, இந்த மாதிரி அம்மாவின் நினைவு பெருகிப் போகும்
நாட்களில் மட்டும் அவர் மேல் மறைத்து வைத்திருக்கும் ஆத்திரமெல்லாம் வெளியே வரும்.
கொஞ்ச நேரத்தில் தன்னாலே தணிந்து மீண்டும் பெட்டிக்குள் போய்விடும்.
ஜன்னல் வழியே எட்டி பார்த்தபடி “நல்ல வெயில்
அடிக்குது... இந்நேரத்துக்கு எதுக்கு அவரை வாக்கிங் போக விட்டே..?” நான் குறைபட,
“அது சரி.. அப்பாவும் பையனும் என்னமோ என் பேச்சைதான் கேட்குற மாதிரி....” மீனு
நொடித்துக்கொண்டாள்.
சிரித்தபடி காபிமேசையின் அடித்தட்டில் கொத்தாக
வைத்திருந்த மெயில்களை எடுத்தேன். ஒரு வாரமாக எந்த தபாலையும் பார்க்கவில்லை. ஒரு
கல்யாண பத்திரிக்கையும், ஒரு நகைக்கடை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழும்
வந்திருந்தன. மேலோட்டமாக ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தவன், அந்த வெள்ளைநிற
கவரை பிரித்துப்பார்த்து அதிர்ந்து போய்விட்டேன்.
"என்னடி இது....?” நான் அலற, திடீரென்று
நான் போட்ட கூச்சலில் மீனு அதிர்ந்து திரும்பினாள்.
“இதை பார்த்தியா....? நாலு வருஷமா கட்டிட்டு
இருந்த யுலிப் பாலிசி ட்யூ கட்டாம இன்வேலிட் ஆகியிருக்கு....போச்சு... போச்சு...
இத்தனை நாளு கட்டியிருந்த பணமெல்லாம் போச்சு...” நான் தலையில் கை வைத்துக்கொள்ள,
“அச்சச்சோ... எந்த நோட்டிபிகேஷனும் வந்த
மாதிரி தெரியலையே... இங்க கொடுங்க” அவள் என் கையில் இருந்து அந்த லெட்டரை வாங்கப்
பார்க்க, பிடித்த அவள் கரத்தை வெடுக்கென்று உதறிவிட்டேன்.
“எப்பப்பார்த்தாலும் லொட்டுன்னு லொட்டுன்னு
சிஸ்டம்ல உட்கார்ந்து தட்டிக்கிட்டு தானே இருக்கிற...? இதை கூட பார்க்காம என்ன கிழிச்சிகிட்டு
இருக்க...? ஒரு வேலைக்கும் லாயக்கு இல்ல.. துப்பு கெட்ட ஜென்மம்...”
உச்சஸ்தாயியில் நான் கத்த ஆரம்பிக்க,
“இல்லங்க...சுத்தமாக மறந்துட்டேன்....இப்ப
கூட ஒண்ணும் பிரச்சனை இல்லை... ரிஇன்ஸ்டேட் பண்ணிக்கலாங்க....” கண்களில் சேர்ந்து
விட்ட பயத்துடன் அவள் மன்றாடினாள்.
“ஆமா.... இவ அப்பன் வீட்டு கம்பெனி பாரு... நீ
நினைச்சதையெல்லாம் செய்யுறதுக்கு... திரும்ப ரிஇன்ஸ்டேட் பண்ணனும்னா பைன் போடுவான்...
அதை என்ன உங்க அப்பனா கொடுப்பான்....? நாயி.. நாயி....பரதேசி நாயி...“
“ப்ளீஸ்ங்க...திட்டுங்க...ஆனா கொஞ்சம்
மெதுவா திட்டுங்க...பிள்ளைங்க தூங்கிட்டு இருக்காங்க....” அவள் வேகமாக சென்று
படுக்கையறைக் கதவை சாத்த முயல,
“ஒண்ணுத்துக்கும் ஆகாததை கட்டிக்கிட்டு நான்
படுற அவஸ்தை இருக்கே...சனிய.....”
கதவிடுக்கின் இடைவெளி வழியே அபியும்
வினுவும் படுக்கையிலிருந்து எழுந்து அச்சத்துடன் மலங்க மலங்க விழித்துக்கொண்டிருப்பது
தெரிய, சுளீரென்று மனதை தாக்கிய ஏதோ ஒரு உணர்வில்.....
“சே..” தலையிலடித்தபடி நான் திரும்ப, அப்பா தான்
வந்த சுவடு தெரியாமல் திரும்பி மீண்டும் தெருவில் இறங்கி நடப்பது கண்ணில் பட்டது.
குறிப்பு : வெட்டி பிளாக்கர் தளத்தில் ‘தந்தை’
தலைப்பின் கீழ் பதிவிடப்பட்ட சிறுகதை - ஆறுதல் பரிசு பெற்றது
1 comment:
Hema, really enjoyed your story.
Post a Comment