கடைக்குள் நுழைந்த அறிவு
மீண்டும் ஒருமுறை தன் சட்டையையும் பேண்ட்டையும் குனிந்து பார்த்துக் கொண்டான். இருப்பதிலேயே நல்ல உருப்படி, நேற்றிரவே மடித்து தலையணைக்கடியில் வைத்தெடுத்ததால் அந்த இளபச்சை சட்டையும் க்ரேநிற பேண்ட்டும் படிமானமாக தனக்கு
பொருந்தியிருப்பதாகத்தான் தோன்றியது. முடியை கோதிக்கொண்டு எதிரிலிருந்த
கண்ணாடியில் தன்னுருவத்தை மீண்டுமொருமுறை பார்த்தவன், திருப்தியுடன் கைமடிப்பை சரி செய்து கொண்டான்.
மஞ்சள் மிளகாய் நெடி
அடித்த ஸ்டோரறைக்குள் நுழைந்து ஜன்னலை விரிய திறந்துவைக்க, எதிர்வீட்டு மாடியில் நிறைய ஜனசந்தடி தெரிந்தது. ரமாக்காவின் முகம்
தெரிகிறதா என்று கண்களால் துளவினான். அவரை காணவில்லை. கீழ்வீட்டு பெண்களிருவர் பட்டுபுடவையுடன் படிகளில் ஏறுவது கண்ணில் பட, கம்பிகளுக்குள் கண்களை நுழைத்து பக்கவாட்டில் தெரிந்த ஹாலை எட்டிப் பார்த்தான். விருந்தினர்கள் வர ஆரம்பித்து விட்டார்கள் போல. யாரோ ஒரு
பெண் சேர்களை வரிசையாக போட்டுக்கொண்டிருக்க, ரமாக்காவின் கணவர் வெளியே நின்று வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார்.
பின்புறம்
நடந்துகொண்டிருந்த சமையலின் நறுமணம் இவனிருந்த அறையின் புகைபோக்கியின் வழியே காற்றில்
மிதந்து வந்தது. கம்மென்றிருந்த அசைவ உணவின் மணம் நாசியை சூழ, ஓரிருமுறை மூச்சை ஆழ்ந்திழுத்துக் கொண்டான். சட்டென்று உமிழ்நீர் சுரக்க, ஒன்றும்போடாமல் காலியாக கிடந்த வயிறு ஒருமுறை விம்மித் தணிந்து, தன் இருப்பை உணர்த்தியது.
‘இன்னும் கொஞ்ச நேரம்
பொறுத்துக்கோ...’
வயிற்றைத் தடவிக்கொடுத்தபடி அருகிலிருந்த பானை நீரை சொம்பில் மொண்டு
கடகடவென குடிக்கையில் “யாருப்பா கடையில..?” வெளியிலிருந்து குரல் வந்தது.
“இதோ...வரேன்..”
குரல்கொடுத்துக்கொண்டே வெளியேயிருந்த வாடிக்கையாளரை கவனிக்க சென்றான். ஓனர் ஊரிலில்லை. நேற்று திண்டிவனம்
சென்றிருந்தவர் இன்று மதியத்துக்குள் வந்துவிடுவதாக சொல்லியிருந்தார். அதுவரை கடை இவன் பொறுப்புதான். ஓனருக்கு
இப்போதெல்லாம் இவன் மேல் நல்ல அபிப்ராயம் வந்திருப்பதுபோல தோன்றியது. வெளியே
சொல்லிகொள்ளாவிட்டாலும் அடிக்கடி தன்னிடம் சாவியைக் கொடுத்து கடையை பூட்ட திறக்க சொல்கிறார், கலெக்ஷனை வாங்கி வரசொல்கிறார் என்று அறிவுக்கே அப்படி ஒரு எண்ணம். அதை காப்பாற்றிக்கொள்ளவேண்டுமென்று அவனும் பொறுப்பாகவே நடந்துக்கொள்கிறான்.
ஒன்பதாவதுடன்
படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு இரண்டு வருடம் ஊர் சுற்றிக் கொண்டிருந்தவனை அவன் மாமாதான் இங்கு கொண்டுவந்து சேர்த்திருந்தார். மாமாவின்
பக்கத்து வீட்டுக்காரர் ஓனருக்கு சொந்தமாம். வேண்டாவெறுப்பாகத்தான் இந்த மளிகைக்கடை
வேலைக்கு வந்தான். வந்த ஒரு வருடத்தில் ஓரளவு வேலை கற்றுக்கொண்டு இப்போது விருப்பமாகவே
செய்கிறான். சரக்கு எடுப்பது, பேக்கட் போடுவது, டோர் டெலிவரி செய்வது, தண்ணீர் கேன்கள் போடுவது
என்று எல்லா வேலைகளையும் செய்யவேண்டும். அவனுக்கே அவனுக்கு என்றொரு சைக்கிளை கொடுத்துவிட, அறிவுக்கு கடையிலிருப்பதை விட வெளியே சுற்றவே ஆர்வம் அதிகமிருந்தது.
அதை புரிந்துகொண்டதைப்போல ஓனரும் வெளிவேலைகளுக்கு இவனையே வாடிக்கையாக அனுப்பத்தொடங்கிவிட்டார்.
கடையை ஒட்டிய
காம்பவுண்ட்டிலேயே அறுபது குடித்தனங்கள் இருக்கும் அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ்
இருந்தது. அந்த வீடுகளில் பெரும்பாலானோர் இங்கேதான் பொருட்கள் வாங்குவார்கள்.
ரெகுலர் கஸ்டமர் வீடுகளுக்கு அவர்கள் சொல்லாமலேயே முறைவைத்து, அறிவே தண்ணீர் கேன்கள் போட்டுவிடுவான்.
அந்த வீடுகளிலொன்றுதான்
ரமாக்கா வீடும். இரண்டாவது மாடியில் இவர்களது கடையை பார்த்தமாதிரி இருக்கும். அவர்கள் வீட்டு பால்கனியிலிருந்து சாய்வாக கோடு வரைந்தால் கடையின்
உள்ளறை ஜன்னலில் வந்து முடியும். அதனால் ரமாக்கா அங்கிருந்தே குரல் கொடுப்பார்.
“இந்தா அறிவு....
இங்க எட்டிப்பாரு...” என்று கூப்பிட்டு அவசரமாக தேவைப்படும்
அயிட்டங்களை சொல்லுவார். இவன் எடுத்துக்கொண்டு உடனே ஓடிப்போய் கொடுத்துவிட்டு
வருவான்.
அறிவு இல்லாத
சமயங்களில்கூட, ஓனரிடம் “கணேசா.. அறிவு எங்க..?” என்று
தான் கேட்பார். ஓனர் கூட இவன் வந்தவுடன் “பாருடா... இவன்கிட்ட மட்டும் தான் சொல்லுவாங்களாம்... போயி என்னன்னு கேட்டுட்டு வா...” என்ற கிண்டலுடன் அனுப்பி வைப்பார்..அறிவுக்கு
அதைக்கேட்க ரொம்ப சந்தோசமாக இருக்கும்.
அவர் வீட்டுக்குப்போய்
டெலிவரி செய்துவிட்டு வரும்போதும் சும்மா அனுப்பிவிட மாட்டார். ஆரம்பத்தில் ஐந்து
ரூபாய் கொடுத்தபோது இவன் வேண்டாமென்று மறுத்துவிட்டான். ‘சரி.. காசு வேணாம்னா
விடு.... இந்த பழத்தை சாப்ட்டுட்டு போ...” என்று மேசையிலிருந்த ஒரு வாழைப்பழத்தை
எடுத்துக் கொடுத்தார். அன்றிலிருந்து எப்போது அதிகமாக சுமந்துகொண்டு செல்கிறானோ
அப்போதெல்லாம் எதையாவது தின்னக் கொடுத்துவிடுவார். பிஸ்கட்டோ, பழமோ, ஒரு கிளாஸ்
மோரோ எதுவோ ஒன்று. சாப்பிட, குடிக்க ஆசையிருந்தாலும் “வேணாம்... வேணாம்க்கா...” அறிவும்
வேண்டுமென்றே பிகு செய்துகொள்வான். “இந்தா... பேசாம கைல எடுத்துக்கோ...” அக்கா
விளையாட்டாக மிரட்டுவார்.
அவனுடைய
வாடிக்கையாளர்களில் ஓரிருவர் இப்படிப்பட்ட தயாள குணத்துடன் இருந்தாலும், அவனுக்கு என்னவோ
ரமாக்காவிடம் ஒரு கூடுதல் பிரியம். ஒருவேளை அவர் தாடையில் இருக்கும் மரு அவன் அம்மாவின்
முகத்தை ஞாபகப்படுத்துவதாலும்கூட இருக்கலாம்.
அக்காவின் மகனுக்கு
ஒரு வாரம் முன்புதான் கல்யாணம் முடிந்திருந்தது. ஓனருக்கு பத்திரிக்கை
வைக்கும்போது அறிவிடமும் ”நீயும் வந்துடு...” என்று சொல்லியிருந்தார். இவனுக்கும்
போக ஆசை தான். இருந்தும் என்ன செய்வது..?
“குரோம்பேட்டைலயிருந்து
பெரம்பூருக்கு போகவே அரைநாளாயிடும்..நீ இங்க வர்றப்ப பார்த்துக்கோ..” என்று ஓனர்
மட்டும் திருமணத்திற்கு போய்வந்திருந்தார். இன்றுதான் பொண்ணும் மாப்பிள்ளையும் இங்கு
வருகிறார்கள். அவர்களை வரவேற்கத்தான் அவர்கள் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. சம்பந்தி
மரியாதை என்று அசைவ விருந்தும் ஒருபக்கம் தயாராகிக்கொண்டிருந்தது.
முந்தாநாள் மொத்த
மளிகையையும் கொண்டு போயிறக்கின போது, ‘எங்கயும் போயிடாதடா.... இங்கனவே
இரு...உதவியா இருக்கும்...” என்று அக்கா இவனிடம் சொல்லி வைத்திருந்தார்.
அப்போதிலிருந்து அறிவுக்கு ஒரே கனவு தான். லிஸ்டிலிருந்த பிரியாணி சாமான்கள், நெய்,
கண்டென்ஸ்ட்மில்க் என கவனித்து அவனே மனதுக்குள் ஒரு மெனு தயாரித்துவிட்டான்.
‘எப்படி சும்மா போய்
மணமக்களை பார்ப்பது?’ என்று நேற்றே பேன்சிஸ்டோருக்கு சென்று நூற்றைம்பது ரூபாய்க்கு
ஒரு கிப்ட் வாங்கி ஆசையாக பரிசுத்தாள் சுற்றி தயாராக வைத்து விட்டான். ஆணும்
பெண்ணும் ஊஞ்சலில் உட்கார்ந்திருப்பதை போலவும் சுற்றிலும் தண்ணீர் ஓடுவது போலவுமிருந்த
அந்த செராமிக் பொம்மை அழகாகயிருந்தது. ‘போக வேண்டியது தான்..... கிப்ட்டை கொடுக்கவேண்டியதுதான்....
கறி சோத்தை ஒரு கட்டுக் கட்டவேண்டியதுதான்....’அறிவு இப்படி எண்ணிக்கொண்டே பில்
போட்டுக்கொண்டிருந்தான்.
வாடிக்கையாளர்கள்
ஒருவர், இருவர் என வந்து கொண்டேயிருந்தார்கள். அவர்களை கவனித்து அனுப்பிக்கொண்டிருந்தாலும்
நேரம் போகிறதே என்று அவனுக்குள் பதைப்பாக இருந்தது. மதியம் ஒருமணிக்கு கிட்டே
ஆகிவிட, அவன் அவ்வளவு நேரம் வழிமேல் செவி வைத்திருந்த “அறிவு.... தம்பி....”
அக்காவின் குரல் சாளரம் வழி வந்தது.
“இந்தா வரேன்கா...”
அவசரமாக உள்ளே ஓடி கம்பிவழி மேலே நிமிர்ந்து பார்த்தான். கழுத்தில் அட்டிகையும் பட்டுப்புடவையுமாக
காந்திமதி அம்மன் போல அக்கா நின்று கீழே பார்த்துக் கொண்டிருந்தார். ”நாலு தண்ணி
கேனை கொண்டு போய் சாப்பிடுறயிடத்துல வைச்சுடுப்பா... அப்படியே வீட்டுக்கும் இரண்டு
கேன் கொண்டாந்துடு...”அவர் சொல்ல, “சரிக்கா..” இவன் வேகமாக ஓடி போய் ஒவ்வொன்றாக
தூக்கிச்சென்று பரிமாறுமிடத்தில் வைத்துவிட்டு வந்தான்.
மீன் வேறு இருக்கிறது
போல. மீன் பொரித்த மசாலா மணம் கும்மென்றிருந்தது. “ம்ம்....ஹா....” ஆழ்ந்து
சுவாசித்து அந்த மணத்தை உள்வாங்கிக்கொண்டான். கத்திரி மொச்சை போட்டு அம்மா
வைக்கும் நெத்திலிகுழம்பின் மணம் நியாபகம் வர, சுவையடுக்களில் நிரடிய அந்த வாசம்
வாயில் நீரூற வைத்தது. “மீனு சாப்ட்டு எவ்வளவு நாளாச்சு...?” அவன் தனக்குள்ளாக
எண்ணியபடி சுமைகளை கொண்டுவந்து போட்டுக் கொண்டிருந்தான்.
மேலே வீட்டுக்கு
சென்று ஒரு கேனை வைத்துவிட்டு திரும்புகையில், அவசரமாக படிகளில் ஏறிக்கொண்டிருந்த அக்கா
எதிர்பட்டார். “அறிவு... இலை பத்தாது போலருக்கு... தெருமுக்குல அந்த பாட்டிகிட்ட
போய் வாங்கிட்டு வர்றியா...?” அவர் கேட்க, பணத்தை வாங்கிக் கொண்டவன் பக்கத்து பொரிக்
கடைக்காரரை கடையில் ஒருகண் வைத்துக்கொள்ள சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துகொண்டு அவசரமாக
ஓடினான்.
பாட்டி கடையை
சாத்திவிட்டு சென்று விட்டது போல.. அங்கே சில சாக்கு பைகள் தானிருந்தன. டக்கென்று
யோசித்து பூக்கடை மார்க்கெட் பக்கம் வண்டியை திருப்பினான். அங்கு ஒரு பாய்
சமயங்களில் இலைகளை வைத்து வியாபாரம் செய்வார்.
இவன் போனபோது அவர்
நின்றபடி மாலை கட்டிக்கொண்டிருந்தார். “இன்னிக்கு சரக்கு எடுக்கல...” இவன்
கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு தன்போக்கில் அவர் பூக்களை கத்தரித்துக்கொண்டிருந்தார்.
“ப்ச்... சே..” அறிவுக்கு வேறெங்கு போய் பார்ப்பது என்று தெரியவில்லை. திரும்ப
மூச்சிரைக்க சைக்கிளை மிதித்துக்கொண்டு இவன் வந்து சேர்ந்தபோது அக்கா பீடாதட்டை
சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களிடம் தந்தபடி நின்றிருந்தார். “....க்கா...இலை...”
இவன் சொல்வதற்கு முந்தியே, “வந்துட்டியா... உன்னை தான் பார்த்துட்டுருந்தேன்.
நேரமாச்சேன்னு பாக்குமட்டை தட்டு வாங்கிட்டு வந்து பந்தி போட்டாச்சு... நல்லதா
போச்சு...இலையும் கிடைக்கல பாரு...” என்றார்.
அவனுக்கு “ஹப்பாடா”
என்றிருந்தது. இலையில்லாமல் அக்கா எங்கே தடுமாறப் போகிறாரோ என்று பயந்துகொண்டே
வந்திருந்தான். இவன் நிற்கையிலே யாரோ கூப்பிட்டார்கள் என்று அக்கா அந்த ஹாலின்
அடுத்த மூலைக்கு போனார். பெரும்பாலான ஆட்கள் சாப்பிட்டு முடித்து விட்டார்கள்
போலிருந்தது. பரிமாறுமிடம் கும்பலில்லாமலிருந்தது. வெளியே ஆட்கள் குழுகுழுவாக
நின்று, உட்கார்ந்து என்று பேசிக்கொண்டிருந்தார்கள். பெண்ணும் மாப்பிள்ளையும் கூட,
அவர்கள் நண்பர் குழுவோடு ஒரு ஓரமாக அமர்ந்து சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். நிறைய
பேர் கிளம்பத்தொடங்கிவிட்டார்கள். அக்காவின் கணவரும் அவர் மகளும் தாம்பூலப் பையை
எடுத்துக் கொடுத்து வழியனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
ஏனோ அந்த நிமிடம் அறிவுக்கு
தான் அந்நியமாய் நிற்பது போலிருந்தது. ஏமாற்றம் பெருக, “சரி. கடைக்கு போகலாம்..” என்றெண்ணி
நடக்கையில், “அறிவு.......” அக்கா கூப்பிட, அவன் எதிர்பார்ப்புடன் திரும்பினான்.
”பேப்பர் கப்பும், நாலு
கூல்டிரிங்ஸ் பாட்டிலும் எடுத்துட்டு வர்றியா...?” அவர் சொன்னதைக்கேட்டு அவன்
முகம் அப்படியே சுருங்கிப்போனது. “சரி..” என்பதாக இவன் மெதுவாக தலையசைக்க, “இதை
அக்கவுன்ட்ல எழுதிக்கப்பா...” என்றார்.
அவர் கேட்டதை கொண்டுவந்து
கொடுக்கையில் அக்கா உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ”இந்தா மேகலா.... இதை
வாங்கி எல்லாருக்கும் ஊத்திக்கொடு..” யாரோ ஒரு பெண்ணை அழைத்து இவன் கையிலிருந்த
கவரை வாங்க செய்தவர், இவன் அங்கேயே நிற்பதைக் கண்டு கேள்வியாகப் பார்த்தார்.
ஒரு நொடி யோசனையுடன்
ஏறிட்டவர், அப்போதுதான் நினைத்துக் கொண்டதைப் போல, “வா அறிவு......வந்து
உட்காரு.....நீயும் சாப்புடுவியாம்...” அவர் கூப்பிட, அறிவு கையிலிருந்த பரிசுப்பொருளை
அக்கா உட்கார்ந்திருந்த டேபிளில் வைத்தான். “பொண்ணு மாப்பிள்ளைக்குக்கா..” இவன்
புன்னகையுடன் சொல்ல, “அது இருக்கட்டும்.... முதல்ல நீ உட்காரு...” அவர் மீண்டும்
சொன்னார்.
“இல்லக்கா.. இந்த
மாசம் நாங்க கவுச்சி சாப்பிட மாட்டோம்.... அம்மா வேண்டுதல்னு போன்ல சொல்லிச்சு... கடைல
ஆள் இல்ல... நான் வரேன்” சொல்லிவிட்டு முறுவலுடன் அவன் திரும்பி நடக்க, “அடேய்..இவனே.”
வாய்க்குள்ளேயே சொல்வதுபோல அக்கா சொல்லிக்கொண்டார்.
அவர் முகம்
குற்றவுணர்ச்சியில் லேசாக கருத்துப் போனது போல தோன்றியது. ஒருவேளை அது அவன்
பிரமையாகவும் இருக்கலாம்.
தோளுயர்த்தியபடி கம்பீரமாக
அவன் நடக்க, சட்சட்டென்று இரண்டு துளிகள் முகத்தில் தெறித்தது. கோடை தூறல் போல....
மெல்லிய பூச்சாரலாக மழைத்துளிகள் மண்ணில் பட, நனைந்த மண்ணின் மணம் நாசியை
சூழ்ந்தது. தற்சமயம் அவன் மூக்குக்கு பிரியாணியின் மணமோ, மீன் வாசமோ, எதுவுமே தெரியவில்லை.
சுகந்தமாக மணந்த மண்வாசத்தை
ஆழ்ந்து சுவாசித்துக்கொண்டவனின் வயிற்றில் இப்போது கொஞ்சம் கூட பசியுணர்வே இல்லை.
6 comments:
அருமை அருமை ஹேமா..அவன் எத்தனை ஆசையுடன் காத்திருந்தான்..அவனது எண்ணங்கள் அங்கு சமைக்கப்படும் உணவு வகைகளை பற்றியே இருந்தது. அவனது ஏமாற்றத்தையும்அ அதை அவன்த தாங்கி கொண்ட விதமும் அழகு.அதற்காக சொன்ன வேலைகளை எல்லாம் செய்தாலும் கடைசியாக நெற்றி அடியாக அந்த உணவையே மறுத்து நிமிர்ந்து நின்ற விதம் அருமை..
அருமை ஹேமா .....அந்த சிறுவனின் உணர்வுகளும் .....கடைசியில் அவனின் நிமிர்வான பதிலும்....நன்றி பதிவிற்கு
நன்றி சுதாக்கா,நமக்கென உழைக்கும் கடை நிலை ஊழியர்களை சில நேரங்களில் மறந்து விடுகிறோம். அதன் பாதிப்பே இந்த சிறுகதை... உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி!
நன்றி மதிக்கா, பசியையும் விருந்தின் மீதான ஆசையையும் கடந்து அவன் நிமிர்வாகவே வெளியேறுகிறான். தங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி, மதிக்கா!
சிறுவனின் தன்மானம் பசியை கொன்று விட்டது
கருத்துப் பகிர்வுக்கு நன்றி தோழரே!
Post a Comment