லேடிஸ் விங்க்ஸ் தளத்தில் நடந்த 'தீபாவளி சிறுகதை போட்டி - 2016' -ல் முதல் பரிசு பெற்ற சிறுகதை இது. மதிப்புமிகு நடுவர் காஞ்சனா ஜெய திலகர் அவர்கள் கதைகளை வாசித்து தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார். நடுவர் அவர்களின் கடிதத்தையும் தள நிர்வாகியின் அனுமதியுடன் இங்கே இணைத்துள்ளேன். தேர்வுக் குழுவுக்கும் , போட்டிகள் நிகழ்த்திய லேடிஸ்விங்க்ஸ் குழுமத்தினருக்கும், பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தும் சிறகுகள் பதிப்பகத்தினருக்கும், பின்னணியில் இதற்கென உழைத்த முகமறியா தோழிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
சிறுகதையை இணைப்பிலும் வாசிக்கலாம்:
http://ladyswings.com/community/threads/hema-jay_-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.4444/
http://ladyswings.com/community/threads/hema-jay_-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.4444/
தாங்கி தாங்கி நடந்துவந்த சண்முகம் டேபிளில் வரிசையாக இருந்த ஒவ்வொரு
டப்பாவையும் திறந்து பார்த்தார். என்னென்னவோ இருந்தது.... குக்கீஸ், மப்பின்கள், சாக்லேட்கட்டிகள், க்ராய்சென்ட்கள். “ப்ச்...” ஒன்றிலும் திருப்தி இல்லாமலிருக்க ப்ரிட்ஜை குடைந்தார். வரிசையாக பழப்பெட்டிகள், ஐஸ்க்ரீம்வகைகள், கேக் என அது கைகொள்ளாமல் நிரம்பி வழிந்தாலும் அவர் தேடிய காரசார
அயிட்டம் எதுவும் கண்ணில்படவில்லை.
“இந்தா சுகந்தி...... எதுனா கொரிக்கறது எடுத்துக்கொடு..... வாய்
நமநமங்குது...” உள்ளறையில் ஓய்வாக படுத்திருந்த மனைவிக்கு குரல் கொடுக்க “இப்பதானே
டிபன் சாப்ட்டு முடிச்சீங்க...... கழுவின கைக்கூட காஞ்சிருக்காது... அதுக்குள்ள சின்னபுள்ளக்கணக்கா ஏதாவது இருக்கான்னு
ஆரம்பிச்சிடுங்க...” சலித்துக்கொண்டே எழுந்து வந்த சுகந்தி எங்கேயோ தேடி, வறுத்த உலர்பருப்புவகைகளை எடுத்துத் தந்தார்.
“ம்ஹ்ம்.. இதுதானா...?” தட்டிலிருந்ததை கண்ணால் பார்க்கவே சண்முகத்திற்கு
அலுப்பாக இருந்தது. “எனக்கு இப்ப சுட சுட காசி அல்வாவும், கூட காராசேவ்வும்
சாப்பிடணும் போல இருக்கு...” கண்களில் ஆசை மின்ன, குழந்தை போல ஆர்வமாக சொன்ன கணவரை
பார்த்த சுகந்திக்கு சிரிப்பு வந்தது. “அது சரி... மனசு மதுரை மாடவீதிக்கு
போயாச்சாக்கும்...?” இடக்காக கேட்டு குறும்பாக அவரைப் பார்த்தார்.
மனைவிக்கு பதிலெதுவும்
சொல்லாமல் ஜன்னலருகே சென்றவர், வெளியே இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். கனத்த
குளிரை தாங்கிக்கொண்டிருந்த கண்ணாடி கதவுகளுக்கு அழகான திரைசீலைகள் இடப்பட்டிருக்க,
அவர்களிருவர் மட்டுமேயிருந்த வீடு நிசப்தத்தால் சூழப்பட்டிருந்தது.
எழுபது வயதில் தலைமுடியெல்லாம் பஞ்சுபஞ்சாக வெளுத்திருக்க, முதுமையின்
முழுதான ஆதிக்கத்திலிருந்த சண்முகம் குளிருக்கு இதமாக ஸ்வெட்டர், சாக்ஸ் என்று அணிந்திருந்தார்.
சுகந்தி கணவரை விட ஐந்து வயது சிறியவர், அவருக்கும் வயதுக்கேற்ற உபாதைகளுண்டு. மெத்துமெத்தென்று
உள்வாங்கிய சோபாவிலிருந்து எழ முயன்றவருக்கு கால்மூட்டு சுள்ளென்று இழுத்துப் பிடிக்க,
வலியை பொறுத்தபடி ஒரு நிமிடம் நின்றவர் கணவருக்கருகில் மெல்ல நகர்ந்தார்.
“என்னாச்சு..?”
“என்னமோ வெறுப்பா இருக்கும்மா.... நினைச்சவுடனே செருப்பை மாட்டிகிட்டு
கிளம்பினமா... ஆசைப்பட்ட இடத்துக்கு போனமா...... நினைச்சதை சாப்பிட்டமான்னு இல்லாம....
இது என்ன வாழ்க்கை...?” சண்முகம் அலுப்பாக பேச, சுகந்தி ஒன்றும்
சொல்லாமல் அவரையே பரிதாபமாக பார்த்தார்.
‘வயது போக போக ஆசை வரும்’ என்பது போல வெளியே தெரிந்தாலும் கணவரின்
உள்மனதில் இருப்பது என்னவென்று அவருக்கு புரியாமலில்லை. அதற்கு சற்றும் குறையாமல் தன்னுள்ளத்திலும்
எழும் ஆர்ப்பரிப்புகளை உணர்ந்த சுகந்திக்கு இதயமென்னவோ பாரமாகிப்போன உணர்வு.
தூரத்தில் கோடாக ஹட்ஸன் நதியின் மேல் ஓடும் பாலம் தெரிந்தது. நியூஜெர்சியின்
நியூபோர்ட் ஏரியாவில் பரந்து விரிந்திருந்த இல்லம் அது. ஆனால் தற்சமயம் அங்கிருந்த
இருவரின் மனசு மட்டும் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைபாய்ந்தது.
வேறு என்ன..?... எல்லாம் சொந்தமண் தான் அவர்களை அவ்வளவு
தூரத்திலிருந்தும் காந்தம் போல கவர்ந்திழுத்துக்கொண்டிருந்தது.
பிறந்தது, வளர்ந்தது, வாழ்ந்தது எல்லாமே மதுரையில் தான். மேற்கு மாடவீதியை
ஒட்டிய கிளைத்தெருவில் மளிகைக்கடை... கடைக்கு பின்னேயே வீடு என்று கைக்கடக்கமான வாழ்க்கை.
தாத்தா காலத்தில் சின்ன பெட்டிக்கடையாக தொடங்கியிருந்த வியாபாரம் சண்முகம்
தலையெடுக்கும்போது ஓரளவு காசு கொழிக்கும் தொழிலாக வளர்ந்திருந்தது. எட்நூறு சதுரம்
தான் என்றாலும் பிரதான இடத்திலிருந்ததால் நல்ல ஓட்டம். அந்த வருமானத்தை வைத்து
தான் அக்கா தங்கைகளுக்கு செய்தது, மூன்று பிள்ளைகளை
படிக்க வைத்தது, அவர்களுக்கு திருமணம் செய்தது எல்லாம்...
இரண்டு மகன்கள், ஒரு மகள் என இப்போது எல்லோருமே வெளிதேசத்தில்.... பெரியவன்
நியூஜெர்சியிலிருக்க, சிறியவன் அட்லண்டாவில் இருக்கிறான். நடுப்பெண்ணை ஆஸ்திரேலிய
மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருந்தது.... ஆச்சு...... எல்லோருக்கும்
இரண்டிரண்டு குழந்தைகள் என எல்லாப்பிள்ளைகளும் ஓரளவு செட்டில் ஆகிவிட்டார்கள்.
இத்தனை வருடங்களில் சண்முகமும், சுகந்தியும் பலமுறை அமெரிக்கா
வந்து போய் விட்டார்கள். அவ்வப்போது மகள் வீட்டுக்கும் சென்று வருவார்கள். பிள்ளைபேறு
சமயத்திலெல்லாம் சுகந்தி உதவிக்கு ஓடி வந்துவிடுவார். சண்முகம் கடையை கவனிக்கவேண்டுமென்று
ஒரு மாதம், இரண்டு மாதம் தங்கிவிட்டுப் போவார். குழந்தைகள் வளர வளர, அவர்களை பார்த்துக் கொள்ள, வீட்டை கவனித்துக்
கொள்ள என்று இவர்களின் சகாயம் தொடர்ந்துக்கொண்டிருந்தது. சகாயம் என்பதை விட இருதரப்புக்குமே
பரஸ்பர திருப்தி. பெரியவர்களுக்கு பிள்ளைகள், பேரன் பேத்திகளோடு
இருப்பதிலொரு சுகம், இளைய தலைமுறைக்கு தாய் தந்தை தனியே இல்லாமல் தங்களுடன் வசிப்பதிலொரு
நிம்மதி!
அந்த விஷயத்தில் அவர்களிருவரும் கொடுத்து வைத்தவர்கள். பெற்ற
பிள்ளைகளாகட்டும், வீட்டுக்கு வந்த மருமகள்கள், மருமகனாகட்டும் எல்லாருமே
நல்ல மாதிரிதான். எதிலும் குறை காணாத, நிறைகளை மட்டுமே
பெரிதாக பிரஸ்தாபிக்கும் சுகந்தியின் சௌஜன்ய குணமும் கூட குடும்ப சுமூகத்திற்கு
துணை செய்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரியவன் “நீங்க இரண்டு பேரு மட்டும் அங்க தனியா இருந்து என்ன செய்யப்போறீங்க..?... இங்கயே
வந்துடுங்க...” என்று அவர்களின் நிரந்தரக் குடியுரிமைக்காக ஆயுத்தம் செய்யத்தொடங்க, இருவருக்குமே யோசனையாக இருந்தது.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு மூத்த பேரன் பிறந்த சமயத்தில்
அந்நியமண்ணில் கால்பதித்தபோது தோன்றிய பிரமிப்பு எல்லாம் காலத்தின் போக்கில்
கரைந்து போயிருந்தது. முதன்முதலில் வெளிநாட்டுக்கு வந்தபோது கண்ணில்பட்ட கவர்ச்சியான
மனித முகங்களும், அவர்களின் வெள்ளைத்தோலும், பலதரப்பட்ட மக்களின் விசித்திரமான வாழ்க்கை
முறைகளையும் பார்க்க பார்க்க புதுமையாகவும், விந்தையாகவும் இருந்ததென்னவோ நிஜம் தான். இரண்டு வருடத்துக்கு ஒருமுறை
ஆறுமாதம் என அமெரிக்க போக்குவரத்து எல்லாம் சகஜமென மாறிப்போன சூழலில் பிரமித்த விஷயங்களெல்லாம்
நீர்த்துபோய் ‘எல்லா இடங்களிலும் வாழ்க்கை ஒன்று தான்...
மனிதர்களுக்கிருக்கிற உணர்வுகளும் உணர்ச்சிகளும் கூட கிட்டத்தட்ட ஒண்ணுமாதிரிதான்’
என்கிற பக்குவம் வந்துவிட்டது.
ஆனாலும், தங்கள் இடத்தை விட்டுவிட்டு நிரந்தரமாக வெளிமண்ணில் இருப்பதை
நினைத்தால் ரொம்பவே குழப்பமாக இருந்தது. சண்முகத்திற்கும் முன்னை போல தொழிலை
கவனிக்க முடியவில்லை. வயதின் காரணமாக உடம்பிலும் தெம்பில்லை. ‘எதுக்கு இன்னும்
இழுத்துப் போட்டுக்கணும்....புள்ளைங்க எல்லாம் செட்டில் ஆயிடுச்சுங்களே..’ என்ற
தளர்ச்சியில் மனதிலும் முன்பிருந்த உற்சாகமோ, வேகமோ இல்லை. அதைவிட சுற்றிமுற்றி
இரண்டு, மூன்று சூப்பர் மார்க்கெட்டுகள் வேறு வந்துவிட, அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தொழிலை நடத்த ஆயாசமாக இருந்தது.
சொந்தபந்தம் எல்லாருமே ‘வயசான காலத்துல புள்ளைங்களோட ஒண்ணா போய்
இருக்கிறது தான் நல்லது.... அதுங்களே கூப்பிடும்போது சந்தோசமா போயிட்டு வாங்க...’
என்று அறிவுரை சொல்ல, வெகுகாலமாக கடையிலிருந்த கணக்குப்பிள்ளையின் மகனிடமே தொழிலை சகாய
விலைக்கு விற்றார். வீட்டை சும்மா போட்டு வைக்க மனமில்லாமல் ஒரு போர்ஷனை மட்டும்
வாடகைக்கு விட்டுவிட்டு மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு இங்கு வந்துவிட்டார்கள்.
வந்த ஆறேழு மாதங்கள் ஒன்றும் தெரியவில்லை. எப்போதும் போலத்தான்
இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல...?
கனத்த இருளும், நடுக்கும் குளிரும், பிள்ளைகள் எல்லாம் வெளியே போய்விட்ட பின்னால்
நிறையும் அமைதியும் என அந்த சூழல் அவர்கள் அறியாமலேயே ஒரு இறுக்கத்தை தந்தது. மூன்று
மாதம், ஆறு மாதம் என்று அங்கேயே இருந்து பழகியவர்கள் தான். வழக்கமான அந்த கால அளவையும்
தாண்டி அங்கேயே இருக்க வேண்டும் என்றிருக்கையில் என்னவோ ஒரு அசவுகரியம்........ சில
சமயம் இருவருக்கும் இடையில் கூட பேசிக்கொள்ளக் கூடத் தோணாமல் பொழுதுகள் அமைதியாக அடர்ந்த
மௌனத்துடன் கழியும்.
இதற்கும் மகன், மருமகள், பேரன் பேத்தி என்று பிள்ளைகள் காட்டும் அன்பிலோ, பாசத்திலோ ஒருகுறையும் இல்லை. அவர்கள் தங்களை தாங்க வேண்டுமென்று
இவர்களும் எதிர்பார்க்கவில்லை. ஒரே குடும்பத்திலிருப்பவர்கள் யார் யாரை கவனிக்க
வேண்டும்...? அந்த புரிதலிருந்தது இருவருக்கும்.
என்ன...? குழந்தைகள் எல்லாம் வளர்ந்திருக்க, முதலில் அவசியப்பட்ட இவர்களின் உதவி இப்போது தேவைப்படுவதில்லை. ‘நானே
பண்ணிக்கிறேன் தாத்தா...’ ‘நீங்க விடுங்க பாட்டி.. நான் செஞ்சுக்குறேன்...’ என்று
அவர்களே தங்களின் தேவைகளை செய்து கொள்ளும்போது இவர்களுக்கு
உள்ள வேலையும் இருப்பதில்லை. ஒருவேளை எதையாவது செய்ய வேண்டும் என்று முனைந்தாலும்
உடம்பு ஒத்துழைக்க மறுத்தது. நின்றால் மூச்சு வாங்கியது. உட்கார்ந்தால் அசந்து
போனது.
என்னதான் வெப்பப்பதனம் செய்திருந்தாலும் அந்த பருவநிலை அவ்விரு முதிய
மனிதர்களும் ஏதுவாகயில்லை. உடம்பிலும் பலம் குறைந்து போய்விட்டது. மனதிலும்
அதற்கேற்ற தெம்பில்லை. தங்கள் இடத்துக்கு போய் சேர்ந்தாலே போதுமென்று
இப்போதெல்லாம் மனசு வெகுவாக அரிக்கிறது. அதற்குமேல் இருவருமே பகிர்ந்து கொள்ளாத
விஷயமொன்றும் உண்டு.
கால ஓட்டத்தில் யார் முந்திக்கொண்டாலும் தங்கி போகும் மற்றவர்
இங்கிருங்கும் தனிமையில் எப்படி காலம் தள்ளுவது.......? அந்த நினைவே ஒருவித
திகிலையும் பீதியையும் கொடுக்க, கணவனுக்காக மனைவியும்
மனைவிக்காக கணவரும் கவலைப்பட்டார்கள். வெளியே சொல்லிக் கொள்ளவில்லையென்றாலும் கூட இருவர் மனதிலுமே அந்த மறுகலிருந்தது.
யோசித்துக் கொண்டே நின்ற சுகந்தி தன்னருகில் இருந்த கணவரை ஆதுரமாக
பார்த்தார். “சாயங்காலம் ரகு வந்ததும் கோவிலுக்கு போயிட்டு அப்படியே கடைக்கும்
போய்ட்டு வந்துடலாம். என்னென்ன வேணும்னு லிஸ்ட் போட்டு வைங்கன்னு சுபா சொல்லிட்டு போச்சுல்ல...
உங்க அல்வா, மிக்சர், முறுக்குன்னு ஞாபகமா எழுதி வச்சிடுறேன்..” கிண்டலும் சிரிப்புமாக
அவர் கணவரை இடித்து பேச்சை மாற்றினாலும், சண்முகத்தின்
முகத்தில் மலர்ச்சி தலைகாட்டவில்லை.
“நான் என்ன சாப்பிடுறதுக்கா ஏங்குறேன்..? நீ கூட புரிஞ்சுக்கலையா..?”
என்ற ரீதியில் அவர் மனைவியை நோக்கினார்.
அவர் பார்வையின் அர்த்தம் உணர்ந்த சுகந்தி தூரத்தில்
வெளிச்சப்புள்ளிகளாக விரையும் வாகனங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். சில
நிமிடங்கள் கனத்த அமைதியுடன் கழிய, ஒரு முடிவுடன் கணவரிடம் திரும்பியவர் தீர்மானமாக
கேட்டார்.
“நாம நம்ம வீட்டுக்கே போயிடலாமா...?”
காதில் விழுந்ததை நம்பமுடியாமல் ஒரு கணம் திகைத்த சண்முகத்தின் முகம் மறுநொடி
ஸ்விட்ச் போட்டது போல ஒளிர்ந்தது. “நிஜமாவா? நிஜமாவா சொல்லுற..?” ஆசையும்
எதிர்பார்ப்புமாக பெரிதாக புன்னகைத்தவர், “உன்னால புள்ளைங்கள
விட்டுட்டு இருக்கமுடியுமா..?” கவலையாக இழுத்தார்.
“விட்டுட்டு என்ன விட்டுட்டு..?... அவங்க இங்க இருக்க போறாங்க.... நாம
அங்க இருக்க போறோம்.. எங்கயிருந்தாலும் ஒண்ணாதானே இருக்க போறோம்...” சுகந்தி
சிரிப்போடு சொல்ல, சண்முகம் மனைவியின் தோளை ஆறுதலாக அணைத்துக் கொள்ள, ஒரு முடிவு அங்கே
உறுதிப்பட்டது.
அந்த வார இறுதியில் அவர்கள் இந்த பேச்சை ஆரம்பித்தபோது, எதிர்பார்த்ததை போலவே பிள்ளைகள் ‘வேண்டவே வேண்டாம்’ என்றார்கள். ’உங்களுக்கு
இங்கென்ன குறை..?’ விடாமல் வாதிட்டார்கள். மறுத்தார்கள். முடியாதென பிடிவாதம் செய்தார்கள்.
“அந்த காலத்துல கடமைகள் முடிஞ்சவுடனே சன்னியாசம் கிளம்பி
போயிடுவாங்களாம்.. எங்களுக்கு அந்தளவுக்கெல்லாம் பந்தபாசத்தை விட்டுட்டு இருக்க முடியாது.
என்னமோ கடைசிக்காலத்துல பொறந்த ஊருல இருந்தா மனசு நிம்மதியா இருக்கும்னு தோணுது.. நினைச்சா
மீனாட்சிய போய் பார்த்துகிட்டு, அழகரை அப்பப்ப விசாரிச்சுகிட்டு... என்ன
இருந்தாலும் அந்த வாழ்க்கை தனி தானேடா... அங்க ஆள் அம்புன்னு வசதி இருக்கு.
சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்கன்னு மனுஷ சகாயமும் கிடைக்கும். நீங்க மூணு பேரும்
மாத்தி மாத்தி வந்துட்டு போனீங்கன்னா தீர்ந்து போச்சு..” வழக்கமில்லாத வழக்கமாக
சண்முகம் ஆழ்ந்த குரலில் பேச, இளையவர்களுக்கு அதற்கு மேலெதுவும் பேச முடியவில்லை. எப்படியோ
சரிகட்டி சமாதானம் செய்து பெரியவர்கள் பயணத்திற்கும் தயாராகி விட்டார்கள்.
பேத்தி பெட்டிகளை அடுக்க உதவி செய்ய, பேரன் எடை போட்டு பார்த்துக்
கொண்டிருந்தான். சுகந்தி உள்ளே பீறிட்டு எழும் உணர்வுகளுடன் அவர்களையே பார்த்துக்
கொண்டிருந்தார். என்னதான் ‘இந்தியா போய் விடுவது’ என முடிவு எடுத்து, பிடிவாதமாக
அதை செயல்படுத்தி விட்டாலும் கூட, பிள்ளைகளை பிரிந்து தனிமையில் முதுமையை கழிக்க
வேண்டும் என்ற உண்மை வயிற்றை பிசைந்தது. ஒரு வார்த்தை சொன்னால் போதும். இவர்கள்
எல்லோரும் சேர்ந்து பயணத்தை நிறுத்தி விடுவார்கள். ஆனால், வாழும் காலம் வரை பிறந்த
மண்ணில் ஜீவனோடு வாழத்தானே இந்த உள்ளம் துடிக்கிறது? உள்ளுர நெடுமூச்சு
கிளம்பியது.
“எங்க மாமனார் மாமியார் பூர்வீக வீட்டை விட்டுட்டு வர முடியாதுன்னு அடம்பிடிச்சு
கிராமத்துல தனியா இருந்தாங்க. எங்கம்மாப்பா வெள்ளலூர்ல இருந்து கோயம்புத்தூர்
டவுனுக்குகூட வர மாட்டோம்னு பிடிவாதம் பண்ணினாங்க... எங்கண்ணன் அண்ணி டெல்லில
இருக்க புடிக்காம, கோயம்புத்தூர்ல தனியா இருக்காங்க.... இப்ப நாங்க இந்தியாவை
விட்டுட்டு இருக்க முடியலைன்னு திரும்ப அங்கயே ஓடுறோம்..... யாரு யாருக்கு எங்க
வேர் பிடிச்சிருக்கோ கடைசி காலத்துல அங்க இருக்கத்தான் தோணும் போல....“ நினைத்துக்
கொண்டவர் மனதில் அன்று கணவர் சொன்னது வார்த்தை மாறாமல் ஓடியது.
“புள்ளைங்க எல்லோரும் வெளிநாட்டுல இருக்க, வயசான காலத்துல
சொந்தமண்ணுக்கு போய் தனியா வாழறதுகூட ஒருவகையில வானப்ரஸ்தம் போற மாதிரி தான்...
நமக்கு மட்டும் இது புதுசு இல்ல... இதான் காலத்தோட கட்டாயம். நம்மை மாதிரி நிறைய
பெத்தவங்களோட நிலைமை இன்னிக்கு இது தான். அதை புரிஞ்சுகிட்டு நாம தைரியமா நடந்துக்கணும்..
பின்னாடி நம்ம புள்ளைங்களை குத்தம் சொல்றதோ, நமக்கு நாமே பரிதாபம்
காண்பிச்சுக்கிறதோ கூடவே கூடாது. இதையெல்லாம் நல்லா புரிஞ்சுகிட்டு உணர்ச்சிவசப்படாம
முடிவு சொல்லு... நாம நம்ம ஊருக்கே போயிடலாமா?” ஒரு தடவைக்கு பல தடவை மனைவியைக்
கேட்டு உறுதிபடுத்திக் கொண்ட பின்தான், சண்முகம் மகனிடம் இந்த பேச்சையே எடுத்தார்.
“அவர் சொன்னது எல்லாம் நூத்துக்கு நூறு உண்மை தான். வயசான காலத்துல
மனசுக்கு நெருக்கமா இருக்கிற இடத்துல போய் ஜீவிச்சு அங்கேயே கடைசி மூச்சை
விடணும்னு எங்களுக்குள்ள உந்தி தள்ளுது. புள்ளைங்கள விட்டுட்டு இருக்கிறது சிரமம்
தான். என்ன செய்யுறது? ‘உலகமே உள்ளங்கைல’ன்னு மாறி போன நிலைமைல, நினைச்சா ஸ்கைப்,
போன், பிளைட்னு என்னென்னவோ வந்துடுச்சு. வசதிப்படுறப்ப அதுங்க வந்து பார்த்துட்டு
போகட்டும். எந்த காலத்துலயும் கூட இருந்து கவனிக்கலைன்னு பசங்களுக்கு எமோஷனல் ஸ்ட்ரெஸ்
மட்டும் கொடுத்துடக் கூடாது. பாவம் அவங்க அவங்களோட கடமையை முடிக்கணுமே. எந்த குற்ற
உணர்வையும் அவங்களுக்கு தந்துடாம, எங்க கடைசி காலம் நோய் நொடியில்லாம நிம்மதியா
கழிஞ்சுடணும், தெய்வமே” எங்கோ ஆரம்பித்த சிந்தனை சுவரில் மாட்டியிருந்த சாமி
படத்தில் கண்களை கொண்டு வந்து நிறுத்தியது.
ஸ்வெட்டர்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த சுபா, “நாங்களும் கூடிய
சீக்கிரம் அங்க வந்துடுவோம், அத்தை....... இதுங்க இரண்டும் க்ரேட்டுவேஷன்
முடிச்சதும், எங்களுக்கு இங்க என்ன வேலை...? உங்களுக்கும் துணையா இருக்கும்” யோசனையுடன்
சொல்ல, சுகந்தி ஒன்றும் பேசாமல் சிரித்துக் கொண்டார்.
அனுபவம் கொண்ட அவருள்ளத்திற்கு நன்றாக தெரியும்..... இன்னும் இருபது
இருபத்தைந்து வருடங்களுக்கு அவர்களின் கடமைகள் ஓயாது என்று..... பிள்ளைகளின்
படிப்பு, வேலை, திருமணம், குழந்தைப்பேறு, வளர்ப்பு என்று எத்தனையெத்தனை விஷயங்களிருக்கின்றன.
“உங்க வேர் எங்க இருக்கோ, அங்க நீங்களாவே வந்து சேர்ந்துடுவீங்க....
ஆனா, எங்களை மாதிரி வானப்ரஸ்தம் கிளம்பறதுக்கும் வயசு இருக்கேம்மா.. வருஷம் போக
போக உனக்கே அது புரியும்” ஆரோக்கியமான புரிதலுடன் மனதில் எண்ணிக் கொண்டவர், “அதுக்கென்னம்மா
..? உங்க கடமை எல்லாத்தையும் முடிச்சிட்டு தாராளமா நம்ம வீட்டுக்கே வந்துடுங்க....”
மருமகளிடம் அகலமாக புன்னகைத்தார்.
1 comment:
Nice one!
Post a Comment