எழுதும்போதே உணர்ந்தேன், இது சற்றே பெரிய சிறுகதை என்று. ஆனாலும் குறைக்க மனம் வரவில்லை. 'அப்படியே ஒரு ஹவுஸ் வைப்பின் வாழ்க்கை, நான் என்னை உணர்ந்தேன் இதில்' என்று கருத்துக்கள் வந்தபோது நீளம் பெரிய விசயமாக தோன்றவில்லை. நீங்களும் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
கடைசி வாயை
வினீத்தின் வாயில் திணித்து மிச்சமிருந்த பாலை புகட்டிய சுமதி, “நீ முன்னாடி
ஓடுடா....வேகமா நட...” இன்னொரு கையால் டிபன்பாக்ஸின் மூடியை அடைத்து மினியன்
பேகுக்குள் வைத்து விட்டு அவசரமாக தண்ணீர் பாட்டிலை நிரப்பினாள். “நீங்களும் வாங்கம்மா....”
அவன் நிதானமாக தன் கையிலிருந்த நிஞ்சா டர்டில்ஸ் பொம்மையின் தலை வேறு கால் வேறாக
பிரித்துக்கொண்டிருக்க, சுமதிக்கு கடுப்பு ஏறியது. “கொஞ்சமாச்சும் அவசரம் புரியுதா
பாரு....” அவன் கையிலிருந்ததை பறித்து கீழே வீசியவள், “நடம்மா செல்லம்...பின்னாடியே
வரேன்” மகனை தாஜா பண்ணி வெளியே அனுப்பினாள்.
“போர்த் வந்தாச்சு.....இன்னும் ஒண்ணரை
இட்லி சாப்பிட ஒருமணி நேரம்... இதையெல்லாம் வச்சுக்கிட்டு...” புலம்பிக்கொண்டே உடைமாற்ற
சென்றவளை, “அம்மா... டைம் ஆச்சு...” வெளியே வினீத்தின் குரல் அழைத்து
திகிலூட்டியது. கூடவே கம்பி கதவை இழுத்து மூடி அவன் விளையாடும் சத்தம். “அட
எருமை... நீ இன்னும் இங்க தான் நிக்கிறியா...?” காலை வேளையின் டென்ஷன்
உச்சகட்டத்தை நெருங்க, எடுத்த சுடிதாரை அப்படியே எறிந்துவிட்டு
வெளியே விரைந்தாள். “இன்னும் கிளம்பாம இங்க நின்னு என்னடா பண்ணுற....? விளையாடுற
நேரத்தை பாரு...இந்தா பிடி...அம்மா வீட்டை பூட்டிட்டு ஓடி வந்துடுறேன்....” உணவுப்பையை
அவனிடம் திணித்தவள் சாவியை எடுத்தபடி மேலும் கீழுமாக தன்னை ஒருமுறை பார்த்துக்கொண்டாள்.
எண்ணெய் கறைகள் அங்கங்கே தெரியும் அழுக்கு நைட்டி, அதன் மேல் துப்பட்டா போட்டுக்கொண்டு
வெளியே சென்றால் படுகேவலமாகத்தான் இருக்கும். ஆனால், வேறு வழியில்லை. பஸ்ஸை விட்டு
விட்டால் அவ்வளவு தான்.
கோடாலி முடிச்சை அவிழ்த்து கிளிப்பில்
அடக்கியபடி வெளிக்கதவை சாத்த போனவளின் மூக்கில் எதுவோ நெருட, “இதென்ன புகையிற
ஸ்மெல்...” பிடி.உஷா வேகத்தில் உள்ளே விரைந்தால் கிச்சன் முழுக்க புகை மூட்டம். வெற்று
தோசைக்கல் இன்னமும் நெருப்பில் காய்ந்துக்கொண்டிருந்தது. “ஐய்யயோ.” பதறிப் போனவளாக
பர்னரை அணைத்தாள். “எவ்வளவு நேரமா எரியுது...? நல்ல காலம்... சிம்ல இருந்துச்சு...”
நின்று நிதானித்து ஆசுவாசம் கொள்ள எல்லாம் சமயம் இல்லை. மகனை துரத்தியபடி பஸ் நிறுத்தத்திற்கு
நடையை எட்டிப் போட்டாள். நடக்க நடக்க, மூளையில் அபாய மின்னல் வெட்டியது. “அடேய்....
உன்னோட சோஷியல் சயன்ஸ் ப்ராஜெக்ட்டை எடுத்துக்கிட்டியா....?”
உச்சபட்ச டெசிபலில் அலறியவள், மைந்தன்
என்ன சொல்கிறான் என்றெல்லாம் கேட்டுக்கொண்டு அங்கேயே நிற்கவில்லை. என்ன பதில் வருமென்று
தெரியுமென்பதால் மீண்டும் வீட்டை நோக்கி பாய்ந்தவள், கதவை திறந்து சுருட்டி தயாராக
வைத்திருந்த சார்ட் பேப்பரை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தாள்.
நல்லவேளை! பள்ளிப்பேருந்து இன்னும்
வரவில்லை. “ஏம்மா...மறந்துட்டீங்க...? எங்க மிஸ் எல்லாரு முன்னாடியும் எழுந்து
நிக்க வச்சிருப்பாங்க....” இது ஏதோ தாயின் குற்றம் என்பது போல முகத்தை
சுருக்கியபடி வினீத் அதை வாங்கி வைத்துக் கொள்ள, சுமதிக்கு கொலைவெறி கிளம்பியது.
மூச்சு வேறு ஒருபக்கம் வாங்க, “மகனே...சாயங்காலம் வாடா.... வச்சுக்கிறேன்....”
கறுவிக்கொண்டு நின்றாள்.
“ஹலோ... மார்னிங்....” தன் அருகே
ஸ்கூட்டியில் காலை ஊன்றியபடி நின்றவளை பார்த்து பரிட்சய புன்னகை பூத்த சுமதி,
“அதிசயம் தான்....!?” தனக்குள்ளே வியந்து போகவும் மறக்கவில்லை. ஸ்கூட்டியின் பின்னால்
அமர்ந்து வந்த ஹர்ஷிணி இறங்கி வினீத்துடன் நின்று கொண்டாள். வினீத்தின் ஸ்கூலில்
தான் அவளும் படிக்கிறாள். இந்த இரண்டு மாதமாகத் தான் இந்த நிறுத்தத்திற்கு இவர்கள்
வருகிறார்கள். மகளை ட்ராப் செய்து விட்டு அலுவலகம் போகும் தாய். பெயரெல்லாம்
தெரியாது. அவளுக்கும் அனேகமாக சுமதி வயது தான் இருக்கும். கூட குறைந்தால் ஓரிரு
வயது பெரியவளாக இருக்க வேண்டும். சில நேரங்களில் எதேச்சையாக சுமதியை நேருக்கு நேர்
பார்த்தால் மட்டும் தவிர்க்க முடியாமல் சிரிப்பாள். பெரும்பாலும் கடிகாரத்தில்
ஒருகண்ணும் பேருந்துக்காக மறுகண்ணுமாக நகம் கடித்தபடி காத்திருப்பவள், பஸ்
தொலைவில் தெரியும்போதே மகளிடம் தலையசைத்துவிட்டு வண்டியை முடுக்கி கிளம்பிவிடுவாள்.
ஒரு முறை சுமதி ஆவலாக பேசப்போனபோது ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு
நகர்ந்து விட்டாள். கொஞ்சம் அலட்சியப்படுத்தியது போலிருக்க சுமதிக்கு ஒரு மாதிரி
ஆகிவிட்டது. அதிலிருந்து ‘எதற்கு வம்பு?’ என்று அந்த பெண் சிரித்தால் மட்டும்
சுமதியும் அகலமாக புன்னகைத்து வைப்பாள்.
“என்ன உங்க பையனுக்கு ப்ராஜெக்ட்
வொர்க் முடிச்சு கொடுத்துட்டீங்களா? நான் நாளைக்குதான் முடிச்சு அனுப்பப்போறேன்.
எங்க? நேரமே கிடைக்க மாட்டேங்குது.கட்டுகட்டா பணம் கட்டி படிக்க அனுப்பினா இவங்க
நம்மளையே வேலை வாங்குறாங்க...அப்புறம் என்னத்துக்கு இவ்வளவு பீஸ் வாங்குறாங்களோ....!?”
உலக பெற்றோர்களின் பிரதிநிதியாக அந்த பெண்மணி புலம்ப, “ஆமாங்க... என்ன
பண்ணுறது...?” சுமதியும் ஆமோதித்தாள். “உங்களுக்கு பிரச்சனை இல்ல... வீட்டுல தான
இருக்கீங்க... நேரம் நிறைய இருக்கும்...ப்ரீயா செஞ்சு கொடுத்தனுப்பலாம்....” எகத்தாளத்துடன்
அடக்கப்பட்ட பெருமூச்சும் அனல் வீச, சுமதி பொருளற்ற புன்னகையுடன் ‘பஸ் வருகிறதா?’
என சாலை முனையைப் பார்த்தாள். அவளுக்கு எப்போதோ பார்த்த தூர்தர்ஷன் நாடகம் நினைவில்
வந்தது.
அந்த நாடகத்தில் வீட்டிலிருக்கும்
மூத்த ஓரகத்தியைப் பார்த்து வேலை பார்க்கும் மருமகள் பொரும, வேலைக்கு செல்லும் இளையவளைக்
கண்டு மூத்தவள் பொறாமைப்படுவாள். தொல்லை பொறுக்க முடியாத கணவன்மார்கள் ‘அவள் வேலையை
நீ ஒரு நாள் செஞ்சு பாரு...’ என்று இருவரையும் மாற்றி அனுப்புவார்கள். அலுவலக
அரசியல் தாங்காமல் மூத்தவளும், வீட்டில் ‘மாங்கு மாங்கென’ வேலை செய்யமுடியாமல்
இளையவளும் ஒரே நாளில் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார்கள். அது மாதிரி தான்
இங்கேயும்.. ‘என் பொழப்பே இங்க சிரிப்பா சிரிக்குது. இந்தம்மா என்னை பார்த்து
பொறாமைப்படுது. எப்பயும் மேலயும் கீழயுமா பார்த்து ஒரு லுக்விடும். இன்னிக்கு என்ன
ஆச்சோ?’ சுமதி உதட்டுக்குள் முறுவலித்துக்கொண்டாள்.
“அப்புறம் ஒரு ஹெல்ப்....நீங்க
இங்க நிக்கும்போது என் பொண்ணையும் ஒரு பார்வை பார்த்துக்கிறீங்களா? பஸ் வர்றவரைக்கும்
வெயிட் பண்ணிட்டு கிளம்பினா எனக்கு ஆபீஸ்க்கு டைம் ஆகிடுது....” இப்போது வேண்டுகோளுடன்
இறைஞ்சல் பார்வையும் சேர்ந்து வர, “ஆஹா...ஒருவழியா பூனைக்குட்டி வெளில
வந்துடுச்சு.... இதுக்குத்தானா இந்த பேச்சும் சிரிப்பும்....!?” சுமதி தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
“அதுக்கென்னங்க... தாராளமா விட்டுட்டு போங்க.. நான் ஏத்தி அனுப்பிக்கிறேன்...” அவளது
பரிவில் பெரிதாக நன்றி சொல்லிவிட்டு அந்தப் பெண் கிளம்ப, பேருந்தும் பின்னாலேயே
வந்து நின்றது.
“ஒருத்தனுக்கு ஒருத்தன் சண்டை
போடுறோம்னு சார்ட் பேப்பரை கிழிச்சுடாம பத்திரமா கொண்டு போ.....ராத்திரில்லாம்
உட்கார்ந்து செஞ்சது....” வினீத் அம்மாவின் அறிவுரையை காதில் வாங்கிய மாதிரியே
தெரியவில்லை. “பை மா....” என்று கத்தியபடி பேருந்தில் ஏறியவன் நொடியில் நட்பு
ஜோதியில் ஐக்கியமாகி விட்டான். “இவ்வளவு நேரம் என்னை ஓட ஓட விரட்டிட்டு, இப்ப
‘டாட்டா’வாவது சொல்லுதா பாரு” ஜன்னல் கண்ணாடியை ஏக்கமும் சிரிப்புமாக பார்த்த
சுமதி நிதானமாக வீட்டை நோக்கி நடந்தாள்.
கதவை திறக்க, வீடு அமைதியாக
ஹோவென்று இருந்தது. “இதுங்க வீட்டுல இருந்தாலும் தொல்லை பண்ணும்ங்க. இல்லேன்னாலும்
‘பொசுக்கு’ன்னு இருக்குது” போர் முடிந்த யுத்தகளம் போல காட்சியளித்த கூடத்தை கண்
கொண்டு பார்க்க முடியாமல் கூந்தலை வாரி எடுத்து உச்சிக்கொண்டையாக முடிந்துகொண்டாள்.
ஈரத்துண்டு டிவி மேல் கிடக்க, பாதி சாப்பிட்ட தட்டு நட்டநடு சோபாவில் உட்கார்ந்திருக்க,
முடிகற்றையுடன் இருந்த சீப்பு டைனிங் டேபிளின் அழகைக் கூட்ட; பார்ப்பதற்கே ஆயாசமாக
இருந்தது. அதிகாலையில் எழுந்தவள் இன்னும் ஒரு டம்ளர் தண்ணீர் கூட குடிக்கவில்லை,
அவ்வளவு ஏன்? ஆற அமர பாத்ரூம் செல்லக் கூட நேரமில்லாமல் பொழுது ஓடியிருந்தது.
ஏழு மணிக்கு ஸ்வேதாவின் வேன்
வந்துவிடும். எந்த ராஜா எந்த பட்டிணம் போனாலும் இவர் ஏழரைக்கு கிளம்பி விடுவார்.
அவர் அலுவலகத்துக்கு செல்லும் பயணமே ஒண்ணரை மணி நேரத்தை விழுங்கி விடும். அதனால் ப்ரேக்பாஸ்ட்
முதற்கொண்டு கையில் தான் கொடுத்தனுப்ப வேண்டும். பிறகு எட்டேகாலுக்கு வினீத்தின் பஸ்;
மூன்று பேருக்கும் காலையில் சாப்பிட, குடிக்க கொடுத்து, பிள்ளைகளை குளிக்க வைத்து,
ஷூ முதற்கொண்டு மாட்டிவிட்டு, லஞ்ச் கட்டி, டிபனை ஊட்டி.... ஹப்பா.... ஒவ்வொரு
நாள் காலை வேளையிலும் தான் எடுக்கும் அஷ்டாவதனத்தை நினைத்துப்பார்க்கவே மலைப்பாக
இருக்க, நிதானமாக மூச்சு விட்டுக்கொண்டாள், சுமதி.
சூடாக காபி கலந்தவள்,லேப்டாப்பை
திறந்தாள்.கூடவே மொபைலும் பக்கவாத்தியமாக. ‘எனக்கே எனக்கான பொழுது...’ ஆசுவாசத்துடன்
அமர்ந்தவளின் விரல்கள் அனிச்சையாக ஒருபக்கம் பேஸ்புக்கையும், இன்னொரு பக்கம்
வாட்ஸ்அப்பையும் இயக்க, கொஞ்ச நேரம் அந்த மாய உலகில் தன்னையுமறியாமல் மூழ்கிப்
போனாள். குட்டி துணுக்குகள், ஜோக்ஸ், கலாய்ப்புகள், நடுநடுவே சின்னகதைகள், இலக்கியப்பதிவுகள்,
தத்துவ விசாரங்கள் என கலவையாக மேய்ந்தவளின் சுவை நரம்புகள் காபியை மிடறு மிடறாக
விழுங்கி ரசித்து ருசித்துக்கொண்டிருந்தன.
லைக், கமெண்ட்டுகள் என நட்பு
வட்டத்தில் கொஞ்ச நேரம் சுற்றி வந்தவள், ஒரு முகப்புத்தக போராளியின் பக்கத்தை
முன்னும் பின்னும் சுவாரஸ்யமாக நகர்த்திக் கொண்டிருந்தாள். “இவங்க யாரை
திட்டுறாங்க...ஒண்ணும் புரியலையே” குவிந்திருந்த பின்னூட்டங்களும் பகிர்வுகளும்
சண்டை சூடு பிடித்து வெகு நேரமாகி விட்டதை சொல்லாமல் சொல்லின. “ஹ்க்கும்....ஒண்ணும்
தெரியல....பேரை சொல்லி திட்டினாலே எனக்கெல்லாம் புரியாது.... இதுல ஹின்ட் கொடுத்தா
எங்கிருந்து கண்டுபிடிக்கிறது....?” அதற்கு மேல் மூளை வேலை செய்யாமல் போக, “யாரோ யார்
கூடயோ சண்டை போடுறாங்க. நாளைக்கே சேர்ந்துப்பாங்க... நீ ஏன் மூக்கை
நுழைச்சுக்கிட்டு உள்ள போற?” அறிவு அதட்டினாலும் அவளால் அந்த சுழலிலிருந்து
அவ்வளவு சீக்கிரம் மீளமுடியவில்லை. அலுப்பாய் கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தவளின்
கண்கள் கடிகாரத்தை நோக்க, அது பத்தே முக்காலை காட்டிக்கொண்டிருந்தது.
தூக்கி வாரிப்போட்டது. நேரம் போனதே
சுத்தமாக தெரியவில்லை. “வீட்டுல இருக்கிற பொம்பளை இரண்டு மணி நேரமா இப்படி
காலாட்டிக்கிட்டு பொழுதை கழிச்சா வீடு உருப்புட்ட மாதிரி தான்....” என்றோ மறைந்து
போன அப்பாயி அரூபமாக அருகில் அமர்ந்துகொண்டு அதட்டுவது போலிருந்தது.
“வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டு
தான் இனிமே இதை தொடணும்...உட்கார்ந்தா நேரம் போறதே தெரியல....” ஒவ்வொரு நாளும்
நினைத்துக்கொள்வதைப் போலவே இன்றும் உறுதி தோன்றியது. பிரசவ வைராக்கியம் போல எல்லாம்
நாளை காலை வரைதான். ‘பழைய குருடி கதவை திறடி’ என்கிற கதையாய் எப்படியும் எலெக்ட்ரானிக்
கேட்ஜெட்சை நோண்டவே தோணும். ஒருவகையில் அவைதான் ‘உலகின் ஜன்னல்கள்’ அவளுக்கு. அந்த
சலுகையில் நேரம் நீண்டுவிடுகிறது.
மடிக்கணினியை மூடி விட்டு எழுந்து,
கலைந்திருந்த கூடத்தை ஒழுங்காக்கினாள். மியூசிக் சேனலை ஒலிக்கவிட்டு விளக்கு
மாற்றை எடுத்து வீட்டை பெருக்கி, இரண்டு பாத்ரூம்களிலும் பெட்ரூமிலும் ஆங்காங்கே
சுருண்டு கிடந்த துணிகளை வாஷிங்பின்னில் போட்டாள். நிறையத்தான் சேர்ந்திருந்தது.
வானம் வேறு மேகமூட்டமாக இருக்க, “நாளைக்கு இரண்டு லோடா போட்டுக்கலாம்...” அந்த
வேலையை ஒத்தி வைத்துவிட்டு பொறுமையாக குளித்துவிட்டு வந்தாள். சாமி விளக்கை ஏற்றிவிட்டு
இரண்டுநிமிடம் கண்மூடி அமர, ஞாபகம் வந்தது “நாளைக்கு வெள்ளிக்கிழமையாச்சே....”.
மனசு கடவுளிடமிருந்து தாவி வேறெங்கெங்கோ சென்றது.
உச்சியில் குங்குமமிட்டு எழுந்து, ஊரிலிருந்த
அம்மாவிடம் பேசியபடியே சின்க்கில் அம்பாரமாக குவிந்திருந்த பாத்திரங்களை கழுவியெடுத்தாள்.
பூஜை பாத்திரங்களையும் புளி போட்டுத் தேய்த்து கவிழ்த்துவிட்டு, “சரிம்மா. நீ சாப்பிடு...நான்
நாளைக்கு பேசுறேன்” போனை வைக்க, கழுத்தின் அடியில் மொபைலை சொருகிக்கொண்டு ஒரு
பக்கமாக சாய்ந்தபடியே பேசியது பிடரியை வலித்துத் தொலைத்தது. இரு விரல்களால் தேய்த்து
விட்டுக் கொண்டாள்.
“வேலைக்கு ஆள் வச்சுக்கோ..” கணவன் வற்புறுத்தினாலும்
சுமதி காதில் வாங்குவதில்லை. “அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.நானே பார்த்துக்கிறேன்”
பிடிவாதம் என்பதைக் காட்டிலும் “வீட்டுல தானே இருக்கேன் எதுக்கு வீணா அதுவேற ஒரு
செலவு..?” என்று உள்ளுர அவளுக்கே ஒரு எண்ணம்.
அடுப்பை துடைத்து சின்ன சின்ன
சில்லறை வேலைகளை செய்ய, அதற்குள் மணி பன்னிரெண்டாகி விட்டது. லேசாக
பசிப்பது போலிருந்தது. மாவை எடுத்து தோசை ஊற்ற அலுப்பாக இருக்க, இன்னொரு டோஸ் காபி
தயாரித்தாள். பாலை ‘அவனி’ல் வைத்து விட்டு சக்கரை டப்பாவை எடுக்க, அதன் ஸ்பூன்
அடியில் புதையல் எடுத்துக்கொண்டிருந்தது. “கவனிக்கவே இல்ல....சாயங்காலம் டீக்கு
கூட வராது போல....மத்த க்ராசரீஸ் கூட வாங்கணுமே...” தீர்ந்து போன மற்ற பொருள்களின்
நியாபகம் வர, டப்பாக்களை ஆராய்ந்து லிஸ்ட் எடுத்தாள்.
அனுமார் வால் போல அந்த பட்டியல்
நீண்டுக்கொண்டே போனது. ஒருவழியாக எழுதி முடிக்க, அதற்குள் போட்டு வைத்திருந்த காபி
ஆறி அவலாகிப் போயிருந்தது. மீண்டும் அரை சூடாக சூடுபண்ணி ஒரே வாயாக ஊற்றிக்கொண்டு,
உடையை மாற்றி பர்ஸை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினாள். பொடிநடையாக நடந்தால் பத்து
நிமிட நடையிலிருந்தது அந்த சூப்பர் ஸ்டோர். உள்ளே நுழைய, முகத்தில் அறைந்த ஏஸியின்
குளிர் இதமாக இருந்தது. ட்ராலியை தள்ளியபடி வேண்டிய பொருட்களை அவள் எடுக்க, வாங்கவேண்டும்
என்ற நினைத்த அயிட்டங்களை விட மற்ற பொருட்கள் தான் அதிகம் கூடையை நிரப்பின.
‘எல்லாமே தேவைப்படுறது தான். வாங்கலேன்னா இன்னொரு தடவை அலையணும்’ தனக்குள்
சப்பைக்கட்டு கட்டியபடி பில்லுக்கு பணம் கொடுத்தவள், ‘ஆறு மணிக்குள்ள கொண்டு வந்து
போட்டுடுவீங்கல்ல...” ஒருமுறைக்கு இருமுறை டோர்டெலிவரியை உறுதிப்படுத்திக்கொண்டு
அங்கிருந்து கிளம்பினாள், மறக்காமல் சக்கரைப் பொட்டலத்தை மட்டும் கையில் எடுத்தபடி.
நடக்க நடக்க மாமியார், அண்ணி என்று
வரிசையாக அழைத்து நலம் விசாரித்தல்; வழியில் காய்கறிக்கடை, பழக்கடை, முட்டைக்கடை
என்று வரிசையாக பையை நிரப்பிக்கொண்டு வீட்டை அடைய, உடம்பிலிருந்த தெம்பு அனைத்தையும்
வெளியே கொளுத்திய வெயில் உறிஞ்சி எடுத்தது போலிருந்தது. தாகம் நாவை வறட்ட, தண்ணீர்
பாட்டிலை முழுதாக தொண்டைக்குள் சரித்துக்கொண்டாள். வியர்வையை துடைத்தபடி முதல் வேலையாக லேப்டாப்பை ஆன் செய்து
மின்வாரியத்தின் தளத்தை திறந்தாள்.
“இந்தாங்க உங்க ஈபி
கார்டு....என்ட்ரி போட்டு பத்து நாளாச்சு...கிட்டு யாருகிட்டயும் கொடுக்கல....மறந்து
தொலைச்சுட்டான் போல..” ட்யூட்டி மாறியிருந்த வாட்ச்மேன் வழியில் பார்த்துக்கொடுத்திருக்க,
“உடனே கட்டிடலாம்...மறந்து போச்சுனா அவ்வளவுதான்” தொகையை சரி பார்த்து ஆன்லைன்
மூலம் செலுத்தினாள். அப்படியே டெலிபோன் பில்லை கட்டிவிட்டு வேறு எதற்காகவாவது பணம்
கட்ட வேண்டிய தவணையா என்று ஒருமுறை யோசித்துக் கொண்டாள். இல்லை. வேறு எதுவும்
இல்லை. அடுத்த வாரம் ஸ்கூல் சலான் தான் கட்ட வேண்டும். ‘நாளைக்கு துணியை வாஷர்ல
போட்டுட்டு பேங்க் வேலையை முடிச்சுக்கணும்’ திட்டங்கள் உள்ளே ஓடின.
அலைந்த அலைச்சலில் பயங்கரமாக
பசித்துத்தொலைத்தது. இரண்டுமணி ஆகி விட்டதே. பசிக்கத்தானே செய்யும். மூன்றரை
மணிக்கு ஸ்வேதா வந்து விடுவாள். பாவம், காலையில் வெந்ததும் வேகாததுமாக விழுங்கிவிட்டு
ஓடிய குழந்தை. மதியம் ஒழுங்காக சாப்பிட்டாளோ என்னவோ? “இப்ப பண்ணினா தான் சவுண்ட்
அடங்க சரியா இருக்கும்....” குக்கரை ஏற்றியவள், வேகமாக வெங்காயம், புதினா கொத்தமல்லியை
அரிந்து நெய்யில் தாளித்தாள். நேற்றே உரித்து தயாராக வைத்திருந்த பச்சைபட்டாணியை சேர்த்துவிட்டு,
பூண்டு உரித்து இஞ்சியை தேட குட்டியூண்டு துண்டுமட்டும் பச்சைமிளகாய்க்கு அடியிலிருந்து
எட்டிப் பார்த்தது. “சை.... இவ்வளவுதூரம் போனேனே..... ஞாபகம் வந்து தொலைச்சுதா
பாரு.... இதுக்குன்னு யாரு இன்னொரு தரம் போறது“ இருப்பதை வைத்து மசாலா அரைத்தவள்,
ஏற்கனவே ஊற வைத்திருந்த அரிசியை போட்டு அளவாக தண்ணீர்விட்டு உப்புகாரம்
சரிபார்த்து மூடியை மூடினாள்.
“இதுக்கு மேல என்னால முடியாது....
எதையாவது கொண்டா... கொண்டா...” என்று வயிறு ஒருபக்கம் பொறுமையில்லாமல் பறக்க, தட்டை
கழுவி சாதத்தையும் கூடவே பொரியலையும் எடுத்துப் போட்டுக்கொண்டாள். அதிகாலை
செய்தது. சோறு ஆறி கட்டி தட்டிப் போயிருந்தது. குழம்பை மட்டும் நன்றாக சூடாக்கி சாதத்தின்
மேல் கவிழ்த்து பத்து நாள் பட்டினி கிடந்த மாதிரி ஹாலில் வந்தமர்ந்து வேகு
வேகென்று சாப்பிட்டாள். நான்கு வாய் உள்ளே போன பின்னால்தான் உயிரே வந்த மாதிரி
இருந்தது. அதன் பிறகு கொஞ்சம் நிதானமாக உண்டு விட்டு இவள் எழும்பவும் குக்கர்
விசில் அடிக்கவும் சரியாக இருந்தது. அடுப்பை அணைத்துவிட்டு கொட்டாவி விட்டபடியே படுக்கையறைக்குள்
சென்று சாய்ந்தாள்.
விடியலில் எழுந்த அலுப்பும்,வெளியே
போய் விட்டு வந்த சோர்வும்,வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வும் ஆளை அசத்தியது. ‘உண்ட
மயக்கம் தொண்டனுக்கும் உண்டல்லவா..!?’ தூக்கம் சொருகிக்கொண்டு வந்தது. அப்படியே
கண்களை மூட, ஏதோ ஒரு மாய உலகத்துக்குள் காசு பணம் செலவில்லாமல் ப்ரீ-என்ட்ரி..... எந்த
வானிலோ மேகமாகி அவள் சஞ்சரித்துக் கொண்டிருக்க, எவ்வளவு நேரம் போனதென்று தெரியவில்லை.
திடுக்கென்று தூக்கிப் போடுவது போலிருக்க, கண் திறந்து பார்த்து விட்டு மீண்டும்
விட்ட தூக்கத்தை தொடர முயன்றாள். “கிர்ர்.... கிர்ர்...” எங்கோ ஒலித்த சப்தம்
கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வந்து காதுக்குள் ஒலிக்க, அலறி அடித்துக்கொண்டு
எழுந்தாள்.
“யாரு... இந்த நேரத்துல....?” அலறிய
மொபைலில் நேரத்தைக் கவனிக்க, அவள் தலை சாய்த்து முழுதாக பத்துநிமிடம் கூட
ஆகவில்லை. அக்கா தான் அழைத்திருந்தாள். விருது நகரில் ஸ்கூல் டீச்சராக
இருக்கிறாள். பள்ளி விடும் நேரத்தில் சரியாக மூன்று மணி சுமாருக்கு தான்
அழைப்பாள். அடுத்தவர்கள் ஓய்வு எடுப்பார்களோ என்றெல்லாம் கொஞ்சமும் யோசனை
இருக்காது. எடுத்த எடுப்பிலேயே “இவ்வளவு நேரம் என்னடி பண்ற...?” என்றாள். பள்ளியில்
காட்டுகிற அதே அதிகாரம் தான் தங்கையிடமும். சின்னதிலிருந்தே பெரியக்கா என்றால் ஒரு
பயம். ‘அவள் ஒரு தொடர்கதை’ சுஜாதா மாதிரி விறைப்பாக சுற்றி வரும் கேரக்டர். “சொல்லுக்கா...
சும்மா தான் இருக்கேன்... போனை வேற ரூம்ல வச்சிட்டேன்.” தொண்டையை செருமிக்கொண்ட
சுமதி, இயல்பான குரலில் பதிலளிக்க முயன்றாள். ‘தூங்கினேன்’ என்று சொன்னால் அவ்வளவு
தான். “மதிய நேரம் என்ன தூக்கம் வேண்டி கிடக்கு..? இப்படியே சாப்ட்டு சாப்ட்டு
தூங்கு.... உடம்பு தான் ஊதிட்டே போகும்” என்று ஒரேயடியாக அறிவுரை மழை பொழிந்து
விடுவாள்.
“டல்லா வருது குரலு... வீட்டு வேலை
செய்யறதுக்கே டயர்ட் ஆகி போயிடுற.... இந்த வயசுலயே இப்படி இருந்தீன்னா என் வயசுல
எப்படி இருப்பியோ?” அலுத்துக்கொண்ட அக்கா, “புள்ளைங்க எப்படி இருக்குங்க... அவரு
நல்லா இருக்காரா ? ஆமா.... அப்புறம் வள்ளி அத்தைக்கு பர்த்டே விஷ்
கொடுத்தியா....?” மிரட்டலாகக் கேட்க, “அட ஆமாமில்ல... மறந்தே போயிட்டேன் பாரு...இப்ப
பண்ணிடுறேன்...” சுமதி பம்மி பம்மி பதில் சொன்னாள். “மறக்க மாட்ட பின்னே....!? ஏன்டி...வீட்டுல
சும்மா தானே இருக்க... இதை கூட நியாபகமா செய்ய மாட்டியா...?” மட்டம் தட்டிக்கொண்டே
அந்த கதை, இந்த கதை என்று கொஞ்ச நேரம் பேசி, நிறைய அட்வைஸ் பண்ணி பிறகு போனை வைத்தாள்.
“நல்ல வேளை.... எனக்கு இவ மாதிரி
ஒரு மாமியாரு வாய்க்கல....” எரிச்சலுடன் போனை தூக்கி படுக்கையில் விசிறிய சுமதி
தலையை அழுத்தி விட்டுக்கொண்டாள். பத்து நிமிடம் பேசியதிலேயே தலைவலி வர
வைத்துவிடும் புண்ணியவதி. அக்கா என்பதால் கூடப்பிறந்த பாசத்தில் கொஞ்சம் டீசன்ட்டாக
திட்டிக்கொண்ட சுமதி தலையணையில் மீண்டும் புதைந்து கொண்டாள்.
இரண்டு நிமிடத்தில் மீண்டும் “கிர்ர்....
கிர்ர்...”. இந்த முறை வீட்டின் அழைப்பு மணி. ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க, வெளியே
பால் போடுபவர். அது எப்படி தான் தெரியுமோ? சரியாக இவள் ஓய்வெடுக்கலாமென்று கண்மூடும்போது
தான் பேப்பர்காரர், கேஸ்காரர், கேபிள் பையன் என்று சகலரும் வருவார்கள். அப்படி ஒரு
அலாதியான ராசி! “இரண்டு நிமிஷம் இருங்க...வந்துடுறேன்...“ குரல் கொடுத்தபடி
எழுந்தவள், முகத்தை தண்ணீரடித்துக் கழுவிக்கொண்டு கதவை திறந்தாள். பால் கணக்கை
அவர் நீட்ட, “போன மாசம் நாங்க நாலு நாளு ஊர்ல இல்லையே.... அதுக்கு கழிச்ச மாதிரி
தெரியலையே....?” அவளது சந்தேகத்திற்கு அவர் ஒரே ஒருநாள் தான் பால் போடவில்லை என்று
சாதித்தார். காலண்டரை கொண்டு வந்து காட்டி சாட்சி,அத்தாட்சி என்று சகலமும் சொல்லி அவள்
விளக்க, ‘ஹிஹி.. ஆமாம்... மறந்துட்டேன்...’ அவர் அசடுவழிந்தார். “ஷப்பாடா.....தொண்டை
தண்ணி வத்திபோச்சு“ நெடுமூச்சுடன் இவள் பணத்தை கொடுத்து அவரை அனுப்பினாள்.
அதற்கு மேல் எங்கே படுப்பது? பிள்ளைகள்
வரும் நேரம் என்பதால் வெளிக்கதவை திறந்து வைத்து, காலை வாங்கிவந்த கீரைக்கட்டை
பிரித்தபடி வராந்தாவிலிருந்த கூடை ஊஞ்சலில் அமர்ந்தாள். தூக்கம் முற்றிலும்
கலையாமல் களைப்பாக இருக்க, அரைகுறை உறக்கத்தில் கண்கள் நெருப்பாய் எரிந்தன. எதிர்
வீட்டு ஆன்ட்டியும் வெளியே வந்து அமர, “என்ன ஆன்ட்டி? வேலை ஆச்சா?” புன்னகைத்தபடி கேட்டாள்.
“எனக்கென்ன? தூக்கமும் சாப்பாடும் தான் வேலையே....ரத்னா வர்ற நேரம்.அதுதான் கதவை
திறந்து வச்சிட்டு உட்கார்ந்திருக்கேன்.” அவர் சோம்பலாக தன் கூந்தலைக் கோதிக்
கொண்டார். ரத்னா அவர்கள் வீட்டுக்கு இருவேளையும் வந்து சமைத்துவிட்டு போகும் பெண்.
இவருடைய மகள் வீடு இது.
“என்ன முளைக்கீரையா? எங்க
அமுதாக்கு இதையெல்லாம் வாங்கி கொண்டு வந்து போட எங்க நேரம் இருக்கு? நாளைக்கு அவ
பூனா போறா. ஏதோ முக்கியமான மீட்டிங்காம். பாவம்,அவ வேலையே அவளுக்கு சரியா இருக்கு.இதுல
கீரையாவது ஒண்ணாவது..?ராகவ் கூட சொல்லிட்டாரு, நீ கிச்சனுக்குள்ள போற வேலையே
வச்சுக்காதேன்னு... முழுநேரமும் வீட்டோட இருக்கிற மாதிரி ரத்னாவை கேக்கணும்னு பேசிக்கிட்டாங்க...வர்ற
டிசம்பர்ல அவளுக்கு அடுத்த பிரமோஷன் வேற வந்துடுமாம்” தன் பெண்ணைப் பற்றி உயர்த்தி
பேசுகிறாரா, இல்லை அலுத்துக் கொள்கிறாரா என்றே காட்டிக் கொள்ளாத ரீதியில் அவர் பெருமை
பேச, சுமதி மென்முறுவலுடன் தலையாட்டிக்கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரத்தில் ஸ்வேதா
வந்துவிட்டாள். வாடி வதங்கி வந்தவளைக் கண்டு, “வாடா” என்றபடி சுமதி எழ, “சரிம்மா..‘வீடே
கோவில்,அடுப்பே ஆலயம்’னு இருக்கிறவ நீ. உன் வேலையை பாரு” எடக்காக சொல்லிவிட்டு ஆன்ட்டி
எழுந்தார். ‘இதெல்லாம் உனக்கு புரியக்கூட செய்யாது’ என்கிற பாவனையில் அவர் சொல்லி
செல்ல,கசந்த முறுவலுடன் அவருடைய எள்ளல் பேச்சை புறம்தள்ளியவள் மகளை கவனிக்க,பின்னாலேயே
வினீத்தும் வந்துவிட்டான். இருவருக்கும் உடை மாற்றி, சாப்பாடு பரிமாறி,
கொடுத்தனுப்பிய லஞ்ச் பாக்ஸ்களை திறந்து பார்த்தாள். மகள் ஒழுங்காக சாப்பிட்டு
இருக்க, மகனின் டப்பா அப்படியே இருந்தது. காலை அவதி அவதியாக செய்து அனுப்பியிருந்த
காய்கறி ரோல்கள் பரிதாபமாக அவளைப் பார்க்க, “அடேய்...ஏன்டா இப்படி பண்ணி தொலைக்கிற?”
பகலெல்லாம் பசியோடு இருந்திருக்கிறானே என்ற ஆதங்கத்தில் பற்கள் கடிபட்டன. “இல்லம்மா
சாப்ட்டேன். இன்னிக்கு ராம் பிரட்பிட்ஸா
கொண்டு வந்தான். எனக்கும் ஷேர் பண்ணினான்” என்ற வினீத், அதற்கு பிறகு சொன்னது தான்
காமெடி, இல்லை இல்லை, சுமதியை பொறுத்தவரை டிராஜிடி.
“அவங்க மம்மியோட போன் நம்பர்
கொடுத்திருக்கான்... நான் சொல்லியிருக்கேன்ல அவங்க டாக்டர்ன்னு... ஊசி போடுறதோட எல்லா
டிஷ்சஸ்ம் சூப்பரா பண்ணுறாங்கம்மா.. அவங்களுக்கு போன் பண்ணி அதோட ரெசிப்பி கேட்டுட்டு
எங்களுக்கும் பண்ணி தாங்க...” ஏதோ நம்பர் எழுதியிருந்த துண்டு பேப்பரை பொறுப்பாக அவன்
நீட்ட, “ம்மா... உங்களை செமையா டேமேஜ் பண்ணிட்டான்....” ஸ்வேதா வேறு சிரித்து
மானத்தை வாங்கினாள். ஓங்கி அவன் மண்டையிலேயே இரண்டு போட வேண்டும் போல சுமதிக்கு ஆத்திரம்
கிளம்பியது. “அடிங்....வேணும்னா அவங்கம்மாவை என்கிட்டே பேசி எப்படி சமைக்கணும்னு
கத்துக்க சொல்லு....” அவன் முதுகில் இரண்டு மொத்து மொத்த, அவன் வீட்டை சுற்றி
சுற்றி ஓடினான். ஸ்வேதாவும் சுமதியும் நகைத்தபடி அவனை துரத்தினார்கள். அதற்கு
பிறகு, நேரம் எப்படி பறந்தது என்றே தெரியவில்லை. மீண்டும் ஒரு சுற்று பாத்திரம்
கழுவி, டீ போட்டு, கிரைண்டரில் அரிசியை ஓடவிட்டு, இரவுக்கான சமையலை முடித்து,
அடுத்த நாள் காலை ஓட்டத்துக்கான தேவைகளை தயாரித்து, இடையே இருவரையும் படிக்க உட்கார
சொல்லி, ஹோம் வொர்க் எழுத வைத்து, நடுநடுவே போன் பேசி... எப்போது மணி ஒன்பதை
எட்டியது?
“ஹாய் லட்டூடூ...ஸ்... நான்
வந்துட்டேன்ன்ன்....“ ஆர்ப்பாட்டமாக கூவிக்கொண்டே சுரேஷ் கதவைத் திறக்க, இரண்டும் செய்துக்கொண்டிருந்த
வேலையை அப்படியே ‘அம்போ’வென விட்டுவிட்டு தந்தையை சூழ்ந்து கொண்டன. “அப்பா ப்ரஷ்
ஆகிட்டு வரட்டும்மா....கீழ இறங்குடா...” சுமதியின் சொல் அங்கே யார் காதில்
விழுந்தது? “நாள் முழுக்க கூட இருக்கிறவளை விட உங்கப்பா தான் சொக்குப்பொடி போட்டு
வச்சிருக்காரு....” பிள்ளைகளை நொடித்தபடி அவள் கொடுத்த டீயை வாங்கிக்கொண்டவன்,
“ஆமா.... சொக்குப்பொடி தான் போட்டு வச்சிருக்கேன்.” அவளிடம் குறும்பாக கண்
சிமிட்டினான். “குளிச்சிட்டு வந்துடுறேன்டா குட்டீஸ்...” காலி டம்ளரை கிச்சனில் வைக்கும்
சாக்கில் மனைவியின் கன்னத்தில் மின்னலென அவன் இதழ் பதித்து விலக, சுமதி சிரிப்பும்
முறைப்புமாக அவன் முதுகைப் பிடித்து தள்ளினாள்.
அவன் தயாராகி வர, ஒன்றாக
அமர்ந்தவர்கள் பேச்சும் சிரிப்புமாக டின்னரை முடித்துக் கொண்டார்கள். பிள்ளைகளை ப்ரஷ்
பண்ண சொல்லி படுக்க வைத்து, சமையலறையை ஒழுங்குசெய்து அவள் உள்ளே வர, சுரேஷ்
ஒருபக்க விளக்கை மட்டும் போட்டுக்கொண்டு லேப்டாப்பில் மூழ்கி இருந்தான். “மணி
பதினொண்ணு ஆகப்போகுது... தூங்கலாம் வாங்க...” அலுத்தபடி படுக்கையில் சரிந்தவள்,
ஸ்வேதாவை உதைத்தபடி விடைத்திருந்த மகனை சுவரோரமாக நகர்த்தி, விலகியிருந்த மகளின்
பனியனை இழுத்து விட்டு போர்வையை கழுத்து வரை போர்த்தி விட்டாள். பெண்ணின் உடல்
வளர்ச்சியும் முகப் பொலிவும் ஒருபக்கம் பார்க்க பெருமிதமாக இருக்க, இன்னொரு பக்கம்
கவலையாகவும் இருந்தது.
“இன்னும் ஒரு வருஷம் தாண்டி
உட்கார்ந்தான்னா பரவால்ல...செவன்த் தானே... அடுத்த வருஷம்னா இன்னும் கொஞ்சம்
புரிஞ்சு நடந்துக்குவா..” தாயாக தன் கவலையை அவள் வாய் விட்டு புலம்ப, “எது எது
எப்பப்ப நடக்குமோ அது தன்னால நடக்கும். நீ சும்மா மண்டையை போட்டு உடைச்சுக்காம இரு”
சுரேஷ் அவள் மூக்கை விளையாட்டாக நிமிண்டினான். அவன் பக்கம் திரும்பி படுத்தவள், “இன்னிக்கு
மத்தியானம் அத்தைகிட்ட பேசினேன்.அடுத்த வாரம் ரதிக்கு வளைகாப்பாம்” வளவளவென்று அன்று
நடந்ததையெல்லாம் சொல்ல ஆரம்பித்தாள். முதலில் ‘உம்’ கொட்டிக்கொண்டிருந்தவன் பிறகு அமைதியாக
இருக்க, சற்றுநேரம் கழித்தே உணர்ந்தாள் அவன் கவனம் தன்னிடம் இல்லையென்று.
“ப்ச்.... லூஸு மாதிரி
பேசிக்கிட்டு இருக்கேன். கவனிக்கிறீங்களா நீங்க?” கணவனின் கையை கிள்ளியபடி அவள் திட்ட,
“ஆ.. வலிக்குதுடி...” கத்தியவன், “நாளைக்கு மொத வேலையா இந்த ரிபோர்ட்டை கொடுக்கணும்.
உனக்கென்னம்மா தாயே.... வீட்டுல ஜாலியா ராணி மாதிரி இருக்குறவ” குறும்பாக கேலியைத்
தொடர, சுமதிக்கு சுருக்கென்று இருந்தது. “ஜாலியாவா...? நீயும் கூட நான் வீட்டுல
சும்மா இருக்கிறதாதான் நினைக்கிறியா..!?” பகல் பொழுது முழுக்க யாராவது ஒருவர் சீண்டி
சீண்டி குத்திக்கொண்டே இருந்த ஊவா முள் இப்போது நறுக்கென்று நடு நெஞ்சிலிறங்க,
கண்கள் குப்பென்று பொங்கியது.
முகம் சுண்டிப் போனவளாக
சுரேஷிடமிருந்து தள்ளி படுத்துக்கொண்டாள். “நானும் வேலைக்கு போயிட்டு இருந்தவ
தானே. ஸ்வேதா உண்டான சமயம் டாக்டர் ‘ரெஸ்ட் எடுங்க’ன்னு சொல்ல, அதுதான் சாக்குன்னு
‘நான் ஒருத்தன் சம்பாதிக்கிறதே நமக்கு போதும். நீ வீட்டுல இருந்து உடம்பை
பார்த்துக்க’ன்னு மஸ்கா போட்டு வேலையை விட வச்சு, இப்ப எப்படி பேசுறாரு பாரு. இவர்
பேச்சை நம்பி வேலையை விட்டுட்டு இன்னிக்கு வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கிறதுதான்
நான் கண்ட பலன். என்கிட்ட ட்ரைனியா வேலை செஞ்சதுங்க எல்லாம் இப்ப மேனேஜர், சீனியர்
மேனேஜர்ன்னு எங்கயோ போயிட்டாங்க” தாழ்வுணர்வும் பொருமலும் ஊற்றென பெருகின.
அவன் அவள் கோபத்தையெல்லாம் உணரவேயில்லை
போலும். விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்தவன், தன் போக்கில் அலுவலக விஷயங்களை
பகிர்ந்து கொண்டிருந்தான். மனதிலிருப்பதை காட்டிக்கொள்ளாமல் தூங்குவது போல சுமதி கண்களை
இறுக மூடிக்கொண்டிருக்க, “போதும்டி. வாய் தவறி விளையாட்டுக்கு கூட ஒரு வார்த்தை
வந்துடகூடாதே. அதையே பிடிச்சிட்டு தொங்காதே” அவள் தோள் வளைவில் கைகளை நுழைத்தவன்
தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான். “ஓ... அப்ப தெரிஞ்சு தான் பேச்சை
மாத்துனியா?” மகளின் மெத்தென்ற உள்ளங்கையை கன்னத்தில் வைத்துக்கொண்டவள் அப்போதும் உம்மென்றிருக்க,
“சாரி...சாரி....போதுமா?” காதோரம் இப்போது செல்ல மன்றாடல்.
“அதெல்லாம் சும்மா உல்லலாய்க்கு...
இப்ப சொல்றேன் கேட்டுக்கோ... உன்னோட கேரியரை நீ விட்டு கொடுத்ததாலதான் நான் நிம்மதியா
என் வேலைல கான்சன்ரேட் பண்ண முடியுது. குழந்தைங்க, வீட்டுப்பொறுப்பு, ரிலேஷன்ஸ்,பிரண்ட்ஸ்ன்னு
அத்தனையையும் நீதான் தூக்கி சுமக்குற” நிஜமான நெகிழ்ச்சியுடன் அவன் சொல்ல, கணவனின்
அன்பான தேற்றலில் இறுக்கமாக இருந்த நெஞ்சம் கொஞ்சம் தளர்ந்தது.
“இன் பேக்ட் நான்தான் ஜாலியா ஆபீஸ்
போயிட்டு வரேன். அது தான் உண்மை. சும்மா கிண்டலுக்கு சொல்றதையெல்லாம் பெருசு
பண்ணாதே. நீ தான் எங்க எல்லோருக்கும் பலம். ஐ லவ் யூ அண்ட் வி ஆல் லவ் யூ” சுரேஷ்
பேசிக் கொண்டே போக, அவனது இதமான அணைப்பில், மென்மையான முத்தங்களில் பொழுதெல்லாம்
மனதில் ஏறியிருந்த பாரம் மெல்ல மெல்ல உருக, அவளிதயம் பாச இழைகளால் இளகியது.
“ஆமா... நான் சராசரி ஹோம்மேக்கர்
தான். இதுல என்ன கவுரவ குறைச்சல்? என் புருஷன், என் புள்ளைங்க, என் குடும்பத்து
தேவைக்காக நான் வீட்டுல இருக்கேன். பார்க்கிறவங்களுக்கு இது சோம்பேறித்தனமா, முட்டாள்தனமா,
சாமர்த்தியம் இல்லாதவளா தெரிஞ்சா தெரிஞ்சுட்டு போகட்டுமே. வெளில இருக்கிறவங்க இதை
ஒரு குத்தமா, என்னை லோ-கிரேட் பண்ணி பார்த்தாதான் என்ன? ஐ’யம் நாட் பாதர்ட் அட்
ஆல்” மூன்றாம் மனிதர்களின் பார்வையும் பகடியும் இப்போது அர்த்தமற்று நீர்த்துப்
போக,
“வேலைக்கு போகணுமா, வீட்டுல
இருக்கணுமான்னு நான், நான் மட்டும்தான் முடிவு பண்ணுவேன். மத்தவங்களை பார்த்து நான்
ஏங்கவும் வேணாம். அடுத்தவங்க பேசுறதை காதுல போட்டுக்கிட்டு கவலைப்படவும் வேணாம்” உள்ளே
ஊறிய சிந்தனைத் தெளிவில் கழுவித் துடைத்த தரை போல உள்ளம் பளிச்சிட்டது.
“என்ன? கோபம் போயிடுச்சா...?”
மனைவியை சுரேஷ் தன்பக்கம் திருப்ப, “எனக்கென்ன கோபம்? அதெல்லாம் ஒண்ணுமில்ல” அவள் அழகாக
புன்னகைத்தாள். அவனும் சிரிப்புடன் அவள் தலையில் முட்ட, “ஐ’யம் கோ...யிங் டூ கி...க்
யூ.. ஐய..யம்...” சாயங்காலம் பார்த்த கார்ட்டூனின் எதிரொலியாக வினீத் தூக்கத்திலேயே
பினாத்திக்கொண்டு எழுந்தமர்ந்தான். “இங்க வாடா... அக்காவை அடிச்சுடாதே” காற்றில்
கைகளை வீசிக்கொண்டிருந்த மகனை தூக்கி தன் அருகில் போட்டுக்கொண்ட சுமதி மகளையும்
மகனையும் இறுக அணைத்துக்கொண்டாள். “என் கூட்டுப்பறவைகள்” கவிதையாய் வார்த்தைகள்
ஓடின, மனதில்.
தோளணைத்து தாலாட்டும் தன் துணைவனின்
காதலும்; தன்னை கட்டிப்பிடித்தபடி தூங்கும் குழந்தைகளின் மென்ஸ்பரிசமும் உள்ளேயிருந்த
அத்துணை வெற்றிடங்களையும் நீக்கமற நிறைத்து விட, கணவனின் கரத்துடன் தன் விரல்களை நெருக்கமாக
கோர்த்துக் கொண்டவளின் இதழ்கள் நிம்மதியிலும் நிறைவிலும் விரிந்திருந்தன. கனமாய்
கழிந்த பகல் பொழுதின் அழுத்தம் எல்லாம் அந்த கணத்தில் கரைந்து காணாமல் போக, நாள்
முழுவதுமான வேலையின் அசதியில் அவளும் சுகமாய் கண்ணயர்ந்தாள்.
6 comments:
சராசரி குடும்பப் பெண்ணாய் முதலில் அவளின் ஆதங்கம் இருந்தாலும் ....கடைசியில் அவளின் நிமிர்வான எண்ணம் அருமை .....நன்றி
கணவன், குடும்பம் மற்றும் பிள்ளைகளின் நலனுக்காக தன்னுடைய கார்ரியரை விட்டுக் கொடுத்த இல்லத்தரசியின் மனோவோட்டம் அருமை ஹேமா. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போலத் தான் இதுவும். ஆனால் இக்கரையும் பச்சை தான் என்ற சுமதியின் தெளிவு எத்தனை பெண்களுக்கு கிட்டுகிறது. அவளின் உயர்வு புரிந்து அரவணைக்கும் சுரேஷுக்கு ஒரு ஓ போடலாம். வழக்கம் போல அருமையான வார்த்தைப் பிரயோகங்கள். அழகான அர்த்தசெறிவுள்ள கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹேமா.
நன்றி, நன்றி மதிக்கா!
வாங்க வாங்க.. உங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி ஹமீதா சிஸ்டர்!
Wow ,very nice one.
Thank you Mini :)
Post a Comment