"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, January 2, 2017

பனி இரவும் தனி நிலவும்

அன்பு தோழமைகளுக்கு,

இந்த புதிய ஆண்டில் இனிய செய்தியாக என் மூன்றாவது நாவல் “பனி இரவும் தனி நிலவும்” புத்தகமாக மலர்ந்துள்ளது. நாவலை வெளியிட்ட பிரியா நிலையத்தினருக்கு நன்றிகள் பல! இந்த முயற்சியில் என்னுடன் துணை வந்த தோழிகள், சகோதரிகள், கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நட்புகள் என் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! Special Thanks to Manjula Senthil KumarLady's Wings Group and LW Friends!


நான் எழுதுகிறேன் என்ற பெயரில் கிறுக்கிக் கொண்டிருப்பது "மிக மிக" நெருங்கிய என் குடும்பத்தினர் தவிர யாரும் அறியாதது. என் அம்மாவை தவிர நானாக யாரிடமும் சொன்னதுமில்லை. எங்கே யாராவது வந்து கலாய்த்து விடுவார்களோ என்ற தயக்கமும் கூச்சமுமே காரணம். எனவே, குறையோ நிறையோ எல்லா விதமான விமர்சனங்களையும் அறிந்து கொள்வது இங்கே மட்டும் தான். சமயங்களில் “இந்த வேலை தேவை தானா?” என்று மனதில் உற்சாகம் குறைந்து போகும்போது நம்பிக்கையும் உத்வேகமும் கொடுத்து எழுத தூண்டியது உங்கள் அனைவரது ஆதரவும் விமர்சனங்களுமே. இங்கே என் நட்பு வட்டம் மிகச் சிறியது. மிக சமீபமாக இங்கே வந்து இணைந்து கொண்டவள் நான். ஆனால், காலக்கணக்கை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் அன்புடன் அரவணைத்துக் கொண்ட நட்புகள் அனைவருக்கும் திருப்பிக் கொடுக்க என் அன்பும் பிரியங்களும் தவிர வேறில்லை.

எழுத்துத் துறையில் பல வருடங்களாக தங்கள் சுவட்டை பதித்திருக்கும் மூத்த சகோதரிகள் பலர் உங்களுடைய நம்பிக்கை வார்த்தைகளை கொடுத்து இருக்கிறீர்கள். மனதில் எந்த முன்முடிவுகளும் இல்லாது முக்கியமாக கொஞ்சமும் துவேஷமின்றி புதிதாக எழுத வருபவர்களை தங்கள் வட்டத்துக்குள் இணைத்துக் கொள்ளும் நட்பும் அன்பும் சமயங்களில் என்னை வெகுவாக நெகிழ்த்தும். ஆனால் அதை சரியாக அவர்களுடன் பகிர்ந்து கொண்டேனா என்று எனக்குத் தெரியவில்லை. எழுதினாலும் எழுதாவிட்டாலும் அவர்களது எழுத்தை படித்தாலும் படிக்காவிட்டாலும் அதையெல்லாம் தாண்டி நெருங்கிய நட்பாக, நெருக்கமான மனிதர்களாக மாறிவிட்ட தோழிகளுக்கும், தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ‘எழுத வேண்டும்’ என்ற உள்மன தாகத்தை தணிய விடாத சகோதரிகளுக்கும் என் உளம் நிறைந்த வந்தனங்கள்! உள்ளம் நிறை அன்பும் நட்பும்!!