"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Sunday, January 22, 2017

ஜல்லிக்கட்டு

கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு மட்டும் அல்ல, தமிழ் உள்ளங்கள் எங்கெல்லாம் வாழ்ந்து வருகிறார்களோ அங்கெல்லாம் தீப்பற்றிக் கொண்டதைப் போல மக்கள் எழுச்சி. சிறு தீப்பொறியாக தோன்றிய நெருப்பு பெரும் உத்வேகமாக மாறி நம் எல்லோர் மனதிலும் தூங்கிக் கொண்டிருந்த தமிழர் எனும் உணர்வை, அடங்கி கிடந்த அடிமை எண்ணங்களை, தூங்கி வழியும் மந்தத்தனத்தை களைந்து வெள்ளமாக பீறிட்டு வெளியே வந்ததை யாராலும் மறுக்க முடியாது. உண்மையில் சொல்கிறேன். இந்த போராட்டக் களம் மக்கள் களமாக மாறி மெரினா தளும்பி நிறைந்ததை டிவியில் பார்க்கையில் உடலெல்லாம் சிலிர்த்து நின்றது. உணர்ச்சி வேகத்தில் கண்கள் கலங்கிப் போயின. அதையெல்லாம் மீறி போராட்டக் களத்தில் நாமும் சென்று நிற்க முடியவில்லையே என்ற சூழ்நிலை காரணமாக உள்ளூர உறுத்தலும் கூட. நல்ல வேளை! வெள்ளியன்று இங்கு நிகழ்ந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றப்பிறகு தான் அந்த குற்றவுணர்வு நீங்கியது. நிற்க! இது சொந்த பெருமை பேசும் பதிவல்ல.

ஆரம்பம் முதலே எந்த தூண்டுதலும் இல்லாமல் தானாகவே இணைந்துக் கொண்ட இளைஞர் சமுதாயத்தை, மக்கள் எழுச்சியை போற்றிப் பெருமைப்படும் இதே தருணத்தில், இளைஞர்கள் எப்படி இணைந்தார்களோ அப்படியே அமைதியாக, நலமாக வீடு சென்று சேர்ந்து விடவேண்டும் என்ற பிரார்த்தனை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. இந்த போராட்டம் வெற்றி பெற்றதா என்று கேட்டால், அது முதல் நாளே வெற்றி பெற்று விட்டது. நம் எழுச்சியை, போராட்ட குணத்தை நாம் தமிழக அரசுக்கு மட்டும் அல்ல, இந்திய அரசையும் தாண்டி உலகையே திரும்பி பார்க்க வைத்துவிட்டோம். இனி சட்ட ரீதியாக என்ன செய்ய இயலுமோ அதை செய்து தீர்வுகளை நிரந்தரமாக்கிக் கொள்ள முனைய வேண்டும். நம்மை ஒரு புள்ளியில் இணைத்த எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஆளுமைகள் இப்போது உரைக்கும் நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள முயல வேண்டும். போராட்டத்தின் நோக்கங்கள் திசைமாறி நாட்டின் ஒருமைப்பாட்டை கலைக்கும் வகையில் சென்று விடக்கூடாது. சிலர் இறுதித் தருணத்தில் விலகியது சரியில்லை என்று சொல்லுவதும் சரியாகப் படவில்லை. இத்தனை நாட்களும் ஊர் ஊராக சென்று குழுவினரை சந்தித்து உத்வேகம் அளித்தவர்கள் இப்போது இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள் என்றால் எதிர்கொண்ட பிரச்சனைகள் அவ்வளவு தீவிரமாக இருந்திருக்க வேண்டும்.

அதற்குரிய காரணங்களை, பின்புலத்தில் ஏற்பட்ட அழுத்தங்களை விளக்கிவிட்டு விலகிக் கொள்கையில் அவ்வுணர்வுகளை தார்மீக ரீதியாக மதிப்பதும், ஏற்றுக்கொள்வதும் கூட அவசியமே.  அதே சமயம், ஒற்றைத் தலைமைக்கு கீழே என்று இல்லாமல் தன்னெழுச்சியாக நிகழ்ந்த இம்மக்கள் போராட்டம் பிசுபிசுத்து நீர்த்துப் போய்விடவும் நாம் விட்டுவிடக் கூடாது. 

எனவே, உணர்ச்சிவசப்படாமல், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்த நோக்கம் சிதறி விடாமல் கார்த்திகேய சிவசேனாபதி ஐயா மாதிரி உள்ளும் புறமும் விஷயம் அறிந்த ஆளுமைகள் சொல்லுவதை உள்வாங்கிக் கொண்டு, கொஞ்சம் பொறுமையோடு, நிறைய அமைதியோடு இந்த போராட்டக் களத்தை வெற்றிக் குறியீட்டுடன் நாம் நிறைவு செய்ய வேண்டும் தோழர்களே!  இறுதி அடியில் நிறைய நிறைய கவனம், கவனம், கவனம் தேவை!


1 comment:

Anonymous said...

very true