"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Thursday, August 20, 2026

‘கணம்’ சிறுகதைக்கான விமர்சனங்கள்

100 சிறுகதைகள், 100 எழுத்தாளர்கள், 1 வருடம் எனும் நிகழ்வுக்கான புலனக்குழுவில் ‘கணம்’ சிறுகதையைத் தேர்ந்தெடுத்து விமர்சித்திருந்தார்கள்.

குழுவில் பகிரப்பட்டு என்னை வந்தடைந்த விமர்சனங்களை இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.


ஏப்ரல் 2024ல் வாசகசாலையில் வெளிவந்த சிறுகதை இது. வாய்ப்புள்ளவர்கள் வாசித்துப் பாருங்கள்.

https://vasagasalai.com/kanangal-sirukathai-hema-jai-vasagasalai-93/

#கணங்கள்

#ஹேமா ஜெய் 

#வாசகசாலை இணைய இதழ்- ஏப்ரல் 2024


[01/08, 04:29] xxx Madurai VN: கணங்கள்

மனதின் கனம்

மங்கையரின் 

மனம் படும்பாடு 

அதிலும் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலையை மிக நேர்த்தியாக 

அழகான சொல்லாடல்களுடன் நகர்த்தி இருப்பது சிறப்பு



[01/08, 04:41] +91 xxxx: இன்றைய பெண்களின் வாழ்க்கை முறையை பார்க்கும்போது, என் பாட்டியின் வாழ்வியல் நினைவிற்கு வருகிறது. காலையிலான சமையலை முடித்த பிறகு, தனது உறவினர்களுடன் பேசிக்கொண்டே அனைவரும் சேர்ந்து பாய் பின்னுவார்கள். அந்த எளிமையான, அமைதியான மற்றும் ஒற்றுமை நிறைந்த வாழ்க்கை இன்று பசுமையான நினைவாக மட்டுமே எஞ்சியுள்ளது.



[01/08, 04:43] Mxxx Ss: இன்றைய சூழ்நிலை kku ஏற்ற கதை 


—-

#56

#கணங்கள்

#ஹேமா ஜெய் 

#வாசகசாலை இணைய இதழ்- ஏப்ரல் 2024


 'கணங்கள் ' சிறுகதை பேசும் பொருள் உடனடி கவனத்திட்குட்படுத்த வேண்டிய அதிமுக்கியமானது.


நேரம் என்பது நமது வாழ்நாளின் துளி. அது  வாழ்தலுக்குக்கானது. வாழ்தல் கணங்கள் அருகி வருகிறது. அதனை நாம் உணரத் தொடங்கியிருக்கிறோம் என்பதன் கதை வடிவம் தான் கணங்கள்.


நிகழ்வில் ஓரிடத்திலும்,  நினைவில் ஓரிடத்திலும் என பிளவுபட்ட கவனங்களோடே நாம் வாழ்கிறோம்.  'அந்நந்த கணங்களில் வாழ்தலை' ஏனோ தொலைக்கிறோம் - காரணம்,  அமைந்ததா அல்லது அமைத்துக்கொள்வதா எனும் கேள்விக்கு இக்கதை பதில் தருகிறது. 


வாழ்வு தகவமைக்கும் சூழல்களோடு,  உணர்வுகளோடு,  கடமைகளோடு, தவறுகள்-புரிதல்-சீர்செய்தல்-மீள்தல் எனும் process இவை யாவும் எப்போதுமே மனிதர்கள் வாழ்ந்த நடைமுறை தான். ஆனால் தொழில்நுட்ப முன்னேற்றம் என்பதைப் புதிதாகப் பார்க்கையில் ஒரு பரவசப்பதட்டம் வந்திருப்பது உண்மை. அதிலும் கண்மணி இங்கே பக்குவப்பட்ட நடுத்தர வயதினளாக வடிவமைக்கப்பட்ட பாத்திரத்தின் மூலம், உணர்தல் யாருக்கு அவசியம் எனும் கேள்வி தோன்றுகிறது. அவளது அப்பா, அம்மா மற்றும் மகள் என மூன்று தலைமுறையையும் சுட்டியிருப்பதால், 'அனைவருக்கும்' எனும் பதிலும் கிடைக்கிறது. 


(அ) அளவுக்கும் தேவைக்கும் மீறிய தகவல்கள், (ஆ) தனிமை/ இல்லத்திற்கான நேரம் எனும் அடிப்படை மதிப்பு மீறிய தகவல் தொடர்புகள் (இ) தகவல் எதுவாயினும் உடனுக்குடன் பதில் சொல்ல வேண்டும் எனும் குறுஞ்செய்தி நிர்ப்பந்தங்கள் -  மிகக்கூரியவை, அதிதீவிர கவனத்துடன் அதனதன் இடத்தில் நிறுத்த வேண்டியவை. எந்த இடத்தில் என்பதில்தான் இருக்கிறது, நாம் 'புதன்கிழமை கண்மணியா' அல்லது 'திங்கட்கிழமை கண்மணியா' எனும் தெரிவு. 


" தனக்குத் தன்னுடன் இருக்கத் தான் அச்சமாக உள்ளதோ " ஆம் என ஒப்புக்கொள்பவர்களில் நான் முதலில் நிற்கிறேன். ஓசையற்ற, சலனமற்ற சூழல் வேண்டும். அதில் நான் வரவழைத்துக் கொண்ட இணைய ஓசைகளைக் கேட்டபடி இருப்பேன் என்பது முரண்; நாம் பெருவாரியாகத் தேர்ந்தெடுப்பது அதுதான்.  அதனால் தான் 'நிதானம் நஞ்சாகக் கசக்கிறது'. 


கடமைகளும்,  அதற்கான அவசியத் தயாரிப்புகளும், ஆயினும் என்ன?  இடையிடையே ஏற்கும் நல் ரசனைப் பொழுதுகளால் நம் வாழ்வை உயிர்ப்பான கணங்களாக்குவோம்.


[01/08, 05:45] Gxxx: பெரிய தத்துவம், மறைபொருள், உவமைகள் என எதுவும் இல்லாம அப்படியே யதார்த்தத்தை அதுவும்  திருமணமாகி வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணின் வாழ்வை,உணர்வை அப்படியே சொல்லி இருக்கிறது கணகங்கள் கதை. அப்படான்னு ஒரு லீவு எடுக்க கூட முடியாத வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு இருக்கோம்.  அலுவலகத்தில் ஒரு நீண்ட விடுமுறை எடுத்த பிறகு நமக்குள் நடக்கும் போர்க்களம் அப்படியே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஏதாவது தப்பு பண்ணிட்டோமா, பொய் சொல்லி லீவு எடுத்ததை கண்டுபிடிச்சிடுவாங்களோ ... நமக்கான முக்கியத்துவம் இல்லையோ அப்படின்னு insecurity ல மண்டை காய்ந்து .. அலுவலகத்துக்கே போய் நம்ம இருப்பின் முக்கியத்துவத்தை , நமக்கான முக்கியத்துவத்தை பதிவு செய்ய போராடிட்டே தான் இருக்கோம். இதுல சமூக வலைத்தளத்தில் மூழ்கி போறது ன்னு வாழ்க்கை கடிகாரத்தின் கம்பிய பிடிச்சு ஓடிட்டே இருக்கோம். ஒரு  individual லா அதற்கான முக்கியத்துவத்தை நம்ம தொலைச்சுக்கிட்டே இருக்கோம் .. அப்படியே இதிலிருந்து தப்பிச்சு வர முடியுமா அப்படின்னா அவ்வளவு சுலபமானது இல்ல. சமூகம் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்துல இதெல்லாம் மனிதர்கள் செஞ்சே தீரனும் அப்படின்னு தீர்மானிக்குது இந்த நிறைவேற்றுவதற்காகவே நம்ம ஓட வேண்டிய தான் இருக்கு.. வீடு வாங்கணும், கார் வாங்கணும், பையன பெரிய ஸ்கூல்ல படிக்க வைக்கணும், அவன் நல்ல மார்க்கு வாங்கணும்... அதேபோல அலுவலகத்தில் அடுத்தடுத்த படியில போயிட்டே இருக்கணும் அப்படிங்ற சூத்திரத்துக்குள்ள மாட்டி இருக்கோம். இதிலிருந்து வெளியே வர முடியுமா?? நம்ம எதை நிறைவுனு நினைக்கிறோம்?? அந்த புள்ளி தான் நிறைய விஷயத்தை மாத்தும்னு நினைக்கிறேன். எல்லாத்துக்கும் போராடி போராடி ஓய்ந்து போவோம்..  ஒரு கட்டத்துல இந்த மாதிரியான ஒரு வாழ்வு சலிப்பை கொடுத்திடும்...  இந்த சலிப்பு இன்னும் நிறைய பிரச்சனைகளுக்கான ஆணிவேரா இருக்கும்.இந்த கதையில சொல்லி இருக்கிற மாதிரி நாம் நமக்காக எதையுமே செய்வதில்லை..  அப்ப இந்த வாழ்க்கையில நம்ம என்னதான் செஞ்சுகிட்டு இருக்கோம்? என்னவாக இருக்கிறோம்? எதுக்காக இருக்கிறோம்??? என்ற கேள்வி கேள்வியாவே தான் இருக்கு...


[01/08, 06:20] Sxxx VN: கணங்கள்


பணிக்குச் செல்லும் பெண்களின் மனநிலை

ஆறாம் விரலாய் மாறி போன கைபேசி

குடும்பமாய் அமர்ந்திருந்தாலும்

தனி தனியாக பிரிக்கும் இணையம்

என நடப்பு நிலையை எழுத்துக்களில் வடித்துள்ளார் ஆசிரியர்

கதையை படிக்க படிக்க

யார்ரா இது நம்ம வீட்டில் நடப்பதை கதையாக எழுதியுள்ளது என தோன்றியது


இளையவர்கள், குழந்தைகள், மூத்தவர்கள் என்றில்லாமல் எல்லோரையும் ஒரு சிலந்தி வலை போல இறுகச் சுற்றியுள்ளது இணையச் சிறை. ஒவ்வொருவர் உலகத்திற்கும் வெளியே இறுகிய சுற்றுச்சுவர். அதைமீறி யாரும் யாரையும் அனுமதிக்க விரும்புவதில்லை. அது பெற்றோராக, மகனாக, மகளாக, ஏன் கணவன் மனைவியாக இருந்தாலும் கூட.👍


Relax ஆக இருக்க leave எடுத்தால் மனம் முழுக்க அலுவலகத்தில் பயணிப்பதும்

நினைத்தபடி எந்த செயலும் செய்யாமல் சோம்பி இருப்பதும்

எடுத்த விடுப்பே வெறுப்பாக மாறி மீண்டும் பணிக்கு செல்வதும் பணிக்கு செல்லும் பெண்களில் வாடிக்கை

கணங்கள் 

பணிக்கு செல்லும் பெண்களின் கனங்கள்


[01/08, 16:23] Pxxxx Vasippai Nesippom: 56.கணங்கள் - ஹேமா ஜெய்


வேலைக்கு செல்லும் பெண்களின் நிலையையும் அவர்களின் மனவோட்டத்தையும் அழகாக கடத்தியுள்ளார் எழுத்தாளர். ஒருவாரம் விடுப்பு எடுத்தும் மூன்று நாட்கள் கூட நிம்மதியாக கழிக்க இயலாமல் கண்மணிக்கு நேரும் அவஸ்தை உணர்வு, அவள் மேல் பரிதாபம் கொள்ள வைக்கிறது. வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்தும் வேலை பற்றிய எண்ணங்கள் மற்றும் சக ஊழியர்களின் நினைவே மேலோங்கி நிற்கும் கண்மணி போன்றவர்கள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய அவலத்தை யதார்த்தமான கதையாக்கியுள்ளார், அருமை..


[01/08, 17:13] Saxxxx: நம் எல்லோரையும் சிலந்தி வலை போல இணைய வலை சுற்றி உள்ளது.

வயதானவர்களும் விதிவிலக்கு இல்லை.

ஒரு வாரம் விடுமுறை எடுத்து பல வித வேலைகளை செய்ய எண்ணிய கண்மணிக்கு ஒரு வேலையும் ஓடவில்லை.

எனக்கும் இது நடந்திருக்கிறது.

எனக்கே எனக்கா என்று நினைத்த விடுமுறை நாள் வெட்டியாக கழிய குற்ற உணர்வுதான் மிஞ்சும்.

கண்மணிக்கு, 

பல மரம் கண்ட தச்சன் போல, மனம் பலவிதமாக அலைபாய்கிறது.

இன்றைய யதார்த்தத்தை கதை பேசுகிறது.

பணி புரியும் மகளிரின் எண்ண ஓட்டத்தையும், அக்கம் பக்கம் பழகாமல் ஒவ்வொருவரும் தனித்தனி தீவாக இருப்பதும் காலத்தின் கோலம்.

டி.வி இல்லாத மொபைல் இல்லாத காலங்கள் நினைவுக்கு வருகின்றன.


[01/08, 18:39] Sanxxxx: ஒரே வரியில் நம் குடும்ப சூழல் ஒரு கதை கரு ஆகிப் போச்சு.தினசரி நிகழ்வாக இருந்தாலும் மிகச் சிறப்பாக கதையை கதை சொல்லி மூலம் கொண்டு செல்லும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.அதிலும் இன்றைய நவீன உலகில் பணி செய்யும் பெண்கள் மனநிலையை கண் முன்னே நிறுத்தி சிறப்பு செய்த ஆசிரியர் திறமைக்கு ஒரு சல்யூட்.அதிலும் கை பேசியை கணமாக சொல்லி விட்டார்.


[02/08, 05:49] Vxxx.M Book: கணங்கள்


இன்றைய காலகட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின் அன்றாட வாழ்க்கை செல்பேசி,இணையம் என எப்படி செயற்கையாக இருக்கிறது என்ற நிலையை அப்படியே யதார்த்தமாக படம் பிடித்து காட்டியுள்ளார் எழுத்தாளர்.


  வீட்டிலிருக்கும் பெண்கள் வேலைக்கு செல்லும் பெண்களைப் பார்த்து அவர்கள் எப்படி சந்தோசமாக இருக்கிறார்கள் என்று நினைப்பதும் வேலைக்கு செல்பவர்கள் வீட்டிலிருக்கும் பெண்கள் எப்படி சந்தோசமாக இருக்கிறார்கள் என்று நினைப்பதும் நாமும் வேலைக்கு செல்லாமல் விடுப்பு எடுத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் செக்கு மாடு போல மீண்டும் அலுவலகம்,பணி என்றுதான் மனது கிடந்து தவியாய் தவிக்கிறது என்பதை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார் எழுத்தாளர்.


[02/08, 06:37] ABxxxx SS: கணங்கள்-  ஹேமா ஜெய்.

கண்ணுக்கு தெரியாத கண்ணிகளால் பிணைக்கப்பட்ட, எந்திர மயமான, நகர வாழ்வின் துயரத்தை ஒரு நடுவயது குடும்பத்தலைவியின் மூலம் எடுத்துச் சொல்லிய விதம் அருமை. கதாசிரியருக்கு பாராட்டுக்கள்.


[02/08, 09:23] SxxxxVN: தொடர் வேலைப்பளுவிலிருந்து விடுபட்டு நிம்மதி தேட விரும்பும் ஒரு பணிபுரியும் பெண் கண்மணி, தனக்குக் கிடைக்கும் விடுமுறை நாட்களில் கூட நிம்மதியைக் கண்டடைய முடியாமல், டிஜிட்டல் திரைகளின் பிடியிலும் விளம்பரப்படுத்தப்படும் போலி பிம்பங்களுக்கு நடுவிலும், எந்நேரமும் தொடரும் ஒருவித அறியாத பதற்றத்துடனும் (Anxiety & FOMO - Fear Of Missing Out) அல்லாடுவதை இக்கதை முதன்மைப்படுத்துகிறது.விடுமுறை எடுப்பது என்பது ஊழியர்களின் அடிப்படை உரிமை என்றபோதிலும், நிறுவனச் சூழல் மற்றும் வேலையிழப்பு குறித்த பயத்தின் காரணமாக, விடுப்பு எடுக்கும் கணத்திலிருந்தே ஒருவிதக் குற்றவுணர்வு மேலோங்குவது நவீன கார்ப்பரேட் கலாச்சாரத்தின் சுரண்டல்களை வெளிப்படுத்துகிறது. ஓயாத வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள், சமூக வலைதளப் போலித்தனங்கள், யூடியூப்-நெட்பிளிக்ஸ் தேடல்கள்( ‘Breathing calmly. Me time – Relaxing') எனத் தனக்கான நேரத்தை  செலவிட நினைப்பவர்கள் எவ்வாறு கேட்ஜெட்களின் பின்னால் கைதிகளாக மாறுகிறார்கள் என்பதை ஆழமாக விளக்குகிறது. ஒவ்வொரு நொடியும் பதற்றத்துடனும், அலைக்கழிப்புடனும் கழியும் மனிதனுக்குத் தன்னோடு தனித்திருக்கவே அச்சமாக இருக்கிறது என்ற மனநிலையைக் கதையின் நாயகி உணரத் தொடங்குவதுதான் இக்கதையின் உச்சம். விடுமுறையை அனுபவிக்க முடியாமல் மீண்டும் அலுவலகப் பாதுகாப்பிற்கே ஓடத் துடிக்கும் கண்மணியின் முடிவு, இன்றைய 'ஒர்க்-லைஃப் பேலன்ஸ்' (Work-Life Balance) சவால்களுக்கு மத்தியில் வாழும் பெரும்பாலான சராசரி மனிதர்களின் பிம்பமே ஆகும். 'இப்போது வானத்துக்கு கீழ் உள்ள அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும், இல்லையெனில் சொந்த மனமே தன்னை முட்டாளாக உணர்கிறது'.இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தில் "Me Time" (தனக்கான நேரம்) மற்றும் "Self-Care" என்பவை நிஜமான அமைதியைத் தருவதற்குப் பதிலாக, சமூக வலைதளங்களில் காட்டுவதற்கான ஒரு போலி பிம்பமாகவே மாறியுள்ளன. தொழில்நுட்பம் உலகைச் சுருக்கிவிட்டதாகச் சொன்னாலும், மனிதர்களுக்கிடையேயான உண்மையான உரையாடல்களை அது முற்றிலும் துண்டித்துள்ளது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மனிதர்களின் கவனக்குவிப்புத் திறன் (Attention Span) எவ்வளவு சுருங்கிவிட்டது என்பதை இக்கதை சுட்டிக்காட்டுகிறது. (Skip add, toggle between screens etc)."விடுமுறை எடுப்பதற்கு ஏன் இவ்வளவு பயப்பட வேண்டும்? குழுத்தலைவி பதிலும் அனுப்பவில்லை, வேலையிழப்பு வந்துவிடுமோ எனப் பயப்படுவதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியான யோசனைதானே?" என்று தோன்றலாம். கார்ப்பரேட் துறையில் பணிபுரியும் பலருக்கு இது தினசரி அனுபவம். தொடர் வேலையிழப்பு (Layoffs), ‘சைலன்ட் ஃபயரிங்’ (Silent Firing), செயல்திறன் மதிப்பீடு (Performance Rating) குறித்த பயம் உள்ள சூழலில், ஒரு விடுமுறை கூட ஒருவரது மன உளைச்சலை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என்பதற்கு கண்மணியின் மனநிலை மிகச் சரியான உதாரணம். நவீன அடுக்குமாடி குடியிருப்பு (Apartment) வாழ்க்கையிலும், அலைபேசி ஆதிக்கத்திலும் இயங்கும் பல குடும்பங்களின் அன்றாட நிதர்சனம் இதுவே. "போனில் பேசக்கூட முன்அனுமதி பெற வேண்டியுள்ளது" என்ற கதையின் அவதானிப்பு சமகாலச் சமூக மாற்றத்தின் வெளிப்பாடுதான். ஆசிரியர் கதையை நகர்த்தியிருக்கும் விதம், நாயகி கண்மணியின் அக உளைச்சலையும் (Internal Anxiety) பதற்றத்தையும் மிக நெருக்கமாகப் பின்தொடர்கிறது. நாம் அன்றாடம் கடந்துபோகும் அல்லது கவனிக்கத் தவறுகிற நமது சொந்த டிஜிட்டல் அடிமைத்தனத்தையும் உளவியல் பதற்றத்தையும் ஒரு கண்ணாடியாக நம் முன் நிறுத்தியுள்ளார்.



கதை தொடங்கும்போதும் கண்மணி பதற்றத்துடனும் குழப்பத்துடனும்தான் இருக்கிறாள்; கதை முடியும்போதும் அதே பதற்றத்துடனே மீண்டும் வேலைக்கே போக முடிவெடுக்கிறாள்.சிறுகதை கலை வடிவில், "காட்சிப்படுத்துதல்" (Showing) என்பதை விட ஆசிரியர் "விளக்கிச் சொல்வது" (Telling) மேலோங்கியிருக்கிறது.Essay போல இருந்தது.கதையின் போக்கு முதல் நாளிலிருந்தே தெளிவாகத் தெரிந்துவிடுகிறது,கதாபாத்திரத்தைச் சற்றே ஒரே தன்மையுடையதாக (Monotonous) மாற்றுகிறது. விடுமுறையை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் ஒரு பெண், இறுதியில் மீண்டும் அலுவலகத்திற்கு ஓடுவதே தீர்வென முடிவெடுப்பது வாசகருக்கு எந்தவிதமான அதிர்ச்சியையும் தரவில்லை.


[02/08, 09:42] Dxxxx: நவீன வாழ்வியலின் எதார்த்தமான உண்மைகளை பதிவு செய்கிறார் எழுத்தாளர் ஹேமா ஜெய்  எனக்கென்னவோ அவரின் சொந்த அனுபவங்களை வைத்து தான் இந்த கதை எழுத பட்டிருக்குமோ என்கிற எண்ணம் தோன்றியது.


[02/08, 09:48] Sxxxx: விடுப்பு என்ற அடிப்படை உரிமையை கூட நம்மால் முழுமனதுடன் எடுக்க முடியாதபடி ஒரு அடிமைத்தனமான வாழ்வியல் முறையில் நாம் சிக்கிதவிக்கின்றோம் என்ற நிதர்சனத்தை தனது கணங்கள் கதை மூலம் கூறியுள்ளார் எழுத்தாளர் ஹேமா ஜெய் அவர்கள்.  அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களுக்கென தனியாக நேரம் ஒதுக்குவது என்பது அவர்கள் அளவிலேயே ஒரு மாபெரும் குற்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது என்பதனை யாராலும் மறுக்க முடியாது.  அவள் அவளுக்காக வாழ்வதென்பது அத்தனை பெரிய குற்றமாக பாவிக்கும் இச்சமூகத்தில் தன்னை தானே தனிமையில் சந்தித்துக்கொள்ள நாம் பயப்படும் வரை கணங்கள் ஒரு தொடர் கதைதான். 


எழுத்தாளர் ஹேமா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்



[02/08, 11:33] ZxxxxSS: விடுமுறை எடுத்தாலே ஒருமாதிரி குற்றவுணர்வு வந்துவிடுகிறது.இப்படி யோசித்தே கடந்த மூன்று வருடங்களாக அவளது விடுமுறைகள் எடுக்கப்படாமலே வீணாகியிருந்தன.


வேலைக்குச் செல்லும் பெண்களால் மட்டுமே உணரப்படக்கூடி துயர். அவசியத் தேவைக்கு, அனுமதிக்கப்பட் விடுப்பை எடுத்த போதும் கூட, நிம்மதியாக இருக்க இயலாது. நாம் இல்லாத போதுதான் நம்மை மையப்படுத்திய பிரச்சனை ஒன்று தோன்றி சிக்கலில் சிக்கவிட்டிருக்கும்.


இப்போது போனில் பேசுவதும் கூட அந்த இடத்தைத்தான் வந்தடைந்து கொண்டிருந்தது. முதலில் குறுஞ்செய்தியொன்று அனுப்பி, ‘இப்போது பேசலாமா?’ என்று கேட்டபின்பே பேச வேண்டியுள்ளது.


அருகிப்போன‌ உறவுகளும் மருகிப்போன உணர்வுகளும் மாயத்திரை ஒன்றை இடையில் உருவாக்க, அணுகுமுறைத் தடை உள்ளது இக்காலத்தில் quality time, personal space என்றெல்லாம் சொல்லி மனிதன் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு மற்றவர்கள் அணுக தடை விதித்துப்பின், தான் தனிமையை எண்ணிப் புலம்பவும் செய்கிறான்.


எப்போதேனும் கதவு திறக்கையில் எதிர்பட்டால் ஒரு பிளாஸ்டிக் புன்னகையுடன் கடந்து விடுமளவுக்கே பரிட்சயம்.


போலிப் புன்னகை கூட அளந்தே வெளியிடப் படுகிறது. கொடுப்பதுதானே கிடைக்கும். முன்கை நீண்டால தானே முழங்கை நீளும்!


ஆழ்ந்து யோசித்தால் தனக்குத் தன்னுடன் இருக்கத்தான் அச்சமாக உள்ளதோ, அதனாலேயே கேட்ஜட்களில் தொலைந்து போகத் துணிகிறோமோ என்று கூடத் தோன்றியது. 


தொலைந்து போவது தானே பேரானந்தம், அதில் தானே பெரும் போதை உள்ளது. அதற்குத்தானே உலகமே அடிமையாகிக் கொண்டிருக்கிறது!


புலி வாய்க்குள் கைவிட்டது போல இணைய பொழுதுபோக்கே இறுகிய வலைப்பின்னலாகக் கழுத்தை நெரிக்கும் உணர்வு. தெரிந்தும் விடுபடவியலா கையறுநிலை.


மிகக் கொடூரமான மாய வலை உலகை இணைப்பதாகக் கூறி, உள்ளங்களை உறவுகளைப் பிரிக்கும் வேலையைச் சொவ்வனே செய்துள்ளது.


இப்போதும் இதயம் வேகமாகத் துடித்ததுதான். அதன் காரணம் நாளை அலுவலகம் செல்ல வேண்டும் என்பதுதான்.


பால்யத்தில் பள்ளி செல்ல பயமாக இருந்தது, இப்போதோ பணியிடம் செல்வ பதற்றமாகஉள்ளது. ஏதோவொரு அழுத்தமான மனநிலைக்குள் சிக்கித் தவிக்கிறோம். நம்மை நாமே இலகுவாக்கிக் கொள்ளாவிடில் சுயசுதந்திரம் சாத்தியமில்லை.


[02/08, 17:15] Thuxxxx: கணங்களில் வாழ்தல் என்று ஒரு சொற்றொடர் உண்டு. அதாவது ஒவ்வொரு தருணத்திலும் நீ நீயாக உனக்கான வாழ்க்கையை வாழ்வது என்று சொல்கிறது அந்த சொற்றொடர். 


கிட்டத்தட்ட ஒரு ஜென் தத்துவத்தை போன்றது தான் சின்ன சொற்றொடர்தான் ஆனால் பெரிய பொருளை உள்ளடக்கியது. ஹேமா ஜெய் அவர்கள் எழுதிய இந்த கணங்கள் சிறுகதை நாம் கணங்களில் வாழ்கிறோமா என்ற கேள்வியை தான் எழுப்புகிறது. 


நாம் எப்பொழுதும் நிகழ்காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் வாழ்வதில்லை. அப்படி நிகழ்காலத்தில் இருந்து கொண்டு ஒன்று இறந்த காலத்தை நினைத்து நம்மை இழக்கிறோம் அல்லது எதிர்காலத்தில் நம்மை தேடுகிறோம்.. அப்படி என்றால் எப்பொழுதுதான் நாம் நிகழ்காலத்தில் வாழ போகிறோம்? 


நவீன வாழ்வியலை வாழவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் இருக்கும் ஒருத்தி விடுபெடுத்து தன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்தாலும் இன்றைய சமூக சூழலும் நம்மை ஆளுகிற தொழில்நுட்பங்களும் நம்மை நமக்கான வாழ்வை வாழ அனுமதிக்கின்றனவா என்பது பெரும் கேள்வி.


அப்படிப்பட்ட குழப்ப மனநிலையை ஊசலாட்டத்தை இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் நிலவுகிற பெரும் மன உளைச்சலை தீர்க்கமாக பேசுகிறது இந்த சிறுகதை..


நல்லா யோசிச்சு பாருங்க இன்னைக்கு நாம எல்லாரும் தியானம் பண்றது யோகா போறது ஜிம்முக்கு போறது எல்லாமே எதுக்குன்னா நாம் வாழ்கிற வாழ்க்கையை இலகுவாக்குவதற்கு தான். இன்னும் உடைத்துப் பேச வேண்டும் என்றால் வாழ்வதற்கு அல்லது வாழ்க்கையை கற்றுக் கொள்வதற்கு வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு இப்படி ஏதேனும் ஒரு வகுப்புக்கு போகிறோம் அப்படித்தானே..


ஆனால் நமக்கு முந்திய தலைமுறை இப்படி ஏதேனும் ஒரு வகுப்புக்கு சென்று தன்னை இந்த வாழ்க்கைக்கு தயார்படுத்திக் கொண்டு முன் திட்டமிடலோடு வாழ்ந்து இருக்கிறார்களா என்று யோசித்தால் அப்படி எதுவும் எனக்கு தோன்றவில்லை ஆனால் நிறைவாக வாழ்ந்தவர்கள் அவர்களாகத்தான் இருக்கிறார்கள்.


இவ்வளவு சென்றும் இவ்வளவு போதனைகளை பெற்றும் இவ்வளவு தயாரிப்புகளை மேற்கொண்டும் நமக்கு இந்த வாழ்க்கை நிறைவை தருவதில்லை. அப்படி ஒரு நிறைவைத் தேடிக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களின் ஒரு சோற்றுப் பதம் தான் கண்மணி. 


நிகழ்காலத்தை அப்படியே பதிவு செய்து இருக்கிறார் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள். 




1 ஆண்டு(2026)

100 சிறுகதைகள்

100 எழுத்தாளர்கள்

(56/100)

[02/08, 17:49] Thexxx: இன்றைய நிதர்சனத்தை படம் பிடித்து காட்டுகிறது கதை. ஆசிரியருக்கு வாழ்த்துகள் 💐


[03/08, 05:01] Maxxxx: 56. கணங்கள்

- ஹேமா ஜெய்


வேலைக்கு செல்லும் இன்றைய பெண்ணின் மனநிலையை தெளிவாக இக்கதையில் சொல்லியுள்ளார் ஆசிரியர். வாழ்வில் தான் ஆசைப்படுவதை அடையும் கணத்தில்  இருக்கும் மகிழ்ச்சியை  கொண்டாட மறக்கிறோம். நம்மிடையே இன்று அரிதாகி போன கணங்களில் வாழ்தல் என்ற பொருத்தமான சொற்றொடரை துளிர் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால்   இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே அதி விரைவு பயணம் செய்யும் நாம் , நிகழ்கால கணத்தில் நிதர்சனத்தை உணர மறுக்கிறோம். இந்த கதையை வாசிக்கும் வாசகர்கள் தங்களை தொடர்பு படுத்தி பார்ப்பது ஆசிரியருக்கு  கிடைத்த வெற்றி. ஆசிரியருக்கு  மனமார்ந்த வாழ்த்துக்கள்.


[03/08, 11:22] Gaxxxx: கணங்களின் ஒவ்வொரு கணமும் மிக மிக மிக தொடர்பு படுத்திக்கொள்ளக்கூடியதாக இருந்தது!நமக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் தோன்றுகிறதோ என்ற சந்தேகம் ஒவ்வொரு நொடியும் அனைத்து பெண்களுக்கும் இருப்பது.அதே போல,எதைத் தான் செய்வது,என்ன தான் செய்தால் மனம் அமைதி கொள்ளும் என்று தெரியாமல் தவிப்பது,அனைவரையும் திருப்தி படுத்த வேண்டும் என்று தன் அமைதியை கெடுத்துக் கொள்வது…இவையெல்லாம் ஒரு பெண்ணால் மட்டுமே இத்துனை நுணுக்கமாக எழுத முடியும்!அதை மிகத் துல்லியமாக பதிவு செய்துள்ளார்!இதை ஒரு பெண்ணால் மட்டுமே நூற்றுக்கு இருநூறு சதவீதம் உணர முடியும்!!


[03/08, 11:43] +91 xxxx: அனுபவித்து எழுதி உள்ளார். பெண்ணின் சுமை பெண்ணுக்குதான் தெரியும்.


[03/08, 13:20] Goxxxx: உண்மையில் விடுப்பு எடுத்து முழுதாக அதைக் கொண்டாடிய நினைவே எனக்கில்லை. அன்று  நான்கு முறையாவது பள்ளியிலிருந்து ஏதோ காரணம் சொல்லி அழைத்துவிடுவார்கள்.  இதே தவிப்பு எனக்கும் வந்ததுண்டு. "ஒரே ஒரு நாள் விடுப்பெடுத்து மதியம் உண்ண ரசம் சாதமும் உருளைக்கிழங்கு பொறியலும் செய்து பள்ளியில் கொண்டு வந்து தருவாயா?" எனக் கேட்ட என் மகளின் ஆசையைக் கூட நிறைவேற்றியதில்லை நான்.நம் வசதிக்கும் விடுப்பெடுக்கலாம் என்பதை மிகத் தாமதமாகவே அறிந்து கொண்டேன். காலம் கடந்து அறிந்தென்ன பயன்?

ஹேமா மிக அழகாக உணர்வுகளைப் படம் பிடித்துள்ளார். எளிய நடை அழகான கதை. வாழ்த்துகள்!


[03/08, 13:23] Yuxxxx: Best wishes to the author. விரும்பியும் ஓய்வெடுக்க முடியாமல், true 😌🥺மிகவும் இயல்பான உரையாடல்களுடனும் ... enjoyable story... 🥹


[03/08, 13:48] +65 xxxx: பணிக்குப் போகும் பெண்களின் நிகழ்காலத்திய அச்சுறுத்தும் கணங்களை அழகாக எழுதி உள்ளார். உண்மையே குற்ற உணர்வு இல்லாமல் காரணமில்லாமல் ஒரு சுய விடுப்பை எடுக்க முடியாது.

[03/08, 15:00] xxxx SS: 56.கணங்கள் – ஹேமா ஜெய். 


நல்ல அவதானிப்பு. 

நிகழ்கால நிகழ்வுகளை   கதையாக்குவதால் எளிதில் பொருத்தி கொள்ள முடிகிறது. 


#இல்லையெனில் சொந்த மனமே தன்னை முட்டாளாக உணர்கிறது.#

  Wow..feel...ada ama la. 


#முதலில் குறுஞ்செய்தியொன்று அனுப்பி, ‘இப்போது பேசலாமா?’ என்று கேட்டபின்பே பேச வேண்டியுள்ளது. இந்தப் பழக்கங்களையெல்லாம் யார், எப்போது ஆரம்பித்து வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. 

Good question.


[03/08, 18:20] Vaixxxx: Comtemporary மனிதர்களின் அன்றாடத்தை கொஞ்சம்கூட அச்சுபிசுகாமல் பதிவுசெய்திருக்கிறது இந்தச் சிறுகதை. கதை ஆரம்பிக்கும் போது கண்மனி இந்த ஐந்து நாளும்  ரசித்து வாழும் வாழ்க்கை ஒரு feel good திரைப்படம் போல இருக்கும் என்று oru refreshing modeற்குள் வாசிக்க நுழைந்த எனக்கு கொஞ்சம் ஏமாற்றம். "கண்மனி நீ என்ன விட மோசம்😒" என்று எனக்குள் சொல்லிக் கொண்டே இக்கதையை நிறைவு செய்தேன்! 😅


[03/08, 19:46] Rxxxx🌹: 56. கணங்கள் - ஹேமா ஜெய்

ஆசிரியரின் நாவல்கள், குறு நாவல்கள் என்ற நெடும்பட்டியலைப் பார்க்கும் போது, ஒன்றை கூட வாசிக்கவில்லையே என மனம் எண்ணியது முதலில். எதார்த்த உலகை தனது எழுத்துகளில் கொண்டு வந்துள்ளது சிறப்பு. எழுத்து நடையும் வாசிக்க ஈர்ப்பே.


மொபைல் உள்ள இந்நவீன உலகிலும், மொபைலே இல்லாத 90-களிலும் வாழ்ந்துள்ளேன். அதிக இன்பமான காலமென்றால் மொபைல் இல்லாத அக்காலமே என்பேன். இந்நவீன காலத்தில் இருவரும் வேலைக்கு சென்று குடும்ப பொருளாதரத்தை அப்படியே நிலைநிறுத்த போராடுகின்றனர். அதிலும் பெண்ணுக்கு அதிக கணங்களே. வீட்டிலும் வேலை செய்யவேண்டும். அலுவலகத்திலும் உழைக்க வேண்டும் விடுமுறையின்றி. அதிலும் அதிகாலையில் வேலைகளே அதிகமாக இருக்கும். உண்மையிலேயே இருவரும் ஒருவொருக்கொருவர் நிறைவாக பேசாமலே ஞாயிறு வந்து நிற்கும். குழந்தைகளிடம் கூட நேரம் செலவழிப்பதில்லை; நேரமும் இருக்காது. சமூகத்தின் அழுத்தங்கள் தான் கணங்களாக விரிவடைகிறது. ஆண்களுக்கு கணங்கள் கூடுதலே என்பேன். அதிலும் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் விடுமுறையை கனவாக மட்டுமே எண்ணவேண்டிய நிலை தான்.

இங்குள்ள EPC கம்பெனிகளிலெல்லாம் Whatsapp - ல் ஐந்து குழுக்களை Open செய்து அதிலே Update செய்துகொண்டே இருக்கவேண்டியுள்ளது. இதில் எப்படி விடுமுறை எடுத்து சுதந்திரமாக இருக்கமுடியும். அழுத்தங்களே கணங்கள் தான். 


கதையில் எதார்த்தமாக நடைபெறுவதை சுட்டிக்காட்டியது அருமை. அலுவலகங்களும் அதிக உழைப்பை எப்படியாவது சுரண்டி விடுகிறது. UAE-ல் வாரத்திற்கு 3 நாள்கள் விடுமுறையாம். அப்படி மாறினால் இந்த கணங்கள் மெதுவாக மறையத் தொடங்கும். இதை நம்மூரில் நடைமுறைப்படுத்தினால் வேறு வழியில் பணம் புரட்ட சென்றுவிடுவார்கள் தானே! 😔. உச்ச லாபத்தை எதிர்ப்பார்த்தே பெரும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முன்னோக்கி செல்வதை நிறுத்தினால் நலமே. பாதி கணங்களாவது குறையும்; மறையும்.


பேரன்புடன்,

xxxx 🌹 



03/08, 20:09] S.xxxx: கணங்கள்... 


ரொம்ப எதார்த்தமான ஒரு சிறுகதை. 

 எடுத்த முடிவில் எப்போதும் ஒரே சிந்தனையில் இருக்க முடிவதே இல்லை..


[03/08, 21:08] Yogxxxx: கணங்கள்


என் வாழ்க்கையில் அதிகம் உணரப்படும் எண்ண ஓட்டங்கள், இந்த கதையில் வெகு அழகாக, காயத்தின் மீது விழும் இறகும் வலியைத் தரும் நோக்கில் படைக்கப்பட்டுள்ளது.


பணிக்குச் செல்லும் குடும்பத்தலைவி, அம்மா மீண்டும் சொல்கிறேன் பணிக்கு செல்லும் குடும்பத்தலைவி, அம்மா தான். அவள் பணிச்சூழலுக்குள் முழுமையாய் ஒன்ற முடியாது. சில விதிவிலக்குகள் உண்டு.


விடுமுறையில் சமைக்க இயலாத அசைவ உணவும், பிடித்து பார்த்த திரைப்படமும், ஆழ்ந்து படித்த புத்தகமும், நீண்ட மதிய உறக்கமும், அனுபவித்தவளுக்கு குற்றவுணர்ச்சியாய் குத்தும் தண்டனைகள் ஆகும். எப்போது தெரியுமா? அடுத்த வாரங்களில் ஒட்டடை படிந்த சுவரின் சிரிப்பு, கருத்து வழுக்கும் குளியலறை, மகளுக்கு சடை பின்னுகையில் அவள் கூந்தல் மேலே குதித்து விளையாடும்   பேன்களும், சின்னவளின் அழுக்கு நிறைந்த நகங்களையும் பார்க்கும் போது.

இன்னும் நிறைய 😜


எப்போதும் எதையோ நிறைவாக செய்யவில்லையே என்ற எண்ணத்தோடு தான் கழிகின்றன கனத்த நாட்கள் பல.


சிரித்துக் கொள்வோம் 🤣என்பதாக கடக்கிறேன் இந்த கதையை. வாழ்ந்தாக வேண்டுமே! இன்னும் ஆண்டுகள் பல 😜


அழகிய உணர்வுகளை சொதப்பிக்கொள்ளும் கதை நாயகி.😁


வாழ்த்துக்கள் 💐


No comments: