"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Saturday, March 11, 2017

கூண்டு

சமீப வாரங்களில் வார இறுதிகளில் பார்க்கும் படங்கள் எல்லாம் நல்ல நல்ல திரைப்படமாக அமைந்து விடுவதில் நாலைந்து மேங்கோ ஐஸ்கிரீம்களை உள்ளே தள்ளியது போன்ற குளிர்ச்சி. அதே கண்கள், குற்றம் 23, கிளாஸ்மேட்ஸ் (மலையாளம்),  8*10 தஸ்வீர் (ஹிந்தி) என எல்லாமே மனதில் நிற்கும் படங்கள். அந்த  வரிசையில் மனதில் மிக அழுத்தமாக பதிந்து இரண்டு வாரங்களாக அந்த படத்தை பற்றியே திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டிருப்பதால் இந்த பதிவு.


Pinjar ( கூண்டு ) இது 2003 ல் ஹிந்தியில் வெளிவந்த திரைப்படம். 1950ல் எழுதப்பட்ட பஞ்சாபி நாவலை படமாக்கி இருக்கிறார்கள். இந்திய பாகிஸ்தான் பிரிவினைதான் கதையின் பேக்ட்ராப்.

அம்ரிஸ்டரிலிருந்து செல்வந்த குடும்பம் ஒன்று தன் மூத்த மகளின் திருமணத்திற்காக சொந்த கிராமம் செல்கிறது. தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையை ஒளிந்திருந்து பார்த்து திருமண கனவுகளுடன் காத்திருக்கும் பூரோ. இவள் தான் கதாநாயகி. திருமண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்க, திடீரென ஒரு நாள் ஒரு முஸ்லீம் இளைஞனால் கடத்தப்படுகிறாள். ஏன் என்ன காரணம் என்று புரியாமல் இவள் தவிக்கிறாள். அப்பாவும் அம்மாவும் அவளை தேடி தவிக்கிறார்கள்.

அதற்கு காரணம் போன தலைமுறையில் அவளுடைய மாமா அந்த வீட்டு பெண்ணை கடத்தி மூன்று நாட்கள் வைத்திருந்து விட்டு விரட்டி விடுவது. காலம் காலமாக அவர்கள் குடும்பத்திற்கு இடையே இருக்கும் பகையால் பெண்களே மாறி மாறி கடத்தப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு பின் விரட்டப்படும் வஞ்சம் ஒரு நடைமுறை போல தொடர்வது நம் முகத்தில் அறைகிறது.

கடத்தப்பட்டவனிடம் இருந்து தப்பித்து சென்றாலும் பிறந்த வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால் மீண்டும் தான் அடைப்பட்ட கூண்டுக்கே செல்கிறாள் அந்த பாவப்பட்ட பெண். இது தான் கதையின் அடிநாதம்.

முழு கதையையும் விவரிக்காமல் படத்தில்  என்னை வெகுவாக கவர்ந்த அம்சங்களை மட்டும் சொல்கிறேன்.

·         வயது வந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள் திருமண வயதில் இருந்தாலும் பூரோவின் தாய் இன்னொரு ஆண் குழந்தைக்கு வேண்டிக்கொண்டு குழந்தை பெற்றெடுக்கிறாள். ‘சொத்தும் சுகமும் ஆணுக்கு, முன் பின் தெரியாதவனை தேடிக் கொடுப்பது மட்டுமே பெண்ணுக்கு’ என்று மகளின் திருமண பிரிவு துயரை எண்ணி பாடுகிறாள். இன்றைய சூழ்நிலைக்கும் வெகுவாக பொருந்தும் பாடல் வரிகள்.

·         ஊர்மிளா மற்றும் இஷா கோபிகரை அடையாளமே தெரியவில்லை. ஊர்மிளா அப்படியே பூரோவாக வாழ்ந்திருக்கிறார். பெண்ணின் உள்ளுணர்வால் தன்னை பின் தொடர்ந்து வருபவனை கண்டு அச்சமும், வருங்கால கணவனை எண்ணி கற்பனைகளும், பின்னாட்களில் தனக்கு அமைந்த விதியை ஜீரணிக்க முடியாமல் ஒற்றை மனுஷியாக புழுங்குவதும் போராடுவதுமாக அற்புதமான கதா பாத்திரம்.  

·         ‘மாப்பிள்ளை வீடு வருகிறார்கள், இனிப்பு சாதம் பண்ணி வை, விருந்து தயார் செய்யுங்க, வெண்டைக்காய் கொண்டு வா’ என்று அம்மா சொன்னதற்கு முதலில் மகிழ்ச்சியாக தலையாட்டுவதும், பிறகு வெளியே செல்லும் பயப்படுவதுமாக பூரோ தங்கையை அழைத்துக் கொண்டு செல்கிறாள். ‘எங்கேயாவது கடைக்கு சென்று காய் வாங்குவாள்’ என்று பார்த்தால், வயலில் சென்று காய்களை அறுக்கிறார்கள். இயற்கையிலிருந்து நாம் எவ்வளவு விலகி வந்து விட்டோம் என்று வருத்தம் கொள்ள வைக்கிறது இந்த காட்சி.

·         வழக்கமாக தன்னை கடத்தி செல்பவன் மேல் ஒருவகையான ப்ளுட்டோனிக் வகை காதல் ஏற்பட்டு அவன் ஹீரோவாக சித்தரிக்கப்படுவதை தான் நாம் நிறைய கதைகளில் படித்திருப்போம். சினிமாக்களில் பார்த்திருப்போம். இதை Stockholm syndrome என்று சொல்வார்கள். ஆனால் ஒரு பெண்ணின் மனது எவ்வளவு ஆழமானது என்பதை இந்த பூரோ அப்படியே அச்சு அசலாக வாழ்ந்து காட்டுகிறாள். கடத்தி விட்டாலும் தன் மேல் அன்பு காட்டி, பெயர் மாற்றி  கட்டாய திருமணம் செய்து கொள்ளும் ரஷீதின் மேல் அவளுக்கு காதல் எல்லாம் வரவேயில்லை. மதம் மாற்றிய பெயரை நிர்பந்தத்தின் பெயரால் பச்சை குத்தி கொண்டாலும், கல்லை, மண்ணை கொண்டு கையை அழித்து அழித்து அழுகிறாள். கர்ப்பம் ஆனாலும் கூட அவளுக்கு பிடிக்கவில்லை. அதை விட ஹைலைட் நான்கு மாதம் என்று பூரிக்கும் ரஷீதிடம் ‘நான்கு மாதமாக நான் உன் பாவத்தை சுமக்கிறேன்’ என்று கடுமையாக சொல்கிறாள். மிக கடுமையான வீட்டு வேலைகள் செய்து கருவை தானே கலைத்து கொள்கிறாள். அந்த இடங்களில் எல்லாம் கண்கள் கலங்கி கைகள் அனிச்சையாக அடிவயிற்றை பிடித்துக் கொண்டன.

·         4000 கிராம் தங்கம் கொடுக்கிறேன், இருபதாயிரம் பணம் கொடுக்கிறேன் என்று இளைய மகளுக்காக மாப்பிள்ளை வீட்டில் பேசும் அவள் அப்பா தங்களை தேடி ஓடி வரும் மூத்த மகளை வீட்டிற்குள் சேர்த்து கொள்ள மறுக்கிறார். அதை விட கொடுமை, ‘அழாதே.. அடுத்த வீட்டிற்கு தெரிந்து விடும். உனக்கு பிளேக் வந்து லாகூருக்கு அனுப்பி விட்டோம்’ என்று சொல்லி விடுவோம் என்று சொல்கிறார். அம்மாவோ அழுது கொண்டே ‘நாங்கள் தான் உன்னை பெற்றோம், நாங்களே உன்னை விட்டு கொடுக்கிறோம்’ என்கிறார். அந்த கால கட்டத்தில் சமூக பார்வையை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்கள் அழுவதை தவறெனவும் சொல்ல முடியவில்லை. அதே நேரம்  சொசைட்டி என்று சொல்லி சொல்லி அன்றும் இன்றும் கூட எவ்வளவு குரூரமாக நம்முடைய சிந்தனை போக்கு உள்ளது? மனம் கனத்தது இந்த இடங்களில்.

·         எப்படியோ ரஷீத் தான் தன் சகோதரியை கடத்தியவன் என்று கண்டுபிடிக்கும் பூரோவின் சகோதரன் ரஷீதின் நிலத்திற்கு நெருப்பு வைக்கிறான். டன் டன்னாக பயிர்கள் வீணாகின்றன... இதை அறியும் பூரோ ‘அவனும் என்னை பற்றி நினைக்காமல் ஏன் பயிர்களை அழித்தான்?’ என்று கேட்கிறாள். ஆண்களின் உலகம் பெண்ணை மையமாக கொண்டு ஆனால், அவர்களின் மனதை உணர்வுகளை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் ஆக்ரமிப்பு செய்யும் குணத்தை காட்டும் இந்த மாதிரி காட்சிகள் நிறைய.

·         திடீரென இந்துக்கள் ஊரை விட்டு செல்கின்றனர். என்னவென்று கேட்டதற்கு நாடு பிரிந்து விட்டது என்கிறான் ரஷீத். நிலை குலைந்து போனவள், ‘நான் இப்போது எங்கே இருக்கிறேன்?’ என்று கேட்கிறாள். ‘பாகிஸ்தானில்’ என்று பதில் வருகிறது ’நான் இனிமேல் என் வீட்டினரை பார்க்கவே முடியாதா?’ என்று கலங்குகிறாள். இருக்கும் இடத்திலேயே இருந்தாலும் ஒரு கோட்டை போட்டு எல்லைகளை வகுத்து மக்கள் தங்கள் உயிரை மட்டும் காப்பாற்றி கொள்ள வீடு, உடமை எல்லாவற்றையும் விட்டு வெளியேறும் காட்சிகள் எல்லாம் கனமோ கனம்.

·         ‘நாளை முதல் இந்த பணத்திற்கு மதிப்பில்லை’ என நகைகளை வாங்கிக்கொண்டு தானியம் விற்கும் சுயநலமிகள், பைத்தியக்கார பெண்ணுக்கு பிறந்த குழந்தை என்றாலும் அது ஹிந்து குழந்தை என மத மாச்சரியம் பேசும் சந்தர்ப்பவாதிகள் ஆங்காங்கே.

·         தப்பித்து செல்லும் கூட்டத்தில் இருந்து பெண்களை கவர்ந்து கொண்டு வீட்டுக்குள் அடைத்துக் கொள்கிறார்கள், கலகக்காரர்கள். அப்படி மாட்டிக் கொண்ட தன் அண்ணன் மனைவியை ஏதேதோ தந்திரங்கள் செய்து காப்பாற்றுகிறாள், பூரோ. தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் என ரஷீத் அவளை காப்பாற்றி கொண்டு வருகிறான். பூரோவின் குடும்பத்திடம் அவளை ஒப்படைக்கிறார்கள். ‘எந்த நாளிலும் அவளை கீழாக நடத்தாதே’ என்று தன் சகோதரனிடம் பூரோ உறுதி வாங்கி கொள்கிறாள்.

·         ‘இந்த மாதிரி பாதிக்கப்பட்ட பெண்கள் எல்லாம் வீடு திரும்புகிறார்கள். நீயும் வந்து விடு. உனக்கு பார்த்திருந்த ராமே உன்னை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறான்’ என்று அவள் சகோதரன் சொல்ல, பூரோ மறுக்கிறாள். தான் செய்த குற்றத்தை எண்ணி மருகும் ரஷீதும் அதையே கண்ணீருடன் சொல்ல, ‘இது தான் இனி என் வாழ்க்கை, இது தான் என் வீடு’ என்று பூரோ சொல்கிறாள். மீண்டும் அவள் வீட்டிலிருந்து அவளை பிரித்து கூண்டில் அடைக்க வேண்டாம் என்று அவள் குடும்பம் நிரந்தர பிரிவுடன் விடை கொடுத்து செல்கிறது.

·         ‘இந்த மாதிரி பாதிக்கபட்ட ஒரு  பெண் வீடு திரும்பினாலும் கூட போதும். அதில் தான் என் மகிழ்ச்சி..’ சந்தோச கண்ணீரோடு வாகா பார்டரில் நின்று அவர்களுக்கு பூரோ விடை கொடுக்கிறாள். அதோடு திரைப்படம் நிறைவடைகிறது.

இந்த படத்தை பற்றி இன்னும் சொல்ல வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. இன்னும் பெரிதாக போய் விடும் என்று இதோடு நிறுத்திக் கொள்கிறேன். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். எல்லா காட்சிகளுமே நம் அக கண்களை திறந்து வேறுபட்ட பார்வைகளை கொடுக்க முயல்கிறது. படம் கொஞ்சம் நீளம் தான். மூன்று மணி நேரம். நான்கு நாட்கள் பிரித்து பிரித்து பார்த்தேன். ஆனால் கொஞ்சம் கூட அலுப்பே தட்டவில்லை. அந்த நாட்களுக்கு நாமும் சென்றது போன்ற பிரமையை கொடுத்தது. வாய்ப்பு இருப்பவர்கள் கட்டாயம் பாருங்கள். ஆங்கில சப் டைட்டில்களுடன் யூட்யுபில் இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=tvFlSc_OVh0


‘பல நேரங்களில் பெண்ணாக பிறப்பது பெரிய வரம்; சில நேரங்களில் சாபம்’  என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வதுண்டு. இந்த படத்தில் பூரோ ஒரு இடத்தில் சொல்வாள் - ‘இந்த யுகத்தில் பெண்ணாக பிறந்தது தான் நாம் செய்த ஒரே பாவம்’ என்று. இப்போது வரும் சில கொடுமையான செய்திகளை எல்லாம் பார்க்கையில் இந்த வார்த்தைகள் மட்டும் உண்மையாகவே நின்று விட்டது என தோன்றியது, வருடங்கள் பல ஓடி விட்டாலும் கூட.

       

5 comments:

Unknown said...

Excellent review....

HemaJay said...

Thank you!

தேவி பிரபா said...
This comment has been removed by the author.
தேவி பிரபா said...

ஹாய் ஹேமா,

அருமையான விமர்சனம்.படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.

நன்றி.
- தேவி பிரபா

HemaJay said...

Thank you, Devi!