ஹாய்,
எல்லோரும் எப்படி இருக்கீங்க? நலமா?
ஒவ்வொரு கதை எழுதியபின்பும் அது பற்றி எழுத வேண்டும் என்று நினைப்பேன். குறிப்பாக, மிளிர் மற்றும் மனங்கொத்திப் பறவை எழுதியபோது. அக்கதைகளை எழுதத் தூண்டிய அனுபவங்களைப் பகிர வேண்டும் என்று தோன்றும். பிறகு வாசிப்பவர்களின் எண்ணங்களுக்கு ஊடாக நுழைய வேண்டாம் என்று அமைதியாக இருந்து விடுவது. ஆனால், மலரவிழ் குறித்து ஒரு சில வார்த்தைகளாவது உங்களுடன் பகிர வேண்டும் என்ற உள் மன அழுத்தம் தொடர்ந்து கொண்டே உள்ளது.
நிறைய நேரங்களில் எழுத்து ஒரு வடிகால். சில கதைக்கருக்களை எழுதும்போது அது படிப்பினையாகவும் அமையும். ‘ஙஞணநமன மெல்லினமாம்!’ எழுதியபின் ஒரு தெரபிக்கு சென்று வந்தது போல உணர்ந்தேன். சில நபர்களிடம் பிரதி அன்பை எதிர்பார்ப்பது நேர விரயம் என்பது அதன்பிறகே என் மனதிலும் அழுத்தமாகப் பதிந்தது. Let go செய்வதை அலுப்புடன் செய்யாமல் புன்னகையுடன் செய்யக் கற்றதும் அப்போது தான். இப்படிச் சில கதைகள் vent என்றால், சில கதாபாத்திரங்கள் நம் மனதுக்குள் புகுந்து வேறெதிலும் நாட்டமில்லாமல் செய்து விடுவார்கள், மலரவிழின் ஜேன், அரவிந்தனைப் போல.
எழுதி மாதங்கள் கடந்தும் இவர்களின் தாக்கம் இன்னும் என் மனதிலிருந்து அகலவில்லை. கதைகளில் தீர்வு கொண்டு வந்து விடலாம். நிஜத்தில்…?? என்ற கேள்வி குடைந்து கொண்டே உள்ளது. இந்தக் கதையும், மனிதர்களும், நிகழ்வுகளும் முற்றிலும் கற்பனை என்றாலும் அரவிந்தனின் சாயல் கொண்ட இளைஞனை நான் அறிவேன். திருமண நேரத்தில் அவன் எவ்வளவு துறுதுறுப்பாகத் தங்கள் கனவில்லம் சமைத்தான் என்றும், பிறகு பேசாமடந்தையாக மாறி விட்டதையும் பார்த்திருக்கிறேன். சொல்லம்புகள் வாங்கிக் கொண்டே புன்னகையுடன் வளைய வரும் ஒரு ஜேனை அரவிந்தனை விட அதிக நெருக்கத்தில் தெரியும். நம் வீடுகளுக்குள் நடக்கும் இத்தகைய குடும்ப வன்முறைகளைப் பற்றி இன்னும் பல நூறு கதைகள் எழுதலாம். அத்தனை நுண் குத்தல்கள் நடக்கிறது உறவுகளுக்குள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது அதில் சிக்கும் குழந்தைகளே. எத்தனை வளர்ந்தாலும், வாழ்வில் எவ்வளவு தூரம் சென்றாலும் ஆதியில் ஏற்பட்ட மன பயமும், அழுத்தமும் அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
ஒருவிதத்தில் அர்வியின் நிலையிலிருக்கும் ஆண்/பெண்கள் கூட வயதின் அனுகூலத்திலும், இப்போதுள்ள சமூக மாற்றத்திலும் எப்படியோ வெளி வந்து விட முடிகிறது. இன்னொரு நல்ல வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. அஃப்கோர்ஸ் அவர்களின் அத்தனை வலிகளையும் கடந்து தான். ஆனால் ஜேன்கள்? அது அவர்கள் வாழ்க்கை, அவர்களின் முடிவு என்று சாரா போல கையறு நிலையில் நின்று யோசிக்க முயன்றாலும் ஜேன் தொடர்ந்து என் தூக்கங்களைப் பறித்துக் கொண்டே உள்ளார். (இப்போதும் ஒரு vent போலவே இவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன் :) குறைந்தபட்சம் வேறு வேலைகளில் மனம் திருப்பலாம் என்று தான் யூ-ட்யூப் சேனல் பற்றி யோசித்ததே. அதுவரை சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ சிஞ்சித்தும் இல்லை. என் அன்புக்குரிய ஜேனுக்கே அதற்கான நன்றிகள் அனைத்தும் 😊 )
கணவன் மனைவிக்கு இடையே மட்டுமல்ல, துரதிர்ஷ்டவசமாகச் சில உறவுகளிலும் நட்புகளிலும் கூட நச்சு முகங்கள் உண்டு. இதற்காக நிறைய வாசித்தேன். பல குடும்ப நீதிமன்ற வழக்குகளைப் பற்றி அறிய முடிந்தது. எழுதுவதற்காக நிகழும் கற்றல் பெறுமதி மட்டுமல்ல. அது தெளிவையும், ஒருவித empowerment-ஐயும் கூடத் தருகிறது. ஏற்கனவே இனங்கண்டிருந்தாலும் போகட்டும் என்று நினைத்திருந்த சில டாக்சிக் நபர்களை இப்போது இன்னும் நுணுக்கத்துடன் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் எழுத்து அருமையான learning process. நாவலை முடித்தபிறகும் நீண்ட நெடிய மாதங்கள் எடிட்டிங்கில் சென்றது. மதிப்புக்குரிய ஆளுமைகள் சிலர் வாசித்து அவர்களின் கருத்துக்களை அறிந்தபின் கடைசி நிமிடத்தில் பதிப்புக்கு அனுப்பினேன். 🏃🏃🏃
Say STRICT NO to toxic relationships & zero tolerance for toxicity என்பதே இக்கதையின் ஊடாகச் சொல்ல விரும்பியது. அது சரியாக சென்று சேர்ந்துள்ளதை உங்கள் மறுமொழி வாயிலாக அறியும்போது நிறைவாக உள்ளது. இறைவனுக்கு அடுத்து இப்பயணத்தில் என் முயற்சிகள் ஒவ்வொன்றுக்கும் உறுதுணையாக இருக்கும் வாசகர்களுக்கு என் நன்றிகள் 🙏! புத்தகமாக வந்தவுடன் இளம்தோழி ஒருவர் அனுப்பிய கடிதத்தை இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி!
மலரவிழ் குறித்த அவருடைய பார்வையும், புரிதலும் நிறைவளித்தது என்றால் அவருடைய தோழி எழுதிய ஆங்கில வரிகளின் ஆழமான அர்த்தம் மனதை நெகிழ செய்தது. எழுதுவதின் பயன் இது போன்ற பகிர்தல்கள் இன்றி வேறொன்றுமில்லை. அன்பும் நன்றியும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் தோழி! இதுவரை வாசித்த உங்கள் அனைவருக்கும் என் அன்பு! கதைகளின் வழியாக ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து தொடர்ந்து பயணிப்போம் 😊