ஹாய் டியர்ஸ்,
ஒரு மகிழ்வான செய்தி! ‘துளிர்த்தெழும் தளிர்கள்’ எனும் புதிய புத்தகம் இப்போது வெளியாகி உள்ளது. ‘துளிர்த்தெழும் தளிர்கள்’ மற்றும் ‘அத்தியாயம் இரண்டு’ ஆகிய இரு நாவல்களின் தொகுப்பு இது. எழுதும்போதே மனதுக்கு மிகவும் திருப்தியைத் தந்த இவ்விரு கதைகளும் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. வாய்ப்புள்ளவர்கள் அவசியம் படித்துப் பாருங்கள். எனது புத்தகங்களைத் தொடர்ந்து பதிப்பித்து உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பிரியா நிலையத்தினருக்கு நன்றி! என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும் ஊக்கப்படுத்தி, கருத்துகள் நல்கி, உற்றத் துணையாக உள்ள வாசகர்கள் உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தகத்தின் முன்னுரையில் இருந்து -
“பெண்ணின் நிஜமான மகிழ்ச்சி எதில் உள்ளது, மில்லியன் டாலர் கேள்வி அல்லவா இது? படிப்பு, பொருளீட்டல், பதவிகள், அன்பான குடும்பம், அக்குடும்பத்தின் வெற்றிகள் என எல்லா திருப்தி தரும் அம்சங்களையும் தாண்டி ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் நிறைவுறுவது தன்னைத் தானே கண்டடையும் தருணத்தில் தான் என்று எனக்குத் தோன்றும். உண்மையிலேயே தனக்கு என்ன தேவை, எது தன் மனதை அமைதிபடுத்துகிறது என ஒரு பெண் தனக்குள்ளேயே மீள் கண்டுபிடிப்பு செய்து கொள்ளும்போது அவள் வாழ்க்கை இன்னும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாறுகிறது. அப்படி ‘Rediscovering herself’ ஆகத் தனக்கான ஆசுவாச வெளியைத் தேடி அடைய விரும்பும் இரு பெண்களின் வாழ்க்கை தான் “துளிர்த்தெழும் தளிர்கள்” தொகுப்பாக உங்கள் முன்பு. வாழ்வின் பெரும் நாட்களை அடுத்தவரின் இசைக்கோர்ப்பிற்கேற்ப ஆடி சலித்த ‘துளிர்த்தெழும் தளிர்’களின் நாயகி நந்தினி, “Duty Conscious” ஆகத் தனது எல்லா பொறுப்புகளையும் சரி வர நிறைவேற்றியும் நாளின் இறுதியில் ஏதோ ஒரு வித போதாமையை உணரும் ‘அத்தியாயம் இரண்டு’வின் நாயகி நிலா – இவர்கள் இருவரின் ஆற்றாமையும், தேடலும், கண்டடைதலும் வாசிக்கும் உங்களுக்கும் நிறைவளிக்கும் அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்.”
புத்தகங்கள் கிடைக்குமிடம் - பிரியா நிலையம், சென்னை (No.51, Gowdia Mutt Road, Royapettah - 600014. Phone: 94444 62284) மற்றும் அனைத்து ஆன்லைன் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.
அன்புடன்,
ஹேமா ஜெய்