தனஞ்சாய் – சினிமா ஒரு பார்வை
பொதுவாக ‘சயின்ஸ் இஸ் எ பிக்ஷன்’ என்று சொல்வார்கள். அதன் பொருள் அறிவியல் உலகில் எந்த சமன்பாட்டையும் தவறென்று நிரூபிக்கும் சாத்தியங்கள் பிற்காலத்தில் உருவாகலாம், அப்படி தவறு என்று நிரூபிக்கப்படும் வரை மட்டுமே எந்த விதியுமே இங்கு நிலைபெறும் என்ற நிகழ்தகவை (probability) கருத்தில் கொண்டே.
ஆனால், வரலாறு என்பது அப்படி இல்லை. தற்கால நிகழ்வுகளை பிற்கால சந்ததிகள் அறிந்து கொள்வதற்காக பதிந்து வைக்கப்படும் ஆவணம் தான் வரலாறு. எந்த பிறழ்வுகளும், மாற்றங்களும் இல்லாமல் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியாக இருந்தால் மட்டுமே காலம் கடந்த பின்பும் நிஜத்தில் நடந்தது என்ன என்று பின்னால் வருபவர்களுக்கு தெரியும்.
உண்மையில் வரலாறு அப்படி தான் பதியப்படுகிறதா என்ற ஆழ்ந்த கேள்வியும் குழப்பமும் எழுந்தன இந்த திரைப்படத்தை பார்த்து முடித்தபோது.
‘Dhananjoy’ - கடந்த ஆகஸ்ட் 2017ல் வெளிவந்துள்ள இந்த வங்காள மொழித் திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. 1990 ல் நிகழ்ந்த ஒரு பெண்ணின் கொலையும், அதற்கு தண்டிக்கப்பட்ட கொலைக் குற்றவாளியின் வழக்கு விவரங்களின் முன் பின்னான தொகுப்பே திரைக்கதை பாணி.
ஒரு குற்றவாளி தூக்கிலிடப்பட்ட நான்கு வருடங்கள் கழித்து. மனப்பிறழ்வுடன் ஜீவிக்கும் தனஞ்சாயின் மனைவி மேல் பரிதாபம் கொள்கிறாள் ஒரு இளம் வழக்கறிஞர். என்ன நடந்திருக்கும் என அனுமானிக்கவும், உண்மைகளை அறியவும் பழைய சாட்சிகள், நீதிமன்றப் பதிவுகள் என நோண்ட ஆரம்பிக்கும் அந்த பெண் இந்த வழக்கை மீண்டும் நீதிமன்றத்தில் திறப்பதில் இருந்து கதை துவங்குகிறது.
பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பதினான்கு வயது சிறுமி ஒருத்தி அன்று மாலை அவள் வீட்டிற்குள்ளேயே கொல்லப்பட்டு கிடக்கிறாள், வழக்கம் போலவே பாலியல் அத்துமீறலுக்கான எல்லா அறிகுறிகளுடனும். தனஞ்சாய் அவள் இருக்கும் வளாகத்தின் காவலாளி. அவள் பெற்றோர் அளிக்கும் சாட்சிகள், தகவல்களின்படி சந்தேகம் அவன் மீது திரும்புகிறது.
அவன் கைது செய்யப்பட்டு 1990ல் இருந்து 2004 வரை பதினான்கு வருடங்கள் வழக்கு நடக்கிறது. நேரடி சாட்சியங்கள் எதுவுமே இல்லாவிட்டாலும் அவன் மேலுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட, செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த தண்டனையை உயர் மட்டும் உச்சநீதி மன்றங்கள் உறுதிபடுத்துகின்றன.
ஆனால், அந்த குற்றவாளி மட்டும் தொடர்ந்து தான் எதுவும் செய்யவில்லை என்று மறுத்துக் கொண்டே இருக்கிறான். 2004ல் குடியரசுத் தலைவராக இருந்த திரு. அப்துல் கலாம் அவர்களிடம் கருணை கோரிக்கை மனு அளிக்கப்பட, அப்போதிருந்த மேற்கு வங்க முதல்வரின் மனைவி கருணை மனுவுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார். எதிர்ப்பு வலுக்கும் நிலையில் கருணை மனு நிராகரிக்கப்பட, 2004 ஆகஸ்டில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
தீவிரவாதம் அல்லாத ஒரு குற்றத்திற்காக ஒரு குற்றவாளி தூக்கிலிடப்பட்டது அதுவே முதல்முறை என்கிறது 'விக்கி'. தூக்கில் போட்டு எல்லாமே அடங்கிப் போன நிலையில் இரண்டு மூன்று பேராசிரியர் இணைந்து அந்த வழக்கு விவரங்களை புலனாய்வு செய்துள்ளார்கள். அவர்கள் எழுதிய ‘Court-Media-Society and The Hanging of Dhananjoy’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
உண்மை இத்துடன் நிறைவுற்றுவிட, திரையில் வழக்கு திரும்பவும் திறக்கப்பட்டு ஒவ்வொரு முக்கிய சாட்சியையும், ஆவணத்தையும் மீள் ஆய்வு செய்வதாக செல்கிறது. நீதிமன்ற பதிவுகளில் கொலை நடந்த நேரம், செய்யப்பட்ட விதம், அணிந்திருந்த ஆடைகள் முதல் மருத்துவ அறிக்கை வரை எல்லாமே முன்னுக்கு பின் முரணாக இருக்க, எந்த நேரடி சாட்சியமும் இல்லாமல் இவ்வளவு குழப்பமான சாட்சியங்களை வைத்து எப்படி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
சம்பவம் நடந்து பதினெட்டு வருடங்கள் ஓடிப் போயிருக்க, வழக்கின் முக்கிய சாட்சிகள் சிலரை திரும்பவும் தேடிப் பிடித்து விசாரணை செய்வதில், எளிய குறுக்கு விசாரணைகளிலேயே உண்மையற்ற நிலை புலனாகிறது. இவற்றை ஏன் தனஞ்சாயின் வழக்கறிஞர் கேள்விக்குள்ளாக்கவில்லை என்றால் அங்கு வைட்டமின் ‘ப’ விளையாடி இருக்கலாம் என்ற ஊகத்தை எழுப்புகிறார்கள். தனஞ்சாயின் ஏழை குடும்பம் நிலத்தையும் சொத்தையும் விற்று பணம் புரட்டி தருவதில் தாமதம் ஆக்க, பதினான்கு வருடங்கள் நடந்த வழக்கில் ஆர்வம் அற்று போகிறார் அந்த வழக்கறிஞர்.
ஆரம்பம் முதலே கொலையுண்ட பெண்ணின் தாய் சொல்லும் விவரங்கள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக இருக்க, அவரை தேடி செல்ல, அவரோ கோபம் கொண்டு துரத்துகிறார். நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கும்போது மாற்றி மாற்றி அவர் பேச, மகள் மேல் ஆத்திரம் கொண்ட அந்த தாய் தான் கோபத்தில் ஆணவக்கொலை செய்திருக்கக்கூடும் என்று அதற்கான அனைத்து சாத்தியங்களையும் விளக்கி வழக்கு விசாரணை அத்துடன் முடிவு பெறுகிறது. இதில் தனஞ்சாயின் பங்கு எதுவுமில்லை, அவன் ஒரு சூழ்நிலை கைதி மட்டுமே என்ற செய்தியை மறைமுகமாக சொல்லி நீதிமன்றத்தின் மனசாட்சியை கேள்வி எழுப்பி நிறைவுறுகிறது இந்த திரைப்படம்.
நீதி தேவதையின் நேர்மையை மட்டும் அல்ல. பார்ப்பவரின் மனசாட்சியையும் உலுக்கி விடுகிறது இந்த திரைப்படம். படம் பார்த்து முடித்ததும் மனதில் எழுந்த தாக்கம் குறைய வெகுநேரமானது. அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புலனாய்வு தகவல்கள் அனைத்தும் உண்மையிலேயே உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த எளிய மனிதன் கொடுத்த விலை என்ன? அவனுடைய இளமை, கனவுகள், சந்தோஷம், அவனுடைய மொத்த வாழ்க்கையும், கடைசியில் உயிரையும் கூட. அப்படியென்றால் வழக்கு நடந்த பதினான்கு வருடங்களும் இந்த உண்மைகள் எல்லாம் வெளியே வராமல் போனது ஏன்? அதை தான் “A trail run by media” என்கிறார்கள்.
இதே மாதிரி தான் சமீபத்தில் தீர்ப்பு வந்த இன்னொரு வழக்கும். ஆருஷியின் கொலை வழக்கு. 2015ல் வெளிவந்த Talvar திரைப்படம் இந்த வழக்கின் வேறு வேறு கோணங்களை அலசியது. பெற்றோரே மகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, நல்லவேளை சமீபத்தில் விடுவிக்கப்பட்டு உள்ளார்கள். இந்த தீர்ப்பு வந்த சமயம் அந்த வழக்கைப் பற்றி ஆருஷியின் தோழி குறிப்பிடும்போது இதையே தான் சொல்கிறார், “A trail run by media” என்று.
பத்திரிக்கை, தொலைகாட்சிகளின் வியாபாரப் பசிக்கு எப்போதும் ஏதேனும் ஒரு பரபரப்பு தேவைப்படுகிறது. மக்களின் உணர்ச்சி நிலையை எப்போதும் உச்சத்தில் வைத்திருக்க, அவர்கள் சொல்லும் செய்திகள் மட்டுமே ஒரு கட்டத்தில் வழக்கின் சாட்சிகளாக, ஆவணங்களாக மாறிப் போகின்றன. எல்லா நேரங்களிலும் அப்படி அல்ல என்று நாம் மறுத்தாலும் கூட, இதுதான் பல பரபரப்பான வழக்குகளின் நிதர்சன நிலை.
தனஞ்சாயின் கருணை மனு குறித்து 2004ல் வந்த செய்திகள் எதுவும் நினைவில் இல்லை. தமிழகம் வரை இந்த செய்தி வந்திருந்தால், ஒரு பாலியல் குற்றவாளி தப்பிப்பதா என்று நிச்சயம் நாமும் அந்த கருணை மனுவுக்கு எதிராக நம் கைகளை உயர்த்தி இருப்போம் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. பொதுபுத்தியில் பீடிக்கப்படுவதும், காதில் விழும் விஷயங்களை மட்டுமே உண்மை என்று நம்பி உணர்ச்சிவசத்தில் கொந்தளிப்பதும் மனித இயல்பு தான். ஆனால், சில நேரங்களில் ஒரு அப்பாவி மனிதனின் உயிரை பறிப்பதில் கூட நம் கொந்தளிப்பு முடிந்து விடக்கூடும் என்பது எவ்வளவு துரதிர்ஷடவசமானது?
இவை மாதிரியான குழப்பமான, முடிவு எட்டாத வழக்குகள் இன்னும் எத்தனை? சுவாதி - ராம்குமார் வழக்கு முதல், மூன்றாம் குண்டு தான் காந்தியடிகளின் உயிரை பறித்தது, அந்த துப்பாக்கி கொண்டு சுட்டது யார் என்று மகாத்மா காந்தியின் கொலை வழக்கை சமீபத்தில் மீள் திறப்பு செய்தது வரை... எத்தனை எத்தனை வழக்குகள் எந்த தீர்மானமான ஆதாரங்களும், சாட்சிகளும் இல்லாமல், ஆனால் தீர்ப்பை நோக்கி மட்டும் அவசர அவசரமாக தள்ளப்பட்டு உள்ளன?
அப்படியென்றால் வரலாறு என்று நாம் நம்பிக் கொண்டிருப்பதெல்லாம் எவற்றை? உண்மையில் நடப்பது ஒன்று, வெளியில் வருவது இன்னொன்று, பதிவாவது மற்றொன்று, வரலாறு என்று கடத்தப்படுவது வேறு, அல்லவா? நிறபேதங்கள் போல உண்மைக்கும் பல முகங்கள், வரலாற்றின் பின்னால் இருக்கும் நிஜங்களுக்கும் பல நிழல்கள்; ஒருவிதத்தில் வரலாறும் ஒரு புனைவு தான்.
"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)
Subscribe to:
Post Comments (Atom)
-
மார்ச்' 30 வார கண்மணியில் எனது நாவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'தூரங்கள் நகர்கின்றன' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியாகி உள்ளது.
-
நினைவெல்லாம் செண்பகப்பூ நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக...
2 comments:
A very tragic happening for dhananjoy very sad ... Really we are all emotional idiots and media is playing with that ..... yes Hema History is also a modified one only not a true thing ... Your analysis is nice
True, History has many hidden factors. Thanks for your feedback, Cynthia.
Post a Comment