"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, May 14, 2018

காதல்

மிகுந்த யோசனைக்குப் பிறகு இந்த பதிவை இங்கு பதிவிடுகிறேன். அதீத புனிதமாக்கப்படும் எந்த விஷயமும் ஆபத்தானதே. அவரவர் கருத்து, விருப்பம், சாதி, கடவுள், மதம் தொடங்கி நட்பு, காதல் வரை சகல விஷயங்களுக்கும் இது பொருந்தும்.

காதல் குறித்த கற்பிதங்களும், மேன்மையாக்கிய புனிதங்களும் எல்லோரிடத்திலும் உண்டு. இதை இங்கே சொல்வது அனாவசியம். இருந்தும் ஒரு உதாரணத்திற்காக மட்டுமே குறிப்பிடுகிறேன். பட்டாம்பூச்சி பற பறநாவலில் நாயகனும் நாயகியும் ஒருவரையொருவர் விரும்புவார்கள். கொஞ்ச நாட்களில் வீட்டு சூழ்நிலையால் அந்த பெண் வேண்டாம், பிரிந்து விடுவோம்என்பாள். சொல்லி சொல்லிப் பார்க்கும் நாயகன் பிறகு ஒரு கட்டத்தில் சரி, லெட்ஸ் பிரேக் அப்என்று முடித்து விடுவான். இது குறித்து சில மறைமுக விமர்சனங்கள் வந்தன. அது எப்படி? வேண்டாம்னா உடனே விட்டுட்டு போயிட்டா அப்புறம் என்ன லவ் இருக்கு? அவளை கட்டாயப்படுத்தியாவது கல்யாணம் செய்துக்க வேண்டாமா? அவன் காதலில் ஆழமே இல்லைஎன்பது போல. இதை சொன்னவர்களில் ஓரிரு எழுத்தாளர் நண்பர்களும் உண்டு. அவர்கள் சொன்னதில் எந்த தவறும் காணவில்லை. அந்த கதை குறித்த அவர்கள் எண்ணம் அது. இது போல நிஜ வாழ்வில் ஆதரிக்காததை நம்மையுமறியாமல் கற்பனைகளில் ஆழ்த்தி வலியுறுத்த செய்யும் அலாதியான லாகிரி தரும் வஸ்து இந்த காதல்.
இந்த சோ கால்ட் லவ்மீதான பிரேமை தான் கடத்தி சென்று காதலிப்பவனை, துரத்தி துரத்தி காதலிப்பவனை திரையில், எழுத்துகளில் ரசிக்க வைக்கிறது. நாட்கணக்கில் பெண்ணை அடைத்து வைத்து காதல் சொல்லி கொடுமைப்படுத்தும் ஆணும், அவனது நேசத்தின் அளவில் மயங்கி கடைசியில் அவனையே உருகி உருகி காதலிக்கும் நாயகியும் வாசிப்பவரை எப்போதுமே பரவசப்படுத்துகிறார்கள்.
ஒருவகையில் பார்த்தால், கண்ணுக்குத் தெரியாத மிக சின்னதான குரூரம் எல்லோர் மனதிலும் ஒளிந்திருக்கிறது. இந்த குரூர ரசனை தான் வன் காதல்களை சிலாகிக்கவும், ஒருதலை காதல்களை, வாழ்நாள் முழுவதும் பின்தொடரும் காதல்களை தெய்வீகத்தன்மையுடன் போற்றவும் செய்கிறது. ஹிட் அடித்த நிறைய சினிமாக்களை இதற்கு உதாரணம் சொல்லலாம். ஆசைப்படும் பெண்ணின் மீது அளவுக்கு மிஞ்சிய போதையாக வெளிப்படும் இந்த மேன்மையான காதல்தான் ஒருவேளை புறக்கணிக்கப்பட்டால் ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் பெருக்கி ஆசிட் பாட்டில்களாகவும், கத்திக் குத்துகளாகவும் உருமாறி ஆளையே கொல்லும் வக்கிரமாக வடிவெடுக்கிறது.
உண்மையில் அடுத்தவரின் விருப்பு வெறுப்பு, வாழ்க்கை, உயிர் இவற்றுக்கும் மேலான புனிதம் நிரம்பியதா காதல்? இல்லை, நிச்சயம் இல்லை. இதை சொல்வதால் சில காதல் காவலர்கள்கோபப்படலாம். போகட்டும்.
எந்த விழுமியங்களும் இல்லாமல் அக அழுக்குகளை அப்படியே அப்பட்டமாக வெளிக்காட்டுகிற இந்த புரட்சியுகத்தில் காதல் என்ற பெயரால் நிகழும் அத்துமீறல்களுக்கு சாதாரண சக மனிதராய் நம்மால் வேறு என்ன செய்ய முடியும்? சமூக வலைதளங்களில் அறச்சீற்றம் காட்டுவதை தவிர. வேண்டுமானால் நம்மளவில் சிலவற்றை முயலலாம்.
வலுக்கட்டாயமாக தாலி கட்டி அதை நியாயப்படுத்தும், “உன்னை கொன்னாவது என்னோடு தூக்கிட்டு போயிடுவேன்வகை சினிமாக்களை, எழுத்துக்களை யாரும் தடுக்க இயலாது. வியாபாரம் கருதி அவை வந்து கொண்டுதான் இருக்கும். இயன்றால் அவரவர் வரை தவிர்த்து புறந்தள்ளி செல்லலாம்.
நம் வீட்டு ஆண், பெண் பிள்ளைகளிடம் காதல் என்ற வார்த்தையை கொலைக் குற்றமாகவோ, அருங்காட்சிப் பொருளாகவோ மறைத்து வைக்காமல் அடுத்தவரின் மென் உணர்வுகளை பரஸ்பரம் மதித்து நடக்கக் கற்றுக் கொடுக்கலாம். மற்றவரை வருத்தி வர வைப்பதல்ல காதல். ஒரு மலர் இதழ் விரிக்கிற மென்மையுடன் இரண்டு பக்கமும் அழகாய் மலர வேண்டியது, அந்தப் பக்கம் பூ பூக்கவில்லையென்றால் கண்ணியமான புன்னகையோடு கடந்து விடுவது தான் நாகரீகம்நட்புத் தொனியில் இயல்பாக உரையாடி ஒரு புரிதலை உருவாக்கலாம்.
     நம் வீட்டு ஜன்னல், கதவு, தரை, சுவர்களை அழுக்கு இல்லாமல் துடைத்து வைப்பது மட்டுமே நம்மால் இயன்ற மார்க்கம். வாழு, வாழ விடுஎன்பதை திரும்பத் திரும்ப நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதை தவிர, மனிதம் காக்கும் எளிய சூத்திரம் வேறு ஒன்றுமில்லை.
      “Love is Divine whereas respecting each other’s space will be more Sanctity”

09 Mar 2018 முகநூல் பதிவின் #மீள் 

2 comments:

Anonymous said...

Wonderful post mam.....Absolutely correct

HemaJay said...

நன்றி சூர்யா!