"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Wednesday, February 14, 2018

உனக்கென்ன !!!?

“உனக்கென்ன !!!?” எள்ளலாக, புகைச்சலுடன் ஒலிக்கும் இந்த வார்த்தையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் சுறுசுறுவென்ற எரிச்சல் பற்றிக்கொண்டு வரும். வெறும் நிமிடக்கணக்கில், மணிக்கணக்கில் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அடுத்தவரின் வாழ்க்கையைப் பற்றி என்ன புரிதல் இருக்கும்? இதில் அர்த்தமில்லா அல்ப விஷயங்களுக்கெல்லாம் ஒப்பிட்டு அனல்மூச்சு விடுவது???!!!


பொறாமை என்பது மனிதனின் ஆதி குணம், அதை 16 * 16 ஆக என்லார்ஜ் செய்து முகத்தில் ஒட்டியபடி அப்பட்டமாக வெளிக்காட்டுவதில் தான் சிக்கலே. ‘நான்(ங்கள்) கடந்து வந்த சிரமங்களை கஷ்டங்களை, எதிர்கொள்ளும் அழுத்தங்களைப் பற்றி ஏதேனும் தெரியுமா? சொன்னால் முழுதாக புரிந்து கொள்ளக் கூட உங்களால் முடியாது’ நேருக்கு நேராக பட்டென்று கேட்கத் தோன்றுவதை அடக்கி, சௌஜன்யம் கருதி சிரித்து வைத்தாலும் உள்ளுக்குள் அரிக்கும் நமைச்சலில் அன்றைய அமைதி குலைந்து போவது நிச்சயம்.
தனக்கு அமைந்துள்ள ஆசிர்வாதங்களை, பெறுமானங்களை உணராமல் தத்தம் வாழ்வில் திருப்தி கொள்ளாதவர்களே அடுத்தவரைப் பார்த்து பொருமுகிறார்கள் என்று இப்போது மெல்ல மெல்ல புரிந்துகொள்ள முயல்கிறேன். எரிச்சலாவதை விடுத்து அவர்களது அறியாமையின் மேல் சிறு பரிதாபம் காட்டி கடந்து செல்வதே நம் மனநலனுக்கு சாலச்சிறந்தது – இப்புரிதலை சமீப நாட்களாய் வலிய வரவழைத்துக் கொள்ளும் பிரயத்தனம் உள்ளது.

இதில் இரண்டு நன்மைகள். #1. மனதின் புழுக்கம் மைனஸ். இரண்டாவது ‘நானும் வளர்கிறேனே’ என்பதில் மகிழ்ச்சியே (இனிமே உயரமா தான் வளரமுடியாது. அட்லீஸ்ட் இப்படியாவது வளரலாம்) இந்த பக்குவம் முழுமையாக கைவரவில்லை எனினும், கொஞ்ச நேரம் புலம்பி, வீட்டில் அகப்பட்டவர்களின் காதை பஞ்சர் செய்து, பின் ‘தொலையட்டும், ஜஸ்ட் இக்னோர்’ என்று நகர முடிகிறது. வயது ஆக ஆக ‘எருமையினும் பொறுமையாக’ இருக்கும் கொஞ்சநஞ்ச சுரணையும் மங்கிப் போகும் என்று உறுதியாக நம்புகிறேன்.

“உன்னை பிறரோடு ஒப்பிட்டுக் கொள்ளும் ஒவ்வொரு கணமும் உன் சக்தி விரயமாகிறது. உன்னை உன்னோடு ஒப்பிட்டுக் கொள்கிற ஒவ்வொரு தருணத்திலும் உன் வளர்ச்சி நிகழ்கிறது” – புத்தரின் மொழியாக திரு. சுகி சிவம் தன் உரையில் குறிப்பிட்டது - #கேட்டதில்_பிடித்தது.

No comments: