"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Thursday, February 1, 2018

புன்னகை என்ன விலை?

ஒரு குட்டிக்கதை...

"காலங்கார்த்தாலே எவ்ளோ ட்ராபிக் பாரு?" ஒரு கையில் காபி மக்கும், மறுகையில் ஸ்டீரிங்குமாக தீபக் போக்குவரத்தில் கலக்க, "மண்டேல.. அதான்" பக்கத்திலிருந்த சுஷ்மா காம்பேக்ட்டை ஒற்றிக்கொண்டாள். "ஓ.. மை காட்.. எட்டு இரண்டு ஆச்சு. எட்டேகால் ட்ரைன் போயிடும்.. சீக்கிரம் போங்களேன்." நேரத்தை கவனித்தவள் அவசரமாக லிப்ஸ்டிக்கை சரிசெய்ய, "போயிடலாம், டோன்ட் வொர்ரி" தீபக் ஆக்சிலேட்டரை முழு வேகத்தில் அழுத்தினான்.

அடுத்த நான்காம் நிமிடம், பின்னால் மஞ்சள் சிகப்பு ஒளி. "ஏன்? என்னாச்சு? ஓரங்கட்டுறீங்க?" குழப்பமாய் திரும்பிய சுஷ்மா, தங்கள் பின்வந்த போக்குவரத்துக் காவலரின் வண்டியைப் பார்த்து "ஓஹ்.. புல்-ஓவரா? " சீட்பெல்ட்டை அணிந்தபடியே அலறினாள்.

இவர்கள் வண்டியை ஓரங்கட்டவும் அருகே வந்து குனிந்து பார்த்த காவலர், “குட்மார்னிங் ஜென்டில்மேன்.. நாற்பதில் போக வேண்டியது. ஐம்பத்திநான்கில் போயிருக்கிறீர்கள். உங்கள் பேப்பர்ஸை கொடுக்க முடியுமா?” முறுவலுடன் வினவ, மனதுக்குள் புலம்பியபடியே தீபக் எடுத்துக் கொடுத்தான். “இரண்டு நிமிடம் காத்திருங்கள்” அவர் தன்னுடைய வண்டிக்கு சென்றுவிட, இங்கோ இருவருக்குமிடையே கனத்த அமைதி!

“நான் லிமிட்குள்ள தான் போனேன்..” நெற்றி வியர்வையை துடைத்தபடி சொன்ன தீபக்கை ‘நிறுத்து’ என்பது போல கையை மறித்தாள் சுஷ்மா. “எனக்கு அப்பயே தெரியும். பேய்கணக்கா ஓட்டவேண்டியது. ஸ்பீட்-லிமிட் பார்த்து போகத்தெரியாது? எப்பப்பாரு இதே வேலை..” அவள் முறைக்க, தீபக்கின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கத் தொடங்கியது.

“எல்லாம் உன்னால தான். ‘யாரு சீக்கிரம் போ...சீக்கிரம் போ’ன்னு துரத்தினது?”

“யாரு நானா? லேட்டா எந்திருச்சு லேட்டா கிளம்புனது யாரு?”

“நைட் முழுக்க வேலை பார்த்திருக்கேன். உன்னை மாதிரி குறட்டை விட்டு தூங்கல. அந்த சொட்டத்தலையன் போனதும் கேள்வி மேல கேள்வி கேட்பான். உங்கப்பாவா வந்து பதில் சொல்லுவாரு?”

“அனாவசியாம எங்கப்பாவையெல்லாம் இழுத்தீங்க.. அப்புறம் அவ்ளோ தான் பார்த்துக்குங்க..” பேச்சு தடித்துக்கொண்டே சென்றதில் சுற்றிலும் வீசிய ஜூலை மாதக்காற்று மேலும் அனலடித்தது.

“இந்த திமிரு தான் எனக்கு பிடிக்காது. பொண்ணாடி நீ?”

“இல்ல பொண்ணு இல்ல.. பையன்.. போதுமா?”

“அதுதான் தெரியுமே... கொஞ்சம் வாயை மூடுறியா..?

“நான் ஏன் வாயை மூடணும்? உங்க கொழுப்புக்கு இது கூட பேசலைனா அவ்ளோ தான். என்கிட்டே எகிறதுக்கு மட்டும் தான் லாயக்கு. வருவாரு உங்க மாமா.. டிக்கெட்டை வாங்கி நூறு நூத்தம்பது டாலர்னு கப்பம் கட்டுங்க..” வாக்குவாதம் தீவிரமாகியதில் இருவரின் முகத்திலும் கோபச்சிவப்பு போட்டிப் போட்டது.

“டொக்.. டொக்”

ஜன்னல் வழிவந்த சப்தத்தில் வேகமாக வாயை மூடி இவர்கள் திரும்ப, “இதோ உங்கள் ஆவணங்கள்... இன்சூரன்ஸ் இந்த வாரத்துடன் முடியப்போகிறது. கவனித்துக் கொள்ளுங்கள்” அந்த காவலர் தாள்களை திரும்பக் கொடுத்தார்.

“தேங்க் யூ.. பட் டிக்கெட் எவ்வளவு..?” தீபக் இழுக்க, “நோ டிக்கெட்... வெறும் வார்னிங் தான். திங்கள் காலையில் டிக்கெட் கொடுத்து உங்கள் இனிமையான வாரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை கொஞ்சம் மெதுவாக மட்டும் செல்லுங்கள் ஜென்டில்மேன். லிட்டில் ஸ்லோ.”

மென்மையாக சொன்னபடி அவர் அகலமாக புன்னகைத்ததில், அவ்வளவு நேரம் தாங்கள் நடத்திய சொற்போர் அனைத்தும் அர்த்தமற்ற வீண் வார்த்தைகள் என்பதை உணர்ந்த தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் வெட்கத்துடன் பார்த்துக் கொண்டார்கள், அவர் மின்சாரமாய் கடத்திய புன்னகையை தாங்களும் அணிந்தபடி.

4 comments:

ரிஷபன் said...

very nice

HemaJay said...

நன்றி ரிஷபன் சார் !

Mini said...

Very practical and nice.

HemaJay said...

Thank you Mini. So glad to hear back :)