"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Monday, May 14, 2018

அமிழும் நிகழ்கள்


பனிமலர் மே - 2018 இதழில் வெளியான சிறுகதை : 

ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்த நிமிஷம் குழந்தைகள் இருவரும் அந்த பன்னாட்டு உணவு விடுதியை நோக்கி ஓட, “ஏன்டா... எப்பப்பாரு அந்த கோழிக்காலேதான் வேணுமா?” சலித்துக்கொண்டே பின்னால் நடந்தாள் பிருந்தா. “இங்கயே என்ன வேணுமோ சாப்ட்டுட்டு வந்துடுங்க. வீட்டுக்கு போய் ‘தோசை ஊத்தேன், தயிர்சாதமாச்சும் கொடேன்’னு படுத்தாதீங்க...” என்னிடம் திரும்பியவள் அழுத்தமாக சொல்ல, சிரிப்போடு முறைத்தேன். “ஆமா. அப்படியே கேட்டவுடனே செஞ்சு கொடுத்துட்டுத்தான் மறுவேலை பார்ப்ப பாரு...” உள்பாக்கெட்டில் வைத்த கார் பார்க்கிங் ரசீதை நெருடியபடி உட்கார்ந்தபோதுதான் கவனித்தேன்.


இருபதடி தூரத்தில் வேறொரு உணவுவிடுதி கவுண்டரில் ஆர்டர் சொல்லிக்கொண்டிருந்த உருவத்தை எங்கேயோ பார்த்த ஞாபகம். தாடியில்லாத முகமும், சந்தனநிற சட்டை அடர்சிகப்பு பேண்ட் என்றிருந்த சீருடையும் தான் வித்தியாசமாக தெரிந்ததே தவிர, இடதுகாலை வலது மூட்டின் பின்பக்கம் ஊன்றியபடி நின்ற பாங்கும், முழங்கையை உள்ளங்கை கொண்டு தேய்த்த அந்த மேனரிசமும்... பளிச்சென்று மனதுக்குள் மின்னலடிக்க, ‘இவரு... இவரு.. அமுதம் அண்ணனா இது...?’

ரொம்ப வருடங்கள் கழித்து பழகிய ஒருவரைப் பார்த்த சந்தோசத்தில் என்னையுமறியாமல் உடலெங்குமொரு பரபரப்பு. யாரென்று தெரிந்தும் உடனே பக்கத்தில் போய் பேச முடியாமல் அவர் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்க, என் பார்வை அவரறியாமல் அவரையேத் தொடர்ந்தது. இரட்டை நாடி சரீரத்தில் தடிமனாய் இருந்தவர் இப்போது மெலிந்து போயிருக்க, அவருடைய தளர்வில் கடந்து போன காலத்தின் ரேகை அழுத்தமாகவே பதிந்திருந்தது. ‘வருஷம் தான் எவ்வளவு வேகமா ஓடுது?’ நினைக்கும்போதே மலைப்பாய் இருந்தது.

நான் வேலை தேடி இரண்டாயிரத்தில் சென்னை வந்திறங்கிய நாளிலிருந்து இதே வேளச்சேரி தான் எனக்கு புகலிடம். மாநகரின் எல்லைகள் விரிந்து புறநகரங்கள் எல்லாம் பரபரப்பின் முகத்தை தத்தெடுக்கத் தொடங்கிய ஆரம்பநாட்கள் அவை. பறக்கும் வாகனங்களோ, நெரிக்கும் போக்குவரத்து திணறலோ இன்றைய அளவுக்கு இல்லாமல் குண்டும் குழியுமான இருபதடி சாலைகளில் மழைவாசம் துவங்கும்போதே மண்ணில் குளம் கட்டிவிடும் அப்போதெல்லாம்.

நான்காயிரம் வாடகையை ஐந்து பேர் பிரித்துக்கொண்டு வயிற்றுப்பாட்டிற்காக மெஸ்களையும் கையேந்தி உணவங்களையும் தேடித் திரிந்த வசந்த காலமது. சோறு கிடைக்குமிடம் சொர்க்கம் என்றிருந்த நாட்கள். மாதத்தின் முதல்வாரம் காசு புரள்கையில் சில பல ‘பவன்’களை சோதித்துப் பார்த்துவிட்டு பிறகு வேகமாக தரை இறங்கிவிடுவது வழக்கம். அப்போதுதான் உடனுறைந்த நண்பன் மூலம் ‘அமுதம்’ அறிமுகமானது. கங்கையம்மன் கோவில் இரண்டாவது தெருவில் மாலை நான்கு மணிக்கு திறந்து பதினோரு மணிக்கு அடைத்து விடும் சிறிய கடை. டிபன், சாப்பாடு என்றெல்லாம் இல்லாத வெறும் பலகார வியாபாரம் தான். ஆனால் கூட்டம் அப்படி அள்ளும். உருப்படிகள் போடப்போட தீர்ந்து விடுமென்பதால் காத்திருந்துதான் வாங்கிப்போக வேண்டும்.

நாள் முழுவதும் அலையும் மார்க்கெட்டிங் பணி எனக்கு; மாலை நடக்கும் ரிவியூ மீட்டிங்கில் வாங்கிக் கட்டிக்கொண்டு வீடு வந்து சேருகையில் ‘கவா கவா’வென்று காந்தி எரியும் வயிறு. தின்றும் திங்காமலும் கழிந்த பகலுக்கு ஈடாக இரவில் ஒரு பிடி பிடித்து விடுவது. அப்போதெல்லாம் பர்ஸை பதம் பார்க்காமல் வயிற்றை நிறைத்து நாக்கின் சுவை நரம்புகளை மீட்டெடுத்தது இந்த அண்ணனுடைய கைப்பக்குவம் தான். பெரும்பாலும் ‘அமுதம்’ வாசல் தான் எங்களின் கூடுதுறை. எட்டு எட்டரைக்கு ஒன்றாக கூடி கதையடித்துவிட்டு பத்து பதினோரு மணிக்கு மேல் கூடடைவோம். மேனேஜர்களையும் குழுத்தலைவர்களையும் மென்றபடி வாய்ப்பேச்சு பேச்சாக இருக்க, சோம்பு மணக்கும் மசால்வடையும், மொறுமொறுவென வாழைக்காய் பஜ்ஜியும் சமோசாவும் அதுபாட்டுக்கு உள்ளே இறங்கிக்கொண்டிருக்கும்.

என்னதான் கும்பல் நெருக்கினாலும் கடையில் வெறும் இரண்டே இரண்டு பேர் தான், இவரும் இவர் மனைவியும். கருப்பு கரைவேட்டியை தூக்கிக் கட்டிக்கொண்டு ஒரு காலை மடித்து இன்னொரு காலில் ஊன்றியபடி இவர் நிற்பதேவொரு விசித்திரத் தோரணை. அவ்வளவு பெரிய வாணலிக்கு முன்னால் நின்றுகொண்டு இரண்டு பெரிய ஜல்லிக்கரண்டிகளை விட்டு புரட்டுகையில் அந்த முகத்தில் ஏதோ வேள்வி செய்யும் பெருமிதம் ஒளிவிடும்.

உள்ளங்கையில் அசால்ட்டாக அவர் தட்டி போடும் வடை ஒவ்வொன்றும் காம்பஸ் வைத்து வரைந்தது போலான வட்டத்தில் பொன்னிறமாக பொரிகையில் அதற்காக காத்துக்கொண்டு நிற்கும் கண்கள் முழுவதும் அந்த எண்ணெய் சட்டியில் தான் பதிந்திருக்கும். நம்மையும் அறியாமல் தொண்டை எச்சில் விழுங்கிக்கொள்ளும். அவர் வாழைக்காய் சீவும் லயத்தையும், ஒன்றை பார்த்தது போல அச்சடித்த தினுசில் உருளை போண்டாக்களை மாவில் தோய்த்துப்போடும் அழகையும் ரசித்துக்கொண்டு நிற்பதே ஒரு நூதன அனுபவம்.

ஒரு முறை கூட எந்தவொரு பலகாரத்தின் வடிவமோ, நிறமோ, சுவையோ துளி கூட மாறியதில்லை. அந்த அக்கா ஒரு பக்கம் வெங்காயம் நறுக்கிக்கொண்டே இன்னொரு புறம் சமோசாவுக்கு மடிக்கும். மறுபக்கம் கல்லாவையும் பார்த்துக்கொண்டு வியாபாரத்தை கவனிக்கும். சுற்றி சுற்றி சுழலும் பம்பரம் போல அப்படி ஒரு சுறுசுறுப்பு. ஒரு பேச்சு, ஒரு பார்வை அனாவசியமாய்.. ம்ஹும்...இருக்காது. கர்மயோகிகளை போல நிமிர்ந்து பார்க்காமல் வேலை செய்யும் இந்த தம்பதிகளைப் பார்த்தால் ஒரு பக்கம் ஆச்சர்யமாக இருக்கும். “சாதாரணமா நினைச்சுடாத. அவங்க தாத்தா, அப்பால்லாம் சென்ட்ரலாண்ட ஹோட்டல் வச்சு கொடி கட்டி பறந்த குடும்பமாம். இவருக்கு வந்த பங்கை வச்சு தேனாம்பட்டைல கோ-ஆப்டெக்ஸ் பக்கத்துல ஒரு டிபன்சென்டர் வச்சிருந்திருக்காரு. நல்ல ஓட்டம் தானாம். ஆனா அங்க வாடகை ஏற ஏற ஒரு கட்டத்துல சமாளிக்க முடியாம மூடிட்டு இங்க வந்து இதை ஆரம்பிச்சுருக்காங்க. செல்வாக்கா இருந்துட்டு திரும்பவும் மாஸ்டர் வேலை பார்க்கிறாரேன்னு அந்தக்காவுக்கு தான் ரொம்ப வருத்தமாம்.” சுகுமார் தான் ஒருமுறை சொன்னான். “உனக்கு எப்படிடா தெரியும்?” செந்தில் கேட்க, “அந்த அண்ணனே ஒருக்கா சொன்னாரு” என்றான். அதற்கு மேல் அவர்களைப்பற்றி நான் யோசிக்கவில்லை.

அந்தவருட தீபாவளி சமயம் டிக்கெட் கிடைக்காததால் ஊருக்கு போக முடியாமல் போக, மற்ற உணவு விடுதிகள் எல்லாம் மூடியிருந்ததில் இவர் தான் பசி தீர்த்து புண்ணியம் தேடிக்கொண்டார். மழையில் நனைந்ததில் காய்ச்சல் வாட்டி எடுக்க, காய்ந்த பிரட்டுக்கு உருளை மசாலாவும், தண்ணீர் சாதத்திற்கு வடையும் மிக்சரும் என அந்த வாரம் முழுக்க இவரை நம்பியே மாத்திரை விழுங்கிக் கொண்டிருந்தேன்.

உடம்பு கொஞ்சம் தேவலாம் என்றாக, அந்த நன்றியில், “என்னண்ணா படிக்குறாங்க?” கடைக்குள் உட்கார்ந்து காகித-கவர்கள் செய்து கொண்டிருந்த அவர் மகள்களை சுட்டிக் கேட்டேன். “பெரியவ ஏழாவதுப்பா... சின்னது மூணாவது” என்றவர், என்ன நினைத்தாரோ, “இதுங்க இரண்டுக்கும் எப்படியாச்சும் ஒரு நல்ல வழி பண்ணிடனும்.” என்றார் அவராகவே. பண்டிகைப் பொழுதில் அவர் மனமும் கொஞ்சம் நெகிழ்ந்திருக்க வேண்டும். “அப்புறம் நீங்க எந்த ஊரு?” எப்போதுமே பேசாதவர் தன் மௌனத்தை கடந்திருக்க, அந்தக்கா அப்போது கூட தலையையுயர்த்தி எங்களைப் பார்த்ததே தவிர, ஒன்றும் சொல்லாமல் கடைவாசலை பெருக்கிக் கொண்டிருந்தது.

அதற்குப்பிறகு அங்கு போகும் நேரங்களில் கூட்டம் இருந்தால் ஒரு அறிமுகப் புன்னகை கொடுத்து விட்டு அமைதியாக இருப்பவர், கதவடைக்கும் சமயமெனில் கலகலவென பேசுவார். சில நேரம் ஏதோ யோசனையில் மூழ்கிப்போன மோனத்தோற்றத்தில் இருந்தால் தொந்தரவு பண்ணாமல் வந்துவிடுவேன். ஓரிரண்டு வருடங்களில் அலுவலகம் மாறி விட, நானும் அறையை மாற்றிக்கொண்டு தாம்பரம் போனேன். எப்படியும் நண்பர்களை பார்க்க வரும்போது எட்டிப் பார்த்து விடுவது. “என்ன சந்துரு சாரை பார்க்க வந்தீங்களா?” என்று விசாரிப்பார்.

“என்னண்ணா போன வாரம் கடை போடலியா? இந்த பக்கம் போனேன். நீங்க இல்ல”

“எங்க? எலெக்ஷன் மீட்டிங் போட்டுட்டாங்க. அப்ப கடை போட்டா சுத்தப்பட்டு வராது. எல்லாத்தையும் ஓசியிலதான் கொடுக்கணும். வர்ற ஒரு பைசா, இரண்டு பைசாவை ஆளாளுக்கு கப்பம் கட்டவே சரியா போகுது“ புலம்பலைக்கூட சிரித்தபடியே சொல்லும் புன்னகை படிந்த கண்கள். “இந்தா.. அந்த அரவணை பாயாசத்தை இலையில கட்டிக்கொடு. போன வாரம் மலைக்கு போய்ட்டு வந்தேன் தம்பி” ஸ்பெஷலாக எதையாவது கொடுத்து தனிப்பட்ட முறையில் கவனிப்பும் நடக்கும்.

நாட்களின் ஓட்டத்தில் எனக்கும் திருமணமானது. மேடவாக்கத்தில் வீடு வாங்கியபின்னால் அலுவலகத்திலிருந்து வரும் வழியில் வேளச்சேரியை தொட்டுவிட்டு வருவது வழக்கமானது. வேறு வேலைகள் இருந்தாலும் கூட, பல நேரங்களில் இவருடைய நளபாகம்தான் என்னை கட்டியிழுத்து அதே பாதையில் செல்லத் தூண்டும். வீட்டில் அம்மாவும் மனைவியும் கூட கிண்டலடிப்பார்கள். “ஏன்டா..உனக்கென்ன மசக்கையா? தினமும் ஒரு பொட்டலத்தை பிடிச்சிட்டு வந்துடுற” அண்ணன் வேண்டுமென்றே வெறுப்பேற்றுவான்.

பிறகு பைபாஸ் வந்த பின்னால் அவர் கடையையொட்டி செல்லும் பிரதான சாலை ஒருவழிப் பாதையானது. காரை வைத்துக்கொண்டு போக்குவரத்தில் நீந்தியபடி அந்தப்பக்கம் அதிகம் போக முடியவில்லை. மெல்ல தொடர்பு இளகிக்கொண்டே வந்தாலும் என்னைப் பார்த்த நிமிடம் சின்ன சிரிப்புடன் அவர் நலம் விசாரிக்க மறந்ததில்லை. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் பார்த்தபோது சாலையின் முடிவில் பெரிய அளவிலான கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. நூறு ரூபாயை அந்தக்காவிடம் கொடுத்துவிட்டு அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “அங்க என்னண்ணே வர போவுது?”

“ஏதோ வெளிநாட்டு ஹோட்டலாம் தம்பி” என்றார். அதுதான் ‘பீனிக்ஸ் மால்’ என்று அப்போது எங்களுக்குத் தெரியாது. எல்லோரும் “ஹோட்டல் வருது”, “இல்ல தியேட்டராம்” “பெரிய பெட்ரோல்-பங்க் வருதாம்” இப்படித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். “இந்தாங்க....” அந்தக்கா நீட்டிய பொட்டலத்தை வாங்கியபடி மீதி சில்லரையை எண்ணியவன், “என்ன கணக்குக்கா?” நான் கேட்க, “ஒண்ணு அஞ்சு ரூபாங்க...மொத்தம் பண்ணெண்டு உருப்படி...” காதில் விழுந்த விவரத்தில் சுள்ளென்று எரிச்சல் பொங்கியது.

“என்னண்ணே விலையை ஏத்திகிட்டே போறீங்க?” என் குரலில் அந்தக்கா பட்டென்று ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு அடுத்தவருக்கு கட்ட ஆரம்பித்துவிட்டது. “என்ன தம்பி பண்ணுறது? ஒவ்வொண்ணும் விலையேறிக் கெடக்குதே. வாங்கிக்கொட்டுற வெங்காய விலைக்குக்கூட கட்டி வர மாட்டேங்குது” அவர் தான் மெல்லிய குரலில் சமாளிக்கிறமாதிரி சொன்னார்.

“ம்..ம்..” அதிருப்தியாக முனகியபடி நான் தொடர, “ஏந்தம்பி நீங்க வேற?” அவர் சகஜப்படுத்துகிறமாதிரி சிரித்தாலும், “ஆமா போங்க. இந்த அரைக்காசு கால்காசுல தான் நாங்க கோட்டை கட்டிடப் போறோம்” அவர் மனைவி வெடுக்கென்றதில் எனக்கு ஒருமாதிரியாகிவிட்டது. மேலே ஒன்றும் பேசத்தோன்றவில்லை. அவரிடம் சொல்லிக்கொள்ளாமல் கூட கிளம்பிவிட்டேன். அதற்கப்புறம், என்னமோ சொல்லத்தெரியாத ஊமைக் கோபத்தில் ரொம்ப நாட்கள் அந்த பக்கமே செல்லவில்லை.

மூன்றாண்டுகளுக்கு முன்னால் வேறொரு வேலைநிமித்தம் போனபோது அவர் கடையிருந்த சுவடே தெரியவில்லை. சாலையை மொத்தமாய் அடைத்துக்கொண்டு ஒரு பிரபல உணவகத்தின் கிளை திறந்திருக்க, இவர்கள் எங்கே போனார்கள், என்னவானார்கள் என்ற கேள்வி கொஞ்சநேரம் மனதை குடைந்தது உண்மை தான். ஆனால் அதற்குமேல் யோசிக்க, தேடிப்பார்க்க யாருக்கு இங்கே பொழுதிருக்கிறது?

இப்போது இத்தனை வருடங்கள் கழித்து அதே பீனிக்ஸ் மாலில் இவர். அதுவும் வெயிட்டராக. கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவர் கொஞ்சம் ஓய்வாக தெரிந்த நேரம் அருகில் சென்று “என்னை தெரியுதாண்ணா?” என்றேன். அண்ணனென்ற விளிப்பில் புருவம் சுருங்கியவர், அடுத்த நிமிடம் புரிந்துகொண்டு பெரிதாகப் புன்னகைத்தார். அந்த சிரிப்பில் யாரென தெரிந்து கொண்ட அன்னியோன்யமும், கூடவே இனம் விளங்கா சங்கடமும் விரவிய பிரமை எனக்கு.

“நல்லா இருக்கீங்களா சார்?” என்றார். “என்னண்ணே சார்னு எல்லாம் சொல்றீங்க..? என்னையுமறியாத வேகத்தில் அவர் கையை இழுத்துப் பற்றிக்கொண்டேன். ”இங்க தான் வேலை பார்க்குறீங்களா? அக்கா புள்ளைங்க எல்லாம் நல்லாருக்காங்களா?” சிறு கூச்சமும் சிரிப்புமாக கையைக் கொடுத்துவிட்டு நெளிந்தவர், ”நல்லா இருக்காங்க. பெரியவ அம்பத்தூர் எக்ஸ்போர்ட்ல வேலை பார்க்குறா.. சின்னது காலேஜ் படிக்குது. உங்கக்கா கூட கீழ ச்..ச்பென்சர்ல தான் வேலை பார்க்குறா.. சரக்கு அடுக்குற வேலை”

“எவ்வளவு நாளா இங்க இருக்கீங்க?” அசட்டுத்தனமான வினாதான் எனினும் பேச்சைத் தொடரவேண்டிய வேகத்தில் கேட்டுவிட்டேன். “ஒரு ஒண்ணு...ஒண்ணரை வருஷமா இங்கதான்”

“ஏண்ணே கடையை விட்டுட்டீங்களா?” வாயில் தொனித்துக்கொண்டிருந்த இந்த கேள்வியை எந்த சூட்சமசக்தி கேட்கவிடாமல் தடுத்து நிறுத்தியதோ தெரியாது. தர்மசங்கடமான அந்த வார்த்தைகளை நல்லவேளை, தொண்டையோடு விழுங்கிக்கொண்டேன். என் பார்வை அவருடைய நெஞ்சுப்பட்டையில் பதிய, கொட்டையாக தெரிந்தது அவர் பேர் - ‘பொன்சேகர்’.

எத்தனையோ வருடங்களாக பழகியும் சகமனிதனின் பெயரை முதன்முறையாக அறிந்து கொள்ளும் விந்தை!? என் கரத்தில் பொதிந்திருந்த அவர் உள்ளங்கையின் சூடு என்னுள்ளும் ஊடுருவ, உள்ளமெங்கும் பாரமாகிப்போன உணர்வு. இனிமேல் இந்த விரல்கள் பரபரவென சமோசாக்களை ஒட்டி எண்ணையிலிட்டு புரட்டப்போவதில்லை. சரசரவென பஜ்ஜிக்கட்டையில் சீவப்போவதில்லை, மணக்க மணக்க பண்டங்கள் தயாரித்து இனி எந்த பசித்த வயிறையும் குளிர்விக்கப் போவதில்லை.

அன்னப்பூரணனாக இருந்த ஒரு ஆளுமையின் நிலை இன்று? வெறுமனே ஆர்டர் எண்களை எழுதி அங்குமிங்கும் நடந்து ட்ரே சுமந்து அலையப்போகிறது, இந்த காய்ப்பு பிடித்த கரங்கள். இந்த எண்ணமே கனமாய் இறங்க, அதற்கு மேல் அவரிடம் என்ன கேட்க, என்ன பேசவென்று தெரியவில்லை. கண்ணாடி ஜன்னலுக்கு அப்பால் வாகனங்கள் அடர்த்தியாக ஊர்ந்து கொண்டிருந்தன, வளைந்து நெளியும் பாம்பு போல. நகரம் முழுவதுமே வெளிச்சப்புள்ளிகள்தான் என்பது போன்ற மாயத்தோற்றம். ஆனால், அதை ரசிக்கமுடியாமல் என் மனதிலோ விடைதெரியாத குழப்பங்கள்.

இதே நகரம் தான் எத்தனையோ குடும்பங்களில் விளக்கேற்றியிருக்கிறது. சாதாரண பின்புலம் கொண்ட எண்ணற்றவர்களின் வாழ்க்கையைத் தூக்கி உயரங்களில் வைப்பதும், கையில் பைசா இல்லாமல் ஊரை விட்டு ஓடிவந்தவர்களை உச்சாணிக்கொம்பில் இருத்தி அழகு பார்ப்பதும் இதே அழகிய மாநகரம் தான். பரம்பரையாக கூலிவேலை செய்யும் வீட்டிலிருந்து வந்த என்னை மாதிரி எத்தனையெத்தனை குஞ்சு குளுவான்களை வீடு, கார், கெளரவமான வாழ்க்கையென கையில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியிருக்கிறது!?

அதற்கெல்லாம் முற்றிலும் முரணாக, இதே நகரம் தான் இவரைப் போன்ற எளிய கனவுகளுடன் இருக்கும் மனிதர்களை சுழற்றியும் அடிக்கிறது. கையிலிருக்கும் சொற்பத்தையும் பிடுங்கிக்கொண்டு விளிம்பின் எல்லைகளுக்கு ஓட ஓட விரட்டி குரூரமுகம் காட்டும் அவலம். காற்றில் கரைந்து போகும் கற்பூரம் போல இவர்களின் இருப்பும், கனவும், லட்சியமும், சராசரி விருப்புவெறுப்புகளும் கூட எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் நலுங்கி நசுங்கிப் போகின்றன. நகரத்தின் பாரபட்சமில்லாத நெரிக்கும் கரங்களில் அகப்பட்டு அமிழ்ந்து எந்த சுவடும் இல்லாமல் இந்த நிகழ்கள் நம் கண் முன்னாலேயே கரைந்து மறைந்து போகின்றன. இவரை மாதிரி நாம் பார்க்க பார்க்க தங்கள் இருப்பை தொலைத்து காணாமல் போனவர்கள் எத்தனையெத்தனை பேர்?

என்னுடைய நீண்ட அடர்ந்த மௌனத்தை அவர் எப்படி புரிந்து கொண்டாரோ தெரியாது. “சரி தம்பி...ரொம்ப நேரம் நின்னு பேசமுடியாது. சூப்பர்வைசரு பார்க்குறாரு..” என்று கிளம்பியவர் இரண்டே நிமிடங்களில் திரும்பி வந்து ஸ்ருஷ்டியின் கையில் ஒரு சாக்லேட்பட்டையை திணித்துவிட்டு சிரித்தபடி நகர்ந்தார். “யாருங்க அது?” பிருந்தாவின் கேள்விக்கு “தெரிஞ்சவரு” சுருக்கமாக பதில் சொல்லிவிட்டு வந்திருந்த கனமான பில் தொகைக்கு கிரெடிட் கார்டை சொருகி மடித்தனுப்பினேன். “நீங்க ஒண்ணுமே சாப்பிடல. பேசாம இன்னொரு பக்கெட் ஆர்டர் பண்ணி வாங்கிட்டு போயிடலாம்” புலம்பியவளின் பேச்சை புறந்தள்ளி “ப்ச்..அதெல்லாம் வேணாம்..வா..பசியில்ல...” என்றபடி எழுந்துவிட்டேன்.

உண்மையிலேயே வயிறு முழுவதும் அடைத்துக்கொண்ட உணர்வு. ஒரு வகையில் அவருடைய இன்றைய நிலைக்கு நானும் கூட காரணி தான், உள்ளத்தில் ஊவாமுள் ஒன்று உறுத்தியது. “சீக்கிரமே பணக்காரரு ஆகிடுவீங்கண்ணே. விலையை இஷ்டத்துக்கு ஏத்திக்கிட்டே போறீங்க, போங்க... அந்த ஹோட்டலு கட்டுறது கூட நீங்க தானா?” நக்கலான, திமிரான, எள்ளலான அந்த கேள்வியை அன்று நான் அவரிடம் கேட்டிருக்கக் கூடாது. ‘சே... ஏன் அப்படி பேசினேன்?’ குற்றக் குறுகுறுப்புடன் நடந்தவனை தன் சுழலுக்குள் இழுத்து ஈர்த்துக்கொள்ள தயாராக காத்திருந்தது, வெளியே மாநகரம்.

8 comments:

Unknown said...

எப்பொழுதும் போல் அழகான எழுத்து நடையில்...எதார்த்தமான கதை....

ரிஷபன் said...

யதார்த்தம்

HemaJay said...

நன்றி மதிக்கா !

HemaJay said...

நன்றி ரிஷபன் சார் !

Anonymous said...

Really nice story....

HemaJay said...

நன்றி சூர்யா!

Mini said...

Manasila appadi oru vali intha kathaiya paditha pothu. Naam pala nerangalil vathaiyai panathai vaithu mattumae pesi vidukirom. vayil iruntha vantha varthai naamai ala arambithu vidum. vayil irukum mattumae athuku naam owner.

HemaJay said...

மிக்க நன்றி மினி. நீங்க சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.