"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Wednesday, May 15, 2019

காக்கை குருவி எங்கள் ஜாதி


ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரம் கழிந்தப் பிறகும் கூடக் குளிரும் பனியும் இங்கே குறையவில்லை. அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சூரியன் வெயில் ஆசையைக் காட்டிவிட்டு பின்னாடியே ஊதல் காற்றை அனுப்பி வைக்க இந்த வருட வானிலை ரொம்பவே போக்குக் காட்டுகிறது.


வழி முழுக்க நல்ல பனி கொட்டிக் கெடக்கு. காரை வேற வெளில நிறுத்தி வச்சிட்டேன். இப்ப துடைக்கணும்இவர் வாரியலை எடுத்தவாறு வெளியே செல்ல, ‘காலை வேளை, தாமதமாகிறதேஎன்ற கடுப்பில் கொட்டும் பனியை கடிந்தபடி மிச்ச சொச்ச பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தேன்.

வழக்கமாக இந்த நேரத்தில் நல்ல வெயில் வந்திருக்க வேண்டும். மார்ச் மாதத்தில் இளம்பிள்ளையைத் தொட்டு விளையாடுவது போல எட்டிப் பார்க்கும் சூடு, ஏப்ரல் மே மாதங்களில் நன்றாகக் காயத் துவங்கும். ஜூன் ஜூலையில் வெள்ளைத்துணியை விரித்துப் போட்டு ஜவ்வரிசி வத்தலே பிழியலாம். அவ்வளவு கொளுத்தும்.

அதே இந்த ஆண்டு!? நவம்பர் துவங்கி இந்த மார்ச் வரை தீவிர பனிப்பொழிவு. கூடவே கடுமையான மழையும் புயலும். இப்போது விடும், அப்போது விடும் என்று பார்த்தால், ம்ஹும். இந்த நிமிடம் வரை குளிர் விட்டபாடில்லை.

ஆரி ஸ்நோ கோட் எடுத்துட்டுப் போனாளா இல்லையா? கவனிக்கலையே, பிள்ளை நனைஞ்சுருப்பாளோ?’ வேகமாய் அவள் அலமாரியை தேடி அந்த மேலங்கி இல்லாமல் போனதில் நிம்மதியாய் மூச்சு விட்டேன்.

பால்கனியில் பனியில் நனைந்து ஆடிக் கொண்டிருந்தது பன்னீர் ரோஜா செடி. வெயில் வந்துடுச்சுன்னு நம்பி போன சனிக்கிழமை வாங்கிட்டு வந்தது. துளிர்க்குமா? சந்தேகம் தான். துளிரைப் பனி தின்னுடும். போட்ட காசு வெட்டித் தண்டம் 

இந்த வாரம் ப்ளான் பண்ணின ட்ரெக்கிங் போக முடியாது. இன்னிக்கு ஜானுகிட்ட பேசி கேன்சல் பண்ண சொல்லணும்.

இந்தக் குளிர் குறைஞ்சா இல்ல, ‘ஹீட்டுக்குக் கட்டுற தொகை குறையும். எங்க, குறைவேனான்னு அடம் பிடிக்குது?”

கை ஒரு வேலையும், மனம் ஒரு வேலையுமாக இருந்தவள், ‘இப்படி வீட்டுக்குள்ளயே அடைச்சு வச்சு கொடுமை பண்றியே? அவுட்டிங், ட்ரிப்னு எங்கயும் நகர விடாம... இது உனக்கே நியாயமா இருக்கா?’ ஜன்னல் வழித் தெரிந்த மூடிய வானத்தைச் செல்லமாகக் கடிந்து கொண்டேன்.

இன்னிக்கு உன்னை வெளில விளையாட அனுப்ப மாட்டாங்கடா. அப்படி அனுப்பினாலும் போகாதே. மிஸ் கிட்ட சொல்லிட்டு உள்ளேயே இரு. இப்ப தான் சளி குறைஞ்சிருக்கு

சீக்கிரம் கிளம்பு, எவ்ளோ நேரம்?” என் அவசரம் கொஞ்சமும் உரைக்காத நிதானத்தில் சின்னது சாக்ஸ் மாட்டிக் கொண்டிருந்தது.

அடேய். எங்கப் பராக்குப் பார்க்குற?” என் விரட்டலுக்குப் பதிலாக ப்ச்.பெரிதாகச் சலித்துக் கொண்டான். ஒன்பது வயது. எந்த நேரமும் விளையாட்டு தான். இந்த வயதில் ஆரி இவ்வளவு படுத்தியதாய் நினைவில்லை. பெண் குழந்தைக்கே உரிய பொறுப்புடன் அவளே அவள் வேலைகளைப் பார்த்துக் கொள்வாள். இது இருக்கிறதே, சின்ன வாண்டு !?

கிளம்பும் நேரத்தில் தான் முதல் நாள் எங்கோ வீசி எறிந்திருந்த ஷூவை தேடுவான். எப்போதும் காரில் ஏறிய பிறகே கண்ணாடி அணியாதது ஞாபகம் வரும். லைப்ரரியில் திருப்பிக் கொடுக்க வேண்டிய புத்தகத்தைத் தொலைத்து விட்டு, ‘இங்க தான் வச்சேன்சாதித்தபடி என்னை வீடு முழுக்க ஓட விடுவான். ஆசிரியர் எப்போதோ கொடுத்தனுப்பி இருப்பதை நீட்டி கையெழுத்து வாங்கியபடி, ‘இன்னிக்குத் தான் கடைசி நாள், பிஸியா இருந்ததுல மறந்துட்டேன்அவன் அலட்டுவதில் திட்டக்கூடத் தோணாமல் சமயங்களில் மலைத்து நின்று விடுவேன்.

இது எதுவுமே இல்லையா? இருக்கவே இருக்கிறது. இந்த ஷூ கடிக்குது, இந்தச் சட்டை இழுக்குதுராமாயணங்கள். கடைசி நிமிடத்தில் படுத்தி என் ரத்த அழுத்தம் உயர்கிறதா, தாழ்கிறதா என்று பிபி மானிடர் இல்லாமலேயே கவனித்துக் கொள்வதில் சமர்த்தன்.

மீண்டும் ஒரு ப்ச்..இந்த முறை இன்னும் அழுத்தமாக. என்னடா, பெரிய மனுஷா, ரொம்பத் தான் சலிச்சுக்குற?” நான் சீண்டினேன்.

போங்கம்மா.. நானே சேட்ஆ இருக்கேன்

பாருடா.. முளைச்சு மூணு இலை விடல. அப்படி என்னடா உனக்குச் சோகம்?” சிரித்தபடி அவன் காதை நிமிண்டினேன்.

இந்த ஃபேர்ட்ஸ் எல்லாம் பாவம் இல்லம்மா?”

“!???”

இங்க வெயில் இருக்கும்னு நம்பி தான் அது எங்கெங்க இருந்தோ கஷ்டப்பட்டுப் பறந்து இங்க வந்துருக்கும். தூரத்துல இருந்து, ஆர்டிக்ல இருந்தெல்லாம் இங்க வருமாம். நான் படிச்சிருக்கேன்

கிரேட் சால்ட் லேக்குக்கு ஒவ்வொரு வருஷமும் ஃபைவ் மில்லியன் பேர்ட்ஸ் வரும். பாவம், இங்க வந்தப்புறம் எல்லாம் ஏமாந்து போயிருக்கும்.உண்மைதான். இங்குள்ள சதுப்பு நில உப்பு ஏரிக்குப் பறவைகள் வலசை வரும் காலம் இது.

இங்கயும் இப்படிப் பனி கொட்டுச்சுன்னா, பாவம் அதுங்க எங்க போகும்? நம்ம மாதிரி அதுக்கு யாராவது வீடு கட்டி வச்சிருக்காங்களா, என்ன?” சிறு ஊடலுடன் அவன் கேட்டதில், “ஆமாம்டி செல்லம், பாவம் தான்சன்னமாய்ப் பதில் சொன்னாலும் பப்பி ஷேம் ஆனது எனக்கு.

கள்ளங்கபடமில்லாத சுயநலமற்ற பவித்திரமான இந்த அன்புக்கு முன்னால் அன்றாடப் பாடுகளை ஒட்டிய அற்பமான என் அலுப்பும், சலிப்பும்!? வெட்கமாய் இருந்தது.

நேத்துக் குருவிக்கெல்லாம் வச்ச சாப்பாடு அப்படியே இருக்கு. எதுவுமே வரல. எங்கக் குளிர்ல நடுங்கிட்டு இருக்குங்களோ?” அவன் கவலையாக பேர்ட் ஃபீடரைக் காட்டிச் சொல்ல, “இன்னிக்கு வரும்டா.. வந்து சாப்பிடும், நீ வாஅவனை லேசாக அணைத்துக் கொண்டேன்.

ஏன், ஒரு மாதிரி இருக்கே? அம்மாக்கும் பையனுக்கும் ஏதாச்சும் சண்டையா?” வாகனம் அவன் பள்ளியை நோக்கி செல்ல, என் அமைதியைக் கவனித்து இவர் கேட்டார்.

சேச்சே... இல்ல. நானும் என் பையனும் ஜிகிரி தோஸ்த், இல்லடா கண்ணாகுழந்தைக்கு நக்கில்ஸ்கொடுத்துக் கொண்டேன். ஏங்க, நாமளும் வளராம குழந்தையாவே இருந்திருக்கலாம் இல்ல. அவசர அவசரமா வளர்ந்து அப்படி என்ன பெருசா சாதிச்சுட்டோம்?”

எப்பயும் சாயங்காலம் வரும்போது தான் லூஸா வருவே, இன்னிக்குக் காலைலயேவா?” இவரது கிண்டலுக்கு எப்போதும் சிலிர்த்து எழுபவள் இன்று அமைதியாகச் சிரித்துக் கொண்டேன்.

பிரணவ மந்திரப் பொருளைப் பாடம் சொல்லித் தந்தா தான் தாயுமானவனா? இந்த மாதிரி சின்னச் சின்னப் பரிவை நியாபகப்படுத்தும் என் பிள்ளை கூட எனக்குத் தாயுமானவன் தான். கடவுளே, பறவைக்கும் இரங்குற இந்தப் பளிங்கு மனசோடு என் குழந்தை எப்பயும் இப்படியே இருக்கணும்.உள்ளுக்குள் நெகிழ்ந்தபடி செல்லம்டா நீபாசம் தாண்டிய உவகையுடன் அவன் கன்னம் வருட...

அம்ம்மாஅவன் என்னை விட அதிகமாக அன்பு மழை பொழிந்ததில் மிரண்டு போனேன்.

“!! என்னடா?”

ம்மா.. ஸ்கூல் ஃபேகை  மறந்துட்டேன்மா

“!!!!!!!!!!!!! ??????????????”


*முன்பு செந்தூரம் மின்னிதழிலும், தற்போது தமிழ் சங்க ஆண்டு விழா மலரான பனிமலரிலும் வெளியாகியுள்ள சிறுகதை

No comments: