"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Sunday, September 15, 2019

ஆயிரம் ஜன்னல் மனசு & காதல் கஃபே

ஹாய் மக்களே!

எல்லோரும் எப்படி இருக்கீங்க? Hope everyone is doing well and everything is going on good. அவ்வப்போது எட்டிப் பார்ப்பதாலும், அடிக்கடி காணாமல் போவதாலும் என் பெயர் உங்கள் நினைவடுக்குகளில் இருந்து சற்றே அவுட் ஆப் போகஸ் ஆகியிருக்கலாம். சில பல அலைச்சல்களில் நான் முகநூல் வருவதே மிகவும் குறைந்து விட்டது. அன்றாட வேலைகளிலே கவனம் செல்வதில் எழுத்து வேலைகளிலும் சிறு தேக்கம். நினைப்பதை தாமதமின்றி பதிய என ஆரம்பித்த வலைப்பதிவிலும் பதிவுகள் இட்டு வெகு நாட்களாகின்றன. கொஞ்சம் ஒழுங்குப்படுத்திக் கொண்டு அவ்வப்போதேனும் சில பதிவுகள் எழுத வேண்டும் என நினைக்கிறேன். Though I procrastinate  it everyday, hope I could streamline slowly and with no doubt I trust you guys will understand this gap.
BTW, “ஆயிரம் ஜன்னல் மனசு” என்னும் புத்தம் புதிய நாவல் புத்தகமாக வெளிவந்துள்ளது. Thanks to the Almighty for this moment! 

நம் மனதிற்குள் எண்ணற்ற அடுக்குகள், திறப்புகள், சாளரங்கள்! அது போலவே இந்நாவலும் பல படிநிலைகளை பேசுகின்ற படைப்பாக இருக்கும். கனவுகளும் கற்பனைகளும் மிதமான ஆசைகளும் கொண்ட சராசரி இளம்பெண், அவளைச் சுற்றி நகரும் இயல்பான கதை. அயல்நாட்டு வாழ்க்கை, அதன் அனுபவங்கள், கணவன் மனைவி புரிதல், நட்பு, உறவுகளின் எல்லைக்கோடு என வேறுபட்ட அடுக்குகளை அலசுகிற இந்நாவலின் மையப்புள்ளியான சாரு அவள் குணத்தின் இயல்பில், பண்புகளின் மேன்மையில், மன அழகின் வசீகரத்தில் வாசிப்பவர் மனதில் நீங்காத இடம்பிடிப்பாள் என நம்புகிறேன்.
Few excerpts from the novel –
சாருவுக்கு அப்படியே எங்காவது ஓடி விடலாம் போலிருந்தது. ‘கடவுளே! என்னவித அவஸ்தை இது…?’
பார்வைகள் தான் அதுநேரம் வரை சந்திக்கவில்லையே தவிர அவனது குறுகுறுவென்ற விழி வீச்சுத் தன்னைத் துளைத்துக் கொண்டிருப்பதில் கால்களைத் தரையில் ஊன்ற முடியாமல் தடுமாறி நின்ற சாரு, அதற்கு மேல் தவிர்க்க முடியாமல் ப்ரித்வி புறம் பார்த்து “ஹாய்” என்றாள்.
“ஹாய்…”
அவனது சீண்டும் சிரிப்பை, உதட்டோரம் மறைத்து வைத்திருக்கும் புன்னகையை, யாருமறியாமல் அழுந்த கண்ணிமைத்து தனக்கு மட்டும் கூறிய ரகசிய செய்திகளை அதற்கு மேல் உள்வாங்க முடியாமல் கண்களை அவசரமாகத் திருப்பிக் கொண்டவள், அவன் அண்ணி காட்டிய இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
------------
என்ன தான் சுற்றி சுற்றி வந்து அதையும் இதையும் செய்தாலும் நேரம் என்னவோ பதினொன்றைத் தாண்டவில்லை. வேலைக்குப் போகும் நாட்களில் அரிபரியாய் கிளம்பி பறவை கூடடைவது போல இரவு விடுதிக்குத் திரும்பி ‘அக்கடா’ என்று படுக்கையில் விழும்போது, வேலை என்று ஒன்று இல்லாமல் வீட்டிலேயே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவள் ஏங்கிய நாட்களும் உண்டு.
ஆனால் அப்படி இருப்பது அவ்வளவு சுலபமில்லை என்று இந்த மூன்று மாதங்களிலேயே நன்றாகப் புரிந்தது.
------------
நம் ஊரில் நகை, புடவை, நிலம் நீச்சு, வீடு என்று ஒப்பிட்டுப் பார்ப்பது போல இங்கு யார் பேசினாலும் அடுத்தவர் விசா பற்றியே விசாரிப்பது ஒரு வழமையாகவே இருப்பதைச் சாரு வியப்புடன் உணர்ந்தாள்.
தெருவில், கடைகளில் எதேச்சையாக இந்தியர்களை நேருக்கு நேராகப் பார்க்க நேர்ந்து விட்டால் நாம் சிரித்தாலும் தலையைக் குனிந்து, கண்களைத் திருப்பி, எங்கோ பார்ப்பது போல நம் பார்வையைச் சந்திக்காமல் தவிர்த்துக் கொள்ளும் நபர்கள் வெளிநாட்டினரிடம் மட்டும் ‘கோல்கேட்’ புன்னகையுடன் ‘விஷ்’ செய்யும் அந்த ‘தேசி’ வியாதியைப் போலவே...
இந்த விசா ஒப்பீட்டு நோயும் இங்குச் சகஜம் என்று இந்தச் சில நாட்களிலேயே புரிந்து கொண்டாள்.
-------------
வெளியே இலைகளில் தஞ்சமடைந்திருந்த மழைத் துளிகள் காற்றின் வேகத்தில் சிறு சிறு தூறலாகச் சிதறிக் கொண்டிருந்தன. மாலை நேர வெளிச்சம் மங்கி இருள் கவிந்திருக்க, கொஞ்சம் முன்னால் அவள் உள்ளத்தில் இருந்த சந்தோஷமும் பூரிப்பும் சொட்டு சொட்டாக வடிந்து இருந்தன.
‘ஹா’வென்று தொய்ந்து அமர்ந்தவள், நெற்றிப் பொட்டை இருவிரல்களால் அழுந்த தேய்த்து விட்டுக் கொண்டாள். எந்த வேலைகள் இருக்கின்றன என்று கிளம்ப மறுத்தாளோ, அந்த வேலை எதையும் இப்போது செய்யப் பிடிக்கவில்லை. ப்ரித்வி தன் சிரமங்களை புரிந்து கொள்வதே இல்லை என்ற நினைப்பு அலுப்பு ஏற்படுத்தியது.
-----------
மனைவி மட்டும் கணவனுடைய தோழர்களை எந்த வித்தியாசமும் இல்லாமல் தன் நண்பர்களாக நினைக்க வேண்டும். உள்ளுக்குள் எத்தனை உறுத்தினாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். நேரங்கெட்ட நேரத்தில் வந்தாலும் முகம் சுளிக்காமல் சிரித்துக் கொண்டே ‘ஹாஸ்ட்’ செய்ய வேண்டும்.
கணவன் பெருமையுடன் விவரிக்கும் முன்னாள் காதல்களை முகம் மாறாமல் கேட்க வேண்டும், தோழி என்ற பெயர் இருந்தால் அடுத்த வீட்டுப் பெண்ணைப் படுக்கையறைக்குள்ளும் அனுமதிக்க வேண்டும்.
அப்படி இருந்தால் தான் அவள் ‘அக்மார்க்’ முத்திரை குத்தின தரமான மனைவி இல்லை, என்றால் அவள் ஒரு பட்டிக்காடு, யாருடனும் பழகத் தெரியாத மூடம், அன்சிவிலைஸ்ட், அன்சோசியலைஸ்ட்...... இன்னும் என்னென்னவோ....
------------
இப்படி நிறைய விஷயங்களைப் பேசுகிற நேர்மறையான வாசிப்பனுபவம் தரும் இந்நாவலை வாசித்து தங்கள் மேலான எண்ணங்களை, விமர்சனங்களைச் சொல்லுங்கள். உங்கள் கருத்துகளை அறிய ஆவல் கொண்டுள்ளேன்.
இத்துடன் கூடுதல் இனிப்பென “காதல் கஃபே” நாவலும் புத்தகமாக வெளிவந்துள்ளது. 
இந்நாவல் எழுதிய கடந்த நவம்பர் மாதத்தை திரும்பிப் பார்க்கையில் அது குறித்து உங்களிடமும் சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது. நம் வீட்டு கல்யாணம், காதுகுத்து, பண்டிகை நாட்கள் என்றால் வீட்டு மனிதர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு தம்மையும் அறியாமல் ஒரு பரபரப்பு உண்டாகும், ஏதோ ஒரு வேகம் அவர்களைப் பம்பரமாக சுழல வைக்கும். விசேசம் முடிந்து திரும்பிப் பார்த்தால் ‘இத்தனை வேலைகளை எப்படி செய்தோம்!!?’ என அவர்களே பிரமித்துப் போவார்கள். அது போன்ற உணர்வு தான் இப்போது எனக்கும். அந்த உத்வேகத்தில் கொஞ்சம் வாய்த்தாலும் இன்றைய உளச்சோர்வு மறைந்து போகாதா என்ற ஏக்கமும் கூட.
இரவோடிரவாக அமர்ந்து குறுகிய கால இடைவெளியில் எழுதிய நாவல் இது. என்னையுமறியாத ஒரு உற்சாகம் பாண்டிச்சேரி குறித்தும், பிரெஞ்சு கலாச்சாரம் குறித்தும், மொழி குறித்தும், உணவு குறித்தும் தேடி தேடி எழுத வைத்தது. வரலாறு மற்றும் நிலம் குறித்த தகவல்களை தவறுகள் இல்லாமல் தர வேண்டும், அதே நேரம் எடுத்துக் கொண்ட கதைக்கரு மிக நுண்ணியமானது. அதை எந்த கோணத்திலும் சேதப்படுத்திவிடாமல் எடுத்து செல்ல வேண்டும் என்ற கவனமும், எச்சரிக்கையும் இருந்தன. தாய்மை குறித்த புனிதத்துவத்தை, காலம் காலமாக கட்டி வைத்திருக்கும் டாபூவை சிறு குண்டூசி கொண்டு உரசிப் பார்க்கும் முயற்சி நிறைய அச்சத்தை அளித்ததும் நிஜம்.
இந்நாவலின் கனமான கதைக்கரு என்னை செலுத்தியது உண்மை என்றாலும் Pen to publish contest ஒரு துரிதத்தை கொடுத்து விரைந்து எழுத ஒரு கருவியாக அமைந்ததையும்  குறிப்பிடவேண்டும். எழுதி வெளியிடும் வரை மட்டுமே நமது பணி, அதற்குப்பின் வாசகர்களின் வாசிப்பனுபவமும், ஆதரவும், முக்கியமாக இறையருளின் ஆசியுமே ஒரு படைப்பை அளவிடும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எப்போதும் உண்டு. இந்நாவல் ஆன்லைனில் வெளியானபோது எனது ஆவல் மற்றும் எதிர்பார்ப்பையும் விஞ்சி வாசகர்களும் சக எழுத்தாளர்களும் தந்த வரவேற்பும், மதிப்புரைகளும், மறக்க முடியாதவை. கிண்டிலில் பின்னூட்டங்கள் வருவது எவ்வளவு அரிது என நாம் அனைவரும் அறிவோம். Very genuine comments அங்கு பதிவாகி இருந்தது மனநிறைவை அளித்தது. Liberalization of women, forward thinking on a sensitive subject என்ற பின்னூட்டங்களும், நிறை, குறைகளை உள்ளதை உள்ளபடி சொன்ன விமர்சனங்களும் , நம்பிக்கை அளித்தவை, சில தனி செய்திகள் மிகுந்த நெகிழ்ச்சியூட்டியவை.
அத்தருணத்தில் இந்நாவல் குறித்து விவாதித்த, வாழ்த்திய, விமர்சித்த அனைவருக்கும் நன்றி!  சில தனிக் குழுக்களிலும் இந்நாவல் குறித்து விவாதிக்கப்பட்டதாக பின்னர் அறிந்தேன். அக்குழுக்களில் நான் இடம்பெறாததால் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைச் சொல்ல விழைகிறேன். ‘புத்தகமாக மட்டுமே வாசிக்கும் வழக்கம், எப்போது காதல் கஃபே புத்தகமாக நூலகத்தில் கிடைக்கும்?’ என ஆவலுடன் விசாரித்த அன்பர்கள் தற்சமயம் இப்புத்தகத்தை வாசித்து தங்கள் மேலான விமர்சனங்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நீண்ட பதிவு என நீங்கள் கோவிக்காவிட்டால் மேலும் சில வார்த்தைகள் - நீங்கள் அனைவரும் அறிந்தது போல நான் ஆன்லைனில் எழுதுவதில்லை. தொடர்ந்து நிறைய எழுதி குவிப்பவளும் அல்ல. அதையும் மீறி என்னை நினைவில் கொண்டு நாவல்கள் குறித்து, சிறுகதைகள் குறித்து  அவ்வப்போது குறுஞ்செய்திகள்/மின்னஞ்சல்கள் அனுப்புகிற வாசகர்களும், ‘எப்படி இருக்கீங்க ஹேமா? ரொம்ப நாளாச்சு பேசி...” என்று உள்ளன்போடு அழைக்கிற நட்புகளும் அமைந்திருப்பது இங்கு எனக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரம். And I swear this factor is the one single thing which drives me in “all” aspects.  
And what more to say…!!?? Thanking everyone for your support and wish to have this zeal & positive energy throughout….  அனைவருக்கும் அன்பும், நன்றியும்!
ps.: நான் ஆன்லைனில் அதிகம் வருவதில்லை எனினும் எழுத்து குறித்த கண்ணியமான நட்புரையாடல்களுக்கும், விமர்சனங்களுக்கும் என்னை எப்போதும் அணுகலாம். i’m just a message/e-mail away from you.
தொடர்புக்கான மின்னனஞ்சல் முகவரி : hemajaywrites@gmail.com
வலைபதிவின் விலாசம் : hemajays.blogspot.com

2 comments:

faranas said...

Hi hema happy for ur new novel
It is available in amazon

HemaJay said...

Thanks Faranas! It will be available in Kindle in a month's time.