முகநூல் குழு ஒன்றில் இடம்பெற்ற 'எழுத்தாளர் கேள்வி பதில்' பகுதியில் கேள்விகளும் எனது பதில்களும்.
எழுத்தாளர் ஹேமா ஜெய் அவர்களைப் பற்றிய விபரங்கள் :
பெயர் : ஹேமா ஜெய். அச்சு புத்தகங்களில் ‘ஹேமா'
சொந்த ஊர் : ஈரோடு
படிப்பு : பொறியியல்
பணி : கணினி துறையில் பணி செய்கிறேன்.
தளம் :
முதல் மூன்று கதைகளை லேடீஸ்விங்க்ஸ் தளத்தில் எழுதினேன். நான்காவது நாவலான ‘விழிகள் தீட்டும் வானவில்’ஐ என்னுடைய வலைபதிவு பக்கத்தில் பதிவிட்டேன். பிறகு ஆன்லைனில் தொடர முடியவில்லை. இப்போது நேரடி புத்தகங்களாகவும் கிண்டில் பதிப்புகளாகவும் வெளி வருகின்றன.
எனது வலை பதிவு பக்கம் இது - https://hemajays.blogspot.com/. கதைகள் தவிர்த்து வேறு விஷயங்கள் குறித்தும் எழுதலாம் என்ற ஆவலில் தொடங்கியது; இப்போதைக்கு எனது சிறுகதைகளையும், புத்தக வெளியீடுகள் குறித்தும், வாசகர் விமர்சனங்களை சேகரித்து வைக்கிற தொகுப்பாகவும் உள்ளது.
உங்களை பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
வீடு, பிள்ளைகள், குடும்பப் பொறுப்புகள், அன்றாட கடமைகளுக்கு இடையே புத்தக வாசிப்பை மிகப்பெரிய ஆசுவாசமாகக் கொண்டுள்ள எண்ணற்ற பெண்களில் நானும் ஒருத்தி. ஒன்றுமே ஓடாத ஒரு நாள் எழுதி பார்க்கலாமே என்கிற ஆர்வக் கோளாறைக் கிளறி விட்டதில் கடந்த சில வருடங்களாக எழுத முயற்சித்து வருகிறேன்
நவீன குடும்பங்களின் சிக்கல்களை, பெண்கள் முதியவர்களின் உளப் பிரச்சனைகளை மையக்கருவாகக் கொண்டு மென் வாசிப்பு ஆக்கங்களாக எழுத விருப்பம்! ஒவ்வொரு கதையிலும் வித்தியாசமான கருப்பொருட்களைத் தேடி எழுதும் ஆவலுண்டு. 2016 முதல் பிரியா நிலையம் வாயிலாக அச்சு புத்தகங்கள் வெளியாகின்றன.
மின்னூல்கள் அமேசான், புஸ்தகா, ஸ்க்ரிப்ட், ஸ்டோரிடெல், கூகிள் டாக்ஸ் -லும் மற்றும் சில சிறுகதைகள் பிரதிலிபியிலும் உள்ளன.
****
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
இந்தக் கேள்விக்குரிய பதிலாக பெரிய பட்டியலையே தனியாக இணைக்க வேண்டி இருக்கும். துணுக்குகள் முதல் தீவிர இலக்கியம் வரை எல்லாவற்றையும் வாசிக்கும் வழக்கம் உண்டு. இன்று என்னளவில் ஏதேனும் சிறிதாய் முயற்சிக்கிறேன் என்றால் முன்னேர்களாக விளங்கிய இந்நாள் மற்றும் மூத்த தலைமுறை எழுத்தாளுமைகளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
குறிப்பிட்டுச் சொல்வதென்றால் பெண்கள்/குழந்தைகள் மேல் நிகழும் பாலியல் அத்துமீறல்களை, நுட்பமான உணர்வு/உறவு சிக்கல்களை, இன்று பேச தயங்கும் விஷயங்களையும் கூட பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய எழுத்தாளர்கள் லக்ஷ்மி, சிவசங்கரி மற்றும் ஆர். சூடாமணி – இவர்கள் மூவரும் எனக்கான ஆதர்சம். இன்றளவும் பிறழாத முற்போக்கு சிந்தனைகளுடன் காலத்திற்கு முன்பே பேசியவர்கள் என்ற வகையில் இவர்களின் எழுத்துக்கள் மேல் மிகுந்த மதிப்பும் பிரேமையும் உண்டு.
******
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா :
நமக்குள்ளேயே ஒரு கற்பனை உலகை சிருஷ்டித்துக் கொண்டு நம் விருப்பம் போல கதை மனிதர்களை உருவாக்கி உலவ விடுவது ஒரு பிரத்யேக அனுபவம்! ஒரு நாவலை எழுதி வெளியிட்டபின் கிடைக்கும் நிறைவுக்கு ஒப்பானதே அதை எழுதும் அனுபவமும்.
அறியாததை சரியாக தெரிந்து கொண்டு எழுத வேண்டும் என்ற தேடுதலால் எழுத்தை மிகப்பெரிய கற்றுக் கொள்ளும் வெளியாக, வாய்ப்பாக பார்க்கிறேன். மேலும் ஒத்த ரசனையுடைய நட்புகளுடன் பரிட்சயமாகி நம் ரசனைகளைப் பகிர்ந்து கொள்ள முடிவது உட்பட நிறைய நிறைய பாசிடிவ் விஷயங்கள் உள்ளன. போன வருடம் இதையொட்டி ‘எழுத்து என்ன தரும்?’ என்ற தலைப்பில் விரிவாக ஒரு பதிவு எழுதியிருந்தேன்.
https://hemajays.blogspot.com/2020/08/blog-post.html உங்களுக்கு நேரமிருந்தால் படித்துப் பாருங்க.
****
நீங்கள் எழுதிய முதல் நாவல்:
நீ நான் நாம் வாழவே
******
உங்களது திறமையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக எந்த நாவலை நினைக்கிறீங்க:
இதற்கான பதிலை வாசகர்கள் தான் சொல்ல முடியும். நானே சொல்வது அதிகப்பிரசங்கித்தனம் தான். எனினும் என்னளவில் ஒரு நாவலை சொல்ல வேண்டும் என்றால் எம்பிரியாலாஜி பற்றி எழுதிய ‘பூக்கள் விற்பனைக்கல்ல’ வேறுபட்ட வாசகர்களைப் பெற்றுத் தந்தது என்று சொல்லலாம். கருவியலின் நுட்பங்களை, நடைமுறைகளை எழுதுவதற்கு இருந்த சவால்களுக்கு ஒப்ப நிறைய நல்ல விமர்சனங்களும் கிடைக்கப் பெற்றது நிறைவான அனுபவம்.
******
நீங்கள் எழுதிய மொத்த நாவல் :
14 நாவல்கள்.
சிறுகதைகள் எழுதுவதிலும் ஆர்வம் உண்டு. ஏறக்குறைய முப்பது சிறுகதைகள்/கட்டுரைகள் கல்கி, மங்கையர் மலர், தினமணி கதிர், தென்றல் இதழ்களிலும், பிரதிலிபி, செந்தூரம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் வெளியாகி உள்ளன.
...
அருமையான
தகவல் சிஸ்
******
எழுத வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது:
கிட்டத்தட்ட ஐந்தரை வருடங்கள். 2015 இறுதியில் இருந்து எழுதி வருகிறேன்.
*****
எழுத்தாளர் அறிமுகப் படலம் பற்றிய உங்களது கருத்து:
இணையம் வாசிப்பை பரவலாக்கி இருப்பதில் இன்று நிறைய எழுத்தாளர்கள் எழுத ஆர்வமாக உள்ளனர். முன் எப்போதும் நினைத்துப் பார்க்க முடியாத நேரடி வாசகப் பரப்பும் உள்ளது. இவ்விணைய வெளி எவ்வளவுக்கு எவ்வளவு விரிந்திருக்கிறதோ அவ்வளவு குறுகியும் இருக்கிறது என்பதற்கேற்ப ஒவ்வொருவரும் குறிப்பிட்ட வட்டத்திற்கு மட்டுமே பரிட்சயமாக உள்ள நிலையும் உள்ளது. உங்களது எழுத்தாளர் அறிமுகப் படலம் இந்த வட்டங்களின் விளிம்புகளை விரித்து விடும் என்று நம்புகிறேன். உங்களது பணி மென்மேலும் சிறக்க என்
வாழ்த்துகள்
!
.....
நன்றி சிஸ்டர்
******
தொடர்கதை எழுதுவது ஈஸியா நாவல் எழுதுவது ஈஸியா :
இது தான் கதை, இவர்கள் தான் கதை மாந்தர்கள், இப்படித்தான் இது வடிவம் பெறும் என்ற தீர்மானம் எழுத்தாளரிடம் இருந்தால் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
வாசகர்களின் பின்னூட்டங்கள் / கருத்துகள் உற்சாகம் தருவதால் கதையை விரைந்து எழுதி முடிக்க தொடர்கதை வடிவம் உதவும், முழுவதுமாக எழுதி கவனத்துடன் எடிட் செய்ய நாவல் வடிவம் சுலபமாக இருக்கும் என்பது என் புரிதல்.
****
நீங்கள் எழுதி கொண்டிருக்கும் தற்சமயத்து
தொடர்கதை or நாவல்:
இப்போது எதுவும் எழுதவில்லை. பல மாதங்களாக நிதானமாக எழுதி கொண்டிருந்த ‘நினைவெல்லாம் செண்பகப்பூ’வை சென்ற வாரம் தான் கிண்டிலில் வெளியிட்டு இருக்கிறேன். இப்போதுள்ள சூழ்நிலையில் நீண்ட ஹைபர்னேஷனுக்கு சென்று விட்டு எல்லாம் சரியான பிறகு விழித்தால் போதும் என்றே மனசு விரும்புகிறது.
****
உங்கள் நாவல்கள் சிலவற்றின் பெயர் :
* நீ நான் நாம் வாழவே
* பட்டாம்பூச்சி பற பற
* பனி இரவும் தனி நிலவும்
* விழிகள் தீட்டும் வானவில்
* மலரினும் மெல்லிய
* காதல் கஃபே
* பூவிதழ் தூரிகை
* ஆயிரம் ஜன்னல் மனசு
* ஆனந்தி
* பூக்கள் விற்பனைக்கல்ல
* ஙஞணநமன மெல்லினமாம்!
* இதழ்வரி கவிதை
* தூரங்கள் நகர்கின்றன (கண்மணியில் வெளியானது)
* நினைவெல்லாம் செண்பகப்பூ
இவற்றுள் ‘நினைவெல்லாம் செண்பகப்பூ’ தவிர மற்றவை புத்தகமாக வெளி வந்துள்ளன. நாவல்கள் தவிர கீழ்காணும் சிறுகதை தொகுப்புகள் மின்னூல்களாக வெளியாகி உள்ளன.
** சென்னையில் ஒரு மழைநாள்!
** அப்பாவின் நிழல்
** கண்ணாடி கோணங்கள்
** சிற்றெறும்புகளின் காலம்
** எது ஆண்மை?
.....
அருமை சிஸ்டர்
*****
சமூக நாவலுக்கும் வரலாற்று நாவலுக்கும் உள்ள வித்தியாசம் :
நம்மைச் சுற்றி அன்றாடம் நிகழும் எண்ணற்ற நிகழ்வுகளில் நம் மனதை பாதிக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் ஒரு சமூக நாவலாக மாறும் சாத்தியம் உண்டு. தேவை உன்னிப்பும், சமூக அக்கறையும், அதை சுவாரஸ்யமாக வெளிப்படுத்தும் கற்பனைத் திறனும்.
ஆனால், வரலாற்று நாவல் அப்படியல்ல. அதற்கு இன்னும் நிறைய மெனக்கெடல்கள் வேண்டும். காலம், மொழி, பண்பாடு, உபயோகிக்கும் வார்த்தை பிரயோகங்கள், அந்நாளின் பழக்க வழக்கம், ஆடை அணிகலன்கள், உண்மையான சரித்திர நிகழ்வுகள், அதன் பின்னணியில் தெரிந்த தெரியாத தகவல்கள் என எல்லாவற்றையும் கச்சிதமாக ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொண்டு எழுத வேண்டிய பெரிய வேலை அது..
...
*****
போட்டி கதைகளில் பங்கேற்ற அனுபவம் இருக்கிறதா :
நாவல் போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் இல்லை. சிறுகதை போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் உண்டு.
*****
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:
எல்லா எழுத்தாளர்களும் சொல்லும் வழக்கமான பதில் தான். எல்லா கதைகளும் கதாபாத்திரங்களும் மனதிற்குப் பிடித்தவர்களே. நம் மனதுக்குள் உயிர்த்து பல நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் நம்முடன் உடனுறைபவர்கள் அல்லவா? மனதிற்கு மிகவும் திருப்தியளித்த கதாபாத்திரங்கள் என்றால் ‘பனி இரவும் தனி நிலவும்’ சிவா, ‘விழிகள் தீட்டும் வானவில்’ ஆகாஷ் & நேத்ரா, ‘ஆயிரம் ஜன்னல் மனசு' சாரு, ‘பூக்கள் விற்பனைக்கல்ல' நேஹா & இளா, ‘ஙஞணநமன மெல்லினமாம்!’ சரயு, இப்போது ‘நினைவெல்லாம் செண்பகப்பூ’ நிவேதா - இவர்களைச் சொல்லலாம்.
******
உங்கள் நாவல் or தொடர்கதை எது வாசகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது :
வாசகர்கள் தான் இதில் பெஸ்ட் ஜட்ஜஸ். ஒவ்வொருவர் வாசிப்பு ரசனையும் ஒவ்வொரு மாதிரி இல்லையா? இது தான் என்று சரியாக ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சொல்லத் தெரியவில்லை. ஸாரி.
*****
உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள எழுத்தாளர்கள்:
நிறைய நட்புகள் உள்ளனர். எழுத்து என்ற ரசனை புள்ளியில் இணைந்து நெருங்கியவர்கள். அடிக்கடி பேசிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. எத்தனை நாட்கள் கழித்து அழைத்தாலும் எந்த இடத்தில் விட்டோமோ அங்கிருந்து தொடர்ந்து பேச முடிகிற பிரியமும் புரிதலும் கொண்ட தோழமைகள்.
******
நீங்கள் விரும்பி படிக்கும் நூல்கள்:
சமூக நாவல்கள், எதார்த்தமான குடும்ப/காதல் கதைகள், சுயசரிதைகள், வரலாற்று அபுனைவு நூல்கள் (உப்பு வேலி மாதிரி)
*******
விருது, பரிசுகள் வாங்கிய அனுபவம் உண்டுமா. நாவலின் பெயர்களை சொல்லுங்கள்:
சிறுகதைகளுக்கான அங்கீகாரம் கிடைத்த அனுபவங்கள் உண்டு. எழுத்தாளர் வா.மணிகண்டனின் நிசப்தம் தளத்தில் ‘அவள்’ என்கிற முதல் குறுங்கதை இடம்பெற்று அவர் புத்தகம் ஒன்றை பரிசாகப் பெற்றது, லேடிஸ் விங்க்ஸ் தளத்தில் எழுத்தாளர் காஞ்சனா ஜெயதிலகர் தேர்ந்தெடுத்த சிறுகதை போட்டியில் முதல் பரிசு, குவிகம் இலக்கிய அமைப்பு நடத்திய சிறுகதை போட்டியில் முதல் பரிசு, வெட்டிபிளாக்கர், பிரதிலிபி மற்றும் மங்கையர் மலர் போட்டிகளில் கிடைத்த பரிசுகள் என சில நல்ல அனுபவங்கள்.
....
அழகான அனுபவங்கள் சிஸ்
******
நீங்கள் எழுதிய நாவலிலே உங்களுக்கு பிடித்த நாவல் எது? அந்த கதாபாத்திரத்தை பற்றி சற்று விளக்க முடியுமா:
‘ஙஞணநமன மெல்லினமாம்!’. பெண்ணுரிமை, பாலியல் சீண்டல்கள், பணியிடத்தில் நிகழும் அப்யூசஸ் என பல பெரிய விஷயங்களைப் பற்றி நிறைய படிக்கிறோம், எழுதுகிறோம், விவாதிக்கிறோம், எனினும் வீடு வேலை என பல்வேறு பொறுப்புகள் கொண்ட இன்றைய பெண் உள்ளாகும் எமோஷனல் ஸ்ட்ரெஸ் குறித்து, வீடு அவள் மேல் சுமத்தும் அதீத எதிர்பார்ப்புகளை, அது தரும் அழுத்தங்களைப் பற்றி நாம் பெரிதாகப் பேசுவதே இல்லை.
‘ஙஞணநமன மெல்லினமாம்!’ இது பற்றி பேசுகிற கதை.
இக்கதையைப் படித்து விட்டு தோழி ஒருவர் கடிதம் எழுதி இருந்தார், நீங்க என் வாழ்க்கையைப் பக்கத்தில் இருந்து பார்த்து எழுதின மாதிரி உள்ளது என்று… காபிரைட் கிளைமே செய்யலாம் போல அவருடைய சூழ்நிலைகள் அனுபவங்கள் கதையுடன் நிறைய ஒத்து வந்தது. உண்மையில் இக்கதையின் நாயகி சரயு போல நம்மிடையே பலர் உள்ளனர். வீடு பெண்ணை மதிப்பாக ஆதரவாக நடத்தினால் போதும், வெளியில் அவள் பார்த்துக் கொள்வாள் என்று சொல்கிற கதை, என் மனதிற்கு நெருக்கமானது.
****
நீங்கள் எழுதிய கதைகளில் எதாவது ஒரு படைப்பு பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா:
‘ஆனந்தி'. மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு விசைத்தறி பட்டறைகளைப் பற்றிய முன்னறிமுகம் தேவையில்லை. இந்நாவல் தறி தொழிலாளிகளை, குறிப்பாக அதில் உழலும் பெண்களைப் பற்றிய கதை. படிப்பறிவு இல்லாமல் விட்டில் பூச்சிகளாக வீழும் சிறு வயது பெண்களை, கந்துவட்டி கடன் கொடுமைகளை, மீள முடியாமல் ஒரு வட்டத்துக்குள் மட்டுமே சுற்றி வரும் அவர்களின் அன்றாட பாடுகளைப் பற்றி பேசுகிற நாவல். மற்ற நாவல்களை ஒப்பிட்டால் இந்நாவலை வாசித்து என்னிடம் பேசியவர்கள் குறைவு தான். எனினும் வாசித்தவர்கள் உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்ட விமர்சனங்கள் இணையில்லாதவை. என் ஊரின் வாழ்க்கையை எந்த பூச்சுகளும் இல்லாமல் எழுத முடிந்ததில் மிகுந்த ஆத்ம திருப்தி தந்த படைப்பு இது.
****
ஒரு நாவல் அல்லது தொடர்கதை எழுதும் போது இத்தனை அத்தியாயத்திற்குள், வார்த்தைகளுக்குள் முடிக்க வேண்டும் என்று எழுதுவீர்களா :
கதைகருவின் அடர்த்திக்கு ஏற்ப இத்தனை அத்தியாங்கள் வரும் என்ற மேலோட்டமான அனுமானம் இருக்கும். எழுத எழுத குறிப்பிட்ட பக்க எண்ணிக்கைக்குள் அடங்குகிறதா என்று பார்த்துக் கொள்வதுண்டு. எனது முதல் மூன்று நாவல்களில் இந்தப் புரிதல் இல்லை. பக்க எண்ணிக்கை பற்றிய கட்டுப்பாடு இல்லாமல் எழுதினேன். பிறகு தான் புத்தக விலை, உள்ளடக்கம், எடிட்டிங் பற்றியெல்லாம் கொஞ்சமேனும் புரிந்தது. இப்போதும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன்.
******
கவிதை, வருணனை காட்சிகளை ஒரு எழுத்தாளர் எப்படி தன்னுடைய படைப்புகளில் கையாள வேண்டும் :
கதையோட்டத்தின் வேகத்தைத் தடை செய்யாத விதத்தில் முன்னும் பின்னும் உள்ள சம்பவங்களுக்கு பொருந்துகிற மாதிரி கச்சிதமான அளவில் இருந்தால் படைப்பு இன்னும் மெருகேறும்.
******
கதைகளை வாசித்து விட்டு கடந்து செல்பவர்கள் பற்றி ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
அன்றாட ஓட்டத்திலிருந்து கொஞ்ச நேரம் நின்று மூச்சு வாங்கி கொள்வதற்குத் தான் நாம் பெரும்பாலும் வாசிப்பதே. வாசித்து முடித்ததும் அவரவர் நிறுத்தி விட்டு வந்த ஓட்டம் நிகழ்வுலகில் தயாராக காத்திருக்கும். எழுத்தாளரிடம் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள நினைத்தாலும் நேரமின்மையோ, வேறு பரபரப்போ அதை செய்ய அனுமதிக்காமலும் போகலாம்.
மேலும் வாசக மனம் என்பது சுதந்திரமானது, கட்டுக்களற்றது. கருத்துக்களைப் பகிர்வது அவர்களின் தேர்வு மற்றும் விருப்பம் தானே. யாரையும் நிர்பந்திக்க முடியாது. அதே நேரம் தாங்கள் வாசித்த எழுத்து மனதைப் பாதித்தால், சந்தோசப்படுத்தினால், யோசிக்க வைத்தால், கண்ணீர் பூக்க வைத்தால் நிச்சயம் ஓரிரு வார்த்தைகளை எழுத்தாளரிடம் பகிர்ந்து கொள்ளவே செய்வார்கள். இன்று இல்லையென்றால் நாளையோ, நாளைய மறுநாளோ சொல்லலாம் தானே? இன்று பெரும்பாலான எழுத்தாளர்கள் ஆன்லைனில் அணுகும் தூரத்தில் இருப்பதால் வாசகர்கள் தங்கள் விமர்சனங்களைப் பகிரவோ, உற்சாகப்படுத்தவோ தயங்குவதில்லை. தாமதம் இருக்கலாம், எண்ணிக்கையில் குறைவு இருக்கலாம். எனினும், ஓரிரு வார்த்தைகள் என்றாலும் ஓரிரு விமர்சனங்கள் என்றாலும் அவையும் வாசக மனதின் பிரதிபலிப்பு தானே. நாம் தான் நம்பிக்கையோடும் பொறுமையோடும் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
****
நிஜ சம்பவத்தை கதையாக எழுத என்ன செய்ய வேண்டும் :
ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை இருக்கும். என்னளவிலான புரிதல் இது - உண்மை சம்பவத்தின் ஜீவனை குலைத்து விடாமல், அதன் தர்க்க நியாயங்களை சரியாக எடுத்து வைக்க வேண்டும். நிஜ சம்பவத்தை அடித்தளமாக கொண்டு மேலே மேலே கற்பனை சுவர்களை எழுப்புவது எழுத்தாளரின் சாமர்த்தியம். அதே நேரம் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக அதிக உப்பு, புளி, காரம் சேர்த்து விட்டால் பண்டத்தின் ருசி மாறி விடக்கூடும் என்பதால் கூடுதல் கவனமும் தேவை.
....
******
கதைகளில் வரக்கூடிய சில காட்சிகள் அப்படியே படிப்பவரின் மனதை இறுக்கி ஒருவித தாக்கத்தை , எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறதே அது எதனால் என்று சொல்ல முடியுமா :
புத்தகத்தில் மனசு ஆழ்ந்து போகிறபோது அந்த கதை மனிதர்களுக்கு இடையே நம்மையும் ஒருவராக உணர வைத்து உணர்வுகளை கடத்தி உணர்ச்சிவசப்பட வைப்பது தானே வாசிப்பின் மகத்துவமே! இருந்த இடத்திலிருந்தே எங்கெங்கோ பயணித்து யார் யார் வாழ்க்கையையோ வாழ்ந்து பார்த்து விடுகிறோம் புத்தகங்களை வாசிக்கும்போது. காட்சி ஊடகத்தை விட வாசிப்பவரின் கற்பனையைத் தூண்டி காட்சிகளை விஸ்தரிப்பதில் புத்தகங்களின் இடம் மேலானது. அதனால் தான் சொல்கிறார்கள், எழுத்தின் வீச்சும் தாக்கமும் அதிகம், நல்லதை நேர்மறையான எண்ணங்களை எழுத்தில் விதைக்கும்போது அது சப்கான்சியஸ்-ஆக படிப்பவர்களின் மனதிலும் ஆழ பதியும் என்று.
...
சபாஷ்
அருமையான
பதில் சிஸ்டர்
****
ஒரு தொடர்கதையின் அத்தியாயங்கள் எத்தனை வார்த்தைகளுக்குள் வந்தால் ஏற்புடையதாக இருக்கும்:
உள்ளடக்கத்தைப் பொறுத்தும், கதையின் அடர்த்தியைப் பொறுத்தும் மொத்த வார்த்தைகளின் எண்ணிக்கை மாறுபடும். இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்று சொல்வது கடினம். அத்தியாயம் பிரித்து எழுதுவதும் அந்தந்த எழுத்தாளரின் திறன் தானே. வாசகர்கள் முன் வைக்கும்போது அது செறிவான படைப்பாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.
****
நாவல் அல்லது தொடர்கதை எழுது முன்பு டைரியில் மொத்தமாக எழுதி வைத்து அத்தியாயம் அத்தியாயமாக பிரித்து எழுதுவீர்களா அல்லது மனதின் வார்த்தைகளை கோர்வையாக்கி வடிவமைப்பீர்களா :
கதைகருவின் ஒற்றை வரியை வைத்துக் கொண்டு ரங்கோலியை விரித்துக் கொண்டே செல்வதைப் போல சிலர் எழுதுவார்கள். அது அபார திறமை. எனக்கு ஒரு கதை வடிவம் பிடிக்க பல மாதங்கள் எடுக்கும். மனதுக்குள் ஒரு சித்திரம் வந்தால் தான் எழுதவே தோன்றும். அதற்குப் பிறகு கொஞ்ச கொஞ்சமாகப் பிரித்து எழுதுவேன்.
******
உங்கள் கதைகளை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
நன்றியும் அன்பும் தவிர வேறென்ன சொல்ல முடியும்?
வாசகர்கள் அளிக்கும் ஊக்கமும் விமர்சனங்களுமே எந்த ஒரு எழுத்தாளருக்குமான கிரியா ஊக்கி என்றால் அது மிகையில்லை. என் எழுத்துகளை வாசித்து, நிறை குறைகள் சொல்லி செப்பனிட உதவும் வாசக நண்பர்களுக்கு இத்தருணத்தில் என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
....
மிக்க நன்றி சிஸ்டர்
உங்களிடம் பேசியதில், உங்களைப் பற்றி தெரிந்து கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, உங்கள் பதில் அனைத்தும் அருமை.
மேலும் பல அட்டகாசமான படைப்புகள் வழங்கவும், விருதுகள் பல வாங்கிடவும் எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment