"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Friday, September 23, 2022

உங்களுடன் ஒரு பகிர்வு

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், 

உங்களுடன் ஒரு சிறு பகிர்வு!

சென்ற வாரத்தில் ஒரு தோழி இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். மனங்கொத்திப் பறவை என்ற தலைப்புடன் வந்த கடிதம் என்பதால் 'மனங்கொத்திப் பறவை'க்கான விமர்சனம் என்றே நினைத்துப் பிரித்தேன். ஆனால், கடைசியாக அவர் குறிப்பிட்டிருந்தது...!!!

சில கடிதங்கள் நம்மை நெகிழ வைக்கும், கண் கலங்க வைக்கும்.  வீட்டில் எல்லோரிடமும் காட்டி பெரிதாக அளந்து செல்ப் டப்பா அடிக்க வைக்கும். ஆனால் இந்தக் கடிதம் மேற்சொன்ன எல்லா உணர்வுகளையும் மீறி என்னை பேச்சற்று இருக்கச் செய்தது.

என்னுடைய முகநூல் வட்டம் மிகச் சிறியது என்பதை நான் உணர்ந்தே உள்ளேன். ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக எழுதும் தொப்பி அணிந்து இங்கு உலவினாலும் என் நண்பர்கள் வட்டம் இப்போது தான் ஆயிரத்தைச் சற்றே கடந்திருக்கிறது. நம் பதிவுகளை பார்க்க விரும்புவார்களோ, மாட்டார்களோ, வீண் தொந்தரவு ஏன் என்றே வரும் நட்பு அழைப்புகளை மட்டும் இறுக பற்றிக் கொள்வது.

வாசிப்பு என்பது அவரவர் விருப்பம் தானே என்று நட்பையும் உறவையும் எழுத்தையும் தனித்தனியே பிரித்து வைத்துள்ளதால்  எழுதுகிறேன் என்று சொல்லக் கூட கூச்சம் தடுக்கும். தினமும் ஒரு ட்ரெண்ட் பின்னால் போகும் இந்த ஆன்லைன் உலகில் புத்தகங்கள் மற்றும் கிண்டில் பதிப்பு மட்டுமே என்ற கான்சியஸான முடிவுடன் தொடரும் இப்பயணம் நிச்சயம் எளிமையான ஒன்றாக இல்லை.  

என் எண்ணங்களை கொட்டுகிற இனிய நண்பி தான் எழுத்து எனக்கு என்றாலும் கூட அம்முயற்சிகளை உற்சாகமாய்த் தொடர ஏதோ ஒரு வெளி விசை தேவைப்படுகிறது. உத்வேகத்தை இழக்க வைக்கும் அனைத்து சாத்தியங்களும் புற உலகிலும் என் அக உலகிலும் உண்டு. அப்படி செயலற்று நிற்கும்போதெல்லாம் நாம் செய்கிற வேலை குறித்த நிறைவையும் நம்பிக்கையையும் தருவது எங்கிருந்தோ வரும் இவ்வித வார்த்தைகள் தான். 

எழுதுவது எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். அது படிப்பவர் மனதில் சின்ன நெகிழ்வை, குட்டி நீரோட்டத்தை, ஒரு ஞாபகப் பதிவை, at least a very small positive trace – ஐ உருவாக்கினால் கூட போதும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. எங்கோ இருக்கும் யாரோ ஒருவரை நமக்கு நெருக்கமாக்கி, நம் எழுத்து அவர் முகத்தில் சிறு புன்னகையைத் தருவித்தால், நேர்மறையான எண்ண அலைகளைத் தோற்றுவித்தால் அதை விட பெரிய மகிழ்ச்சி வேறென்ன உள்ளது? 

(இதைப் பற்றி சில ஆண்டுகள் முன்பு எழுதி பதிவு - எழுதுவது எதற்காக - https://hemajays.blogspot.com/2020/08/blog-post.html )

இதே ரீதியில் குறிப்பிட்டிருந்த இச்சகோதரியின் கடிதம் கண்டு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. கடைசி வரி படித்ததும் அந்தத் தோழியும் இங்கு தான் எங்கோ உள்ளார் என்று புரிந்தது. தனியே பதில் அனுப்பி விட்டாலும்  அவருடைய அன்பான வார்த்தைகளுக்கு நான் அனுப்பிய பதில் போதாது என்ற உணர்வே இப்போதும். நன்றி தோழியே! இதற்குமேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. Happy reading and wish you all good luck! 

No comments: