ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
தேவியின் கண்மணி நாவல் போட்டியில் என்னுடைய நாவலான ‘யாழினிது’ம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எங்கும் நிறை பேரருளின் கருணைக்கு நன்றி!
இந்தக் கதையில் சூட்சமமாக இடம்பெற்ற, வாழ்க்கையைத் துய்த்து வாழ்ந்த என் அலுவலக நண்பர் பிரையனை இந்த நேரத்தில் அன்புடன் நினைவு கூர்கிறேன். அவரோ, அவருடைய வாழ்க்கையோ இந்நாவலில் இல்லை. எனினும் அவருடைய விடாமுயற்சியின் சுவடுகள் எத்தனை கனமாக என்னுள் ஊடுருவியுள்ளது என்பதை இக்கதையை எழுதும்போது தான் நானும் உணர்ந்தேன். இப்போது நீங்கள் இருந்திருந்தால் உங்களிடம் தான் இதை முதலில் சொல்லியிருப்பேன் பிரையன். இது என்ன போட்டி என்று ஒரு மணி நேரம் நகர விடாமல் நீங்களும் என்னை துளைத்திருந்திருப்பீர்கள்.
கண்மணி போட்டி விவரங்களை அனுப்பி வைத்து எழுதுமாறு உஷா மா சொல்லவில்லை என்றால் இந்நிகழ்வு குறித்தே எனக்கு தெரிய வந்திருக்காது. அவர் அனுப்பியபிறகும் எழுத வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தேன். சித்தன் போக்கு சிவன் போக்காக அன்றாடங்களில் உழல்பவளுக்கு கடவுளின் அசரீரி போல இங்கிருந்தே எனக்கான குரல்களும் உசுப்பல்களும் வருகின்றன. குரியர் அனுப்பி உதவிய நண்பர் முதல் இன்று காலை போட்டி முடிவுகள் வந்து விட்டது என்று சொல்லி வாழ்த்திய தோழமைகள் என அன்பும் நட்பும் சூழ் உலகு !
Feeling grateful to என்று டேக் செய்யவேண்டிய எழுத்துலக நட்புகளும் வாசக நட்புகளும் இங்கு ஏராளம்! என் ஒவ்வொரு முயற்சிக்கும் நீங்கள் அளிக்கும் உற்சாகமே ஏதோ ஒரு விதத்தில் என்னை இங்கு இருத்தி வைத்திருக்கிறது. அனைவருக்கும் என் அன்பையும் மனம் நிறைந்த நன்றிகளையும் இக்கணம் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
ஹேமா ஜெய்
No comments:
Post a Comment