"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Wednesday, August 24, 2016

குட்டீஸ் சுட்டீஸ்

நான் ரெகுலரா குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை பார்ப்பதுண்டு. மனசு சந்தோசமா இருந்தாலும் சரி, சோர்வாக இருந்தாலும், இல்ல என்ன பண்றதுன்னு புரியாம முழிச்சிக்கிட்டு உட்காரும்போதும் சரி, அந்த மாதிரி நேரங்களில் பெரும்பாலும் என்னோட சாய்ஸ் இந்த நிகழ்ச்சியோட பழைய பதிவுகளை எடுத்துப் பார்ப்பது தான். என் பசங்களுக்கும் இந்த நிகழ்ச்சி பிடிக்கும் என்பதால் அவர்களும் முனகாமல் டிவியை கொஞ்ச நேரம் எனக்கு விட்டுத் தருவாங்க.

சின்னஞ்சிறு குழந்தைகளின் மழலை பேச்சுகளை ரசிக்காதவர்  தான்  யார்? நிகழ்ச்சி நடத்துபவரின் அப்பாவித்தனமான கேள்விகளுக்கு புத்திசாலியா தலையை ஆட்டி ஆட்டி அவர்கள் பதில் சொல்கிற அழகும்,  ''க்கு பதிலா '' போட்டு பேசுவதும், '' வை '' என்பதுமாக உச்சரிப்பை மாற்றி மாற்றி பேசுகிற குழந்தை மொழியின் ரசிக்கத்தக்க நயமும்...  பார்ப்பவர்  எவ்வளவு தான் உம்மணாமூஞ்சியாக இருந்தாலும் இவற்றைக் கண்டு  ரசிச்சு சிரிக்காம இருக்க முடியாது. சில குழந்தைகள் அழகழகா பாட்டுகள் பாடுவதும்,  ஆங்கில ரைம்ஸ் சொல்வதும்... பார்க்க, கேட்க, எல்லாமே ரசனை!

அதே சமயம்,  சில குழந்தைகள் வயதில் பெரியவர்களை மரியாதை இல்லாமல்  பேசுவதை  பார்த்தால் ரொம்ப வருத்தமா இருக்கு. 'இப்படில்லாம் பேசக்கூடாது'ன்னு அவர் பொறுமையா திருத்தினாலும் கூட பிடிவாதமாக அராத்துத்தனமாக பேசுகிற மழலைகளை பார்க்கும்போது கோபம் தான் வருகிறது. அதை விட கொடுமை, தங்கள் பிள்ளைகள்  நிகழ்ச்சி நடத்துபவரை 'அட புடா...' போட்டு பேசினாலும், அதை பார்த்து ரசிச்சு சிரிச்சுக்கிட்டு இருக்கிற பெத்தவங்களை பார்க்கையில் பயங்கரஅதிர்ச்சியா இருக்குது. நிகழ்ச்சியை பார்க்கிற நமக்கே சங்கடமாக இருக்கும்போது, எப்படி அவங்க லைவ்வா உட்கார்ந்து  சிரிச்சுட்டு  இருக்காங்கன்னு புரியலை. இங்க புத்தி சொல்லி திருத்த வேண்டியது குழந்தைகளை அல்ல; தகாத வார்த்தை பிரயோகங்களை சொல்லிக்கொடுக்கிற குடும்பத்தினரை தான், இல்லையா...?

அப்புறம், இன்னொரு நெருடலும் இருக்கு.. இந்த பிள்ளைங்க எல்லாம் தெரிஞ்சோ தெரியாமலோ, வீட்டுல நடக்குற சண்டையை இழுத்து தெருவில விட்டுடுறாங்க... நிகழ்ச்சி நடத்துபவரும் அவர்களை  துருவி துருவி வீட்டு சண்டையை பத்தி தான் கேக்குறாரு.

சந்தர்ப்பம் கிடைச்சவுடனே இந்த பிள்ளைங்களும் அப்பாக்களை விட அம்மாக்களை தான்  ரொம்ப கலாய்க்குதுங்க...அது என்ன மாயமோ இல்ல, மந்திரமோ தெரியலை, இந்த தலைமுறை அப்பாக்கள் எல்லாம் தங்கள் பிள்ளைளை விதவிதமான சொக்குபொடி போட்டு நல்லா மயக்கி வச்சுருக்காங்க... அதனால, பெரும்பாலும் இந்த மாதிரி சபையில அசிங்கப்படுறது எல்லாம் பாவப்பட்ட அம்மாக்கள் தான்.

நான் சமீபத்துல பார்த்த நிகழ்ச்சில ஒரு குழந்தை 'எங்க அம்மாக்கு ஒண்ணுமே சமைக்க தெரியாது... ஒரு வேலையும் செய்ய மாட்டாங்க...  சும்மா இங்க பொய் சொல்லுறாங்க..'ன்னு திரும்ப திரும்ப சொல்லுது. பாவம், அந்த அம்மா அழாத கொடுமையா 'இல்லடா செல்லம்... நான் அன்னிக்கு இது பண்ணி கொடுத்தேனே.. அது பண்ணி கொடுத்தேனே..'ன்னு பரிதாபமா  விளக்கம் கொடுக்குறாங்க....

அவங்க முகத்தை பார்த்தா,  விட்டா இன்னும் கொஞ்ச நேரத்துல அழுதுடுவாங்க போல இருந்தது. வீட்டுக்கு போய் அவங்க என்ன பண்ணுறாங்களோ இல்லையோ, கண்டிப்பா தன்  பிள்ளையோட முதுகில ஆத்திரம் தீர சுள்ளுன்னு இரண்டு போடாம இருக்க மாட்டாங்கன்னு மட்டும் தெளிவாக தெரிந்தது. தத்தம் குழந்தைகளோட துடுக்குத்தனம் தெரிந்தும் கூட, இந்த மாதிரி பொது நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு வந்து ஏன் இப்படி தர்மசங்கடப்படணும்னு தெரியலை.

ஒரு விளம்பர மோகத்தில், தங்கள் குழந்தைகளை முன்னிலைப்படுத்தும் ஆசையில் இந்த மாதிரி  பொது  நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்க வர்றாங்க. ஒரு சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு அது அப்படியே backfire ஆகி காலத்துக்கும் ஆவணம் போல மாறி அந்த நிகழ்வை நினைத்து நினைத்து வருத்தப்படுகிற மாதிரி ஆகிடுது இல்லையா...!?


4 comments:

Sudha said...

அருமையான பதிவு ஹேமா....நானுமே இந்த நிகழ்ச்சியை பார்த்து வருத்தப்பட்டிருக்கிறேன்....சில சமயங்களில் சிரித்துக் கொண்டிருக்கும் அந்த பெரியவங்களை இழுத்து வச்சு நாலு அறை அறையனும்ன்னு தோணும்.

Anonymous said...

நீங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை ஹேமா ....நான் ஆரம்பத்தில் சீரியல் பார்க்கப் பிடிக்காமல் ரியாலிட்டி ஷோ பார்க்கலாம் என்று பார்க்க ஆரம்பித்தேன் .....இது சீரியல் பார்ப்பதை விட கொடுமையாக இருந்தது .....சில சமயம் இந்தக் குழந்தைகள் பேசுவதை கேட்கவே முடியாது .....வீட்டு விஷயங்கள் எல்லாம் அப்படியே சபையில் போட்டு உடைப்பார்கள் .....பெற்றவர்கள் அதைக் கேட்டு எப்படித் தான் சிரித்துக் கொண்டு அமர்ந்து இருக்கிறார்களோ .....இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்த்து நான் தொலைக்காட்சி பார்ப்பதையே நிறுத்தி பல வருடம் ஆகிவிட்டது ....நன்றி பதிவிற்கு.

HemaJay said...

தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி, சுதாக்கா !

HemaJay said...

தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி, ஸ்ரீமதிக்கா !