‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ - சமயங்களில் இந்த வார்த்தைகள் பிரபல கதையின் பெயரையோ, சினிமாவையோ மட்டும் நமக்கு நினைவூட்டுவதில்லை. சக மனிதர்களிடமிருந்து சொல்லாலோ, செயலாலோ நாம் அடி வாங்கிக் கொள்கிற தருணங்களில், விரக்தியோடோ வெறுப்போடோ இவ்வார்த்தைகளை மௌனமாக உச்சரிக்காதவர்கள் வெகு குறைவு.
உறவுகளுக்கு இடையில் மனக்காயங்களும், உள்ளக்கீறல்களும் சகஜமானவை தான். ஆனால் கொஞ்சமும் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் திடுதிப்பென்று வார்த்தைகள் தெறித்து வரும்போது என்ன விதமான எதிர்வினை ஆற்றுவது என்றே தெரியாமல் ஸ்தம்பித்து நிற்கும் நேரங்கள் தான் நிறைய.
நம்மை காயப்படுத்துகிறவர் நமக்கு வெகு நெருக்கமான ஆளாகவோ, இல்லை முற்றிலும் அந்நிய மனிதரோ, எவராகவும் இருக்கலாம். எப்போதும் நன்றாக பேசுகிற ஒன்றுக்குள் ஒன்றான சொந்தமோ, மனதிற்கு மிக நெருக்கமாக பழகுகிற நட்போ, அண்டை வீடோ, பேருந்துத் தோழியோ, அலுவலக ‘ஹாய்’, ‘பை’ நட்போ, அகஸ்மாத்தாக சந்திக்கிற தொடர்பு அறுந்து போன தெரிந்தவரோ, இல்லை, அப்போதுதான் பார்த்து அறிமுகமான நபரோ என்று யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவ்வளவு ஏன், கணவன்/மனைவியாகவோ, நாம் பெற்ற பிள்ளைகளாகவோ, அல்லது சமயங்களில் நம்மை பெற்றவர்களாகக் கூட இருக்கலாம்.
வெகு சாதாரணமாக, அன்புடன், நட்புடன் ஆரம்பிக்கிற உரையாடல்கள் கூட தேவையில்லாத வார்த்தைப் பிரயோகங்களால் இரண்டு பக்கமுமே சூடாகிப் போகும் வாய்ப்புகள் நாம் விரும்பாமலேயே அமைந்து போய் விடுவது உண்டு. அம்மாதிரி நேரங்களில், எதிரில் இருப்பவர் அவமானப்படுத்துவது போல சம்பந்தா சம்பந்தமில்லாமல் நம்மேலே புழுதி வாரித் தூற்றலாம்.
நான்கு பேருக்கு முன்னால் நம்மை அசிங்கப்படுத்துவது போல, நக்கலாகவோ, நையாண்டித் தனமாகவோ வம்பிழுக்கலாம். “நீ தான் இத்தனைக்கும் காரணம். இந்த பிரச்சனையே உன்னால தான்...” என்று முகத்திற்கு நேராக விரல் நீட்டியோ, “உனக்கென்ன குறை ராசா… கொடுத்து வச்ச மகராசி..” என்று வஞ்ச புகழ்ச்சி அணியில் இகழ்ந்தோ, நம் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்கப் பார்க்கலாம்.
நான் சமீபத்தில் Garbage Truck Story பற்றிய பதிவு ஒன்றை படித்தேன். நீங்களும் கண்டிப்பா படித்திருப்பீங்க. அதுல சொல்லியிருக்கிறது நல்ல விஷயம் தான். பேசுறவங்க, நம்மை பார்த்து தேவையில்லாம கத்துறவங்க தங்களோட மனக் குப்பைகளை கிடைக்கிற இடத்துல கொட்டிட்டு போறாங்க, நாம அதை தூக்கி அனாவசியமா சுமக்க வேண்டியது இல்லை என்று சொல்லுகிற அழகான குட்டிக் கதை. இக்கதையை இதுவரை படிக்காதவர்கள் கீழ்க்கண்ட லிங்கில் படிக்கலாம்.
உண்மையில், இப்படி இந்த கதையில் வருகிற மாதிரி நம்மால் எல்லா சமயங்களிலும் மௌனமாக கடந்து போய் விட முடியுமா..? முகம் தெரியாத டாக்ஸி டிரைவர் என்றால், ‘சரி, போய் தொலைகிறது, road rage எதற்கு ?’ என்று வாயை மூடிக் கொண்டு சென்று விடலாம். உயிருக்கு உயிராக பழகுகிற ஒரு உறவு நம்மை பார்த்து தகாத வார்த்தைகளை சொல்லும்போது, நம்மை காரணமேயில்லாமல் குறை காணும்போது சும்மா கேட்டுக் கொண்டிருக்க யாருக்குத் தான் ஈகோ இடம் கொடுக்கும்..!?
அதனாலேயே விரும்பியோ, விரும்பாமலேயோ இருபக்கமும் வார்த்தைகள் வந்து விழுந்து விடுகின்றன. மாறி மாறி தடித்துப் போகின்றன, ஒரு கட்டத்துக்கு பின் எந்த பக்கமிருந்தோ வெடித்து கிளம்பும் வீரிய மிக்க சொற்களில் உறவுகளிலேயே நிரந்தர பிளவுகள் உண்டாகிவிடுகின்றன. என்ன தான் பின்னால் ஒட்டிக் கொண்டாலும், அனுசரித்து சென்றாலும் பழைய வடு நீங்குவதில்லை. அந்த கடின அனுபவமும் வாழ்நாள் முழுக்க மறந்து போகப் போவதில்லை.
இந்த மாதிரி அனாவசிய ரசாபாசங்களை தவிர்க்க, ஒவ்வொருவர் கையாளும் வழிமுறைகளும் வேறு வேறு. அமைதியை கைக்கொண்டவர்கள் அந்த இடத்தில் இருந்து மௌனமாக விலகி சென்று விடலாம் (அதுக்கெல்லாம் ரொம்ப ஞானியா இருக்கணும், இல்லையா!), இல்லை உரையாடலை கத்திரிப் போட்ட வார்த்தைகளால் தன் கைக்கொண்டு, வெற்றிப் புன்னகையுடன் தோளை உயர்த்தி எதிராளியைப் பார்க்கலாம். அல்லது தன் பக்க நியாயங்களை தீர்க்கமாக உணர்ச்சிவசப்படாமல் எடுத்து வைக்கிறவர்களும் உண்டு.
சரி, இதெல்லாம் முடியாதவங்க என்ன பண்ணலாம்…? உணர்ச்சிவசத்தில் வார்த்தைகளை கொட்டி விடும் இயல்புள்ளவர்கள், முதல் வேலையா, மறக்காம, தங்களோட வாய்க்கு பெரிய கோத்ரேஜ் பூட்டாப் போட்டு பூட்டிடணும். அது ரொம்ப ரொம்ப முக்கியம்.
எனக்கு இதுல ரொம்ப பிடித்த, ஆபத்தில்லாத,(safety share :)) பின்விளைவுகள் அற்ற (ரொம்ப முக்கியமா, கைவந்த) கலைனு ஒண்ணு இருக்கு. நழுவிக் கொண்டிருக்கும் நம் பொறுமையை இழுத்து பிடித்து, நம்ப பக்க நியாயத்தை சொல்லுகிற வரை சொல்லிப் பார்த்து, எதிர்த் தரப்பை புரிஞ்சுக்க வைக்க முயற்சி செய்யலாம்.
[அதுக்கு மேலயும் அவங்க நம்ம மேல காஞ்சாங்கன்னா, என்ன பண்றதுன்னே தெரியாம பரிதாபமா முழிச்சிக்கிட்டு நிக்கலாம். (ஒருவேளை நாம உருட்டுற முழியோட அழகை பார்த்து, எதிர்தரப்பு போனா போகட்டும்னு நம்மை விட்டுட சான்ஸ் இருக்கு.)] :)...
நம் வாதத்தைக் கூட கேட்க நிதானமில்லாம, அவங்க நம்மை ரைட் விடுறதை நிறுத்தலேன்னா, நம்மால முடிஞ்ச இரண்டொரு சுமூக வார்த்தைகளை சொல்லிட்டு அந்த தொலைபேசி அழைப்பையோ, இல்லை அந்த உரையாடலையோ முடிச்சிக்கிட்டு அந்த இடத்துல இருந்து நகர்ந்துடறது தான் அப்போதைக்கு சரியான வழி. வார்த்தைகளை மேலும் மேலும் வளர்த்துவதில் தான் என்ன பலன்?
மனசு கொதிச்சுத்தான் போகும். ‘என்னை பார்த்து எப்படி இப்படி சொல்லலாம்..?’ என்கிற ஆத்திரம் கரையுடைக்க முயலும். ‘நல்லா நாலு வார்த்தை திருப்பி கேட்காம விட்டுட்டனே…?’ என்ற சுய இரக்கம் நம்மை உந்தி தள்ளும். இது எதையும் சட்டை பண்ணாமல் அந்த சம்பவத்தை கடந்து போக அல்லது மறந்து போக முயற்சிக்கணும்.
ரொம்பவே முடியலையா? வேற வழி இல்ல… அடுத்த சீன் நம்ம டேமை திறந்து விட்டுட வேண்டியது தான். (கண்டிப்பா தனிமையில் தாங்க… சிரிக்கும்போது பொதுவில் சிரிச்சு கொண்டாடணும்; அழும்போது தனியா அழுது மனசை ஆத்திக்கணும்னு எங்க ஆறாம் வகுப்பு சுமதி டீச்சர் சொல்லிக் கொடுத்து இருக்காங்க...)
திட்டு வாங்குனதுக்கு ஏத்த மாதிரி அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ, ரொம்ப ஸ்ட்ராங்கான அடினா அரை நாளோ, ஒரு நாளோ அழுது நம்மோட புண்பட்ட மனசை புகைப் போட்டு ஆத்திக்கிட்டு, மேல முதல் பத்தியில் சொல்லியிருக்கிற வார்த்தைகளை (அது தாங்க.. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’...) பலமுறை நமக்குள்ள சொல்லிப் பார்த்துட்டு, “போறாங்க போ; அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்'ன்னு ஒரு பெரிய பெருமூச்சை வெளியிட்டு - அந்த சம்பவத்துல இருந்து வெளில வந்துடணும். அட்லீஸ்ட் வெளில வர்றதுக்கு முயற்சியாவது செய்யணும்.
அப்புறம் ? அப்புறம் என்ன... பாரமில்லாத மனசுடன் நம்ம வேலைகளை நாம பார்த்துகிட்டு பேசாம இருந்துட வேண்டியது தான். காலப்போக்கில் நம்மிடம் கடுஞ்சொற்கள் வீசிய அந்த நபரே தன் தவறை உணரலாம், ஒருவேளை உணராமலும் போகலாம். அது அவருடைய பாடு; நாம் அதை பற்றி கவலைப்பட்டு, மனதை உளைத்துக் கொள்வதில் பொருளில்லை. அது நம்முடைய வேலையும் இல்லை. இதுதான் என் சிற்றறிவுக்கு எட்டிய ஆகச்சிறந்த அணுகுமுறை!
இந்த அணுகுமுறை ஒருவேளை மற்றவர்களுக்கு தவறாகத் தோணலாம். இந்த சுபாவத்தினால் அழுமூஞ்சி என்றோ, கோழை என்றோ, இல்லை திருப்பி பேச துணிச்சல் இல்லாதவள்/ன் என்றோ, நாம் நம் அன்புக்குரியவர்களிடமிருந்து திட்டுக் கூட வாங்கலாம்.
எனினும், ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்ட அரை நொடிக் கூட ஆகாது; கொட்டிய வார்த்தைகள் வெட்டி செல்லும் உறவுப் பிளவுகளை விட, நம் தலையணை மட்டுமே அறிந்த கண்ணீர் பூக்கள் கண்ணியமானவைனு நான் நினைக்கிறேன்.
ஏனெனில்,
“பேசிய வார்த்தை உனது எஜமானன்; பேசாத வார்த்தைக்கு நீ எஜமானன்”
“நாவினால் சுட்ட வடு ஆறாது”
“யாகாவாராயினும் நாகாக்க”
“நெல்லைக் கொட்டினால் அள்ளி விடலாம்;சொல்லைக் கொட்டினால் அள்ள முடியாது”
“இனிய சொல் பழம்; கடுஞ்சொல் கசக்கும் காய்”
“போனால் வராதது – உயிர், நேரம், சொல்”
மேற்குறிப்பிட்ட முதுமொழிகளை எல்லாம் நம்ம பெரியவங்க ரொம்ப யோசிச்சு, ஆராய்ஞ்சு, அனுபவிச்சு நமக்கு சொல்லிட்டு போயிருக்காங்க. அதனால, நாமும் சொற்களை சிதற விடாமல் கொஞ்சம் பொறுமை காப்பதில் தவறேதும் கிடையாது, இல்லையா..!?
சரி, நீங்க எப்படி உங்க Garbage truck -ஐ கையாளுறீங்க…? நீங்க சரின்னு நினைக்கிற உங்க best practice-களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்க… உங்க அணுகுமுறை, ஒருவேளை மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் அமையலாம்.
No comments:
Post a Comment