"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Sunday, July 31, 2022

மிளிர் - புதிய நாவல் புத்தக வெளியீடு

 ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாட்களுக்குப் பிறகு இங்கு வருகிறேன். என்னுடைய புதிய நாவல் ‘மிளிர்’ கடந்த மாதம் வெளியாகியுள்ளது. 


இந்த மகிழ்வான செய்தியை மிகத் தாமதமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மன்னியுங்கள். சூழ்நிலையும் உடல்நிலையும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருத்தியதில் இங்கு வர இயலவில்லை. புத்தகம் வெளியான தகவலை நான் பகிராவிட்டாலும் ‘இது உன்னுடைய நாவல் தானே ஹேமா?’ என்றும், ‘புத்தகம் வெளியே வந்தால் சொல்ல மாட்டாயா?’ என்று உரிமையுடன் கோபித்தும் புத்தகங்கள் வாங்கும் நட்புகள் அமைவது வரம். பொதுவாக கிண்டில் வெளியீட்டை ஒப்பிட்டால் அச்சு புத்தகங்களுக்கு விரிவான விமர்சனங்கள் வருவது சற்றே தாமதமாகும். மிளிர் வாங்கி வாசித்து அதற்குள் சிலர் தனி செய்திகளையும் அனுப்பி வைத்துள்ளார்கள். நன்றி மக்களே! சவாலான பொழுதுகளின் உந்துவிசை உங்கள் ஆதரவும், உற்சாகம் தரும் வார்த்தைகளும், அன்பான விசாரிப்புகளும் தான். புத்தகத்தை அழகுற அச்சிட்டு வெளியிட்ட பதிப்பகத்தினருக்கு என் நன்றிகள்! முன் அட்டைப்படத்தை வடிவமைத்துக் கொடுத்த தோழிக்கு ஸ்பெஷல் நன்றிகள்!

‘மிளிர்’ குறித்து ஒரு சில வார்த்தைகள் - மனம் விரும்பினால் நம்மால் எந்தத் திசையிலும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்க முடியும். எனினும் எடுத்து வைக்கும் முதல் அடி தான் எதையும் தீர்மானிக்கும். எத்தனை பிரயத்தனம் இருந்தாலும் கால் விரல்களைக் கூட அசைக்க விடாமல் நம்மை கட்டி இழுக்கும் சூட்சம கயிறுகள் இங்கு நிறைய நிறைய. அதிலும் முதல் தலைமுறையாக முன்னேறுபவர்களின் பாதை நிச்சயம் பூ பாதையாக இருப்பதில்லை. பொருளாதாரப் பின்புலம் இருந்தாலும் நிறையச் சமூக விழுமியங்களை உடைத்துக் கொண்டு தான் அவர்கள் தம் பயணத்தைத் தொடங்க வேண்டியுள்ளது. அப்படியொரு பயணத்தை மேற்கொள்ளும் நாயகி தன் கனவுகளைத் தொடர முடிந்ததா, இல்லை நம் சமூகக் கட்டுகள் அவளை மீண்டும் ஒரு வட்டத்துக்குள்ளேயே சிறை செய்ததா என்ற கேள்விகளுடன் இக்கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் “Be the better version of myself” என்பதாகத் தங்களைத் தாங்களே மேம்படுத்தி மெருகேற்றிக் கொள்ளும் நகர்வு தான் “மிளிர்”.

நாவலை வாசித்து உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே! எனது முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல!

புத்தகங்கள் கிடைக்குமிடம் : பிரியா நிலையம், சென்னை (No.51, Gowdia Mutt Road, Royapettah - 600014. Phone: 94444 62284) மற்றும் அனைத்து ஆன்லைன் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். https://wecanshopping.com/milir

என்றும் அன்புடன்,
ஹேமா ஜெய்

No comments: