‘பூக்கள் விற்பனைக்கல்ல’ நாவலுக்கான விமர்சனங்களின் தொகுப்பு. அமேசான் மற்றும் Goodreads விமர்சனங்கள் நீங்கலாக முகநூல் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக சேகரிக்கப்பட்ட மதிப்புரைகள் இவை. நாவல் குறித்த தத்தம் பார்வைகளைப் பகிர்ந்து, குறை நிறைகளைச் சுட்டி உதவும் சக எழுத்தாளர் மற்றும் வாசக நண்பர்களுக்கு என்றென்றும் நன்றிகளுடன்!
திரு. நந்தகுமார் நாகராஜன் – Nov 5, 2019
அமேசான் நடத்தும் Pen To Publish போட்டிக்காக ஹேமா ஜே அவர்களால் எழுதப்பட்ட நாவல் தான் “பூக்கள் விற்பனைக்கல்ல”. குடும்ப நாவல் வகையைச் சேர்ந்த கதை.
பொதுவாக குடும்ப நாவல்களை எழுதுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பெரும்பாலும் பெண் வாசகிகள் அதிகமாக இருக்கும் இந்த வகை பிரிவில், காதலையே பல்வேறு விதமாய் கொடுத்தாலும் அதை ரசித்து படிக்க விரும்பும் வாசகி / வாசகர்களுக்கு என்ன விதமான புதுமையான முயற்சிகளை தந்து விட முடியும் என்ற எழுத்தாளர்களின் உளவியல் திறமை சார்ந்த ஒன்று அது.
காதலை திகட்டத் திகட்ட கொடுத்தும், இன்னும் பத்தாமல் போதலை போதலை என்று துடிக்கும் இரண்டு துறை இருக்கிறதென்றால் அது ஒன்று சினிமா இன்னொன்று இந்த குடும்ப நாவல்கள் என்று சொல்லலாம்.
தமிழ் சினிமாவைப் போன்றே இந்த குடும்ப நாவல் பிரிவிலும் அதை, அதன் டெம்ப்ளேட்டிலிருந்து வெளியே எடுத்து வந்த்து விட வேண்டும் என்று பல எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக முயன்றுக் கொண்டிருக்கிறார்கள். ஹேமா ஜேயின் இந்த நாவல் அப்படியான மிகச்சிறந்த முயற்சிகளில் ஒன்றாக சொல்லலாம்.
எம்ப்ரியாலஜிஸ்டாக பணிபுரியும் நாயகியிலிருந்து ஆரம்பிக்கும் இந்த நாவல் இந்திய இல்லங்களின் மிக முக்கியப் பிரச்சினையான குழந்தையின்மை, அது தரும் உளவியல் பிரச்சினைகள், மன அழுத்தங்கள், Surrogacy, Fertility மருத்துவமனைகள் மற்றும் அது சார்ந்த அனைத்து மருத்துவ அம்சங்களையும் இயல்பாய் பேசிச் செல்கிறது.
காதலையும், உறவுச் சிக்கல்களையும் தாண்டி ஒரு குடும்ப நாவலில் இத்தனை டீட்டெய்லிங் கொடுத்து விட முடியுமா என்று நாவலாசிரியர் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். இந்த டீட்டெய்லிங் கூட கொஞ்சம் மெனக்கெட்டு கூகிள் செய்து, நாலு பேரோட பேசி திரட்டிட்டாலும், அதை கதையின் போக்கில் எங்கேயும், எந்த இடத்திலும் கொஞ்சம் கூட உறுத்தாதவாறு கொடுத்ததற்காகவே ஒரு பெரும் பாராட்டை கொடுக்கலாம்.
டீட்டெய்லிங் - ரொம்ப சுலபமா ஒரு விமர்சகனால் ஒரு வார்த்தையில் முடித்து விட முடியுது இல்லை. ஆனால் இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கும் டீட்டெய்லிங் அந்த வார்த்தைக்குள் அடங்குமா என்று தெரிய வில்லை. ஒரு குறிப்பிட்ட துறை சார் நாவலை எழுதும் போது, இவ்வளவு டெக்னிக்கல் டெர்மினாலஜீஸ் தேவையா? நம் ரீடர்ஸ் இதை விரும்புவாங்களா? இவ்வளவு நிபுணத்துவத்தை காட்டினால் அவர்கள் சோர்ந்து விட மாட்டார்களா? நம் ரீடர்ஸ் விரும்பும் வாடிக்கையான கச்சாப் பொருட்கள் இதில் அவ்வளவாய் இருக்காதே, விரும்புவார்களா என்ற எந்த வித தயக்கமும் இன்றி இறங்கி அடித்ததற்காக வாழ்த்துகள்.
அதிலும் குறிப்பாக மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து முடிந்த இந்த வேளையில் மருத்துவர்களின் மேன்மையையும் அவர்களுடைய பணிச் சுமையையும், அவர்களுடைய வேலைகளுக்குப் பின்னால் இருக்கும் அகச்சிக்கல்களையும் பேசும் இந்த நாவல் வெளி வந்திருப்பது மிகவும் தேவையான ஒன்று.
ஒட்டு மொத்த கதையில் மிகவும் பிடித்த இரண்டு வரிகள் “ஃபேன்டஸி கதைகளில் வருவது போல தேவதை பெண் ஒருத்தி காற்றில் தோன்றி கையில் வைத்திருக்கும் மந்திரக்கோலை நீட்டியபடி இங்கு வரும் பெண்களுக்கு குழந்தை வரம் கொடுத்தால் எத்தனை நன்றாக இருக்கும்?” இந்த வரிகளுக்குப் பின் இருக்கும் சோகம் கலந்த அழகியலை ரொம்ப நேரம் ரசிக்க முடிந்தது.
ஆயாளும் ஞானும் தம்மில் என்ற ஒரு மலையாளப் படம். ஃபீல் குட் மூவி என்று சொல்லலாம். ஒரு சீனியர் டாக்டருக்கும், அவரிடம் ஜூனியராக பொறுப்பில்லாத டாக்டராக இளைஞனுக்குமான பந்தத்தைப் பற்றிப் பேசும் கதை. அந்த விடலை இளைஞன் எப்படி மெல்ல மெல்ல இன்ஸ்பையர் ஆகி ஒரு சிறந்த மருத்துவனாக உருமாறுகிறான் என்பதை அழகாய் கொண்டு செல்லும் படம். ஹேமாவின் இந்த நாவல் அந்த படத்தை சில இடங்களில் நினைவுறுத்தியது. இறுதியாக அந்த படத்த்தைப் போலவே ஒரு அழகான ஃபீல் குட் நாவலாய் முடிந்திருக்கிறது.
(கதையளவில் படத்திற்கும் நாவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு நல்ல விஷயத்தை நினைத்தால் அதனுடன் ஏதேனும் ஒரு வகையில் கொஞ்சமேனும் தொடர்பு படுத்தும் இன்னொரு விஷயத்தை பாழாய்ப்போன மனசு தானாக நினைக்க ஆரம்பித்து விடும் இல்லையா, அப்படியான நினைவுறுத்தல் அது. )
“உலகத்தை நீ வெறுமனே கறுப்பு வெள்ளையாகவே பார்க்கிறாய். கறுப்புக்கும் வெள்ளைக்கும் நடுவே நம் வாழ்க்கையில் பல வண்ணங்கள் இருக்கின்றன. அதை கொஞ்சம் உத்து கவனிக்கப் பழகு”
நாயகன் நாயகியிடம் சொல்லும் வசனம் இது.
கதையின் அடிநாதமும் கூட இதுதான். இந்த பேஸ்லைனை மையமாக வைத்து, மனிதர்களின் நுண் உணர்வுகளை, அதன் ஆழங்களை, அது பேசத் தயங்கும் சிக்கல்களை தன் எழுத்தில் வெளிக் கொணர்ந்திருக்கிறார்.
குடும்ப நாவல் குறித்து ஏதேனும் விமர்சனம் எழுத நினைக்கும் போது இது ஒரு சிக்கல். ஸ்பாய்லர் இல்லாமல், கதையை சொல்லாமல் வெளிச்சுற்றைச் சுற்றியே என்ன பேசி விமர்சனம் செய்து விட முடியும் என்பதே.
அதனால் நீங்களே வாங்கிப் படியுங்கள். கண்டிப்பாய் ஏமாற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
நாவலாசிரியர் இதுவரை பெரிதாய் மார்க்கெட்டிங் எதுவும் செய்ய முயல்வது போல் தெரிய வில்லை. தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்த வரை இது வரை எழுதப்பட்டவற்றில் கடைசி ஐந்து புத்தகங்களில் ஒன்றாக தேர்வு பெறுமளவிற்கு அனைத்து தகுதிகளையும் இந்த நாவல் கொண்டிருக்கிறது என்று சொல்வேன். அதற்கு மேல் நடுவர்கள் பாடு. My Best Wishes Hema Jay.
#pentopublish2019
--------------
எழுத்தாளர் திருமதி. வேதா கௌரி – Nov 6, 2019
புன்முறுவல் அள்ளி தெளிக்கும் குழந்தை முகம் காண்கையிலே தெய்வமே நேரில் வந்து தரிசனம் தருவதாய் சந்தோசம் ஊற்றெடுக்கும் தம்பதியின் உள்ளமதில், என்ற வரிகளைப் படிக்கும் பொழுது வரும் உணர்வு நம்மையே சிறு புன்னகை பூக்க வைக்கும் என்பது உண்மை, தாய்மை என்பது வரம், அவ்வரம் கிடைக்காவிட்டால் அதனால் வரும் வலி, ஏக்கம், குத்திக் குதறி நெஞ்சை கிழிக்கும் ஏச்சு பேச்சுகள் , அவற்றைத் தாங்க முடியாது, இக்காலகட்டத்தில் தாய்மையை வைத்து நடக்கும் மோசடிகள், அவற்றிலுள்ள வரைமுறைகள், வரைமுறை மீறல்கள், என தனது கதையோடு சேர்த்து சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார் நமது தோழி ஹேமா ஜெய்.
" குடலேற்றம் விழுந்தது தெரியாமல் கோடி ரூபாய் செலவழிச்சானாம் " என்று ஒரு சொலவடை நம்மூரில் உண்டு, அதுபோல வாழ்க்கை முறையையும் உணவு பழக்க வழக்கங்களையும் மாற்றிவிட்டு குழந்தையின்மை பிரச்சினைக்காக இன்று பல லட்சங்களை செலவு செய்பவர் சிலர் இல்லை பலரே, அதைப்பயன்படுத்தி தெருவுக்குத் தெரு மளிகைக் கடைகள் போல அதிகரித்துவரும் கருத்தரிப்பு மையங்களே கண்கூடான காட்சி, இவற்றைக் கதையின் ஓட்டத்தில் சிறப்பாக நெத்தியடியாக கதாபாத்திரங்கள் மூலமாக சில பல திருப்பங்களுடன் கொடுத்துள்ளார்
" பூக்கள் விற்பனைக்கல்ல "..இந்த அருமையான கதையை படைத்துள்ளார் ஹேமா ஜெய், வாழ்த்துக்கள் தோழி..
--------------
எழுத்தாளர் திருமதி. மோனிஷா – Nov 4, 2019
பூக்கள் விற்பனைக்கல்ல- ஹேமா
சமூகத்தின் மிக பெரிய பிரச்சனை. சாபக்கேடு. தனிப்பட்ட முறையில் நான் இந்த வலியை அனுபவித்திராவிட்டாலும் நெருங்கிய தோழமைகள் உறவுகள் என்று தினம்தினம் கண்கூடாக பார்த்து கொண்டிருக்கிறேன்.
வார்த்தையால் விவரிக்க முடியாத அந்த வலிக்கு என்னதான் தீர்வு என்ற தேடலில் உருவானதுதான் ivf என்ற செயற்கை கருவூட்டல் சிகிச்சை. மலட்டுத்தன்மை அதிகரித்துவிட்ட காலகட்டத்தில் அறிவியலின் இந்த அதிசிறந்த கண்டுபிடிப்பு ஒரு வரம். மருத்துவஉலகின் மிக பெரிய சாதனை. அது ஒரு வகையில் சேவையும் கூட.
ஆனால் அது இன்றளவில் சேவையாகவா நடக்கிறது. மனித உயிர்களை மிக மலிவாக மாற்றி கொண்டிருக்கும் வியாபாரமாக உருகொண்டிருக்கிறது. தினம் தினம் தொலைகாட்சிகளில் தவறாமல் வரும் குழந்தை பேறிண்மை சிகிச்சைக்கான மருத்துவமனை விளம்பரங்கள்.
வாரிசு இல்லை என்ற வலியை மிக பெரிய வியாபாரமாக பார்க்கிறது மருத்துவ உலகம். விகடன் கட்டுரையில் இது பற்றிய ஒரு செய்தி படித்து அதிர்ந்து போனேன். அங்கீகாரமில்லாத ஒரு மருத்துவமனையில் ivf சிகிச்சையில் தன் வாழ்க்கையை இழந்த பெண்.
இதை பற்றி நிச்சயம் ஒரு கதை எழுத வேண்டும். மக்களுக்கு விழிபுணர்வு தர வேண்டுமென்று எனக்குள் ஒரு குரல் ஒலித்து கொண்டேயிருக்கும். ஆனால் ஹேமா அவர்களின் இந்த கதையை படித்த பின் என் மனதிற்கு அத்தனை நிறைவு.😍😍😍
நான் எழுதியிருந்தால் கூட இத்தனை சிறப்பாக எழுதியிருப்பேனா என்பது சந்தேகம்தான். உண்மையில் ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாரட்டுக்கள்.👌👌👌👏👏
இந்த மொத்த சமூதாயத்தையும் மிரட்டி கொண்டிருக்கும் மலட்டுத்தன்மை என்ற பிரச்சனையை எல்லா பக்கங்களிலும் நுணுக்கமாக ஆலசி ஆராய்ந்து எந்த இடத்திலும் தொய்வின்றி கதை கொண்டு சென்றுவிதம் அருமை. 👌👌😍
ஒவ்வொரு வரிகளும் நடப்பு உண்மையை பேசியது. கதையை பற்றி நிறைய நிறைய சொல்ல வேண்டுமென்று எனக்குள் ஆவல் பொங்கி பெருகினாலும், இன்னும் படிக்காமல் இருக்கும் வாசகர்களுக்கு கதையின் சுவாரசியம் எந்தவிதத்திலும் குன்றிவிட கூடாது என்று இதோடு நிறுத்தி கொள்கிறேன்.
கதையின் முடிவு மிகவும் நெகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருந்தது. முக்கியமாக எனக்கு நிறைய வரிகள் பிடித்திருந்தன. ஆனால் அதிலும் ரொம்பவும் மனதை நெகிழத்திய வரிகளை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 👌👌👌
//கருவாகி உருவாகி தன் உயிருக்குள் உருவாகி வளரும் இளம் உயிரை மடி தாங்கி உமிழ்நீரும் சிறு நீரும் நனைக்க நனைக்கப் பிள்ளை வளர்க்க ஆவல் கொள்ளும் மனிதருக்கு மருத்துவம் ஒவ்வொரு நாளும் புதுப் புது கதவுகளைத் திறந்து வைத்து கொண்டே இருக்கிறது//
//உண்மையில், நமக்கு மேல் உள்ள சக்தி இது தெய்வமோ, இயற்கையோ கண்ணுக்கு புலப்படாத எல்லாவற்றுக்கும் சரியான திரைக்கதை அமைத்து வைத்துள்ளது. அது புரியாமல் நாம்தான் அடுத்து என்ன என்பதை பற்றி குழம்பிகிறோம்//
//ஃபேன்டஸி கதைகளில் வருவது போல தேவதை பெண் ஒருத்தி காற்றில் தோன்றி கையில் வைத்திருக்கும் மந்திரக்கோலை நீட்டியபடி இங்கு வரும் பெண்களுக்கு குழந்தை வரம் கொடுத்தால் எத்தனை நன்றாக இருக்கும்?//
//மகப்பேறு என்பது இந்த அண்டத்தின் உயிர் இயற்க்கை! பிரபஞ்ச ஆதி ஆசை! மண்ணில் பிறக்கும் உயிர் அனைத்தும் தன்னின் நீட்சியாக இன்னொரு உயிரை இவ்வுலகில் விட்டு செல்ல விரும்பும் உயிர் தொடரின் சங்கிலி//
இதுக்கு மேல போனா நான் கதையை மொத்தமாக எழுதி வைச்சிடுவேன், அந்தளவு எனக்கு ஒவ்வொரு வரியும் பிடிச்சிருந்தது.
Hats off to the writer. Excellent work.
Pentopublish போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள். 😍😍😍😍😍
மிஸ் பண்ணாம எல்லோரும் இந்த கதையை படிங்க. ஒவ்வொருவருக்கும் இதை பற்றி விழிப்புணர்வு இருக்குமேயானால் பல தவறான சிகிச்சைகளை நாம் கண்டறிய முடியும். அதற்காகவே இந்த கதையை அனைவரும் படிக்க வேண்டும்.
-மோனிஷா
I think you might like this book – "பூக்கள் விற்பனைக்கல்ல | Pookkal Virpanaikkalla (Tamil Edition)" by Hema Jay.
Start reading it for free: http://amzn.in/0jDdpoD
--------------
Ms. Amirtha Seshadri – Nov 1, 2019
பூக்கள் விற்பனைக்கல்ல- ஹேமா ஜெய் கதை.
மகப்பேறு என்பது இந்த அண்டத்தின் உயிர் இயற்கை! பிரபஞ்ச உயிர்களின் ஆதி ஆசை! மண்ணில் பிறக்கும் உயிர் அனைத்தும் தன்னின் நீட்சியாக இன்னொரு உயிரை இவ்வுலகில் விட்டுச் செல்ல விரும்பும் உயிர் தொடரின் சங்கிலி!
மருத்துவ பின்னணியில் நகரும் கதை. செயற்கை கருவூட்டலும், அதில் நடக்கும் சில மோசடிகளையும் கூடவே குழந்தையின்மையால் பெண்கள் படும் துயரங்களை விவரிக்கின்ற ஒரு ஆழமான கதை. டாக்டர்களை தெய்வமென நம்பி வரும் தம்பதிகளுக்கு அந்த நம்பிக்கையை காப்பாற்றுவது அவர்களின் கடமை, அதில் அத்து மீறுபவர்களுக்கு தண்டனையும் கடுமையாக்கபடவேண்டும்.
“வாழ்க்கை ஓர் எதிரொலி;
எதைத் தருகிறாயோ, அதுவே கிடைக்கும்; எதை விதைக்கிறாயோ, அதுவே விளையும்;
எதை அனுப்புகிறாயோ, அதுவே திரும்பும்; எதை நீ மற்றவரிடம் பார்க்கிறாயோ, அதுவே நீ”
"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)
Subscribe to:
Post Comments (Atom)
-
மார்ச்' 30 வார கண்மணியில் எனது நாவல் ஒன்று வெளியாகியுள்ளது. 'தூரங்கள் நகர்கின்றன' என்ற பெயர் மாற்றப்பட்டு வெளியாகி உள்ளது.
-
நினைவெல்லாம் செண்பகப்பூ நாவலுக்கான விமர்சனங்கள்/வாசகர் பார்வைகளின் தொகுப்பு இது. வாசித்து விமர்சனங்களைப் பகிர்ந்து ஆதரவு நல்கும் நண்பர்களுக...
No comments:
Post a Comment