"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Wednesday, January 1, 2020

பூக்கள் விற்பனைக்கல்ல - விமர்சனங்கள் (3)

‘பூக்கள் விற்பனைக்கல்ல’ நாவலுக்கான விமர்சனங்களின் தொகுப்பு. அமேசான் மற்றும் Goodreads விமர்சனங்கள் நீங்கலாக முகநூல் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக சேகரிக்கப்பட்ட மதிப்புரைகள் இவை. நாவல் குறித்த தத்தம் பார்வைகளைப் பகிர்ந்து, குறை நிறைகளைச் சுட்டி உதவும் சக எழுத்தாளர் மற்றும் வாசக நண்பர்களுக்கு என்றென்றும் நன்றிகளுடன்!


மின்னஞ்சல் வழியாக மருத்துவர் – Nov 10, 2019 
(பெயர் மற்றும் துறை விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன)

வணக்கம். நான் ஒரு மருத்துவர் மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர். தங்கள் கதைகள் அனைத்தையும் கிண்டிலில் வாசித்துள்ளேன். பூக்கள் விற்பனைக்கல்ல என்ற நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நேஹாவைப் போலவே பிறரின் குற்றங்களால் நான் சிலுவை சுமந்திருக்கிறேன். தொடர் போராட்டத்தால் அதைக் கடந்தும் வந்துள்ளேன்.. ******** மருத்துவரான நான் இந்த பிரச்சினைக்குப் பின் அறுவை சிகிச்சைகள் இதுவரை செய்ய இயலவில்லை.. நான் தயாராக இருந்தாலும் அரசு இயந்திரம் ஒத்துழைக்கவில்லை.. ஆனால் இந்தப் போராட்டங்களே என்னை எழுதத் தூண்டின..
மருத்துவரின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டிய உங்களுக்கும் நேஹாவுக்கும் வாழ்த்துக்கள்

--------------------------------------

எழுத்தாளர். நிதனி பிரபு – Nov 13, 2019

இரவு படித்து முடித்ததில் இருந்து ஒரு அழகான விமர்சனம் இக்கதைக்கு எழுதியே ஆகவேண்டும் என்று மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. ஆனால், எழுதத் தெரியவில்லை. ஒரு கதை பற்றி விமர்சிப்பது நீண்ட நாட்களாகக் கைவிட்டுப் போனதாலோ என்னவோ தடுமாற்றமாக இருக்கு.

இதுவும் விமர்சனம் அல்ல.

நாயகன் நாயகி, காதல் குடும்பம் என்று தனித்தனியாகச் சொல்ல ஒன்றுமில்லை. இங்கே கதையின் கருதான் நாயகன் நாயகி காதல் குடும்பம் எல்லாமே. குழந்தையின்மையால் ஒரு பெண் தன்னளவில் எப்படிச் சிதைகிறாள், அவளால் அவள் கணவன் அவர்களின் குடும்ப வாழ்வு என்னவெல்லாம் சிக்கலுக்குள் உள்ளாகிறது என்று சொல்ல இனியாவும் அவள் கணவனும் சாட்சி.

மருத்துவர்கள் சொல்லும் நாளில்தான் ஒருவன் தன் மனைவியை நெருங்கவேண்டும் என்கிற வரி ஒன்று போதுமாயிருந்தது, ஆண்மனத்தின் வேதனையைச் சொல்ல.

எந்தக் குறையும் இல்லாதபோதும், திட்டமிட்டு தொழிற்சாலையில் குழந்தையை உருவாக்குவது போன்று நேகாவிடம் பேசும் நாகரிக மங்கை இன்றைய நவீன விசித்திரங்களில் ஒருத்தி என்றுதான் சொல்லத் தோன்றியது.

ஏழ்மை உயிரையே குடிக்கும் பவானி.

சிரிக்கும் முகத்துக்குள் மறைந்துகிடக்கும் கயமைக்கு நந்தா. திறமைகள் தீய வழிக்கு அழைத்துச் செல்லும் வேதனையாக ஆஷி.

இதையெல்லாம் தாண்டி, கதை நகர்ந்த விதம். மெய்யாகவே எனக்குச் சொல்லத் தெரியவில்லை. கதை தெரிந்தால் வாசிக்கும் ஆர்வம் போய்விடும் என்பதால் வசிக்காத கதைகளின் விமர்சனங்களை வாசிப்பதில்லை நான். வாடகைத்தாய், செயற்கை முறையிலான கருத்தரித்தல் இவைதான் கதையின் கரு என்று மேலோட்டமாக உள்வாங்கிக்கொண்டதில், தகவல்களைத் திணிப்பதாக இருக்குமோ.. வாசிக்கத்தான் வேண்டுமா என்று இத்தனை நாட்களைத் தள்ளிப் போட்டிருந்தேன்.

ஆனால், அது எத்தனை தவறு என்று வாசிக்கத் தொடங்கியதும் புரிந்தது. கருதான் கதையின் அழகே. அவர் சொன்ன அல்லது நமக்குத் தெளிவுபடுத்திய விசயங்கள் அவ்வளவு ஆழமாக மனதில் நிற்கிறது. அதோடு அதைச் சொன்ன பங்கு.. மேலே சொன்னதுபோல தகவல் சொல்லுவது போன்று அல்லாமல் வாசித்துக்கொண்டே போ இடையில் நிறுத்திவிடாதே என்று தூண்டியதே போகிற போக்கில் அவர் சொல்லிக்கொண்டே போன விடயங்கள் தான். நெடிய நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக மிகப் பிடித்து வாசித்த கதை. பாராட்டுக்குரியது. நேகா ஒரு வைத்தியப்பெண்ணாக வாழ்ந்து போயிருக்கிறாள். அத்தனை லாவகமாக நம்மையும் அவளின் ஆய்வுகூடத்துக்குள், வைத்தியசாலைக்குள் அழைத்துச் சென்று அருகமர்த்தி, இப்படி இப்படித்தான் இதெல்லாம் நடக்கிறது என்று சுவாரசியமாக தெளிவுபடுத்தி கதையின் முடிவில் நமக்கு விருப்பமே இல்லாமல் ஓடிப்போ என்று வெளியே தள்ளி கதைவடைத்துவிட்டார் ஹேமா. என்ன, வெளியே வரமுடியாமல் தடுமாறிக்கொண்டிருப்பது மட்டும் நானாகிப்போனேன்.

மிக மிக நுண்ணியமாக கருவின் ஒவ்வொரு இழையையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் ஹேமா. அதோடு, கூடவே மயிலிறகால் வருடிச் செல்லும் காதல். வாசிக்கக் கசக்குமா என்ன?

போட்டியில் வெற்றிபெற மனம் நிறைந்த வாழ்த்துகள் ஹேமா! அல்லாதுபோனாலுமே, அற்புதமான படைப்பு ஒன்றை மக்களிடம் நீட்டியிருக்கிறீர்கள். அதற்கான பரிசு காலகாலத்துக்கும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

உங்கள் எழுத்து மென்மேலும் மெருகுபெற்று பெயர்பெற அன்பும் வாழ்த்துகளும்!

----------------------------------

எழுத்தாளர் பாலா சுந்தர் – Dec 1, 2019

பூக்கள் விற்பனைக்கல்ல
ஹேமா
நல்ல கதை தந்ததுக்கு நன்றி ஹேமா...
மிகைப்படுத்தாத பாத்திர அமைப்பு..
ஹேமாவின் இந்த படைப்பால்.. பெண் எழுத்தாளர்களிடமும் கைவசம் சரக்கு இருக்குப்பா ... என்று நாம் மார்தட்டிக்கொள்ளலாம்.

-----------------------------------

எழுத்தாளர். Ms. ஜான்சி – Nov 25, 2019

பூக்கள் விற்பனைக்கல்ல | Pookkal Virpanaikkalla (Tamil Edition)" by Hema Jay.
Start reading it for free: http://amzn.in/7e8jfhX
கதைக்கும் அதற்குப் பொருத்தமான தலைப்பிற்கும், எடுத்துக் கொண்ட கருத்தை நிறைவான ஒரு முடிவு கொடுத்து சிறப்பித்ததற்கும் ஒரு ராயல் சல்யூட் ஹேமா.
கதை குறித்து எதையும் சொல்ல தோன்றவில்லை.அவரவர் வாசித்துத் தெரிந்துக் கொள்ளட்டுமே என்கிற சிந்தனை தான் காரணம்.
வாசிக்கையில் அக்கம் பக்கத்தில், நட்புகளில், அலுவலகத்தில், உறவுகளில் நிகழ்ந்த நிகழ்ந்துக் கொண்டிருக்கின்ற எத்தனையெத்தனை நிகழ்வுகளை நினைவில் கொண்டு வந்தேன் என்று எண்ணிக்கை ஞாபகத்தில் இல்லை.
மனிதர்கள் பக்தியை ஏமாற்றிக் காசு பார்க்கின்றவர்கள் என்று எத்தனையாய் வாசிக்கின்றோம்.
நம் நாட்டில் அப்படிப்பட்ட பக்தியை போன்றதொரு மற்றொரு எதிர்பார்ப்பு+ நம்பிக்கை தான் குழந்தை பிறப்புக் குறித்தது.
புது மணப்பெண்ணுக்கு புகுந்த வீட்டில் தனது இருப்பை உறுதிப் படுத்த, அதிகாரம் செலுத்தத் தேவையாயிருப்பது மகப்பேறு.
ஆணுக்கு தன் உடல் தகுதியை உலகத்திற்கு அறிவிக்கத் தேவைப்படுகின்றது மகப்பேறு.
சமூக அழுத்தங்களால் எத்தனையோ தம்பதிகள் உள்ளத்தில் நிம்மதியில்லாமல் தவிக்க வைப்பது மகப்பேறின்மை.
மகப்பேற்றுக்காகச் சிகிச்சை மேற்கொள்கையில் பெண்ணுக்கு மட்டுமா ஆணுக்கும் எத்தனை சங்கடங்கள், வலிகள்...அதை குறிப்பிட்ட இடம் சிறப்பு ஹேமா.
நேஹாவின் மனசாட்சி இளா...நம்ம ஹீரோ இவன் தானா? இல்லை அபியா என்று தெரிந்து கொள்ளக் கடைசிப் பக்கம் வரை ஓடி திரும்பி வந்தேன்...loved his character ..loved very much...பலாப்பழ குணமுடையவன்... ❤️
எடுத்துக் கொண்ட களத்தில் ஏறத்தாழ பெரும்பான்மையான விஷயங்களை, கோணங்களைச் சில நூற்றுப் பக்கங்களில் அடக்கியதற்கு ஒரு வாழ்த்து.
அதனைப் புரியும் வகையில் எளிமையாய் தொகுத்து, கதையோட்டத்தை எங்கும் தடை போடாமல் கடந்து செல்ல வைத்தமைக்கு ஒரு வாழ்த்து
சுவாரஸ்யம் குறையாத உறவுப் பிரச்சனைகள், மோதல், காதல் என எடுத்துச் சென்றமைக்கு மற்றோர் வாழ்த்து.
மென்மேலும் சிறந்த படைப்புகள் உருவாக்கவும், போட்டியில் வெல்லவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள் ஹேமா 💐
-------------------------

No comments: