எழுத்தாளர் திருமதி. லாவண்யா அவர்களின் பார்வையில்.
Oct 19 2019
********************
ஹேமா ஜெய் – ஆயிரம் ஜன்னல் மனசு
உங்கள் கதைகள் எனக்கு எப்பொழுதும் மிகவும் பிடிக்கும். மிகவும் எதார்த்தமான கதைகளை மனதில் நீங்காது பதியுமாறு கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே!
அழகான எழுத்து நடையில், வார்த்தைகளின் கோர்வையில் என எங்கும் நேர்த்தி. கதையை கீழே வைக்க முடியாமல் அடுத்து என்ன அடுத்து என்ன என முழு கதையும் வாசித்து முடித்த பின்னர் தான் நிம்மதி. அத்தனை சுவராசியமாக இருந்தது ஹேமா.
சாருவும், ப்ரித்வியும் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களின் பிம்பம். ஆரம்பம் முதல் இறுதிவரையில் சாரு எவ்வித அலட்டலில்லாமல், ஆரப்பட்டமில்லாமல் எதார்த்தத்தை உணர்ந்து நடந்து கொள்கிறாள். அதே சமயத்தில் அவள் வாழ்க்கையை அத்தனை எளிதில் யாரும் குழப்பிவிடவும் முடியாது என்பதிலும் அத்தனை தெளிவு.
ப்ரித்வியின் பாத்திரப்படைப்பும் மிக அருமை. சாராசரிக் கணவனின் ஏக்கங்கள், அவனின் குறைகள் என இருந்தாலும் எந்த இடத்தில அவன் தவறினான் என உடனே அலசி ஆராய்ந்து தெளிந்து கொண்டது மிகவும் இயல்பாக இருந்தது.
தானும் நிம்மதியாக இல்லாமல், இருப்பவர்களையும் நிம்மதியாக இருக்க விடாமல் என தீஷா போல் பெண்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அவளையும் இந்தக் கதையில் நீங்கள் கையாண்ட விதம் மிகவும் எதார்த்தம்.
மிகவும் அழகான மற்றும் அற்புதமானக் கதையை எங்களுக்குக் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஹேமா. நீங்கள் மேலும் நிறைய கதைகளை எழுத என் வாழ்த்துகள்!
அன்புடன்,
லாவண்யா.
***********************
எழுத்தாளர் சகோதரி சுதா ரவி Sudha Raviஅவர்களின் பார்வையில் -
Oct 15 2019
ஆயிரம் ஜன்னல் மனசு - ஹேமா
பெண்களுக்கு திருமணம் என்பது முற்றிலும் புதியதோர் சூழலை கையாள வேண்டிய கட்டாயம்.
அப்படி புதிதாக திருமணமான தம்பதிகள் அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொடங்க, புதிய சூழல் புதிய வாழ்க்கை முறையில் சற்று தடுமாறுகிறாள் சாரு. ஆரம்பத்தில் அவளுக்கு தோள் கொடுப்பவன் ஒரு கட்டத்தில் சலிப்படைந்து ஒதுக்குகிறான்.
அமெரிக்க வாழ்க்கையின் தன்மையை கதையினூடே கொண்டு வந்திருக்கிறார். சாருவின் தத்தளிப்பு நிஜம். அவள் வளர்ந்த சூழலில் தனக்கென்று ஒரு வீடு எனும் போது அதிலிருக்கும் எதிர்பார்ப்புகளும், முற்றிலும் புதிய சூழலில் அதை ஏற்றுக் கொள்ள அவள் தடுமாறுவதும் இயல்பு.
திருமண வாழக்கையின் ஆரம்ப கட்டத்தில் இருவருக்குமான அன்னியோனியம் நம் மனதை வீணையாக மீட்டிச் செல்கிறது. சொந்தங்கள் இல்லாமல் தனிமையில் நாட்களை தள்ளும் போது அவளுள் எழும் சலிப்பு, அவள் வேலைக்கு செல்லும் போது அவனுக்கு மாறி விடுகிறது.
இதன் நடுவே ப்ரித்வியின் கல்லூரிகால தோழியாக வரும் தீக்ஷாவால் இருவரின் வாழ்விலும் புயல் வீசுகிறது...
அதை தம்பதியர் எவ்வாறு கையாண்டனர் என்பதை மிக அழகாக கொடுத்துள்ளார்...இந்தியர்களின் திருமண வாழ்வின் வெற்றியை தனது வெளிநாட்டு தோழிகளிடம் பகிருமிடங்கள் டயலாக்ஸ் அருமை..
அதே போல் ப்ரித்வியிடம் கோபப்படாமல் அழுத்தமாக அவன் செய்த தவறுகளை சுட்டிக் காட்டுமிடங்கள் வசனங்கள் ஒவ்வொன்றும் சவுக்கடி
தம்பதியரின் நடுவே மூன்றாம் மனிதர் நுழைய இடம் கொடுக்க கூடாது. தங்களுக்குள் ஆயிரம் கருத்து வேற்றுமை இருந்தாலும் அதை அடுத்தவரின் முன்பு காட்டி தன் இணையை அசிங்கப்படுத்த கூடாதென்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இன்றைக்கு தேவையான கதை களம். அதை அவர் கையாண்ட விதம் அருமை. எங்கும் யதார்த்த மீறல் இல்லாத கதை...வழக்கம் போல அசத்தலான கதை கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் ஹேமா!
*********************
திருமதி. செல்வராணி Selvarani அவர்களின் பார்வையில் "ஆயிரம் ஜன்னல் மனசு".
Oct 15 2019
ஹேமாவின் ஆயிரம் ஜன்னல் மனசு.
மனிதன் ஒரு சமூக விலங்கு,மனதில் உள்ள ஜன்னல்களை காற்றும் வெளிச்சமும் வருகிற மாதிரி திறந்து வைப்பது அவசியம்!நட்பும் உறவுகளும் வெளிக்காற்றை உள்ளிழுத்து புத்துணர்ச்சியும்பிடிப்பும் தருபவர்கள்.இல்லையெனில் உள்ளேயே சுற்றி சுற்றி தத்தம் மூச்சுக் காற்றையே சுவாசித்து புத்தி பேதலித்து போகும்.
எனினும் எந்த ஜன்னலை எப்போது எந்த அளவு திறந்து வைக்க வேண்டும் என்னும் தெளிவு இருக்கணும்!தேவையில்லாத நேரத்தில் திறந்து வைத்தால்சில நேரம் காற்று சூறாவளியாய் மாறி துவம்சம் செய்து விடும்!இப்படி ஒரு முன்னுரையுடன் கதை ஆரம்பிக்கிறது!
பெரியம்மாவுடன் வளரும் சாரு அமெரிக்காவில் மணம் முடித்து செல்கிறாள்.ப்ரித்வி அவளை அன்பும் காதலுமாய் அரவணைக்கிறான்.இங்கிருந்து நாம் கேள்விப்படும் அமெரிக்க வாழ்க்கை அங்கு சென்றதும் தனிமையில் கொல்லும் என்பது அவளுக்கு பெரிய சோதனை!வேலைக்கு போய்க் கொண்டு இருந்தவள் அங்கு வீட்டில் அடைபடுவது மனதளவில் அழுத்தத்தை கொடுக்கிறது.கிடைக்கும் வேலையில் சேர்பவளுக்கு அக்கம் பக்கத்தினரின் அருகாமை பெரிய அளவில் ஈடுபாடு இல்லை!இந்தியர்களின் மனோபாவனை,வம்பு,ஜாதி விசா குறித்த பேச்சுக்கள் சோர்வை குடுக்கிறது.மெர்ஸி குடும்பம் கொஞ்சம் ஆறுதல்!
கணவனின் தோழியாக அறிமுகம் ஆகும்தீக்ஷா!கணவன் ஒரு இடத்திலும் பிள்ளையுடன் தான் ஒரு இடத்திலுமாக வாழ்பவள்!கொஞ்சம் கொஞ்சமாக ப்ரித்வியுடன் நெருக்கமான நட்பு!எல்லா இந்திய ஆண்களை போல் மனைவியின் சமையலையும் அவளின் குணம் குறித்தும் நக்கல் அடிக்கும் ப்ரித்வி,கூட்டு சேர்ந்து தீக்ஷாவும் சற்று எல்லை கடந்து குடும்ப வாழ்வில் நுழைய முற்படுகிறாள்!
இதை மிக சரியாக கையாளும் சாரு!இன்ற்றைய பெண்கள் அவசியம் படிக்கணும்!ப்ரித்வியும் பாராட்டப்பட வேண்டியவனே!எந்த இடத்தில் தோழி அத்து மீறுகிறாள் என தெரியும் போது ஒதுங்குவதும் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் அழகுதான்!ஆனால் மனைவியிடம் சரியாக புரிய வைக்காமல் தன் ஈகோவுடன் இருந்ததில் நல்ல நல்ல ஆப்புக்களை சம்பாதிக்கிறான்!இளம் தம்பதிகளின் புரிதல் இல்லாத வாழ்வும் ,தனிமையில் சாரு அழுத்தத்துடன் வெடிப்பதும் பின் புரிந்து கொண்டு வாழ்வதும் மனதுக்குள் அன்பை வைத்து கொண்டு தேவையில்லாத ஈகோவில் இருவரும் விழுந்து புரண்டு எழுவது அழகு!
ஒரு பெண் எப்போதும் மறப்பதே இல்லை தன்னுடைய வீட்டை!என்னும் கவிதை வாவ்!!சால்ட் லேக் சிட்டி!அங்கு இருக்கும் மக்கள்!கிட்டத்தட்ட நம்மை போல்தான்,டிவோர்ஸ் கூட அதிகம் இல்லை,நோ சிகரெட்,நோ தண்ணி!அந்த ஊரின் தட்ப வெப்பம்,வியர்வை சுரக்க வைக்காத காற்று என நான் அறியாத தகவல்கள்!டிரெக்கிங் செல்லும் பயணங்களும் குகைகளும் நாமே நேரில் பார்ப்பது போல இருக்கு!படங்களில் ரசித்து பார்க்கும் பனிப்பொழிவும் ஸ்னோ ஸ்டார்மும் திகில் படங்களின் பாதிப்பை நமக்கு கொடுக்குது!அதில் மாட்டி ப்ரித்வியும் சாருவும் தங்கள் ஈகோவை தொலைக்கிறார்கள்!
ஒரு ஆண் தன் தோழியிடம் காட்டும் நட்பை ஒரு பெண் தன் தோழனிடம் காட்டினால் எப்படி இருக்கும்?!இதை நடு மண்டையில் அடித்து ப்ரித்விக்கு புரிய வைக்கும் சாரு!ஒரு ஏமாந்த ஆள் கிடைத்தால் பிள்ளையை மட்டும் இல்ல,குடும்ப பாரத்தையே தள்ளி விட்டுட்டு அசால்ட்டா இருக்கும் பெண்களையும் நாம் பார்க்கிறோமே!உதவி செய்து உபத்திரவத்தையும் சேர்த்து நாமும் அனுபவித்துருக்கோமே பல நேரங்களில்!
ஆண் பெண் நட்பு ..அது எது வரை?!குடும்பங்களாய் பழகினால் அது ஒரு விதம்!தன் இணைக்கு தெரியாமல் பழகினால் அது ஒரு விதம்!தன் பார்ட்னரை தன்னிடமே விமர்சிக்கும் வரை உள்ளே அனுமதிப்பது எவ்வளவு முட்டாள்தனம்?!ப்ரித்வி தன் தவறை அலசுவதும்,படித்த முட்டாள் என சாரு சொல்வதும் நச்!இந்த கதை புத்தகமாகத்தான் படித்தேன்!
-------
Ms. Devi Srinivasan தேவி அவர்களின் பார்வையில்-
ஹேமா மேமோட ஆயிரம் ஜன்னல் மனசு -
ரொம்ப நல்லாருக்கு மேம். ஹீரோயிசம் இல்லாத ஹீரோ. அதுவே ரொம்ப பிடிச்சுது. சாருவோட அந்த நிதானம் நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். அதே போல் குடும்பத்தோட பழகுற பிரெண்ட்ஷிப் எந்த இடத்திலும் தவற சான்ஸ் கிடையாது.
சாருவோட பெரியம்மா யதார்த்தமான கேரக்டர். அம்மாவின் இழப்பு, தந்தையின் வேலையின் மீதான பிடிப்பில் , சாருவை செல்லமாக வளர்த்து இருந்தால் அவளின் குணம் மாறி இருக்கும். ஆனால் இயல்பான போக்கில் அவளை வளர்த்ததே பின்னாளில் ப்ரித்வியோடு வாழ்க்கையை புரிதலோடு நகர்த்தியது. அதே போல் தன் கோபத்தையும் வார்த்தைகளில் காண்பிக்காமல் நிதானமாக நடந்து கொண்டது மற்றவருக்கு பாடம்.
எந்த இடத்திலும் வாழ்க்கைத் துணையை விட்டுக் கொடுக்காமல் நடக்க வேண்டும் என்ற சரியான அறிவுறுத்தல். நட்பின் எல்லைக் கோடு வரையறுத்தல் என்று அழகான , ஆழமான கதை.
வாழ்த்துக்கள் மேம்.
*********************
From Ms. Anu, Oct 14, 2019 -
வணக்கம் ஹேமா ஜி.. kindle இல் படிக்க ஆரம்பித்த புதிதில், எதேச்சையாக உங்கள் விழிகள் தீட்டும் வானவில்லை படித்தேன், தெளிந்த நீரோடை போன்ற கதையும் பாத்திரங்களை அப்படியே உள்வாங்க வைக்கும் உங்கள் எழுத்து நடையில் லயித்து விரும்பி படித்தேன்.. பிறகு உங்கள் அனைத்து கதைகளையும் தேடி படித்தேன்..
இப்பொழுது தான் ஆயிரம் ஜன்னல் மனசு படித்தேன்.. தோழி அலமு கூறியது போல எனக்கும் முன்னுரையில் எதை பத்தின கதை என்று யூகிக்க முடியல.. உள்ளே படித்தால் எவ்வளவு நுட்பமான விஷயத்தை எடுத்து இருக்கீங்கன்னு வியந்தேன்..
Most of the ladies வாழ்க்கையில் கல்யாணம் முடிந்து சில பல வருடங்கள் இது போன்ற சூழ்நிலையை நிச்சயம் கடந்து இருப்பார்கள்.. அதென்னவோ தோழிகளை பற்றி மனைவியிடம் கூறும் போது அவர்களின் தனி திறமை, speciality, blah, blah என்று தனக்கே ஏதோ பெருமை கிடைத்தது போல பீற்றும் கணவன்மார்கள், மனைவியின் அடிப்படை கல்வி என்ன, வேலை என்ன என்று கூட தோழிகளிடம் சாதாரணமாக கூட கூறுவது இல்லை.. என்றாவது நேரில் பேசும் போது 'அட அங்கயா படிச்சீங்க, என்னது campusலயா போனீங்க'என்று அதிர்ச்சி அடைவர்..
'நாங்களும் flash back ஓட்டினா நாடும் தாங்காது நீங்களும் தாங்க மாட்டிங்க'என்று நாம் தான் அந்த இடங்களை கடந்திருப்போம், பிரித்வி போல சிலரே புரிந்து கொண்டிருப்பார்கள்..
எவ்வளவு அழகாக present பண்ணிருக்கீங்க தெரியுமா.. சான்ஸே இல்ல.. வேலை, தன் சுயம் என்று சாரு மருகும் இடம் அநேகமாக எல்லாருக்கும் உண்டு..
முக்கியமான இடத்தில் cut பண்ணி நீங்கள் தொடரும் போட்டாலும், பிரித்வி மனநிலை அறியும் முன்பே சாரு வைத்த நம்பிக்கை அளவே நானும் உணர்ந்தேன்.. சாரு character ஐ அவ்வளவு உள்வாங்க வைத்தீர்கள்..
கதை மிகவும் கனமாக சென்று கொண்டிருந்த போது 'இந்த முசுடுக்கு பொண்டாட்டிய கரெக்ட் பண்ணவே தெரியாது, நான் வேற கற்பனை குதிரையை எங்கயோ விட்டுட்டேன்' இடத்தில் பக்கென்று சிரித்து விட்டேன், செம்ம ஜி..
பல மாதங்களுக்கு முன் படித்த பனி இரவும் தனி நிலவில் பார்த்த பனியை இன்னும் நான் மறக்கவில்லை.. இதில் இன்னும் அருமையாக இருந்தது கொஞ்சம் பட படப்புடன்..
சந்தர்ப்ப சூழ்நிலையால் bowl பண்ண வந்து வச்சிக்கோங்கடா வச்சிக்கோங்கடா என்று எதிரணிக்கு runகளை வாரி வழங்கி, பின்பு நின்று ஆடி targetஐ just like that assault பண்ணும் கை தேர்ந்த batsman போல இருந்தது சாருவின் செய்கை..
இயல்பான நுட்பமான கதை..நம்மில் ஒருத்தி போல சாரு.. புது லொகேஷன்.. அங்கு வாழ்க்கை முறை.. பனி பொழிவு.. கணவன் மனைவி understanding என்று எல்லாமே வேற லெவல் கலக்கீட்டீங்க..
_______________________
"ஆயிரம் ஜன்னல் மனசு" திருமதி. அலமு பழனியப்பன் அவர்களின் பார்வையில் – Sep 27 2019
சாரு , பிருத்வி . புத்தகத்தை வாசித்து முடித்த கணத்தில் இருந்து இருவருமே என் மனதில் வலம் வருகிறார்கள். முன்னுரையே வித்தியாசம் . புரியல என்ன சொல்ல வரீங்கனு . ஆனா வாசித்து முடித்தவுடன் வியக்க வைத்தது .
வரேன் கதைக்கு. சாரு நாம் தினம்தினம் பார்க்கும் ஒரு பெண். தாயில்லாமல் பெரியம்மாவின் வளர்ப்பில் வளர்ந்து அவர்கள் பாரத்து திருமணம் செய்த ப்ரித்வியுடன் இனிய கனவுகளோடு அமெரிக்காவைநோக்கி பயணப்படுகிறாள். அங்கு அவர்கள் வாழ்க்கையும் அவனின் கல்லூரித்தோழியின் தலையீட்டால் அவர்கள் வாழ்க்கை செல்லும் திசையுமே கதை. போதும் இதற்கு மேல் நான் சொல்வதைவிட நீங்கள் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். நான் சொன்னால் சுவாரசியம் போய்விடும்
வெளிநாட்டின் வாழ்க்கை முறையும் இங்கிருந்து செல்பவர்கள் எவ்வாறு தங்களை அதனுடன் பொருத்திக்கொள்கிறார்கள் என்று ஆரம்பிக்கும் சாருவின் வாழ்க்கையை இதை விட அழகா சொல்ல முடியுமா என்று தெரியவில்லை!புதுமணத்தம்பதிகளுக்கே உரித்தான ஊடல்களும் எதிர்பார்ப்புகளும் .....அழகு.
சாருவின் வார்த்தைகள் "கிள்ளிப்பார்ப்பேனாம் .... உங்க கைல .... என்னைக் கிள்ளினா உங்க மனசு தாங்காது பாருங்க..... ",அவளின் சந்தோஷ ஆர்பரிப்புக்கு "ஷ் ... பாருடா ..... அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்ததும் உனக்கு கூட ரெமாண்டிக்கா பேச வருது" ப்ரித்வியின் பதிலும் ... அட அடா ....
ஆண் பெண் நட்பு எவ்வளவு உயர்ந்ததா இருந்தாலும் அதற்கென்று எல்லைகளும் உண்டு.
உங்கள் வார்த்தைகளில் "நட்பு என்ற எல்லையில் நிற்காமல் , அதைத் தாண்டியும் செல்லாமல் , பாதியில் விடுபட்டு , வருடங்கள் கடந்து இப்போது மீண்டும் கண் முன்னால் ..... அதுவும் இப்படி அருகருகே வெகு நெருக்கமாய் வசித்தபடி , பழைய நட்பை ஆழமாய் புதுப்பித்துக் கொண்டு.... " என்ன ஒரு வரி இது.
ஒரு இக்கட்டான கட்டம் இது . கத்தி மேல் நடப்பது போன்ற நிலை ப்ரித்விக்கு . அதை எப்படி கடக்கப்போகிறான் ப்ரித்வி. இந்த இடத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்த கதை அதன் பிறகு வேகத்தை குறைக்கவே இல்லை.
பல தகவல்கள் பனிப்புயல் மற்றும் பனிக்காலம் குறித்து. கேள்விப்பட்டிருந்தாலும் வாசிக்கும் போது எங்களையும் தாக்கியது.
"பட்டம் பறக்கிற திசையெல்லாம் அதை பறக்க அனுமதிக்கக்கூடாது . அதோட கயிறு உன்கிட்ட தான் இருக்கு.... கவனமா இரு....தேவைப்பட்டா இழுத்துபிடி . அவ்ளோ தான என்னால் சொல்ல முடியும் ." மெர்ஸியின் அறிவுரை.
என் இயல்புக்கு மாறா " என்புருஷன் எனக்கு மட்டும் தான்னு உரிமை போராட்டம் பண்றதோ .... சே.... நினைக்கவே அருவருப்பா இருக்கு ... எந்த திசையில் பறக்கனும்கிறதை பட்டம் தான் தீர்மானிக்கணுமே தவிர அது என் கழுத்தில் கிடக்குற இந்தத் தாலிக்கயிறு இல்ல... " என்ற அவளின் தன்மானமும் நம்மைப் போன்ற ஒரு பெண் சாரு.
அவள், தனது ஒவ்வொரு சங்கடமான தருணத்திலும் தனக்குத்தானே பல நேர்மறை சிந்தனைகளோடு கடப்பதில் ஒவ்வொரு நடுத்தர வர்க்க பெண்ணையும் நம் கண் முன் கொண்டுவருகிறாள். எந்தச்சூழலிலும் எல்லாப் பெண்களுக்கும் தோன்றும் நியாயமான பயம் அவளது எதிர்காலம் குறித்து. அதுவும் திருமணமாகி ஒரு வருடத்திறகுள்ளேயே எனும் போது அவளது பரிதவிப்பு....
இந்தியத்திருமணங்கள் பற்றிய நண்பர்களின் கேள்விகளுக்கு
"எங்க அரேஞ்ஜ்ட் மேரேஜஸ் சக்சஸ் ஆகுறதுக்கு எல்லாத்தையும் விட முக்கியமான ஒண்ணு இருக்கு , அது என்ன தெரியுமா? " அது எங்க ஊர் பெண்களோட சகிப்புத்தன்மை .... " இரண்டு பேரும் அட்ஜஸ்ட்பண்ணி போகனும்னு சொன்னாலும் வெற்றி அடைஞ்ச திருமணங்களை எடுத்துப்பார்த்தா அதுல நிச்சயம் ஒரு பெண்ணோட காம்ப்ரமைஸ் இருக்கும்"
இது போல பல எதார்த்த வசனங்கள். இறுதியில் போலீசாரின் கேள்விகளுக்கு அவளின் பதில்களும் , ப்ரித்வியை நோக்கி பாயும் அவளது சாட்டையடி கேள்விகளும் தன் மேலேயே கழிவிரக்கம் கொண்டு மறுகிய சாருவா இவள் , இப்படி விஸ்வரூபம் எடுத்தது என்ற எண்ணம் நமக்கு வருகிறது .
இது தானே நாம் . குடும்பம் ஆகட்டும் வெளியிடங்கள் ஆகட்டும் எங்கு எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி விசுவரூபம் எடுப்பவர் தான் நாம் . ஆக நம்மைப்போன்ற ஒரு பெண் தான் சாரு.
சாரு என்றும் மனதை விட்டு நீங்க மாட்டாள் . ப்ரித்வி நல்ல கணவன் ஆனால் நட்புக்கென்று ஒரு இடம் உண்டு என்று வகைபடுத்த தெரியாமல் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான். தீக்க்ஷா போல் தான் இன்று பல பெண்கள். "வேலை வேலை என்ற ஒன்றைப்பிடித்துக்கொண்டு பல சந்தோஷங்களை இழந்து கொண்டு, தான் தன் சந்தோஷம் மட்டுமே முக்கியம் அடுத்தவர் ,அது தன் கணவன் மற்றும் மகனே ஆனாலும் சரி நண்பணின் மனைவியானாலும் சரி அதைப்பற்றி எனக்கு என்ன என்று வாழ்பவர்கள்..
"எத்தனை மகத்துவமான நட்பாக இருந்தாலும் சரி, ஆண் நட்போ , பெண் நட்போ அது குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடப்படும்போது தான் முழுமையாகப் பூரணத்துவம் அடைகிறது "உங்கள் எழுத்துகளான இதுதான் உண்மை. கதையின் highlight too.
வாழ்த்துகள் ஹேமா. இன்னும் இது போல பல கதைகளை எதிர்பார்க்கும் நான்.
Geetha Ravichandran - April 16,2020
Hema, ippathan unga ஆயிரம்
ஜன்னல் மனசு படித்தேன். Very Nice. Charu Prithivi... America life . Male
female natpu patria Charu / Prithivi yin purithal / deekshavin ego ena
miga arumaiyaga எழுதியுள்ளீர்கள்.. congrats Hema....
Arthy - April 16,2020
Hi Hema, Just finished your ஆயிரம் ஜன்னல் மனசு Nice story and well presented. Thank you 💓
Kindle reviews :
No comments:
Post a Comment